Thursday, May 9, 2013

முதல் விதை!



கார்த்திகை – 27 தமிழீழ மாவீரர் நாள் தமிழர் இலட்சியக் கனவுக்கு உயிர்களால் வரலாறு எழுதிவிட்ட புனிதர்களை நினைவுகொள்ளும் நாள். காலம் முழுதும் தமிழர் காவிய அடிமை இடரை தீ மூட்டும் கனவில் ஆகுதியாகிப் போன அற்புதங்களை நினைவில் அழுது நிமிரும் திருநாள். ஒன்று பத்தாகி தாயக விடுதலைப் போருக்காக நாம் 35,000 மேற்பட்ட மாவீரர்களைக் கல்லறைகளில் விதைத்து எங்கள் மனங்களில் நினைவுகளைச் சுமந்து வருகின்றோம். தலையில் குட்டவும் கால்களில் மிதிக்கவும் காறி உமிழவும் வாய்த்துப் போன பரிதாபத்துக்குரிய இனமாகிக் கிடந்த தமிழினத்திலிருந்து வீழ்ந்த விதையொன்றின் மூலம் தமிழர்மான உணர்ச்சிப் பெருவிருட்சமாகிய நாள். 27.11.1982. லெப். சங்கர் எதிரியின் முற்றுகை ஒன்றை உடைத்து உடலிடை ஊடறுத்துச் சென்றவரை வழி சிந்திய குருதியோடு தன் பாசறை சென்றவன் அன்று காத்தது துப்பாக்கியும் இயக்கத்தின் இரகசியங்களும்தான்.

ஆனால் இன்று அந்த வீரன் மூட்டிய நெருப்பு ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் பெருவீரமாக எரிகிறது. எத்தனை ஆண்டுகளாய்… எத்தனை ஆட்சியாளர்கள்… எத்தனை முறை பெரும் காட்டாற்று வெள்ளம் போல திரண்டு தமிழர் விடுதலைத் தீயை அணைத்துவிட முயன்றனர், முயல்கின்றனர். ஆனால் முடிகிறதா? விழ, விழ எழுவோராய் தமிழினம் தலைவர் வழியில் தன் இலட்சியத்தில் உறுதி பூண்டு எழுகிறது. சின்ன விதையாய் நிலத்தில் வீழ்ந்தபோது எதிரி கூட நினைத்திருக்கமாட்டான் இந்த விதைக்குள் இத்தனை வீரியமிருக்குமென்று. அன்று வீழ்ந்தது சங்கர். ஆனால் அவனை வளர்த்தது பிரபாகரன் என்பதைப் பகைவன் காலம் கடந்துணர்ந்த போதுதான் புரிந்தது தமிழர் வீரத்துக்கு பிரபாகரன் உரமூட்டத் தொடங்கியிருப்பது. தனியொருவாய்த் துணிந்து தமிழர் வீரத்தை இனத்துக்குள் பரவச் செய்து தமிழினத்தையே புரட்சிக்குத் தட்டியெழுப்பிய அந்தத் தலைவனின் முன்னால் எங்கள் முதல் வீரன் லெப். சங்கர் களப்புண்ணோடு மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தான். அன்று தம்பி, தம்பியென தன் தலைவனைக் கூவியழைத்தவனின் மரணத்தைத் தடுக்க முடியாது கண்ணீர்த் துளிகள் பனிக்க தன் விரல்களால் அவன் தலையைக் கோதியபடி துயரத்தில் இடிந்து. இலட்சியத்தால் உறுதி கொண்டு நின்ற தலைவர் அவன் இலட்சியத்தை தன் நெஞ்சில் சுமந்து உறுதிகொண்டு நிற்கிறார். இன்று எத்தனை மாவீரர்கள். இலட்சியம் ஒன்றே தங்கள் உயிர் மூச்சென உறுதியோடு களமாடி நிலத்தில் வீழ்ந்து விட்டனர்.


