Friday, May 31, 2013

கொலையாளிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியை கேட்ட நடேசன் மறுநாள் கொலை!




2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக, அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடுவீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு வீரகேசரியில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. மிக காரசாரமானதும், துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.

அந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பபட்டிருந்தது.

இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய தம்மையாவின் படுகொலையை வெறும் செய்தியாக பார்த்து விட்டு மௌனமாக இருக்க போகிறோமா?

இத்தகைய கொலைகளுக்கு எதிராக வெகுஜனரீதியாக திரண்டெழுந்து இதை தடுக்கவில்லை என்றால் ஒரு தம்பையாவை போன்ற பல கல்விமான்களை, அறிஞர்களை, சமூக பணியாளர்களை இழக்க வேண்டி வரும். அந்த இழப்புக்களை பார்த்து வெறும் கண்ணீரை விடும் சமூகமாக இருக்கப்போகிறதா அல்லது அராஜகவாதிகளுக்கெதிராக தங்கள் சக்தியை காட்டப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்த நடேசன் கட்டுரையின் இறுதியில் அராஜகவாதிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.

அடுத்த இலக்கு தன்மீதுதான் என்பதை தெரிந்து கொண்டுதான் இதை எழுதினாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தம்பையாவின் படுகொலையை ஒத்த கொலைகள் தொடரப்போகிறது என்ற ஆரூடத்தை அக்கட்டுரை சொல்லியிருந்தது.. ஆனால் அந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே தங்களின் அடுத்த இலக்கு யார் என்பதை கொலையாளிகள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

சில தினங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பியிருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு வீரகேசரியில் என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.

இந்த படுகொலைகளையும், அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகுது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான். 2004 மே 31 திங்கட்கிழமை. சரியாக தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரம்.

வழமை போல மனைவியை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.

நடேசன் பணியாற்றிய அலுவலகத்திலிருந்துதான் ஒருவர் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். அவரின் மனைவிக்கு அறிவித்து விட்டோம். எங்கள் அலுவலகத்திலிருந்து சற்று தள்ளித்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும் தாங்கள் அந்த இடத்திற்கு போகவில்லை என்றும் சொன்னார்கள். அந்த தகவலை சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை வைத்த மறுகணம் மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. மறுமுனையில் சூரியன் எப்.எம் வானொலியிலிருந்து நண்பர் குருபரன் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். நாங்கள் பிறேங்கிங் நியூஸ் இப்ப போட்டிருக்கிறம் என்றார். என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. காயங்களுடனாவது தப்பி விட வேண்டும் என மனதிற்குள் எண்ணிய எனக்கு குருபரனே பதில் சொன்னார்.

ஆள் முடிஞ்சுதாம். அவரின்ர அலுவலகத்திற்கு போற றோட்டிலை தான் பொடி கிடக்காம் என குருபரன் சொன்னார்.

அலுவலகத்திற்கு புறப்பட்ட மனைவிக்கு விடயத்தை சொல்லிவிட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு புறப்பட்ட போது அச்சத்தால் அங்கு போவது ஆபத்தில்லையா என என்னை தடுத்தார்கள். இப்படியான விடயங்களில் தடுத்தாலும் நான் கேட்பதில்லை என அவர்களுக்கு தெரியும். அவர்களின் பேச்சை கேட்கும் நிலையிலும் அப்போது நான் இருக்கவில்லை. உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எல்லை வீதிக்கு சென்றேன்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன் தாண்டவன்வெளி திருமலை வீதியில் பத்திரிகையாளர் உதயகுமாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அலுவகத்தை நோக்கி சென்ற போதுதான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. எல்லைவீதி வழியாக நடேசன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கைத்துப்பாக்கியால் நடேசன் மீது சுட்டிருக்கின்றனர். நான் போனபோது இரத்தம் கொப்பளித்தவாறு நடேசனின் உடல் வீதி ஓரத்தில் கிடந்தது. மோட்;டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் நின்றனர். தூரத்தில் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் நடேசனுடன் நெருங்கிய நண்பர்களாக பழகிய சிலரும் நின்றிருந்தார்.

அந்த நேரத்தில் சடலத்திற்கு அருகில் வர பலரும் அஞ்சினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த தினக்குரல் பத்திரிகையாளர் சந்திரபிரகாஷ் அண்ணன் இங்கு நிற்கவேண்டாம். சுட்ட ஆக்களும் இங்கதான் நிக்கிறாங்கள். நீங்கள் நிற்பது ஆபத்து போய்விடுங்கள் என சொன்னான்.

அங்கு வந்த பொலிஸார் சுடப்பட்டவரை தெரியுமா என்று கேட்டனர். தெரியும், அவர் எங்கள் சக பத்திரிகையாளர் என கூறிய போது சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்க முடியுமா என கேட்டனர். நான் ஆம் என்றேன்.

