Thursday, June 6, 2013

“தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை”


தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

காசி ஆனந்தன்

Wednesday, June 5, 2013

உண்டு விடுதலைப் போர் உண்டு…!


வீறுடையான் பிரபாகரன்
ஈழ விடுதலை யாளனாய்
விளைந்த

பேறுடையான் இன மானமே
உயிரைய்ப் பேணும் ஆற்றலான்
வலிமை

நூறுடையான் கொடுஞ் சிங்களம்
நடுங்கும் தோளினான் விழும்பகை
உடலின்

நீறுடையான் விடுதலைப் போர்
தொடரும்…நிகழும்பார் புலிப்படை
வரவே!

தாய் நிகர்த்த எழிலார் தமிழ்
ஈழம் தலை நிமிர்ந்தெழ இவன்
எழுந்தான்!

தியணையான் பிரபாகரன்
வீரர் தமிழ்ப்படை திரட்டினான்…
நிமிர்தான்!

பாய் புலியோ என நாள்தொறும்
நூறு பன்னூறு போர்க்களம் இவன் 
பார்த்தான் !

ஆயிரமாய் உயிர் சாயலாம்
ஓயுமோ இவன் படை சாயுமோ
அம்மா!

பொறுத்திருப்பீர்… பிரபாகரன்
புலிகள் போர் உண்டு விரைவில்
உண்டு!

நிறுத்திய போர் மறுபடியும்
நிகழும்! அறத்தின் போர் நிகழும்!
நிகழும்!

மறுத்துரைப்பார் புலிப் போர்க்களம்
காண்பார்! மிகவிரைவில் காண்பார்!
காண்பார்!

அறுத்தெறிவோம் கைவிலங்கை!
ஆணை! தமிழீழ மீதாணை!
ஆணை!

காசி ஆனந்தன்

Tuesday, June 4, 2013

இருப்பாய் தமிழா நெருப்பாய்!


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின் 
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

காசி ஆனந்தன்

சங்கே முழங்கு!



நேர்மையினான்… ஆதலினால்
வலிய பகை நேர்வரினும்
எதிர்த்து மோதும்
ஓர்மையினான்! காலத்தை
ஊடறுத்துத் தொலைநோக்கும்
கண் ஓட்டத்தில்
கூர்மையினான்! தமிழீழம்
எழ எழுந்து கூண்டுடைத்த 
மான வாழ்வின்
சீர்மையினான்! எந்தலைவன்
பிரபாகரன் கீர்த்தி
முழங்கு சங்கே!

அலைநிகர்த்தான் தொடர்தொடராய் 
படைவரிசை திரட்டி எழும்
ஆற்றல் தன்னில்!
உலைநிகர்த்தான் படைக்கருவி
வகைவகையாய் உருவாக்கும்
தொழில் நுட்பத்தில்!
வலைநிகர்த்தான் சூழ்ச்சியினால்
எதிரிகளை வளைத்தழிக்கும்
போர்த் திறத்தில்!
மலைநிகர்த்தான்! எந்தலைவன்
பிரபாகரன் மாண்பை
ஊது சங்கே!

மொழிமறவான்! இனம்மறவான்! 
பகைமொத்த நீர்பொழியும்
தமிழீழத் தாய்
விழிமறவான்! தமிழ்மாந்தர்
உயிர்பறித்து வெறியாடும்
கொடிய மாற்றார்
பழிமறவான்! களமாடி
எதிர்த்தபகை அழித்தொழிக்கும்
தமிழ் மறத்தின்
வழிமறவான்! எந்தலைவன்
பிரபாகரன் வலிமை
உறுமு சங்கே!

அடிதருவான்… எனினும் உயிர் 
பிழைத்திடுக என அயலார்
படைக்கும் காலம்
நொடிதருவான்! களத்துமிசை
உறவிழந்து நொந்த தமிழ்
மழலைக்குத் தன்
மடிதருவான்! போர் மறவன்
ஆயினும் மண் மீதிலிவன்
அன்பொன்றுக்கே
பிடிதருவான்! எந்தலைவன்
பிரபாகரன் பெருமை
கூவு சங்கே!

வீறுடையான்! தமிழ் வேங்கை! 
கொடிய பகை வீழ்த்தி எழும்
போரின் ஆற்றல்
நூறுடையான்! மாற்றார்தம்
பாசறையை நொடிப்பொழுதில்
எரித்த சாம்பல்
நீறுடையான்! தமிழீழம்
நிறுவியவன் எனவரலாற்
றேட்டில் நிற்கும்
பேறுடையான்! எந்தலைவன்
பிரபாகரன் வீரம்
பிளிறு சங்கே!

காசி ஆனந்தன்

Saturday, June 1, 2013

தழலிடு!



காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் 
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! 
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி 
சாகும்வரை அடி பின்பு கொளுத்து! 

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி 
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! 
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் 
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! 

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் 
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! 
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் 
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! 

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் 
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை 
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் 
இட்டவன் உடல்மேல் இடடா தழலை! 

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் 
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! 
பாயும் புலியே! தமிழா! - தம்பி! 
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

கவிஞர்: காசி ஆனந்தன்

Tuesday, May 28, 2013

ஏடு படைப்போம்!



பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை
பாய்ந்து கலக்கிய சேர மகன்

ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை!
ஏடா தமிழா! எடடா படை!

கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை?
கூப்பிடு கூப்பிடு வீரர்களை!

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?

கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!

காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!

கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?

நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி
நடுங்கப் புயல்போல் நடைகொளடா!

மானம் அழைத்தது! வீரம் அழைத்தது!
மலைத்தோள் இரண்டும் எழவில்லையோ?

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்?

ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம்! எழுதமிழா!

காசி ஆனந்தன்

Sunday, May 26, 2013

களம் வருவோம்!



போர் முரசோடு புறப்படடா! தம்பி! 
புல்லர்கள் காதில் அறைந்து வைப்போம்! 
பேரரசொன்று படைத்திடு வோமென்று பேட்டைக்குப் 
பேட்டை முழங்கி வைப்போம்! 

ஆளுக் கொருவன் தலைபறிப்போம்! தம்பி! 
அணுவணுவாய் அவன் உடல் முறிப்போம்! 
நாளுக்கு நாள் தமிழ் நாட்டை அழிப்பவன் 
நாடகம் ஓய ஓர் நாள் குறிப்போம்! 

மானம் விழுந்து துடிக்குதடா! தம்பி! 
மறவன் கதைகள் விளைந்த மண்ணில் 
ஈனம் விளைந்து கிடக்குதடா! இதை 
எத்தனை காலம் பொறுத்திருப்போம்? 

துள்ளி எழுந்து புறப்படடா! தம்பி! 
தூய தமிழ்ப்படை ஒன்றமைப்போம்! 
எள்ளி நகைக்கும் பகைவன் உடல்களை 
எண்பது துண்டுகளாக்கி வைப்போம்! 

மூவர் தமிழ்ப்படை அஞ்சுவதோ? தம்பி! 
மூலையில் நம்மவர் துஞ்சுவதோ? 
சாவை எதிர்த்து வலம்வருவோம்! தமிழ்ச் 
சாதி பிழைக்கப் புறப்படடா! 

காசி ஆனந்தன்

Friday, May 10, 2013

சீறி எழுந்திடடா!


முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச் 
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா! 

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில் 
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா! 

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா!

காசி ஆனந்தன்

Saturday, May 4, 2013

எழுச்சி




தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்! 

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின் 
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்! 

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்! 

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்! 

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்! 

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்! 

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்! 

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்! 

கவிஞர் காசி ஆனந்தன்