துப்பாக்கி ரவை கிழித்து குருதி கொப்பளிக்க நிலத்தில் வீழ்ந்தவர். நஞ்சை உண்டவர், குண்டடித்தவர், கரும்புலியாய் வெடித்தவர், உண்ணாது தன்னை அழித்தவர், சுடடா என்னைச் சுடடா எனச் சாவே சாவைக் கண்டஞ்சும் வகையில் பல வடிவம் எடுத்தவர். நினைவில் உருகித் தலைவர் முகம் நிலம் பதிந்து நிற்க அவர் முன்னே எட்டுத்திக்கும் தாவிப் பாய்ந்து மீண்டும் அவர் முகம் நோக்கும் தீயின் முகத்தில் தலைவர் வீழ்ந்தவர் மீது உறுதிகொண்டு நிற்பார். அந்தோ தேசமே மாவீரர் நாளில் உறுதி பூண்டு நிற்கிறது. கனகபுரம் துயிலுமில்லத்தில் 24.03.1990 முதல் இன்று வரை பணியாற்றிவரும் தியாகராசா 14.12.1989 இல் இருந்து எம்முடன் சேர்ந்து பணியாற்றத்தொடங்கினார். அங்கு முதலில் 24.03.1990 இல் எரிக்கப்பட்ட போராளி குணா- நடராசா இராசுவேந்திரன், இராமநாதபுரம் என்று குறிப்பிட்டார். 1991- இல் கனகபுரம் துயிலுமில்ல மேடை கட்டடப் பணிதொடங்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு மாவீரர் நாளுடன் அது பயன்பாட்டிற்கு வந்தது இத்துயிலுமில்லத்தில் 346 வித்துடல்கள் எரிக்கப்பட்டன 8.09.1991 பிரகரி இரத்தினசேவரி சரவணமுத்து உருத்திரபுரம் என்ற போராளியின் வித்துடலே அங்கு விதைக்கப்பட்ட முதல் வித்துடலாகும். இதுவரை அங்கு 1426 வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. 900 நடுகற்கள் நடப்பட்டுள்ளன இந்த மாவீரர் துயிலுமில்லத்தை அமைக்க மேஜர் இலக்கியனோடு போராளி நாகூர் முன்னாள் போராளிகள் சித்திரன் தோமசு ஆகியோர் கடுமையாக உழைத்தாக அவர் குறிப்பிட்டார் 1996 இல் சிங்களப் படை அப்பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில் லெப். கேணல் குமணன், மேஜர். நியாசு, கப்டன். பாபு உட்பட்ட ஐவர் அங்கு விளக்கேற்றினர் என்றும் 1997 இல் அருகிலிருந்த சிங்களப் படையை சண்டையிட்டு விரட்டிவிட்டு கேணல். தீபன் கேணல். பால்ராஜ் ஆகியோர் விளக்கேற்றினர் எனவும் குறிப்பிட்டார். தியாகராசா அவர்கள் இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது

Wednesday, May 8, 2013

சாவை வென்ற சாமிகள்!

மாவீரர்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் உணர்வுகளை எளிதில் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அவர்களுக்குள் – அவர்களின் அடிமனதினுள் மறைந்துகிடக்கும் அந்த தாகம் என்ன? அதை ஏன் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அது ஒரு மெல்லிய உணர்வாக இருந்தாலும் மிக ஆழமான – மிகவும் சூசகமான மென் இணைப்பாக இருக்குமோ….

தமிழீழத் தாயகமே அவர்களின் தாகமா… இல்லையில்லை… அந்த உணர்வுக்கும் மேலான ஓர் உணர்வு… என்ன அது? தமிழர்களின் சுதந்திரம் சுய உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அதற்குள் உள்ளடக்கமாக இருக்கலாம். ஆனால்… அதற்கும் மேலே ஓர் உண்மை உணர்வு… குறிப்பாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம்.

45 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் ஊறிப்போன என்னால் என்னுடைய எழுத்துகளுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்குள் மறைந்துகிடக்கின்ற மாபெரும் உளக்கிடக்கையை வெளிப்படுத்த பல தடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் மனதிற்குள் ஒரு நெருடலையே ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளனிடம் ஆயிரமாயிரம் எண்ணக் கருலங்கள் ஏற்படுவதுண்டு. மெல்லிய உணர்வுகளைக்கூட அவர்களினால் துல்லியமாக அடையாளம் காணமுடியும். விண்ணும் மண்ணும் புரியும் அதிசயங்கள் கூட எழுத்தாளனிடம் மண்டியிடுகின்றன. இயற்கை அன்னையின் வியப்பான விழுமியங்களைக்கூட மிக எளிதாக அவன் இனம்கண்டுவிடுவான். ஆனால் மாவீரர்களின் அந்தத் விய்மையான இதயத்துடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. எதிரியின் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவன் ஓடித்தப்ப முயற்சிக்கிறான். முடியவில்லை. அவனுடன் ஓடிக்கொண்டிருந்த நண்பனை அழைக்கிறான். ‘நண்பா! என்னால் ஓடமுடியவில்லை. ஆனால் உயிருடன் எதிரியிடம் பிடிபட நான் விரும்பவில்லை. ஆதனால் என்னை உன் துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கொள். ஆனால் மறக்காமல் என்னிடமுள்ள ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு செல். எம் இனத்தைப் பாதுகாக்க அது உதவும் என்று கூறினான்.