எனக்கு ஏற்கனவே தெரிந்த பறங்கி இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு முன்னால்தான் இச்சம்பவம் நடந்தது. அவர் வீட்டில் நின்று அவதானித்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று நடந்த சம்பவத்தை கேட்டேன். சொல்வதற்கு தயங்கினார்கள். அந்த வீட்டுக்கார வயோதிபர் என்னுடன் நெருங்கிய பழக்கம் என்பதால் தனியாக அழைத்து சென்று சில தகவல்களை சொன்னார்.

இருதயபுரம் இராணுவ முகாமில் இருக்கும் கருணா குழுவை சேர்ந்த இருவர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டார்கள். அவர்கள் சுட்டு விட்டு திருமலை வீதிப்பக்கம் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து இறந்து விட்டரா என பார்த்து சென்றனர் என கூறினார். 5நிமிட இடைவெளியில் பிள்ளையானும் வந்து பார்த்து சென்றதாக அவர் சொன்னார். அவருக்கு இயக்கத்தில் இருப்பவர்களை பெரும்பாலும் தெரியும். அவரின் மகனும் முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.

என்னிடம் காவல்துறையினரும், பின்னர் மரணவிசாரணை நடத்திய நீதிபதியும் வாக்குமூலங்களை எடுத்தனர். அப்போது கொலையாளி இருவரின் பெயர்களையும் அவர்களிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவருமாறு சொன்னார். வான் ஒன்றை ரெலோ பிரசன்னா கொண்டுவந்திருந்தார். சடலத்தை தூக்கி வானில் ஏற்ற வேண்டும். நான் ஒருபக்கம், பிரசன்னா மறுபக்கம் தூக்கினார். நடேசன் மிக உயரமானவர். எங்களால் தூக்க முடியாது கஷ்டப்பட்டோம். உதவிக்கு வருமாறு சற்று தூரத்தில் தள்ளி நின்றவர்களை அழைத்தோம். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இறுதியில் அங்கு நின்ற பொலிஸ்காரர் ஒருவரே வானில் சடலத்தை ஏற்ற உதவினார்.

இச்சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சத்தால் உறைந்து போய் இருந்தார்கள். வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு போனதும் அங்கு தவராசா வந்து சேர்ந்தான். மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அந்த நேரத்திலிருந்து சடலத்தை யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வரை என்னுடன் கூட இருந்த ஒரேஒரு மட்டக்களப்பு பத்திரிகையாளர் தவராசா மட்டும் தான். சடலத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே நல்லது என நடேசனின் குடும்பத்தினருக்க கூறிய போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அன்றிரவு தமிழ்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வவுனியாவில் வைத்து தாங்கள் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு செல்வதென்று தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.

இந்த விடயத்தை நான் நடேசனின் குடும்பத்திற்கு கூறவில்லை. சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு முதல் காலையில் நடேசனின் மட்டக்களப்பு வீட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்த மட்டக்களப்பு அன்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். நடேசனோ அல்லது நீங்களோ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாது. இன்றுதான் தெரிந்து கொண்டேன் என சொன்னார். விடுதலைப்புலிகளின் நகரப்பொறுப்பாளர் சேனாதி தலைமையிலான சிலர் அஞ்சலி செலுத்தி விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை போர்த்தி சென்றார்கள்.

நெல்லியடியிலிருந்து வந்திருந்த நடேசனின் அக்கா அந்த கொடியை தூக்கி எறிந்து பிரச்சினை ஏற்படுத்தினார். புலிக்கொடியுடன் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போக மாட்டோம் என கூறினார். அவ கடும் புலி எதிர்ப்புவாதி போல தெரிந்தது. மறுநாள் காலையில் நடேசனின் குடும்பம், மற்றும் நான் தவராசா, உதயகுமார் ஆகியோர் மூன்று வான்களில் யாழ்ப்பாணம் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு சில மணி நேரத்தில் மன்னம்பிட்டியை கடந்து சென்று கொண்டிருக்கும் போது தினக்குரல் அலுவலகத்திலிருந்தும், சக்தி தொலைக்காட்சியிலிருந்தும் தொலைபேசி எடுத்தார்கள். நடேசனின் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போகவிடாது இராணுவம் தடுத்து வைத்திருக்கிறதாமே, புலிக்கொடியுடன் சடலத்தை கொண்டு சென்றதால் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தகவல் வந்திருக்கிறது என கேட்டார்கள்.

பிழையான தகவல் ஒன்றை யாரோ கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். பின்னர் அந்த பொய் தகவலை பரப்பியவர்கள் கருணாகுழு என அறிந்து கொண்டேன்.

வவுனியா எல்லையில் வைத்து புலித்தேவன் தலைமையில் வந்த விடுதலைப்புலிகள் பூதவுடலை கையேற்றார்கள். பெரிய அளவில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை நடேசனின் அக்கா முதல் அவர்களின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். மட்டக்களப்பில் புலிக்கொடியை தூக்கி எறிந்த நடேசனின் அக்கா வன்னியில் மௌனமாக இருந்தார்.

