Tuesday, May 21, 2013

கேணல் ரமணன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்


பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.



பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்" (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.



படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.



உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.

தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.



அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.

கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.

போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.


இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.

நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.

கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.


அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.

மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.

சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.











Saturday, May 18, 2013

கேணல் சாள்ஸ் அன்ரனி அவர்களின் வீரவணக்கம் நாள்


வான்புலிகளின் தொழில் நுட்பத் தளபதியான கேணல் சாள்ஸ் அன்ரனி தேசியத் தலைவரின் மூத்த புதல்வராவார்

2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை "உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?" எனக் கேட்ட கேள்விக்குப் பதில்

“”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை என்றார்.



அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன அவரது மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள்

சார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபாகரன் அவர்களுடன் இருந்த அவரின் நம்பிக்கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.

தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக்காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக் கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப் பாணத்தின் ஒரு சாதாரண மாணவ னாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன் னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.

அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.

துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.



அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது.

முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.

உண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.

தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.

மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.

மே-18-ம் தேதியன்று களத்தில் சார்லஸும், துவாரகாவும் வீரமரணம் அடைந்தார்கள்.

Friday, May 10, 2013

கேணல் வசந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்


தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பயிற்சி வல்லுனராக விளங்கிய கேணல் வசந்தன் அவர்களின் நினைவுநாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட கேணல் வசந்தன் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாககொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாடாளனாகவும் பாதுகாப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.


பின்னர் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகிருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாகப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய கேணல் வசந்தன் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.


இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணி தொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார்.

தமிழீத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார்.


 எல்லாளன் முழுநீளத்திரைப்படம்


இவ்வாறு விளங்கிய வசந்தன் அவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.

மேலும் இதே காலத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து வீரமறவர்களுக்கும் வீரவணக்கங்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.


Thursday, April 4, 2013

மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்



வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்த என்னை  நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டேன். 09-09-1996 ஆம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான நடவடிக்கை  முகாம் அமைத்திருந்தது. நானும் நிக்சன் அவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினோம். வவுனியாவுக்குள் செய்யவேண்டிய வேலை சம்மந்தமாகவும் தாக்குதல் நடத்தவேண்டிய ஒரு இலக்கு சம்மந்தமாகவும் விரிவாகக் கூறினார். என்னை பாதுகாப்பாக வவுனியாவுக்குள் அழைத்து செல்வதற்காக அணி ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் பேரின்பம், நிலவழகன், வீரத்தேவன், அறிவாளி ஆகியோர் இருந்தனர். வீரத்தேவனும் அறிவாளியும் தோற்றத்திலும் வயதிலும் சிறியவர்களாக இருந்ததால் இருவரையும் நான் மனதில் போட்டுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கேணல் ஒருவன் அந்த அணியில் ஒளிந்திருக்கிறான் என்று நான் எள்ளளவும் நினைத்திருக்கவில்லை.

மறுநாள் நகர்வுக்கு தயார் செய்யப்பட்டது. எனக்கு பண்டிவிரிச்சான் பகுதி புதிதாக இருந்ததால் நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து என்னை வெளியில் இடம் காட்டும்படி அனுப்பினார் இருவரும் சைக்கிளில் வெளியில் மடுமாதா தேவாலயம்வரை சென்றோம் அப்பகுதியில் இருந்த இடம் பெயர்ந்தோர் முகாமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வீரத்தேவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போதுதான் எதிர்பாராத அந்த செய்தி கிடைத்தது.

வெளி மாவட்டம் ஒன்றில் இருந்த வீரத்தேவனின் தாயார் இறந்த செய்தியை உறவினர்கள் வீரத்தேவனிடம் சொன்னார்கள்  வீரத்தேவனின் கண்களில் இருந்தது கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத்தொடங்கியது. பின் சிறிது நேரம் வீரத்தேவனின் உறவினர்களுடன் கதைத்துவிட்டு இருவரும் முகாமிற்கு சென்றோம். வழியில் வீரத்தேவன் என்னிடம் சொன்னான் அண்ணே இதை நிக்சன் அண்ணாவிடம் சொல்லவேண்டாம் சொன்னால் இரானுவகட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டார் அம்மா எமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தாலாவது போய்ப்பார்கலாம் சித்தி ஒருவர் தான் அளம்பிலில் இருக்கிறார் உள்ளேபோய் திரும்பி வந்தால் அளம்பில் செல்கிறேன். திரும்பிவராவிட்டால் அம்மாவிடம் செல்கிறேன் என்றான் அவன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவனை நினைத்து கவலைப்படுவதா? இல்லை பெருமைப்படுவதா? தெரியவில்லை.தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன்.