நண்பன் அதிர்ச்சியடைந்தான். தன் கையால் அந்த வீரனைக்கொல்வதா, ஆயினும் அவன் மீண்டும் மீண்டும் அபாய ஒலி எழுப்பியதனால் அவன் விரும்பியபடியே செய்கிறான். ஒரு மாவீரனின் வேண்டுதலைப் பார்த்தீர்களா? அடிமனதிலிருந்து அவனிடம் எழுந்த அந்த உணர்வு… ‘எம் இனத்தைப் பாதுகாக்க அது ஆயுதம், உதவும்!’ என்று கூறினானே… அதில் பொதிந்துள்ள உள்ளார்த்தம் என்ன? சயனைட் எனப்படும் இரசாயன உயிர்க்கொல்லி புலி வீரர்களின் கழுத்தில் சிறிய குப்பிகளாக அணியப்படாத காலம் அது. புதிதாக சயனைட் குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட ஒரு வீரனைச் சந்தித்து அதைப்பற்றி வினவினேன். ஆனால் அந்த வீரன் ஒரு புன்னகையைத் தவிர வேறு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

மிகச் சில நிமிடங்களுக்குள் உடலை வருத்தி உயிரைப் பறித்துக்கொள்ளும் இந்தச் சயனைட்டின் கொடுமையை உன்னால் உணர முடியுமா? என்று மற்றொரு கேள்வியை கேட்டபொழுது புன்னகையே பதிலாக வந்தது. ஆனால் ‘நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதில் உங்களுக்குள்ளும் இருக்கிறது…’ என்று கூறிவிட்டுச் சென்றான். எனக்குள் என்று அந்த வீரன் குறிப்பிட்ட விடயம் உலகிலுள்ள எல்லாத் தமிழர்களிடமும் உண்டு என்று அர்த்தம் கொள்ளலாமா? நம் புலி வீரர்கள் பத்துக்கோடி உலகத்தமிழர்களின் உயிர்மூச்சோடு என்பதை மறக்கமுடியுமா?

மாவீரர்களின் தமிழுணர்வு மிக்க தியாகத்தை குறியீட்டாக எழுத்தாளர்களினால் குறிப்பிடமுடியவில்லை. அல்லது அவர்களை முழுமையாக எழுத்தாளர்களின் படைப்புக்குள் கொண்டுவரமுடியவில்லை. இதோ வருகின்றோம் என சாவுக்கே சாவுமணி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இளமைத் துறவிகள். காவி உடை தரிக்காமலேயே துறவறம் பூண்டவர்கள்.

தமிழர்கள்… தமிழீழம் என்ற மந்திரத்தை தம் உணர்வோடு கலந்துவிட்டவர்கள். அவர்களின் அதி உயர்வான வேள்வியைக்கண்டு உலகமே அஞ்சியது. அண்டசராசரங்கள், கோடானுகோடி தேவர்கள் ஆகியோருக்கு செய்யும் யாகத்தைப் பற்றியெல்லாம் கதைகளில் படித்துள்ளோம். ஆனால் மாவீரர்களின் யாகம் தமிழர்களின் இதயங்களில் இடம்பெற்றுக்கொண்டுருக்கின்றது. இதயங்களில் வைத்து யாகம் செய்யும் பாக்கியசாலிகள் மாவீரர்களைத்தவிர உலகில் வேறு எவரும் இலர்.

சாவை வென்ற சாமிகள். வனவாசம் செய்யும் சாமிகளுக்கில்லாத சக்தி மாவீரர்களிடம் உண்டு. ஆனால் சாதுவானவர்கள். சாதுக்கள்… ஆனால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள். தமிழீழ இலட்சியத்தில் வீரமரணமடைந்த வித்துக்களை விதைத்த துயிலும் இல்லங்களை அழித்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளனர்.