வவுனியா எல்லையில் விடுதலைப்புலிகள் நடேசனின் பூதவுடலை பொறுப்பேற்றதும் எங்களுடன் கூட வந்த உதயகுமார் தான் தொடர்ந்து வரவிரும்பவில்லை என கூறி மட்டக்களப்புக்கு திரும்பி சென்று விட்டார். எனக்கு கவலையாக போய்விட்டது. அப்போது தவராசா சொன்னான். அண்ணன் நான் கடைசி வரைக்கும் உங்களுடன் வருவேன். வருவது வரட்டும் என துணிச்சலுடன் யாழ்ப்பாணம் வந்தான்.

மறுநாள் கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நாள் நெல்லியடியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நடேசன் படித்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கொழும்பிலிருந்து சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய உட்பட சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர்.

நெல்லியடி சுடலையில் தகனம் செய்யப்பட்ட பின் சுனந்த தேசப்பிரிய என்னை சந்தித்து மட்டக்களப்புக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை கூறினார். கொழும்புக்கு வருமாறும் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதாகவும் கூறினார்.
மட்டக்களப்புக்கு திரும்பி சென்ற தவராசா அங்கு தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தார்.

கொழும்பில் நாங்கள் தங்கியிருந்த போது சிங்கள ஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, புத்திக, விக்ரர் ஐவன், ஆகியோரும், பல வழிகளில் உதவி செய்தனர். கொழும்பில் தங்கியிருப்பது நிதி நெருக்கடிக்குள் நாங்கள் இருப்போம் என்பதை நாங்கள் சொல்லாமலே உணர்ந்து கொண்ட பிபிசி சீவகன் தனது சொந்தப்பணத்தில் எமக்கு செலவுக்கு காசு அனுப்பியிருந்தார்.



பிபிசி சந்தேசிய சிங்கள சேவையில் பணியாற்றும் பண்டார அதற்கு மேல் ஒரு படி சென்று கொழும்பிலிருந்து சுவிஸிற்கு வருவதற்கான பயணசீட்டுக்குரிய பணம் தொடக்கம் லண்டனில் இருக்கும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஊடாக துரிதமாக செய்தார்.

விக்ரர் ஐவன், சுனந்த தேசப்பிரியா ஆகியோர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் பேசி விண்ணப்பத்தை கொடுத்து 18 நாட்களில் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொண்டு விசாவை வழங்கியிருந்தார்கள். கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் ஊடாக சுவிஸிற்கு மிக துரிதமாக வந்தவர்கள் என்பது மட்டுமல்ல தற்போது சுவிஸில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அகதி தஞ்சம் அடைந்திருந்தாலும், முதல் முதலில் வந்தவர்கள் நானும் தவராசாவும் தான் என நினைக்கிறேன்.

சுவிஸ் தூதரகத்திற்கு வழங்குவதற்கான சகல கடிதங்களையும் தயாரித்து தந்தது சிவராம் தான். நடேசனின் மரணம், அதன் பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாமே கணப்பொழுதில் நடந்து முடிந்து விட்டன.

நடேசன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று அவன் பணியாற்றிய ஊடகங்களும் மறந்து விட்டன. அவனின் நண்பர்களும் மறந்து விட்டார்கள். நடேசனின் படத்தை போட்டு வியாபாரம் நடத்தும் இணையத்தளங்களுக்கும் நடேசன் பற்றி தெரியாது.

உயிர் ஆபத்திலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக வெளிநாட்டில் ( சுவிஸில் ) தஞ்சமடைவதே எமக்கு தெரிந்த ஒரே வழியாக அப்போது தெரிந்தது.

ஊரில் இருந்திருந்தால் ஒரு நாள் மட்டுமே ஒரு கணப்பொழுது மட்டுமே எம்மை குண்டுகள் கொன்றிருக்கும். சிவராம், நடேசன் போன்றவர்கள் அதைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால் அதை தெரிவு செய்யாது நாட்டை விட்டு வெளியேறிய எம்மைப் போன்றவர்களை நோக்கி தினமும் குண்டுகள்தான். தினமும் மரணம் தான்.

நடேசனை கொன்றவர்கள், தம்பையாவை கொன்றவர்கள் பேராசிரியர் ரவீந்திரநாத்தை கொன்றவர்கள் இன்று மட்டக்களப்பிலே கிழக்கு மாகாணத்திலே அமைச்சு பதவிகளுடன் வலம் வந்திருகிறார்கள். தம்பையாவையும் ரவீந்திரநாத்தையும் கொலை செய்ய தூண்டியவருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவி, அவர்களுக்கு மாலை மரியாதை வேறு. எந்த நாட்டிலும் கொலைகளை செய்தவர்களுக்கு, கடத்தல்களை செய்தவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டது கிடையாது. பல்கலைக்கழகங்களில் உயர் பதவி வழங்கப்பட்டதும் கிடையாது.

அந்த சாதனையை சிங்கள அரசு மட்டும்தான் செய்திருக்கிறது

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்


2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.

இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.


20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.

மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.



எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.

மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.

பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.



ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர்.

இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை. அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

பரா பிரபா
ஊடகவியலாளர்