எமது முகாம் நெருங்க நெருங்க தனது முகத்தையும், கண்களையும் சரி செய்தான். நிக்சன் அவர்களிடம் சொல்லவேண்டாம் என்ற விடயத்தை என்னால் மறைக்க முடியவில்லை காரணம் தாய்ப்பாசம் என்பது மனித  உணர்வுகளுக்குள் அல்லாது மேன்மையாகவே நான் கருதுபவன். இதனால் நிக்சனிடம் தெரியப்படுத்தினேன். நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து கதைத்து நகர்வு அணிக்கு வீரத்தேவனுக்கு பதிலாக வேறொருவரை எம்முடன் இணைக்கத்தயாரானார். அதற்கு வீரத்தேவன் தான் நகர்வில் பங்குபெறுவதில் உறுதியாக இருந்தான். அவன் விரும்பியதின் பேரில் எம்முடன் இணைக்கப்பட்டான. நிக்சன் அவர்களும் அனுமதிகொடுத்து தானும் இரானுவ கம்பிவேலிவரை வருவதற்கு தயாரானார் காட்டை ஊடறுத்தபடி இரானுவ காவலரண் நோக்கி அணி வேகமாக நகர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கஸ்ரம் அதிலும் இருட்டில்  செல்வதென்பது அதைவிட கஸ்ரம். அனுபவப்பட்டவர்களுக்கே அதன் கஸ்ரம் தெரியும். சில இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டபடியே நகர்ந்தோம்.

நாம் இராணுவ காவலரண்களை நெருங்கும் போது அதிகாலை 01 மணியாகிவிட்டது. காவலரண்களில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இருந்து இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்தோம். அங்கு சக்தி வாய்ந்த மின்குமிழ் வெளிச்சமும் பற்றைகளோ மரங்களோ எதுவுமில்லாமலும் அதன் பின்னால் உயரமான தொடர் அரணும் அதில் 50 மீற்றர் இடைவெளியில் உள்ள காவலரண்களில் இராணுவத்தினரும் இருந்தனர். அவர்கள் கதைக்கும் சத்தம் எமக்கு கேட்டது. இராணுவத்தினர் விழிப்பாக இருந்ததால் காவலரணை கடந்து செல்வது கடினமாக இருந்தது. எனவே அப்படியே எம்மை நிலைப்படுத்திவிட்டு பேரின்பமும் வீரத்தேவனும் பக்கவாட்டாக சத்தமின்றி சென்றார்கள். சில மணிநேரம் கழித்து எம்மிடம் வந்து சில மீற்றர் தூரத்திலிருக்கும் காவலரண் வழியாக செல்லலாம் என எம்மை அழைத்தனர். நாங்களும் சத்தமின்றி அவர்களின் பின் சென்று. நாம் காவலரணை நெருங்கினோம். அங்கு மிகவும் இடரான சூழலை எதிர்கொண்டோம். அதாவது இராணுவத்தின் நாய்கள் நாம் இருந்த திசையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது.;. இராணுவத்தினர் நாய்களைக் கூப்பிடவும் அது போகவில்லை. ஒரு இராணுவவீரன்  காவலரணிலிருந்து வெளியே வந்தான். அவனுடைய ஒரு கையில் மின்சூழும் மறு கையில் -2 துப்பாக்கியும் இருந்தது. அவன் நாம் இருந்த பகுதி பற்றையாகவும் இருட்டாகவும் காணப்பட்டதால் வெளிச்சத்தினை எம்மை நோக்கி பாய்ச்சினான். நாம் எல்லோரும் இராணுவ சீருடையும் தலைக்கு பச்சை வர்ணம் பூசப்பட்ட சாக்குத்தொப்பியும் அணிந்திருந்ததனால் அவனுக்கு எம்மை தெரியவில்லை என்று நினைக்கிறேன். எம்மை நோக்கி மின்சூழினை அடிக்கும் போது கண்களை மூடுங்கள் என்று மெதுவாக ஓர் உருவம் சொல்லியது. கடும் இருளாக இருந்ததால் அது யாரென்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த இராணுவவீரன் நாயையும் அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். நாமும் எமது பளைய நிலைக்கு வந்தோம்.