ஆனால் உலக விதிகளுக்கு முரணான மனிதநேயமற்ற இந்தச் செயலுக்காகவும் நடந்து முடிந்த மிகப்பெரிய தமிழினப் படுகொலைகளுக்காகவும் சிங்களமே எதிர்பாராத அளவிடமுடியாத விலை கொடுக்க வேண்டி ஏற்படலாம். காலத்தின் நியதிகள் வழங்கும் தண்டனையிலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது. காலம் பதில் சொல்லும் என்ற குறிப்பின் கருவும் அதுவே.

மாவீரர் வாரம் என்பதை தமிழர்கள் குறிப்பிடுவதற்கு முன்பே சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் வார கெடுபிடிகளை ஆரம்பித்து ஆரவாரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இராணுவம் மிகப்பெரிய எடுப்பில் வடக்கு கிழக்கில் சோதனை, விசாரணை, ஆலயங்களில் மணிகள் ஒலிக்கக்கூடாது போன்ற ஏழு இம்சைகளை ஆரம்பித்துள்ளது.

தம் இலட்சிய செயற்பாட்டில் உயிரையே ஈயவும் ஆயத்தமாகச் செயற்பட்ட மாவீரர் மாண்பு இன்றைய உலகின் அதிமுதன்மையானது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நாம் பெருமை கொள்ளும் நேரம் இது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் எம் கவிஞர் முருகையன் இயற்றிய புதுக்குறலில் மாவீரரைப் பற்றி இரண்டு குறள்கள் உண்டு.

‘கொல்வோரை மோதி கொடுபட்ட இன்னுயிரை எல்லா உயிரும் தொழும்’ ‘ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் மண்’

எம் மாவீரர் மாண்பு இவ்வாறுதான் உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. “மற்றவர்கள் இன்புற்றிருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்” என தமிழர்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதில் ஆழமான அர்த்தம் பொதிந்துள்ளது.

கார்த்திகை மாதம் மாவீரர் காலம். சொரியும் மழைத்துளிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு எம் கண்ணீர்துளிகளும் அவர் முகம் தேடும் காலம். கவிதை பாரதி ஒரு பெண் போராளி. அவர் மாவீரர் பற்றிய கவிதையையும் எழுதிவிட்டு மாவீரரானார். அவர் எழுதிய சில வரிகளில்… ‘வானில் பறக்கும் புள்ளெல்லாம் – நான் மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான் தானில் வளரும் மரமெல்லாம் – நான் காற்றும் புனலும் கடலும் நானே’ பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை தமிழ்பெண்கள் உலகுக்கு நிரூபித்து சென்றுள்ளார்கள்.

தமிழீத்தின் அதியுயர் மானிடர் தொகுதியாக மாவீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள் அவர்களுக்கு இறப்பு என்பது என்றுமில்லை. ஏனெனில் அவர்கள் இறந்தபின்பும் வாழ்கிறார்கள். உலகில் மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கிறார்கள். இது புத்துயிர்ப்பு மிக்க உன்னதமானதொருநெறி.

எம் மண் தம் வரலாற்றுப் பேழையினுள் அடுக்கிவைத்துள்ள ஆயிரமாயிரம் மாணிக்கங்களின் சாதனைகள் என்ன சாதாரணமானவையா? அந்தச் சாதனைகளைக்கண்டு உலகின் வல்லரசுகளே மலைத்து நின்றனவே! உள்ளே தோன்றும் மதிப்பை உணர்கிறார்கள்.

உயிரை உருவி வெளியே எடுத்து கைகளில் தாங்கி வீரச்சாவுக்கு நேரம் குறிக்கும் வீரர்களல்லவா? அந்த உயிரையே ஆயுதமாக்கி களத்திலே அதிஉயர் சாதனைபடைத்து மேற்குலக போர்த்திட்டங்களை பூவென ஊதிவிடும் மாவீரர்கள் அவர்கள். களமாடும் புலிவீரர் கண்டு இவர்கள் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள், விசேடமானவர்கள் என உலகம் உணரத்தொடங்கிற்று. அந்த அளவுக்கு உலகப்போர் வியூகங்களில் பங்குபற்றியவர்கள். வெற்றியும் கண்டவர்கள்.

காடுகளிலும் மலைகளிலும் மரப்பொந்துகளிலும் நிலவறைகளிலும் வாழ்ந்து பழகிக் கொண்டவர்கள். நேரத்திற்கு உணவின்றி பல சந்தர்ப்பங்களில் பட்டினியாகவே இருந்துள்ளார்கள். தமிழர்கள் கண்ணியத்தோடு வாழவேண்டும் என்பதற்காக அண்ணன் எதைச் சொன்னாலும் செய்வதற்கு தயார் நிலையில் இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திர விடுதலைப் படையணியாகவே செயற்பட்டார்கள். தமிழர்களின் கட்டளைக்கிணங்க தரை, கடல், வான் புலிகளாக மாறி தமிழர்களைக் காப்பாற்றும் புனிதப்போரில் விதையான மாவீரர்கள் உலகத் தமிழர் மனங்களில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்கள். அது என்றும் அழியா வரம் பெற்றது.

வீ.ஆர். வரதராஜா

மாவீரர் பாடல் உருவான கதை


1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது.

1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணா நோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

திருமலைச் சந்திரனுடன் பலர் இப்பாடலை பாடினார் இந்தியப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளை தமிழ்நாட்டில் புதுவை அண்ணரின் முயற்சியால் புயல் கால இராகங்கள் அந்நியர் வந்து புகல் என்ன சூதி, களத்தில் கேட்கும் கானங்கள், பாசறைப் பாடல்கள், என்பன ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. 1990 இல் யாழ்ப்பாணத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற ஒலிப்பேழை வெளியீட்டுடன் பல ஒலிப்பேழைகள் வெளிவரத் தொடங்கின வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிப்பேழைக்காக புதுவை அண்ணரால் எழுதப்பட்ட பாடலை தலைவர் மாவீரர் நாளுக்குரிய பாலடலாகக் வேண்டுமென விரும்பியதையடுத்து அந்தப் பாட்டில் சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான பாடலாக வெளிவந்தது.

கண்ணனின் இசையில் வர்ண இராமேஸ்வரனுடன் பலர் அதை பாடினர். அதில் முதல் நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே… ஏன்றிருந்த வரி பின்பு மாவீரர் நினைவொலி நேரம் மாற்றப்பட்டபோது வல்லமை தந்துமே என மாற்றப்பட்டது. இந்ந மாற்றப்பட்ட வடிவமே இன்று நாம் கேட்கும் பாடலாகும். மாவீரர்களை புதைக்கத் தொடங்கிய பின்னே மாவீரர் மயானம் சுடுகாடு, மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்டது. 1990 இல் மாவீரர் விபரப் பட்டியலை கூராக்கும் பணி தலைவரால் என்னிடம் தரப்பட்டது.

மாவீரர் படங்கள் அவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. மாவீரர் விபரங்கள் அப்போது ஈழமுரசு செய்தித் தாளில் வெளியிடப்பட்டு எம்மிடம் இருந்து. தவறுகள் திருத்தப்பட்டன. இராதயன் அண்ணரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அங்கு மாவீரர் படங்களை தாங்கிய மாவீரர் ஏடு ஒன்று அச்சிடப்பட்டது. தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை அதிலிருந்த தகவல் தவறுகள் காரணமாக அதனை வெளியிட வேண்டாமென தலைவர் கூறியதையடுத்து அது வெளியிடப்படவில்லை.

1990இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.

அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பு தரப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவுகூரற் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல். பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கோண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.

2007 ஆம் ஆண்டு திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது

மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி


மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்களுக்கான நினைவு நாள் அறிவிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகின்றன. மாவீரர் நாள் நினைவு கூரப்படத் தொடங்கியதிலிருந்து அதில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சியின் தொடக்க காலப்பதிவுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மாவீரர் நினைவு கூரல் ஒரு படிமுறைக் கூடாகவே வளர்ச்சி பெற்றது என்பதைச் சுட்டவும் அப்பதிவைச் செய்கின்றேன். இப்பதிவு முழுமையானதல்ல திருத்தங்களுக்கு இடமுண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே மாவீரருக்கு பெருமதிப்பளித்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் அவர்கள் நினைவாக சுவரொட்டிகள் வெளியிடல் அவர்கள் நினைவாக நினைவுக் கூட்டங்களை நடத்தல் அவர்களின் வீரவரலாற்றை நூல்களில் பதிவு செய்தல் என அவர்களுக்கான மதிப்பளிக்கப்பட்டது. மாவீரர்களின் எண்ணிக்கை கூடியபோது எல்லா மாவீரர்களையும் ஒரே நாளில் நினைவு கூர்வது இன்றியமையாதது எனத் தோன்றியது.