அங்கு அப்போது எந்த சத்தமும் இருக்கவில்லை. காவலரணுக்குள் இருந்த இரானுவத்தினர் நித்திரையோ என்னவோ தெரியவில்லை. சிறிது நேரம் நிதானமாக அவதானித்துவிட்டு வீரத்தேவனும் பேரின்பமும் கம்பி வேலியின் கீழாக உள்ளே நுழைந்தனர். நிலத்தோடு ஊர்ந்தபடி இரு இராணுவ நிலைக்குமிடையே செல்கிறார்கள். அரணின் பிற்பகுதிக்கு சென்று சாதகமான சூழலை உறுதிப்படுத்திவிட்டு வீரத்தேவன் மட்டும் கம்பி வேலியின் அருகே படுத்திருந்த எம்மை நோக்கி வந்து விரைவாக வரும்படி சொல்கிறான். எல்லோரும் மிக வேகமாக ஊர்ந்தபடி செல்கிறோம். அரணைக் கடந்ததும் இறுசல் வேலியும் அதன் பின் சில மீற்றர் காடும் அதனைத் தொடர்ந்து சமவெளியும் பின் பிரதான சாலையும் இவ்வளவு தூரத்தையும் கடந்து வரும் காட்டுக்குள் சென்ற பின்தான் ஓரளவு நிம்மதி நாம் கடந்துவந்த பகுதிக்குள் எது வேண்டுமானாலும் எமக்கு நடந்திருக்கலாம். நிச்சன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக காவலரனை கடந்ததனை நடைபேசி ஊடாக செய்தி தெரிவித்து முகாமிற்கு திரும்பி செல்லும்படி கூறிவிடடு தொடர்ந்து நடக்கதொடங்கினோம்.

முதல்நாள் மாலை 05 மணியிலிருந்து நடந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திசையறி கருவியின் உதவியுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். விடிவதற்குள் சில இடங்களை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்ததால் தொடர்ந்து நடந்தோம். சில இடங்களை பகலிலும் சில இடங்களை இரவிலும் கடக்க வேண்டியிருந்ததால் இருளும் வரை நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியும் இருந்தது. எமது உணவு பி ஸ்கட், சாக்லெட், முட்டை மா போன்ற உலர்உணவுதான். எமது துன்பத்திற்கு மேலும் மெருகூட்ட மழையும் பெய்தது. நான் வேறு நிர்வாகத்திலிருந்து வந்ததால் என்னிடம் மழைக்கவசம் இருக்கவில்லை. அறிவாளி நீளமான பொலீத்தினை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். அதன் ஒரு பகுதியை முடிந்துவிட்டு மறு பகுதியால் உள்ளே இறங்கி ஒரு கையால் பிடித்துக்கொண்டு படுத்திருந்தோம். வீரத்தேவனிடமும் மற்றும் ஒரு சிலரிடம் மட்டுமே மழைக்கவசம் இருந்தது. நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்த வீரத்தேவன் தனது மழைக்கவசத்தை என்னிடம் தந்தான். நான் வாங்கவிலலை அவன் வற்புறுத்தி தந்து விட்டு சொன்னான் அண்ணா நீங்கள் நனைந்தாலும் வைத்திருக்கும் ஆவணம் நனையக் கூடாது அதற்காகயாவது போடுங்கள் என்றான் எனக்கு உண்மையிலே சங்கடமாகவே இருந்தது அவனுடைய செயல்.

நீண்டதுன்பத்தின் பின்னர் நான்காம் நாள் இரவு நானும் பேரின்பமும் சாதாரண உடைகளை அணிந்து கொண்டு காட்டிலிருந்து வீதிக்கு வந்தோம். பேரின்பம் தன்னுடைய முகவரொருவரின் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றை கொண்டுவந்தார். இருவரும் வவுனியா நகர்ப்பகுதியிலிருந்த என்னுடைய முகவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தங்கியிருந்து கொண்டு நிக்சன் அண்ணன் அவர்களால் குறிப்பிட்ட  இலக்கு. எனக்கும் எனது முகவரிற்கும் தெளிவாக தெரிந்திருந்ததால் எனது முகவரினூடாக தகவலை சேகரிப்பதில் ஈடுபட்டேன். இரண்டு நாட்களிற்கு பின்  வீரத்தேவன் மற்றும் போராளிகளுக்கு உணவுகள் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். அங்கு சென்று நிக்சன் அண்ணாவுடன் நடைபேசியூடாக தொடர்பு கொண்டு  இலக்கு தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்தேன். அதற்கு பதிலாக வேறு ஒரு தாக்குதல் திட்டத்தையும் சொன்னேன். அதற்கு அவர் மீண்டும் முயற்சிக்கும் படியும் அல்லது என்னை முடிவெடுக்கும் படியும் கூறினார்.

மீண்டும் இருவரும் எனது முகவரின் வீட்டிற்கு வந்தோம். எனக்கு வவுனியாப்பகுதி நன்கு பரிட்சயமானதால்  எனக்கு தெரிந்த வேறு இரு முகவர்களை சந்தித்து இலக்கு பற்றிய தகவல்களை திரட்டியதனால் இலக்கு வவுனியாவில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த தாக்குதல் திட்டத்தைப்பற்றி பேரின்பத்திற்கு கூறினேன். மீண்டும் இரண்டு நாட்களிற்கு பின் எமது அணிக்கு தேவையான உணவுகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். தாக்குதலுக்காக இன்னுமொருவரை அழைத்து வர வேண்டியதாக இருந்தது. இதனால் உடனே திரும்பாமல் துவிச்சக்கர வண்டியையும் காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அணியுடன் தங்கினோம். விடிந்ததும் தாக்குதல் திட்டத்தையும் இடத்தையும் கூறினேன். உடனே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தமுன்வந்தாகள் வந்தார்கள். ஆனால் தாக்குதலுக்கு போரின்பன் உட்பட ஒருவர்மடடுமே தேவைப்பட்டது யாரைத்தெரிவு செய்வது என்பதே பெரிய சிக்கலாகிவிட்டது. பின் நிலவழகனை கூட்டிச்செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது. வீரத்தேவனுக்கோ மிகுந்த கவலை.

இருட்டிய பின் தான் காட்டிலிருந்து வெளியேற வேண்டும். அத்துடன் ஆயுதங்களும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. சந்திரிக்கா பையின் உதவியுடன் மூவரும் ஒரு துவிச்சக்கர வண்டியில்  சென்று மறு நாள் இரவு வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக காட்டுக்குள் போய்ச் சேர்ந்தோம். வீரத்தேவனுக்கு தான் தாக்குதலில் பங்குபற்றவில்லை என்பது மிகவும் கவலை. தன் தாய் இறந்த செய்தி கேட்டபோது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருந்தான். அறிவாளியும் வீரத்தேவனைப் போலவே கவலைப்பட்டான். பேரின்பன் இருவரையும் சமதானப்படுத்தியும் அவர்கள் முகம் பழைய நிலைக்கு வரவில்லை. பின்னர் அதிகாலையில் எமது கட்டுப்பாடடு பகுதி நோக்கி நகரத் தயாரானோம். அப்போது வீரத்தேவன் நான் அணிந்திருந்த சேட்டை உற்றுப்பார்த்தான். நான் இராணுவ சீருடை அணியும் போது நான் அணிந்திருந்த சேட்டினைக் கழற்றி வீரத்தேவனிடம் கொடுத்தேன். அதற்கு வீரத்தேவன்  நீங்கள் சேட்டைத் தந்து என்னை சமாளிக்கிறீர்கள் எனக்கு வேண்டாம் எனக் கூறினான்.