இந்தியப்படை இங்கு நிலை கொண்டிருந்த காலத்தில் 1989ஆம் ஆண்டு தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகளில் முதல் வீரச்சாவடைந்த லெப்.சங்கரின் நாளை மாவீரர் நாளாக நினைவு கூர வேண்டுமென முடிவெடுத்தார். இதற்கமைய 27.11.1989 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் தமிழீழம் எங்கும் நினைவு கூறப்பட்டது. 24.10.1989 அம்பாறையிலிருந்து இந்தியப்படை வெளியேறி இருந்தது. அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய இடங்களில் பெருமெடுப்பில் மாவீரர் நாள் நினைவு கூறப்பட்டது. இந்தியப் படையின் அச்சுறுத்தலுக்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடி முன்மாரிக் கோட்டத்திலும் திருமலை, யாழ்ப்பாணம், வன்னிப்பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. மணலாற்றில் தேசியத் தலைவர் மாவீரர் நாளைச் சிறப்பாக ஒழுங்கு செய்து மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.


மாவீரர்களின் பெற்றோர்களுக்கான அழைப்பிதழை தலைவர் முன்னாள் போராளியான ஒலிவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி அச்சடித்து இங்குகொண்டு வந்து மாவட்டம் தோறும் அரசியற்துறையினர் ஊடாகப் பெற்றோருக்கு அனுப்பி ரோசாப்பூவை முகப்பிற் கொண்டதாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மாவீரர் நாளுக்கென ஒலிவர் வரைந்த படம் கொழும்பில் சுவரொட்டியாக அச்சடிக்கப்பட்டு எங்கும் ஒட்டப்பட்டன. அதன் சிறிய ஒரு வடிவம் சட்டைப் பைகளில் குத்தக் கூடிய வகையில் பலருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை தமிழ்நாட்டில் இளங்குமரன் அவர்களின் முயற்சியால் ரோசாப்பூவுடனான மாவீரர் சுவரொட்டியும் தலைவர் புலியுடன் நிற்கும் சுவரொட்டியும் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன. மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் மாவீரர்களைப் பொதுச் சுடுகாடுகிளல் எரிக்கும் வழக்கம் தொடர்ந்தது. ஒருமுறை மாவீரர்களை மானிப்பாயிலிருக்கும் பிப்பிலி சுடுகாட்டுக்கு எரிக்கச் சென்றபோது அங்கு வேறொருவரின் உடலும் எரிந்து கொண்டிருந்தது. இப்படியாக இல்லாது வேறுபட்ட இடத்தில் மாவீரர்களை எரிக்க வேண்டுமென புதுவை அண்ணரோடு வேறு சிலரும் தலைவரோடு கலந்துரையாடினர். தலைவர் உடனடியாக மாவீரரை எரிக்கத் தனியான ஓர் இடத்தைத் தெரிவு செய்யுமாறு பணித்தார்.

அக்காலத்தில் கலை பண்பாட்டுக் கழகமே மாவீரர்கள் குறித்த நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து வந்தது. அதற்கமைய அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளியான ராசன் புதுவை அண்ணர் ஆகியோர் பல இடங்களைப் பார்த்து கோப்பாயில் திறந்த சிறைச்சாலையாக இருந்த இடத்தைத் தெரிவு செய்து அவ்விடம் குறித்து தலைவரோடு கலந்து பேசினர். அது பத்துப் பரப்பைக் கொண்டிருந்தது. அதற்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான பத்துப்பரப்புக் காணி விலை கொடுத்து வாங்கப்பட்டது. இருபது பரப்புக் காணி மாவீரரை எரிப்பதற்கான மாவீரர் மயானமாக தெரிவு செய்யப்பட்டது. மாவீரர்களை எரிப்பதற்கான ஒருமேடை கட்டிடக் கலைஞரான ரவி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அதற்குரிய வரைபடத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனத் தலைவர் கூறினார். அதற்கமைய கோப்பாயில் மாவீரர்களை எரிப்பதற்கான மேடை கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் மாவீரர் சுடுகாடு அமைக்கப்பட்டது. மாவீரர்களை இந்த சுடுகாட்டில் எரித்தல் சூண்ட காலம் சூடிக்கவில்லை.