பின் எல்லோரும் வந்த பாதையினு}டாக திசையறி கருவியின் உதவியுடன் இரண்டு நாட்களாய் நடந்து வரும்போது பயனபடுத்திய இராணுவ காவலரனின்; பின்பக்கம் வந்து கண்கானித்தோம். நாம் கடந்துவந்தபாதையில் மேலதிக முற்கம்பிகள் போடப்பட்டிருந்தது. திரும்பி சென்று வேறு பாதை தேடினோம். எல்லாப்பக்கமும் விழிப்பாக இருந்ததால் எமது பகுதிக்கு செல்ல முடியவல்லை. மறு நாள் வேறு பாதை பார்த்து நடந்தோம். இருளும் சூழத்தொடங்கியது. திடிரென சிங்களத்தில் கதைப்பது மிக அருகில் கேட்டது. உடனேவீரத்தேவன் எல்லோலையும் பின்நோக்கி நகர சொல்லிசைகை காட்டியபடி எமக்கு காப்புக்கொடுத்துக் கொண்டு நின்றான். நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் தான் வீரத்தேவன் இறுதியாக வந்தான். மறுநாள் மீண்டும் பழைய பாதைக்கே வந்தோம். கடந்துசெல்ல கூடியதான நிலமை இருந்ததால் வீரத்தேவனும், அறிவாளியும் இராணுவ நடமாட்டத்தை பார்த்து எமக்கு காப்புக் கொடுக்க நாம் மெதுவாக எமது பகுதிக்குள் நகர்ந்தோம். மறு நாள் காலையில் முகாமை அடைந்தோம். நிக்சன் அண்ணன் தாக்குதல் சம்பந்தமாக எல்லோருடனும் கதைத்த பின்னர் நான் புதுக்குடியிருப்பிலுள்ள முகாம் ஒன்றுக்கு போகும் போது  வீரத்தேவனும் தனது தாயாரின் சோக செய்தியை விசாரிப்பதற்கு அளம்பிலிற்கு செல்வதற்கு தயாரனான் எரிபொருள் பிரச்சனை இருந்ததால் பேருந்திலேயே செல்லவேண்டியிருந்தது இருவரும் ஒன்றாகவே போகிறோம். ஏதோ ஒரு காரணத்துக்காக புதுக்குடியிருப்புடன் பேரூந்து நிற்கிறது. நான் புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் உள்ளமுகாம் அருகில் உள்ளதால் நான் நடந்துசெல்வேன் அணால் வீரத்தேவன் வாகனம் ஏதும் வந்தால்தான் அளம்பில் போகலாம் இந்தநிலையில் அளம்பில் நோக்கிச்செல்லும் வாகனங்கள் எதும் வரும்வரை நடந்தேபோகிறேன் என்று கூறி முல்லைத்தீவு வீதியை நோக்கி அந்த கேணல் நடந்தே போகிறான். பிற்பகுதியில் வீரத்தேவன் செய்த தாக்குதலகள் எத்தனையோ தென்னிலங்கையில் வீரத்தேவனால் ஒழுங்கு செய்து இலங்கையை உலுக்கிய சம்பவங்கள் பாதுகாப்புக் காரணத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை.முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த இறுக்கமான சூழலில் 4-4-2009 அன்று வீரதேவனும் அவனது அணியும் மிக இரகசியமானதும் முக்கியமானதுமான ஒரு தேவைக்காக அளம்பில் பகுதியில் தரை இறக்கம் செய்யப்பட்டார்கள் எதிர்பாரதவிதமாக அங்கு ஏற்ப்பட்ட கடும் மோதலில்  அவனும் அவனது அணியினரும் வீரச்சாவை தழுவிக்கொள்கின்றனர் “ ஒரு வீரனின் உடலை அழிக்கலாம் அவனின் புகழை அழிக்க முடியாது”

பின்னர் நான் எத்தனையோ நகர்வுகளை எதிரியின் பிரதேசத்தில் செய்திருந்தாலும் எனது முதல் நகர்வில் என்னுடன் பங்குபற்றிய என் இனிய தோழர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை. என் இனியவர்களே நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்கிறேன். உங்களோடு வரும் வரை தொடர்ந்து செய்வேன்;.

என்றும் உங்கள் நினைவுடன்.

வன்னியில்இருந்து . சுதா


“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”