 
ஒருநாள் தலைவர் பலரை அழைத்து மாவீரர்களைப் புதைப்பது குறித்து கலந்து பேசினார். மாவீரர்களைப் புதைப்பதன் மூலம் அவர்கள் நினைவை அவர்கள் உறவினரும் தமிழீழ மக்களும் என்றம் நினைவு கூர்வர். அதுவொரு போர் மரபை தமிழரிடையே வளர்க்கும் என அவர் கருதினார். மேலும் மாவீரர்களை மதச் சடங்குகளுக்குள்ளாக்காது மதங்கள் கடந்த நிலையில் அவர் புதைக்க விரும்பினார். இந்தக் கூட்டத்தை அடுத்து மாவீரர்கள் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நடுகற்கள் வைக்கப்பட்டன. இந்த நடுகற்களுக்காகக் கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கற்களும் நாவலரால் நல்லூரை மாற்றிக் கட்டவெனக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த கருங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. கருங்கல்லில் பெயர் பொறிக்கும் பணி கலைபண்பாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் நாளை எவ்வாறு நினைவு கூருவது என்பதை ஒழுங்கமைக்கும் பணி புதுவை அண்ணரிடம் தரப்பட்டது. அவர் மாவீரர் நினைவு கூரலுக்கான நடைமுறையை எழுதித் தலைவரிடம் காட்டி அதற்கான ஒப்புதலைப் பெற்றார். 27ம் திகதி 00:00 மணிக்கு – அதாவது 26ம் நாள் 24:00மணிக்கு – மாவீரர் நினைவொலி எழுப்பப்படும். 00.03 நிமிடத்தில் மாவீரர் சுடர் ஏற்றப்படும் என்ற வகையிலேயே மாவீரர் நாள் நினைவு கூறப்பட்டது. பின்பு அந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இன்று லெப்.சங்கர் வீரச்சாவடைந்த 18.05 மணிக்கு மாவீரர் நினைவொலி எழுப்பலுடன் மாவீரர் நாள் நினைவு கூரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கரின் உடல் தமிழ்நாட்டில் எரிக்கப்பட்டது.

இரண்டாவது மாவீரன் லெப்.செல்லக்கிளியின் உடல் அக்காலச்சூழல் காரணமாகப் புதைக்கப்பட்டது


2007 ஆம் ஆண்டு திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது

Saturday, March 30, 2013

உறுதி மொழி

உறுதி மொழி

தமிழீழத்தாய் நாட்டிற்காக தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீர நாளில் எடுத்துக்கொள்ளும் உறுதி மொழி தான் இது. புலம்பெயர் ஈழத்தமிழர்களே இந்த உறுதி மொழியை உறுதியாகக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக உழையுங்கள். தினமும் இந்த உறுதி மொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

உறுதி மொழி; ஈழத்தமிழனாகிய நான் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எனது இலட்சியம். இந்த இலட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றேன்.

Wednesday, November 21, 2012

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் நாளே மாவீரர் நாள்


1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை...





மாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்

 


“எங்களுருக்கு மீண்டும் செல்வோம்” “அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்” “நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல.” “போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு…” என்ற உண்ணத்து 

நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து நினைவுகூருவோம் (காணொளி)

 

சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.

ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை.”எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்” என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் “எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்” என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. 

அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவு போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு. 

அதன்பின் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது. 

இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

 

பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.

 

அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைகளூடாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.

எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.



ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.  ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.



மாவீரர் துயிலும் இல்ல விபரம்

1 திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம்

3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்

4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்

5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்

6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்

7 மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்

8 அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்

9 முல்லைத்தீவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்

10 விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்

11 துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

12 வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

13 அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்

14 மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்

15 மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்

16 களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்

17 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

18 முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்

19 வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்

20 ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்

21 பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்

22 யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

23 தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

24 வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

25 தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

26 வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

27 மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள்