Wednesday, May 29, 2013

நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 10



ஈழப் பிரச்னை தொடர்பான விவாதங்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஓர் அறிக்கையைத் தயாரித்து, அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டு அனுப்பியது. கட்சியின் முழுமையான நிலைப்பாட்டை உள்வாங்கிக்கொள்ள இது பயன்படும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பான அறிக்கையை, சர்ரியலிஸ பாணியில் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றை வரிசையாகவும் விமர்சன ரீதியாகவும் சொல்லாமல் புரிய வேண்டிய இடங்களில் மறைத்தும், தெளிய வேண்டிய இடங்களில் திரித்தும் இருக்கிறது அந்த அறிக்கை.

'வர்க்கக் கண்ணோட்டத்துடன் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கட்சி எடுப்பதால், அதிகம் விமர்சனத்துக்குள்ளாகிறது. கட்சியைத் தனிமைப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன’ என்கிறது அந்த அறிக்கை.

அதாவது, 'தனித் தமிழீழத்தை நாம் ஏற்பது இல்லை, விடுதலைப் புலிகளை நாம் ஆதரிப்பது இல்லை, எனவேதான் நாம் விமர்சிக்கப்படுகிறோம்’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்குத்தானே காரணம் கற்பித்துக்கொள்கிறது. 'செம்மலர்’ பேட்டியிலும் இதை ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்.

மார்க்சிஸ்ட்கள் மீதான விமர்சனம் இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இல்லை. அவர்கள் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம், ஈழப் பிரச்னையின் உண்மையான நிறத்தைச் சொல்ல மறுப்பதுதான். நோய் என்ன என்று சொல்வதிலேயே முரண்பாடுகொண்டவர்களால், தீர்வை மட்டும் சரியாக எப்படிச் சொல்ல முடியும்?

தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காத விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கின்ற அமைப்புகள்கூட, இந்தத் தளத்தில் இயங்குகிறார்கள். தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதக் கூட்டத்தை மிகத் தெளிவாக அம்பலப்படுத்திவருகிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் மையமாகவே பேசி வருகிறது. 'இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய தண்டனை தரப்பட்ட வேண்டும். இதற்கு நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் உ.வாசுகி.

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் செய்த பொறுப்பாளிகள் என்றால், யார்? இத்தனை லட்சம் பேரை இலங்கையில் கொன்று விட்டு யாராவது தப்பிப் போய்விட்டார்களா என்ன? இலங்கை அரசாங்கம் இதை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், கொலை செய்ததற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையா? இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதீத அக்கறைதான் அந்தக் கட்சியைத் தனிமைப்படுத்திக் காட்டுகிறது. தமிழர் படுகொலைகள் பற்றிப் பேசினால், 'சிங்களவர்களும்தானே அங்கு பாதிக்கப்படுகிறார்கள்’ என்று சொல்லும் அந்தக் கட்சி, தமிழகத்தில் இரண்டு புத்த பிட்சுகள் தாக்கப்பட்டதை, 'இனவெறி தலைதூக்கிவிட்டது’ என்று கண்டிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் கண்டிக்கப்படுவதற்குக் காரணமே.

1. இலங்கையில் சிங்களர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் உண்டு.

2. இலங்கையில் நடந்தது மிகக் கொடூரமான இனப்படுகொலை.

-இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு மிக முக்கியமான முரண்பாடு. தமிழீழத்தை அவர்கள் ஆதரிப்பது அல்லது மறுப்பது, விடுதலைப் புலிகளை ஆராதிப்பது அல்லது நிராகரிப்பது அல்ல பிரச்னை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஆவணத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகமே இல்லை. உ.வாசுகியும் கவனமாக அதைத் தவிர்க்கிறார்.

இலங்கையில் நடந்த படுகொலைகளை, வெறுமனே 'தேசியப் பிரச்னை’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்ல முடியுமா? தேசியப் பிரச்னை என்றால், அது தேசிய இனப் பிரச்னையா, தேசிய வர்க்கப் பிரச்னையா, தேசிய மதப் பிரச்னையா, தேசிய வர்ணப் பிரச்னையா... என்ன பிரச்னை?

மருத்துவரிடம் போனால் 'வலிக்குது டாக்டர்’ என்றா சொல்வோம். தலை வலியா, கழுத்து வலியா, வயிற்று வலியா, கால் வலியா... என்ன வலி என்று அடையாளப்படுத்துவது இல்லையா? ஓர் உயிருக்கான உடல் நோவையே குறிப்பிட்டு விளக்கும்போது, லட்சக்கணக்கானவர் கொல்லப்பட்ட பிரச்னையை தேசியப் பிரச்னை என்று சொல்வதன் உள் அர்த்தம், அது புரிந்துவிடக் கூடாது என்பதுதானே?

இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், என்ன ஆகும்? இன ரீதியான தீர்வைச் சொல்ல வேண்டும். அதனால் மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று சொல்கிறார்கள். போர் நியாயமானது என்று ஒப்புக்கொண்டால்தான், அதில் நடந்த தவறுகள் குற்றங்கள் ஆகும். போரை நியாயமானது என்று ஒப்புக்கொள்கிறார்களா?

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்ற வார்த்தைகள் இலங்கைக் கொடூரத்துக்குக் கொஞ்சம்கூட பொருந்தாதவை. 1980 முதல் 2008 வரை 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதி யுத்தத்தில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் வடக்கு மாகாணத்தில் அநாதைகள். வடக்கு, கிழக்கு இரண்டிலும் 60 ஆயிரம் பெண்கள் விதவைகளாகினர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் இல்லை. கொல்லப்பட்டும், கொல்லப்படாமலும், விதவை ஆக்கப்பட்டும், அநாதை ஆக்கப்பட்டும்கிடக்கும் மொத்தப் பேருமே தமிழர்கள். கடந்த 30 ஆண்டு காலத்தில் முடிந்த வரை கருவறுத்து முடித்துவிட்டனர். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

'முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசு முகவர் அலுவலகக் குறிப்பின்படி, 2008 அக்டோபர் மாதம் வன்னியின் மக்கள் தொகை 4,29,059. போர் முடிந்த பிறகு இலங்கையின் முகாமுக்குள் வந்தவர்களின் கணக்கு 2,82,380. அப்படியானால் 1,46,679 பேரின் கதி என்ன?’ என்று மன்னார் மாவட்ட கத்தோலிக்க பாதிரியார் ராயப்பா ஜோசப், இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவில் கேட்டார். அந்த 1,46,679 பேர்தான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள்.

விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒரு கைதி அடித்துத் துன்புறுத்தப்படுவதை மனித உரிமை மீறல் என்று குற்றம் சாட்டுவோம். 1,46,679 பேர் கொலையையும் மனித உரிமை மீறல்கள் என்று சொன்னால், அதைவிட மனச்சாட்சிக்கு விரோதமான செயல் வேறு இருக்க முடியுமா?

சர்வதேச இனப்படுகொலை தடுப்புத் தண்டனைச் சட்டம், எது இனப்படுகொலை என்பதை வரையறுக்கிறது.

'ஒரு தேசிய இனம் அல்லது மதக் குழுவின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் இனப்படுகொலை ஆகும். அந்த இனக் குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல், உடல், உளரீதியாக அந்த இனக் குழுவின் உறுப்பினர்களுக்குத் தீங்குசெய்வது, வேண்டுமென்றே அந்தக் குழுவின் வாழ்க்கை நிலையில் தாக்குதல் தொடுத்து, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ திட்டமிட்ட உடல்ரீதியான அழிவை ஏற்படுத்துதல், அந்தக் குழுவுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தல், அந்தக் குழுவிலுள்ள குழந்தைகளை வேறு குழுக்களுக்குக் கட்டாயமாக மாற்றுதல் - ஆகிய எந்த ஒரு செயலும் இனப்படுகொலை வரையறைக்கு உட்பட்டது’ என்று சொல்கிறது. இதன் ஒவ்வொரு சொல்லும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றே சொல்லுமே. இதைப் புரிந்துகொள்ளும் சக்தி மார்க்சிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது ஏன்? வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் என்ற அமைப்பு, 1956 முதல் 2008 வரை நடந்த அனைத்து இனப்படுகொலைச் சம்பவங்களையும், தேதிவாரியாகக் கொல்லப்பட்ட தமிழர்களின் பெயர்களுடன் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்தால் மனச்சாட்சி உள்ளவர்கள் கலங்கிப்போவார்கள். மார்க்சிஸ்டுகள் அதைப் பார்க்கட்டும்.

இனப்படுகொலை என்று இதைப் பார்க்க மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அறிக்கையில், விடுதலைப் புலிகளை அடக்குவதற்காகத்தான் இந்த போர் நடத்தும் சூழ்நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது என்றும் காரணம் சொல்கிறது. ' புலிகளின் வன்முறையை எதிர்கொள்ள இலங்கை அரசு ராணுவரீதியில் தன்னைத் தயார்செய்துகொண்டது’ என்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தையே, 'இலங்கை அரசுக்கும் எல்.டி.டி.இ. அமைப்புக்குமான உள்நாட்டு யுத்தம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல வரலாற்று அசிங்கம் வேறு இருக்க முடியாது. புலிகள் அமைப்பு 1972-ல் மெள்ள உருவாகி, 1980-களின் தொடக்கத்தில் நிர்வாகக் கட்டமைப்புகொண்டதாக மாறி, 80-களின் இறுதியில் ஆயுத பலம்கொண்டதாக மாறுகிறது. அப்படியானால் அதற்கு முன் செத்தவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே கொலை செய்துகொண்டார்களா? 1950 முதல் 1975 வரை அகிம்சைப் போராட்டம் நடந்தது. 1980 முதல் 2009 வரை ஆயுதப் போராட்டம் நடந்தது. அகிம்சைப் போராட்டம் ஆரம்பித்தபோது, பிரபாகரன் பிறக்கவே இல்லை. தமிழீழத்தை ஈழத் தந்தை பிரகடனம் செய்தபோது, போராளி அமைப்புகள் எதுவும் பலமாகவே இல்லை. நிராயுதபாணியாக நின்ற தமிழர்களை நித்தமும் அடித்து அடித்து ஆயுதம் தூக்கவைத்தார்கள். இதைத்தான், 'நான் என்ன ஆயுதம் தூக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான்’ என்றார் மாவோ. இதைத்தான் லெனின், நீதியான போர், அநீதியான போர் என்று பிரித்துச் சொல்வார்.

இந்தப் பின்புலம் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல், புலிகள் ஆயுதம் தூக்கியதால் இலங்கை ராணுவம் குண்டு போட்டது என்று தாக்குதலையும் எதிர்தாக்குதலையும் இடம் மாற்றிப் போடும் தந்திரம் மார்க்சிஸ்ட்களுக்கு அவசியம் இல்லாதது. தன்னுடைய வரலாற்றுக் கடமையை மறைக்க மட்டுமே இது உதவும்.

இன்னொன்றையும் அந்த அறிக்கை சொல்கிறது, 'இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை. எனவே, சர்வதேசப் பிரச்னை என்ற முறையில் இங்கிருந்து தலையிடுவதற்கு ஓர் எல்லை உண்டு’ என்று.

அப்படியானால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டதை அந்தக் கட்சி அப்போது வரவேற்றது ஏன்? உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவுக்கு என்ன வேலை என அன்று ஏன் கேட்கவில்லை? இதைவிடக் கொடுமை....

'இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா விற்பனை செய்யலாம்’ என்ற அரிய ஆலோசனையை வழங்கியவரும் ஒரு மார்க்சிஸ்ட் தலைவர்தான். 2000, ஜூன் மாதத்தில் விடுதலைப்புலிகளின் ராணுவரீதியான தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை ராணுவம் ஆனையிறவு முகாமை இழந்தபோது உள்ளம் பதறிப்போய் இப்படிக் கோரிக்கை வைத்தவர், மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் தலைவர் உமாநாத். அவரது மகள் உ.வாசுகி இப்போது சொல்கிறார், 'அந்த மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்’ என்று.

தமிழன் படுகொலை செய்யப்படும்போது 'அது அவர்களது உள்நாட்டுப் பிரச்னை’ என்பதும், இலங்கை ராணுவம் தோல்வியைத் தழுவும்போது, 'இந்தியா ஆயுதம் விற்கலாம்’ என்றும் ஆலோசனை சொல்வதும் யாருடைய நலனைப் பிரதிபலிக்கிறது? நமக்கு எதற்கு ஆயுதத் தரகு வேலை? ஆயுதம் விற்கலாம் என்று சொன்னால், இலங்கை அரசாங்கம் செய்வது அனைத்தும் சரியானது என்று அந்தக் கட்சி நம்பியதா? 'உமாநாத் அன்று சொன்னதைத்தான் நாங்கள் இன்று செய்தோம்’ என்று மன்மோகன்சிங் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? ஜூன் மாதம் இந்த ஆலோசனையை உமாநாத் சொன்னார். டிசம்பர் மாதம் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு புதைகுழி தோண்டப்பட்டு, எட்டுப் பிணங்கள் எடுக்கப்பட்டன. ஒரு கை எலும்பு கிடைத்து, அந்த இடத்தைத் தோண்டியபோது எட்டுப் பேரின் எலும்புகள் கிடைத்தன. இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்கா ஆயுதம் கொடுக்கச் சொன்னீர்கள்? அது என்ன சோஷலிஸ அரசா? தமிழர்கள், சோஷலிஸ அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார்களா? ஏகாதிபத்தியம் அந்த ஆட்சிக்கு எதிராகத் தமிழர்களைத் தூண்டியதா?

இலங்கைக்கு ஆயுதம் விற்பனைசெய்ய மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவை எடுத்தவர் 'மதவாத’ப் பிரதமர் வாஜ்பாய். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 'இடதுசாரி’ சுர்ஜித் அதை ஆதரித்தார். ஆனால், தமிழ்நாட்டு 'இடதுசாரி’ உமாநாத் அதற்கு விரோதமாகக் கருத்துச் சொன்னார் என்றால், கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது? 'அரசியலின் நீட்டிப்பே யுத்தம்’ என்றார் மாவோ. அது புரிந்திருந்தால், ஆயுத வர்த்தகம் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் பேச முடியுமா?

ஈழத்து விடுதலைப் போராட்டம் தோற்றுப்போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்...

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அரசாங்கம் தவிர யாரிடமும் ஆயுதம் இருக்கக் கூடாது என்பது, அமெரிக்கா உருவாக்கிய உலக ஒழுங்கு. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என எந்த வித்தியாசமும் பார்க்காதே, அனைவரிடமும் இருக்கும் ஆயுதங்களையும் பறிமுதல் செய் என்பதே அமெரிக்காவின் தீர்ப்பு. இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய சோஷலிஸ, ஜனநாயக மாற்று (முன்பு சோவியத் இருந்தது போல!) அரசியலமைப்புகள் இல்லை. இருந்தால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாத இயக்கங்களையும் பிரித்துப் பார்ப்பார்கள். இலங்கையை நிலைக்களனாகப் பயன்படுத்த சீனா துடித்தது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியது. இத்தகைய வெளிப்புறச் சக்திகளின் நலன்கள் சேர்ந்து 'பயங்கரவாத இயக்கத்தை அழிக்கிறோம்’ என்ற போர்வையில், லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க பின்னணியில் இருந்தனர். இவை எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல் வறட்டுத்தனமாக அனைத்துப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்ப்பது மரணித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.

கட்டுரையை முடிக்கும்போது மாக்சிம் கார்க்கி நினைவுக்கு வருகிறார்..

'அடிமைகளின் துன்பத்துக்கும் அடிமைப்படுத்துவோரின் கொடுமையான ஏமாற்றுவித்தைக்கும் நடுவே சமரசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று நயவஞ்சமாகக் கூறுகிறார்கள். எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தை மனதில்வைத்துக்கொண்டு இவ்வாறு கூறுகிறார்கள். இது, பொய்களைக் கற்களாகக்கொண்டு மனிதனுடைய சுதந்திர உள்ளத்துக்குச் சமாதி கட்டிவைப்பதற்காகச் செய்யப்படும் கேவலமான சூழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லை’.


இத்தொடர் முற்றுப்பெற்றது


மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9

Saturday, May 25, 2013

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை! - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 9


செருப்புக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக்கொள்ள முடியுமா? தேசிய இனங்கள் குறித்த கொள்கையில் அப்படித்தான் நடந்துகொள்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

'மார்க்சியமும் இந்தியாவில் தேசிய இனப்பிரச்னையும்’ என்ற சிறு நூலை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.டி.ரணதிவே எழுதி வெளியிட்டார். தேசிய இனம், தேசிய இனப்பிரச்னை என்பதற்கு லெனின், ஸ்டாலின் கொடுத்த விளக்கங்கள் அனைத்தையும் நிராகரித்து, தங்களுக்குத் தகுந்த மாதிரி ஒரு வடிவத்தை பி.டி.ரணதிவே கொடுத்துக்கொண்டார்.

'இந்தியாவின் நிலைமைகளில் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையோ, பிரிந்து செல்லும் உரிமை என்ற கோரிக்கையோ எழுப்பப்படவில்லை. இதற்கான காரணங்கள் மதுரைக் கட்சி காங்கிரஸில் பூரணமாக விவாதிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், மாநிலங்களுக்குச் சமமான பங்கு, மாநில சுயாட்சி, மீதம் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு என்று மேலே கூறப்பட்ட இதர திருத்தங்களைக்கொண்ட கோரிக்கை மூலம் மாற்றியமைக்கப்பட்டது’ என்று பிடி.ரணதிவே கூறுகிறார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையே மாநில சுயாட்சி என்ற சொல்லுக்குள் குறுக்கப் பார்ப்பது மார்க்சியத்துக்கே இழுக்கு.

ஓர் இனத்தின் உரிமைப் பிரச்னையை இடப் பிரச்னையாக, ஒரு மாநில அரசாங்கத்தின் நிர்வாகப் பிரச்னையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுருக்கிவிடுகிறது.

சுயநிர்ணய உரிமை வேறு, மாநில சுயாட்சி என்பது வேறு. மார்க்ஸியமும், தேசிய இனப் பிரச்னையும் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய எந்த வரையறைக்குள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் வியாக்கியானத்தைப் பொருத்திப் பார்க்கவே முடியாது.

'ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய, நிலையான மக்கள் சமூகமாகும். மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும்போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காண முடியும்’ என்று வரையறை செய்த ஸ்டாலின்,

'எல்லா நாடுகளிலும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சமூக ஜனநாயகம் பிரகடனம் செய்கிறது. சுயநிர்ணய உரிமை என்பது தங்கள் விதியை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை அந்தந்த தேசிய இனங்களுக்குத்தான் உண்டு என்பதாகும். ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாகக் குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும், மற்ற நிறுவனங்களையும் அழிப்பதற்கோ, அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபுகளை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்குவதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை’ என்றும் எழுதினார்.

பொது மொழி, தொடர்ச்சியான ஆட்சி எல்லை, பொதுவான பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம் - ஆகிய நான்கையும் தேசிய இனத்தின் சிறப்புக் கூறுகளாக ஸ்டாலின் வரையறை செய்து சுயநிர்ணய உரிமையைக் கொடுக்கிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஒரு மத்திய அரசாங்கத்திடம் சலுகை பெறும் மாநில சுயாட்சியாக அதைத் திரிபுவாதம் செய்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதேசத்தை, மாநிலமாகவும் பிராந்தியமாகவும் குறுக்குகிறது.

தேசிய இனம் எனப் பிரித்துப் பேசுவது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு எதிரானதாக நினைத்து அந்தக் கட்சி அப்படிச் செய்திருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.

மேலோட்டமாகப் பார்த்தால், உண்மைதான். பாட்டாளி வர்க்கம் என்பது தேசங்களை அழித்து, சர்வ தேசியங்களை உருவாக்க விரும்புகிறது. ஆனால், அதை எப்படிச் செய்வது? இன உணர்வைப் பற்றிப் பேசாமல் இருப்பதன் மூலமாக அல்ல. இன ஒடுக்குமுறைக்கான அடிப்படைகளை ஒடுக்குவதன் மூலமாக இனப் பிரச்னைகளைத் தீர்த்தாக வேண்டும். அதனால்தான், பாட்டாளி வர்க்கக் கட்சியானது எப்போதும் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காகவும் வளர்ச்சி குன்றிய தேசங்களின் வளர்ச்சிக்காகவும் நின்று அவற்றை வளர்க்க வேண்டும் என்று லெனினும் ஸ்டாலினும் விரும்பினர்.

175 தேசிய இனங்களையும், மலை வாழ் இனங்களையும்கொண்ட நாடு ரஷ்யா. இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரிய நாடு. 'அனைத்து இனங்களுக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு’ என்ற பிரகடனம்தான் ஜார் ஆட்சிக்கு எதிராக அனைத்து இனங்களையும் ஒன்று திரட்டப் பயன்பட்டது. புரட்சியை மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் அனைத்து இனங்களும் சேர்ந்தே சோவியத் ஆட்சிக்கு வழங்கியது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுந்த தேசிய இனப் பிரச்னையை தீர்க்காமல், ஒன்றுபட்ட சோவியத்துக்காக ஆட்சியாளர்கள் துடித்தபோது பால்டிக், எஸ்தேனியா, ஜார்ஜியா, உக்ரேன், மாலடோவியா, பைலோ ரஷ்யா என்று பல்வேறு இடங்களில் பிரச்னை தலைதூக்கியது. ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் 50 சதவிகிதம் குறைந்ததற்குக் காரணம் அங்கு நடந்த தேசிய இனப் போராட்டங்கள்தான் என்று ஆய்வாளர்கள் எழுதினர். இதனால், 90-களின் தொடக்கத்தில் உடைந்து நின்றது ரஷ்யா. உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு தேசங்களில் ஒன்றான ரஷ்யா உடைந்து நொறுங்குவதற்குக் காரணம், தேசிய இனப்பிரச்னையை ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்கள் சரியாக உள்வாங்காததும், மறைத்ததும். இனப் பிரச்னை அனைத்தையுமே யாரோ வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள் என்ற பீதியைக் கிளப்பி மறைக்கப் பார்த்தனர். இரும்புத் திரையே கிழிக்கப்பட்டது என்பது வரலாறு!

இவை எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

இந்திய விடுதலைக்கு முன்னதாகவே 1945 நவம்பரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பரிபூரண சுதந்திரம் பெற்ற அரசுரிமை அந்தஸ்துடைய அரசியல் நிர்ணயசபை ஏற்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது. 'நம்மிடையே தோன்றி வரும் வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் நம்மைப் பிறர் தயவை நாடி நிற்பவர்களாக்கி, சுதந்திர அந்தஸ்தற்றவர்களாக்கி விடுகிறார்கள். ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை எதிர்த்துக்கொண்டு நிற்கும் நிலைமையில் வைத்துவிடுகிறார்கள். இந்த விஷச் சக்கரத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு ஒரேயரு வழிதான் உண்டு. நம்முடைய நாட்டு ஜனங்கள் அனைவருக்கும், வெவ்வேறு சுதந்திர அபிலாஷைகொண்ட வர்க்கங்கள் அனைவருக்கும் பரிபூரண சுதந்திர அரசுரிமை உடைய அந்தஸ்து உண்டு என்ற அடிப்படையில் நாம் இந்தச் சுதந்திரப் பாதையைப் பின்பற்றுவதே சரியான வழியாகும்’ என்று அதில் விளக்கம் கூறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னதமான எண்ணத்தில் இந்த முடிவை அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்தனர். சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டும். அதைக் கேட்பதற்குத் தார்மீக உரிமை உண்டு. அந்த உரிமை நிராகரிக்கப்படும்போது, போராட வேண்டும் என்பதே அவர்களது அன்றைய நிலைப்பாடு.

1948ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நடந்த கொல்கத்தா மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. 'கம்யூனிஸ்ட் கட்சி 1951 முதல் 1958 வரை கட்சியின் அடிப்படைத் திட்டத்தில் பிரிந்துபோகும் உரிமையுள்ள இந்திய தேசிய இனங்களின் அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்திய நிலைமையைக் கூர்ந்து கவனித்ததில் பிரிந்து போகும் உரிமையை வலியுறுத்துவது பொருந்தாது என்று முடிவுசெய்தது. பிரிந்து போகும் உரிமையின்றியே மொழி வழி மாநில அமைப்பை நன்கு பயன்படுத்தி அந்த ஒற்றுமையை வளர்க்கக்கூடிய வாய்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கெடுத்து இவ்வாறு முடிவு செய்தது’ என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார்.

பிரிந்து போகும் உரிமையை இந்தியாவுக்குக் கோருவது பொருந்துமா பொருந்தாதா என்பது நடைமுறை சம்பந்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமை உண்டா இல்லையா என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. அத்தகைய சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கிறதா என்பதே முக்கியம்.

அந்த உரிமையைக் கொடுப்பதாலேயே அனைத்துத் தேசிய இனங்களும் தனித் தனி நாடுகளாகத்தான் இருக்க வேண்டும், இந்தியா பிரிந்துவிட வேண்டும், இலங்கை உடைந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதைத்தான் லெனின் அனைவருக்கும் புரியும் மொழியில், 'விவாகரத்து உரிமை வழங்குவதாலேயே குடும்பங்கள் அனைத்தும் உடைந்துவிடவே வேண்டும் என்று சொல்பவனல்ல நான்’ என்று சொன்னார்.

கொள்கைக்கு ஏற்ப நடைமுறைகளை வகுக்காமல், நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கிக்கொண்டதால்தான் சுயநிர்ணய உரிமைக்கும் மாநில சுயாட்சிக்குமான குழப்பங்கள் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்சியம் என்பது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தை மட்டும் தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து மீட்பதாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களுக்கும் மாற்றுத் திட்டத்தை வழங்கியது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பணிகளில் இருந்தாலும் காலனி ஆதிக்க நாடுகளில் நடந்த புரட்சிகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் உன்னிப்பாகக் கவனித்தே வந்தனர். இப்படித்தான் இந்திய விடுதலையையும் பார்த்தனர்.

இந்தியாவில் நடந்தது வர்க்கப் போராட்டமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ அல்ல. 'இந்தியாவில்கூட புரட்சிகர இயக்கங்கள் வளர்ந்துவருகிறது’ என்று லெனின் சொன்னது, போராட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதால்தான். அதனால்தான் வளர்ந்த நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் காலனி நாடுகளில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைக்க லெனின் விரும்பினார்.

ஆனால் இந்திய மார்க்சிஸ்ட்டுகள், அனைத்துப் போராட்டங்களையும் பிரிவினைவாதம், ஏகாதிபத்தியங்களின் சதி என்ற இரண்டு வார்த்தைகளைப் போட்டு மூடுகிறார்கள். அதனால்தான், தமிழர் தாயகத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஈழம், இனப்படுகொலை என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது.

Friday, May 24, 2013

சண்முகதாசன் பிரிவினைவாதியா? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 8




'மாறுதல் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்சிய தத்துவத்தைக்கொண்ட கட்சி, 40 ஆண்டுகளாக ஈழத் தமிழர் பிரச்னையில் 'மாறவே மாறாத’ கொள்கையை வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் பச்சைப் படுகொலை (1983-85) செய்யப்பட்ட காலகட்டத்திலும் 'தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று ஞான உபதேசம் செய்தார் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். 'இருவரும் இணைந்து வாழ முடியாவிட்டால், இருவரும் வாழவே முடியாது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்றார். 28 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட புதைகுழிகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. இன்று, ஈ.எம்.எஸ். இருந்திருந்தால்... என்ன சொல்வாரோ?

'தமிழ் ஈழம் கோருவது இலங்கைத் தமிழருக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இலங்கை என்பது இரு மொழி பேசும் மக்களைக்கொண்ட நாடு. அந்த மக்கள் ஒன்றாக இல்லாவிட்டால், இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியாது. இரண்டு தரப்பினரும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றுபட்டு நின்றால்தான், அது சாத்தியமாகும். நமது நாட்டில்கூட இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நமக்குத் தெரியும். இப்போது சீக்கியர்களுக்கும் தகராறு. ஆனால் நாம் ஒருமைப்பாட்டைக் காத்துவருகிறோம். இன்னும் பல நாடுகளிலும் பல மொழி பேசும் மக்கள் இணைந்துதான் வாழ்கிறார்கள். எனவே, இலங்கையிலும் இணைந்து வாழ்வது சாத்தியம்தான்’ என்று ஈ.எம்.எஸ். பதில் சொன்னார்.

இலங்கைத் தமிழர் மீதான அக்கறையின் அடிப்படையில் கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் நம்பூதிரிபாட், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பதில் சொல்கிறார். தமிழர் படும் தொல்லை பற்றி பேச மறுத்து இலங்கை நாட்டு எல்லை பற்றிய கவலையே அவருக்கு அன்று இருந்துள்ளது. அதுவே இன்றும் தொடர்கிறது.

'யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பது இலங்கையிலுள்ள மக்களைத்தான் பிரித்துவைக்கும். ராணுவத்தினாலேயே வெற்றிபெறுவதும் இப்போது சாத்தியமல்ல. மேலும் மற்றொரு நாட்டை நம்பி ஆயுதப் போராட்டம் நடத்துவது எப்படி முடியும்? வங்காள தேசத்தையும் வியட்நாமையும் இத்துடன் இணைத்துப் பேசுவது பொறுப்பானதல்ல’ என்றும் ஈ.எம்.எஸ் அறிவுரை கூறினார்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை, இலங்கையில் இருந்து பிரித்துவைக்கிறதாம். யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

யாழ்ப்பாணக் கடற்கரையில் நிம்மதியாக மீன்பிடித்துவிட்டு காற்று வாங்கிப் படுத்திருந்த நிலையிலோ... நல்லூர் கந்தசாமி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருவாசகம் பாடிக்கொண்டிருந்த நிலையிலோ ஆயுதம் தூக்கவில்லை தமிழர்கள். சிங்கள இனவாதத்துக்கு எதிராக 30 ஆண்டுகள் அகிம்சை வழியில் எப்படியெல்லாமோ போராடிப் பார்த்துவிட்டு சிறு துரும்பு பயனும் ஏற்படாத நிலையில், ஆயுதக் குழுக்கள் உருவாகின. அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இந்த வரலாறு எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல், பாதியில் இருந்து ஈழப் பிரச்னையை பார்ப்பது அந்தக் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது. அதனால்தான் வங்கப் பிரச்னையையும் வியட்நாமையும் ஈழப் பிரச்னையும் ஒப்பிட மனமில்லாமல் ஒதுக்க முடிகிறது.

'இந்தப் பிரச்னை உணர்ச்சிப் பிரச்னையாகியுள்ளதே?’ என்று ஈ.எம்.எஸ்-ஸிடம் கேட்டபோது, 'உணர்ச்சிகள், பிரச்னைகளுக்குத் தீர்வு தராது. இப்படி உணர்ச்சி கிளப்பிவிடப்பட்டதை பாகிஸ்தான் பிரச்னையில் கண்டோம்’ என்று வருத்தப்பட்டார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது தனக்கு உடன்பாடு இல்லாததுபோல இந்தப் பதில் இருக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் கட்சிக்கு எடுத்துக் கொடுத்துப் பரிந்துரைத்ததே அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான். (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை.) அன்றைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் குறிப்பாக இதை முன்வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாய் க்வாலியாக்குள மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் (அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்களில் கம்யூனிஸ்ட்களும் கலந்துகொள்வார்கள்) பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் உள்ள பிரிவைப் பயன்படுத்தி குளிர்காய்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சி விரும்புகிறது என்று குற்றம்சாட்டியவர்கள், இந்தப் பிரிவை சரிப்படுத்த ஒரே ஒரு வழி இருக்கிறது என்று பரிந்துரைத்ததாக பி.ராமமூர்த்தி தனது புத்தகத்தில் (விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் - பக் 186) எழுதுகிறார்.

சுதந்திர இந்தியா, அனைத்து இன, மொழி மக்களையும் திருப்திசெய்யும் சமஷ்டி ஆட்சி முறையாக (இப்போது இருக்கும் மத்திய அரசு - மாநில அரசுகள் என்பதைப் போலவே) இருக்கும் என்று அன்று காங்கிரஸ் கட்சி சொன்னதை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்கள், இன்னும் ஒரு படி மேலே போங்கள் என்று அழைத்தனர்.

'இன்னும் சிறிது மேலே போய் வடமேற்கிலும், கிழக்கிலும் மெஜாரிட்டி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் சேர்த்துக்கொண்டால், காங்கிரஸ் - லீக் ஒற்றுமைக்கு அடித்தளம் ஏற்பட்டுவிடும் என்று நாங்கள் திருத்தம் கொடுத்தோம்’ என்கிறார் பி.ஆர். அதாவது, முஸ்லிம் லீக் கேட்கும் பாகிஸ்தானை பிரித்துக் கொடுக்க ஒப்புக்கொள்ளுங்கள் என்று 1942-ம் ஆண்டிலேயே ஆலோசனை சொல்லியுள்ளனர். காங்கிரஸ் கமிட்டி அன்று இதை ஏற்கவில்லை. நாட்டைப் பிரிக்கக் கோருவதால், 'தேச விரோதிகள்’ என்று கம்யூனிஸ்ட்கள் கொச்சைப் படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த ராஜாஜி, அன்று கம்யூனிஸ்ட் மேடைகளில் முக்கியத்துவம் கொடுத்துப் பேச அழைக்கப்பட்டதாக ராமமூர்த்தி சொல்கிறார். மத அடிப்படையிலான பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்த இவர்கள், தென் பகுதியில் அன்று இன அடிப்படையிலான 'திராவிட நாடு’ கோரிக்கையை நிராகரித்தனர். 'திராவிட நாடு’ கேட்டவர்களிடம் கொள்கை ரீதியான பலவீனங்கள் இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், 'தமிழ்நாட்டு முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் கோரிக்கைதான் திராவிட நாடு’ என்று பி.ராமமூர்த்தி கொச்சைப்படுத்தியது கவனிக்கத்தக்கது. 'திராவிட நாடு’ - தமிழ் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்குமானால், பாகிஸ்தான் பிரிவினை, முஸ்லிம் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்காதா?

அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழ்நாடு, தமிழர்களுக்கு ஒரு கொள்கை, மற்றவர்களுக்கு மறுகொள்கை என்று கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருக்கிறதா என்ன?

இதே பி.ராமமூர்த்திதான், 1983-ல் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது, தமிழர்கள், சிங்களர்கள், புத்த மதத் தலைவர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கவலைப்பட்டார். 'சிங்களர்களுக்கு எதிராக இனப் பகையுணர்வையும் ஆத்திரத்தையும் தூண்டுவதன் மூலம் அப்படிப்பட்ட சக்திகளும் கட்சிகளும் தங்களை அறியாமலேயே இலங்கையின் இனப்படுகொலையை ஊக்குவிக்கும் சக்திகள் மற்றும் கொலை வெறியர்களின் செயல்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். அவை அந்நாட்டில் வாழும் தமிழர் மற்றும் இந்தியர் நலனுக்குத் துணை செய்யாது. மாறாக அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் மேலும் ஆபத்தையே விளைவிக்கும்’ என்று உபதேசம் செய்தார்.

'சிங்களர்கள் அகிம்சாமூர்த்திகள், கடல் கடந்து வாழும் தமிழர்கள் ஆத்திரப்பட்டுப் பேசுவதால் மட்டுமே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொலை செய்வார்கள், மற்றபடி புத்தனின் புத்திரர்கள்’ என்று நினைத்தாரா பி.ஆர்?

1991-ம் ஆண்டு மே மாதம் நடந்த ராஜீவ் படுகொலை தொடங்கி 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிங்களரை, பேரினவாத ஆட்சியாளர்களை, புத்த பிட்சுக்களை ஆத்திரமூட்டும் பெரிய அளவிலான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது இல்லை. இதைப் பார்த்து அமைதியாகிவிட்டதா ராணுவம்? எத்தனை பெண்கள் விதவைகள் ஆனார்கள்? படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 67 குழந்தைகளை, ஒரே வெடியில் புதைகுழிக்கு அனுப்பிய வெறியைப் பார்க்கவில்லையா நாம்?

இப்படிச் சொல்வதன் மூலம் என்ன அறிவுரை சொல்ல விரும்பினர்? 'அந்தப் பிரச்னையைப் பற்றி பேசாதே, அதற்காகப் போராடாதே, அதைப்பற்றி சிந்திக்காதே’ என்றா?

பி.ஆர்.சுற்றி வளைத்துச் சொல்வதை ஈ.எம்.எஸ். வெளிப்படையாகவே சொன்னார்... 'இது சிக்கலான பிரச்னையாக இருப்பதால் பகிரங்கமாகப் பேசுவது முறையல்ல. அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி நமக்கு ஏராளமான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அரசாங்கங்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே, ராஜீவ்காந்தியிடம் தனியாக எங்கள் கருத்தைக் கூறினோம். நாளை, கருணாநிதி பிரதமரானால் அவரிடமும் தனியாகத்தான் சொல்வேன்’ (9.5.1985 - தீக்கதிர்) என்றார்.

உள்ளூர் பிரச்னையை உலகப் பிரச்னையாய் ஆக்குவதும், உலகப் பிரச்னையை உரக்கப் பேசாதே என்பதும் தமிழர் பிரச்னைக்கு மட்டுமே நடக்கிறது. அது மட்டுமே கசக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமான இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் நா.சண்முகதாசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ணோட்டப்படி எழுதப்பட்ட (இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு - என்.மருத்துவமணி, மா.இராமசாமி) புத்தகத்தில்கூட மிகப் பெருமைப்படுத்தப்படுகிறார் நா.சண்முகதாசன்.

'தேசிய இனப் பிரச்னை பற்றிப் பேசுவது, ஏகாதிபத்தியங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று (1965-களில்) முதலில் நினைத்தவர். 1980-களில்தான் மாற்றிக்கொண்டார்.

'இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் அறுபடாத ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்துக்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே, இன நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்னைக்குத் தீர்வு எதுவுமே இருக்க முடியாது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய, உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைக்கொண்ட சமஷ்டியாகவோ அல்லது பூரணப் பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படியும் கேட்டுக்கொள்வதற்கான அருகதையைக்கொண்டிருக்க முடியும். சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்’ - என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளவுகோல்படி தோழர் நா.சண்முகதாசனும் பிரிவினைவாதியா? அவரைப் பிரிவினைவாதி என்பவர்களை என்ன சொல்லலாம்?

தொடரும்

Sunday, May 19, 2013

ஈழம் தமிழர் தாயகம் இல்லையா? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 7



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழ் 'செம்மலர்’. அதில் ஈழத் தமிழர் பிரச்னை குறித்து அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் எடுத்த விரிவான பேட்டி இடம்பெற்றுள்ளது. (மே-2013)

இந்தப் பேட்டிக்கு முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச் செல்வன், 'சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் ஆதரவுடன் அந்தக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய உண்ணாவிரதத்தில் ஆரம்பித்து...’ என்று குறிப்பிடுகிறார். லயோலா கல்லூரியின் மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்தது தன்னெழுச்சியான அவர்களின் உணர்வின் உந்துதல். அதற்கும் அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த மாணவர்கள் மிரட்டப்பட்டனர். உண்மை இவ்வாறு இருக்க, 'நிர்வாகத்தின் ஆதரவுடன்’ என்று சொல்வதற்கு என்ன காரணம்?

லயோலா நிர்வாகம் என்றால் கிறிஸ்தவர்களாம். கிறிஸ்தவப் பின்னணி என்றால், அமெரிக்காவாம். அமெரிக்காவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடந்ததாம். கூடங்குளம் மக்கள் தேவாலயம் முன்னால் உண்ணாவிரதம் உட்கார்ந்திருப்பதால் அது அமெரிக்கத் தூண்டுதல் என்று சொல்வதைப் போல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூளைக்குத்தான், இப்படி உள்நோக்கம் எல்லாம் கற்பிக்க முடியும்!

இந்தப் பேட்டியில் ஒரு கேள்வி...

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிவதை ஆதரிப்பவர்கள், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பவர்கள் இலங்கைப் பிரச்னையில் மட்டும் மாறுபட்டு முடிவெடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கூறும் ஜி.ராமகிருஷ்ணன்,

'பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு. அவர்களின் நாட்டை அவர்களிடமிருந்து பறித்து ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டு, அந்த மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு.... ஆகவே, ஒரு நாட்டை இன்னொரு நாட்டுடன் ஒப்பிட முடியாது’ என்கிறார். இதைப் போல வரலாற்று விரோதக் கருத்து எதுவும் இருக்க முடியாது. தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிராகரிக்கும் வார்த்தைகள் இவை.

பாலஸ்தீனம் என்பது அந்த மக்களின் நாடு என்றால், ஈழ மக்களுக்கு அது சொந்த மண் அல்லவா? அவர்கள் அனைவருமே வந்தேறிகளா? 'குடியிருக்கப் போன இடத்தில் சண்டை போடலாமா?’ என்று திண்ணையில் உட்கார்ந்து பேசுவதைப் போல மார்க்சிஸ்ட்கள் பேசலாமா?

'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தனித் தீவாகப் பிரிந்திருக்கிற இலங்கை, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பாண்டி நாட்டோடு இணைந்திருந்த நிலம் இலங்கையோடு இணைந்து சேர்ந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் காலந்தோறும் ஏற்பட்ட கடல் கோள்களாலேயே அந்த நிலப் பகுதி சிறிது சிறிதாகக் கடலில் மூழ்கி இப்போதுள்ள நிலையை அடைந்தது. தமிழ்நாட்டின் கரையோரங்களைச் சுற்றிலும், இலங்கைத் தீவில் கரையோரங்களைச் சுற்றிலும் இப்போதுள்ள கடல் ஆழமில்லாமல் இருக்கிறது. இந்தக் கடல் ஆழமில்லாது இருப்பது முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி நிலமாக இருந்து இலங்கையும் தமிழகமும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது’ என்று சொல்பவர் புலிவாதி அல்ல. வரலாற்றாசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி தான் இப்படிச் சொல்கிறார்.

சிங்களர் தங்கள் வரலாற்றைச் சொல்ல ஆதாரமாக 'மகாவம்சம்’ என்ற புத்தகத்தைக் காட்டுவார்கள். சிங்களர்களின் மூதாதையரான விஜயன் தன்னுடைய தோழர்களுடன் லாலா தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு ஏறி வந்த கப்பல், இலங்கையில் தரை தட்டிக் கரையேறியபோது, அவர்களுக்குப் புகலிடம் அளித்தவர் யட்சப் பெண்ணரசி 'குவெய்னி’ என்கிறது மகாவம்சம். அந்த குவெய்னியை ஏமாற்றி அரசுரிமை பெற்றான் விஜயன். 'குவி எய்னி = குவெய்னி. அதாவது அழகெல்லாம் ஒருங்கு திரண்டவள் என்று பொருள்படும் ஒரு தூய தமிழ்ச் சொல் இது’ என்கிறார் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்.

தலைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட மதுரை. இடைச் சங்கம் இருந்த இடம், கடல்கொள்ளப்பட்ட கபாடபுரம். கடைச்சங்கம் இருந்த இடம், உத்தர மதுரை. இதில் கபாடபுரம் என்பது எங்கே இருந்தது? பிளவுபடாத நிலப்பரப்பாகிய குமரிக் கண்டத்தில் தமிழகத்தில் தொடங்கி ஈழம் வரை தாமிரபரணி இருந்தது என்றும், அந்த ஆற்றைத் தாண்டி கபாடபுரம் இருந்தது என்றும், யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை சொல்கிறார். இது, தியரி வகுப்புகள் எடுத்த ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். இலக்கியவாதி தமிழ்ச்செல்வனுமா மறந்துபோனார்?

அநுராதாபுரத்தில் ஆட்சி புரிந்த மாமன்னன் எல்லாளன், தமிழன். அவன் காலத்தில் இலங்கையில் 32 தமிழரசர்கள் இருந்தனர். அவர்களையெல்லாம் வென்ற பிறகுதான் சிங்கள மன்னன் துட்டகைமுனுவால் அரியணை ஏற முடிந்தது என்பதும், அவர்களே ஒப்புக்கொண்ட வரலாறு. ஈழத்துத் தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், சாசனவியல் ஆகியவற்றின் சான்று ஆதாரங்களுடன் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், ஈழத் தமிழர் தொன்மை குறித்து எழுதி இருக்கிறார். 'பௌத்தக் கலாசாரம் பரவுவதற்கு முன், இந்தோ ஒஸ்ரிக் முண்டா, திராவிட மொழிகள் இங்கு பேசப்பட்டிருக்கலாம்’ என்ற கருத்தை பேராசிரியர் சுதர்சன் செனிலரத்தினா ஏற்றுக்கொள்கிறார். அநுராதாபுரத்தில் அகழ்வாய்வு செய்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கொன்னிங்காம் இதை ஒப்புக்கொள்கிறார்.

அநுராதாபுரம், பொலனறுவை, யாழ்ப்பாணம், தம்பதெனிய, கண்டி, கொட்டே ஆகிய ராஜ்யங்கள்தான் போர்ச்சுக்கீய, ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இருந்தவை. 1799-ல் பிரிட்டிஷார் வெளியிட்ட வரைபடத்தில் மூன்று ராஜதானிகள் உள்ளன. கொட்டி கிங்டம் (சிங்களீஷ்), கண்டி கிங்டம் (சிங்களீஷ் - ஒருமுறை தமிழ் மன்னர் ஆளுகையில் இருந்தது.) ஜாஃப்னா கிங்டம் (தமிழ்) என்று அவற்றைக் குறித்துள்ளனர். வட மாகாணத்தில் தமிழர்கள் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் என்பதைப் பல சிங்கள வரலாற்று ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர்.பிரிந்து கிடந்த பகுதியை பிரிட்டிஷார் தான் ஒன்று படுத்தினார்கள். நாட்டைவிட்டு வெளியேறும் போது சிங்களவர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டுப் போனார்கள். அதுதான் சிக்கலே. 'வடக்கு - கிழக்கு பகுதி என்பது தமிழர் தாயகம்’ என்று தமிழ்த் தேசியவாதிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படுவது அல்ல. ராஜீவ் - ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே, 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்களாக இருந்துள்ளன’ என்று இருக்கிறது.

வட கிழக்கு மாகாணத்தை இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுக் குடியிருப்புப்பிரதேசங்களாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவே ஒப்புக்கொண்டார். ஆனால், மார்க்சிஸ்ட் செயலாளர் இதை நிராகரித்து, 'இலங்கையில் சிங்களரும் தமிழரும் நட்புடன் வாழ்ந்த நீண்ட கால வரலாறு உண்டு’ என்று முக்கியத்தன்மையைக் குறைக்கிறார். வரலாற்றுக் காலம் முதல் தமிழர்கள் அங்கு வாழ்ந்த உரிமை என்பதே தாயக உரிமை. இதை ஒப்புக்கொண்டால், தேசிய இனப் பிரச்னை தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்பதால், ஈழத் தமிழர்களின் முன்வரலாற்றையே மறைக்கப்பார்க்கிறார்கள்.

பாலஸ்தீன விடுதலை பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்ரேலியக் கொடுமை பற்றி விலாவாரியாக எழுதும். அந்த இஸ்ரேல் அளவுக்கதிகமான அழித்தொழிப்பு வேலைகளை பாலஸ்தீனம், சிரியாவில் செய்ததைப்போல ஈழத்திலும் செய்தது.

ரத்தக் கறை படிந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, 1983-ல் இஸ்ரேலைத்தான் முதலில் அணுகினார். அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பீ.சமரசிங்காவை இஸ்ரேலுக்கு ரகசியமாக அனுப்பிவைத்தார். அதன்பிறகு, ஜெயவர்த்தனாவின் மகனும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த ரவி ஜெயவர்த்தனாவும் இஸ்ரேல் போனார். மொசாட் தலைவர் அட்மொனியையும், இஸ்ரேல் பிரதமர் ஷமீரையும் சந்தித்தனர். 'ஒரு பொதுவான எதிரியை - பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இஸ்ரேலின் வளங்களைப் பயன்படுத்தத் தயார்’ என்று ஷமீர் வாக்களித்தார். இலங்கைப் படைக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது. இதை அப்போதே முஸ்லீம் எம்.பி.கள் கண்டித்தனர். 'அரசாங்கத்தின் முடிவு பிடிக்கவில்லை என்றால், கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்’ என்று பகிரங்கமாகவே ஜெயவர்த்தனா அறிவித்தார்.

சிங்கள ராணுவம் கொடூரமாக மாறுவதற்கு இந்தப் பயிற்சிகள்தான் பயன்பட்டன. முழுக் கிராமங்களையும் தீயிட்டுக் கொளுத்துதல், அகதி முகாமுக்குள் நுழைந்து அனைவரையும் வெட்டிப் போடுவது, தேடித் தேடிக் கண்டுபிடித்துக் கொல்வது போன்றவை அப்போதுதான் ஆரம்பமாகின. சித்ரவதையில் கோரமான முறைகள் கையாளப்பட்டன. தமிழ்ப் பகுதியில் நடத்தப்பட்ட வன்கொடுமைகளை விவரித்தால், துன்பமே அதிகமாகும்.

தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு மிகப் பெரிய வேட்டு வைக்கும் சம்பவத்தை அன்று மொசாட் செய்தது. இனத்தால், மொழியால் தமிழர்களாகவும், மதத்தால் முஸ்லிம்களாகவும் இருந்தவர்களை இரு பிரிவாகப் பிரித்து மோதவிடும் வேலையைத் தொடங்கியது. 'இஸ்ரேலின் மொசாட் என்ற உளவுப் பிரிவின் ஆலோசனைக்கு இணங்க தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஆழ்ந்த பிரிவினையை உருவாக்கும் பொருட்டு தமிழ்-முஸ்லிம் கலவரங்களை உருவாக்குவதற்குத் தூண்டிவிடப்பட்டனர்’ என்று, கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதுகிறார். இவர் புலி ஆதரவாளர் அல்ல. இப்படி, தமிழர் ஒற்றுமையை இஸ்ரேல் சிதைத்த வரலாற்றை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் எடுத்துப் பார்க்க வேண்டும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கொடுமை செய்தால் பரிதாபப்படுவதும்... அதையே, ஈழத்தில் செய்தால் பாராமுகமாக இருப்பதும் ஓரவஞ்சகச் சிந்தனை. இது ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகிக்கு மட்டுமல்ல... அந்தக் காலத்தில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட், பி.ராமமூர்த்தி போன்ற பெரிய தலைவர்களுக்கே இருந்துள்ளது. அதுவே இன்று வரை தொடர்கிறது!

-தொடரும்

நன்றி - விகடன்

Wednesday, May 15, 2013

சிங்கள நிலத்தில் பூக்குமா தமிழ் பூ? - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 6



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் கற்பனாவாதக் கோரிக்கைகளில் ஒன்று....

'இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுசேர்ந்து இந்த அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்’ என்பது. மேலோட்டமாகப் பார்த்தால் சரியான விஷயம்தானே என்று சொல்லத் தோன்றும். இலங்கை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், இது போகாத ஊருக்கு வலிந்து காட்டப்படும் தப்பித்தல்வாதம்.

'சிங்களப் பாட்டாளியும் தமிழ்ப் பாட்டாளியும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.’

'இலங்கையின் ஜனநாயக சக்திகள் அணி திரள வேண்டும்.’

'தமிழீழம் கோருவதைவிட இலங்கையில் ஜனநாயகப் புரட்சி நடத்துவதே சரியானது.’

'இனப் பிரச்னை என்பது குறுங்குழு வாதம். வர்க்க பிரச்னையை முன்னெடுக்க வேண்டும்.’

- கடந்த 40 ஆண்டு காலமாக கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன பசப்பு வார்த்தைகள் இவை. இந்தப் பிரச்னையை சிறு அங்குலத்துக்குக்கூட இந்த கோஷங்கள் நகர்த்தவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற சக்திகள்.. என்று அரங்கத்தில் செயல்பட்டவர்கள்கூட அந்தரங்கத்தில் இனவாத சக்திகளாகவே இருந்தனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில விதிவிலக்குகள் மட்டுமே அன்றும் இன்றும் உண்டு.

சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்த் தொழிலாளர்களும் சேர்ந்து போராட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இலங்கைச் சமூக அமைப்பில் இனவாதம் தலைதூக்கி முதலில் தனித்தனியாய்ப் பிரிந்தவர்கள் தொழிலாளர்கள்தான் என்பதை 'வர்க்கம்’ பேசுபவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.

இலங்கைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் செயல்பட்ட உன்னதமான காலம் என்பது 1890 முதல் 1930 வரை. சிங்களர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் என அனைவரும் ஒரு குடையின் கீழ் இருந்தனர். 1919-ல் உருவாக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் என்ற தமிழர் இருந்தார். இவர் தலைமையை அனைத்து தொழிலாளர்களும் ஏற்றுக்கொண்டனர். ஏ.ஈ.குணசிங்க போன்றவர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படும்போது, முரண்பாடுகள் இனரீதியாகத் தலைதூக்குகிறது. தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இருந்தும் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்தும் 1923-ல் பொன்னம்பலம் அருணாசலம் விலகுகிறார்.

அடுத்து, ஏ.ஈ.குணசிங்கவின் தலைமையை அனைவரும் ஏற்றனர். துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவர்களது குறிப்பிடத்தக்க சாதனை. 'மிகவும் கூர்மையான கட்டத்தில் நடந்த வர்க்கப் போராட்டத்தின் விளைவு’ என்று இடதுசாரித் தலைவர்கள் ஒருவரான பிலிப் குணவர்த்தன குறிப்பிட்டார். 'இலங்கையில் இன வர்க்க முரண்பாடுகள்’ குறித்து வரலாற்றுப்பூர்வ ஆய்வு நடத்திய குமாரி ஜெயவர்த்தனா, 'வர்க்கத் தீவிரத்தன்மையின் ஒப்பற்ற வெளிப்பாடு, இன ஒருமைப்பாடு, தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஆகியவற்றை நீண்ட காலத்துக்கு நிரூபிக்கும் கடைசிச் செயலாக இது அமைந்தது’ என்று எழுதுகிறார்.

அதாவது, 1930-க்குப் பிறகே இலங்கைத் தொழிலாளர்களிடம் இனப் பகைமை உணர்வு தலைதூக்கத் தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஆள் குறைப்பு, நாடெங்கும் பரவிய மலேரியா நோய்... மூன்றும் உள்நாட்டுக் கொந்தளிப்பை உருவாக்கி நெருக்கடியை ஏற்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்தவர் அல்லாத, குடிபெயர்ந்து வந்த தொழிலாளர்களை எதிர்த்து சிங்களத் தொழிலாளர்களே தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இந்தக் காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையாளிகள். பல பகுதிகளில் உதிரி வேலைகளில் இருந்தவர்கள் அவர்கள். (இன்று தமிழகத்தில் பீகாரிகள், நேபாளிகள் வேலை பார்ப்பதைப் போல!)

'மலையாளிகள் அனைவரையும் நாடுகடத்தி அவர்களது வேலைகளை உள்ளூர்க்காரர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பேசியது யார் தெரியுமா?

ஏக இலங்கைக்கும், அனைத்து இனத் தொழிலாளி வர்க்கத்துக்கும் தலைவராக முன்பு செயல்பட்ட ஏ.ஈ.குணசிங்கா. தொழிற்சங்க இயக்க ஏடாக அடையாளப்படுத்தப்பட்ட 'வீரயா’ - மலையாளித் தொழிலாளர்களை எதிர்க்கும் வீரனாக இருந்தது. மே தின ஊர்வலங்களில் மலையாளிகளுக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன. 'எங்களுக்கு ஹிட்லர் போன்ற ஒரு தலைவன் வேண்டும்’ என்று 'வீரயா’ எழுதியது. இலங்கைக்கு வந்த மலையாளிகள், சிங்களப் பெண்களை மயக்கித் திருமணம்செய்வதாக இந்தத் தொழிலாளிவர்க்கப் பத்திரிகை எழுதியது. 1980 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தமிழர்கள் வெளியேறியதைப் போல 1940-களில் மலையாளிகள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா வந்தனர். மிகக் குறைவான எண்ணிக்கைகொண்டவர்கள் அங்கேயே தங்கினர். சிலர் சிங்களர்களைத் திருமணம்செய்து இனம் மாறினர். இப்படியாக, சிங்களத் தொழிலாளி வர்க்கத்தில் படிந்த இனவாதம் மலையாளத் தொழிலாளி வர்க்கத்தை இலங்கையில் இல்லாமல் துடைத்தது. அதுதான் இன்று தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொழிற்சங்க இனவாதத்தை 1936-ல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாசக் கட்சி மட்டுமே அப்போது கண்டித்தது.

இலங்கை விடுதலைக்குப் பின், இந்திய வம்சாவழித் தமிழர் குடியுரிமை பறிக்கப்பட்டது. சிறுபான்மை இனத்தின் பலம் மட்டுமல்ல தொழிலாள வர்க்கத்தின் பலமும் இதன் மூலம் குறைந்தது. இந்தச் சட்டங்களில் வகுப்புவாத நோக்கம் இருப்பதாக இடதுசாரித் தலைவர் என்.எம்.பெரோரா மட்டுமே கண்டித்தார். 'இவ்வகையான இனவாதம் ஹஸ்டன் சம்பர்லேன், ஹிட்லர் போன்றோரின் இனவாதமாகவே முடியும்’ என்று நாடாளுமன்றத்திலேயே அவர் எச்சரித்தார். ஆனால், தொழிற்சங்கத் தலைவராக வளர்ந்த ஏ.ஈ.குணசிங்க, 'இந்த நாட்டுத் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் நான் இனவாதியாக இருக்க வேண்டியவனாகிறேன். உண்மையான இனவாதியாக இருக்கிறேன். தொடர்ந்தும் இனவாதியாகவே இருப்பேன்’ என்று பகிரங்கமாகக் கொக்கரித்தார். லங்கா சமசமாசக் கட்சி, போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து மகத்தான தனித்தன்மையை நிலைநாட்டியது. இதை சிங்களத் தொழிலாளர்கள் விரும்பவில்லை.

1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி ஆனது. குடியுரிமைப் பிரச்னையில் தமிழர் பக்கம் நின்ற இடதுசாரித் தலைவர் பிலிப் குணவர்த்தனா, 'சிங்களம் மட்டுமே’ என்பதை ஆதரிக்க ஆரம்பித்தார். மற்ற இடதுசாரிக் கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. அதாவது, 1936 முதல் 1965 வரை இடதுசாரிகளின் நிலைப்பாடு அனைவருக்குமானதாக இருந்தது. சிங்கள, பௌத்தப் பேரினவாதச் சூழல் அதிகமாக அதிகமாக, அவர்களால் எதிர்த்து நிற்க முடியாமல் காணாமல்போயும், கரைந்துபோயும், திரிந்துபோயும் இடதுசாரி அந்தஸ்தை இழந்தனர்.

மதம், இனம், சாதி போன்ற அம்சங்களுக்கு எதிராக இருக்க வேண்டிய தொழிலாளர் இயக்கம், முதலில் இனரீதியாக வளர்ந்தது. அதேபோக்கில் இடதுசாரி கட்சிகளும் நகர்ந்தது. நடந்த இனப் படுகொலைகளை அவர்களால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது. இனக்கொலைகளில் சிங்களத் தொழிலாளிகள் இறங்கியபோது கைகட்டி கையறு நிலையில் நின்றனர். மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கும் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, ஆட்சிகளில் பங்கேற்கும் மோசமான நிலைப்பாட்டை, 1964 காலகட்டங்களில் இடதுசாரிகள் எடுத்தனர்.

கொலை வெறியாக இனவாதம் தலைதூக்கியதை எதிர்த்துப் பிரசாரம் செய்யாமல், தேர்தல் வெற்றி, அதிகாரத்தில் பங்கு பெறுதல் என்ற நாடாளுமன்றவாதத்துக்குள் தங்களை மறைத்து இடதுசாரிகள் தப்பித்துக்கொண்டனர். ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணி அமைத்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ஸ்ரீமாவோ பண்டார நாயகா அரசாங்கத்தில் மூன்று மந்திரி பதவிகளை சமசமாசக் கட்சி ஏற்றுக்கொண்ட நிகழ்வு, இடதுசாரி இயக்க சரிவின் தொடக்கம். பௌத்த சிங்கள சிந்தனை காரணமாக இடதுசாரிப் பத்திரிகைகள், கிறிஸ்தவர்களை அதிகமாகத் தாக்கி எழுதும் கொடுமையும் நடந்தது. இந்திய வம்சாவழியினர் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நிலைக்கு சில இடதுசாரி அமைப்புகள் போயின. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான உரிமையை டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் வழங்கியது. 'அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறி’ என்று இடதுசாரிப் பத்திரிகையான 'ஜனதின’ எழுதியது. இனவாதப் பத்திரிகைக்கும் இடதுசாரிப் பத்திரிகைக்கும் வித்தியாசம் பார்க்க முடியாத அளவுக்கு அந்தக் காலகட்டம் இருந்தது. 1965 மே தின ஊர்வலம் சிங்கள இனவெறி ஊர்வலமாக மாறியது. தொழிலாளர் வர்க்கத்தை இனவெறிக் கூட்டரசாங்கத்தின் பங்காளிகளாக மாற்றியதன் மூலமாக, இடதுசாரி இயக்கங்கள் கொள்கைரீதியான இறுதிச்சடங்கு நிலையை எட்டியது.

அதன் பிறகு முழுக்க இனவாதத்தில் சரணாகதி அடைந்தது. இதுவும் போதாது என்று ஜனதா விமுக்தி பெரமுனா என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவானது. இவர்களும் சிங்கள இனவாதத்தை இறுக்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினர்.

எஸ்.எல்.எல்.பி, எல்.எஸ்.எஸ்.பி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்த ஸ்ரீமாவோ பண்டார நாயகா தலைமையிலான ஆட்சிக் காலத்தில்தான் (1972-ம் ஆண்டு) இலங்கையின் புதிய அரசியல் சட்டம் நிறைவேறியது. இந்த அரசியல் யாப்பை எழுதியவர் இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாசக் கட்சியின் தலைவர் டாக்டர் கெல்வின் ஆர்.டி.சில்வா. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒர் அரசியல் சட்டத்தை இடதுசாரி எழுதிய துரதிர்ஷ்டம் அது.

வர்க்க அரசியலைப் பேசி தான் அடைய வேண்டிய அரசியல் நன்மைகளை நீண்ட காலத்துக்கு இழக்க வேண்டுமா அல்லது வலதுசாரிகளைப் போலப் பேசி தங்களை மைய நீரோட்டத்தில் இருத்திக்கொள்ள வேண்டுமா என்ற இரண்டில், இரண்டாவது வழியை இலங்கை இடதுசாரிகள் மேற்கொண்டதால்தான், இலங்கை அரசியலில் ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பட்டுப்போனது.

கொள்ளுகூட விளையாத நிலத்தில் நெல்லு விளைவிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் நம்பச் சொல்கிறது!

தொடரும்

Saturday, May 11, 2013

சிங்கள, பெளத்த பேரினவாதம் நல்லது செய்யுமா? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 5


'எந்தவொரு சமுதாயச் சிக்கலை ஆராய்ந்தாலும் அதைத் திட்டவட்ட​மான ஒரு வரலாற்று வரம்புக்குள் வைத்து ஆராய வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாயின், அதே வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிற அந்த நாட்டைப் பிற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தனித்தன்மைகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று, லெனின் அறிவுறுத்துகிறார். இதைத்தான், 'குறிப்பான பிரச்னைகளில் குறிப்பாக பொருத்திப் பார்க்க வேண்டும்’ என்று உ.வாசுகியும் சொல்கிறார்.

இந்த அடிப்படையில் இலங்கையைப் பரிசீலித்தால், ஈழத் தமிழர் பிரச்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சிறுபிள்ளைத்தனமான நிலைப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

'இலங்கையின் இன்றையச் சூழலில் அங்குள்ள தமிழர்களுக்குத் தேவைப்படுவது சமவாய்ப்பும் அந்தஸ்தும் உள்ள குடிமக்களாக அவர்கள் நடத்தப்​படுவதே ஆகும். அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதிகாரப் பரவல் உறுதிசெய்யப்பட வேண்டும். மறு குடியமர்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகப் பூர்த்தியாக வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு நம்பகத்​தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் வாசுகி.

வேண்டும், வேண்டும், வேண்டும்... என்று அடுக்கிக்கொண்டே போவது அனைத்தும் அவசிய​மானவையே. இதைச் செய் என்று அவர் கோரிக்கை வைப்பது, இத்தனை அட்டூழியங்களையும் யார் செய்​தார்களோ... அவர்களிடம். அதாவது, இறுக்கமாக இருக்கும் பௌத்த, சிங்களப் பேரினவாதம் இவற்றை எல்லாம் செய்து தரும் என்று நம்புவது யதார்த்தம் உணராப் போக்கு.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்​களைச் செய்தது ஒரு சிறு குழு அல்ல. ஏதோ ஒரு சில அரசியல் கட்சிகள் அல்ல. குறிப்பிட்ட ஒரு கால​கட்டத்தில் ஆண்ட ஏதோ சில ஆட்சியாளர்கள் அல்ல. தமிழர் உரிமைக்காக அமைப்புகள் தொடங்கப்பட்டபோது, இந்தத் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்படவில்லை. தனித் தமிழ் ஈழம் கேட்டு ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு இத்தகைய எதிர்தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.  காலம் காலமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இன வெறுப்புத் தாக்குதல்கள் இவை. கடந்த 70 ஆண்டு காலமாக சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்த மதம், சிங்கள - பௌத்தக் கலாசாரம் ஆகிய நான்கும் அங்குள்ள கட்சிகளில், அங்கு அமைந்த ஆட்சிகளில், மதத்தில், மக்கள் மனத்தில் செலுத்தப்பட்டு மொத்தமும் கேன்சரைப் போல அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்கிற ஓர் அரச பயங்கரவாதத்திடம்... அது வேண்டும், இது வேண்டும்... என்றால் நடக்குமா? சிங்களப் பேரினவாதம் இதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று நம்புவதே, இலங்கையின் அரசியல், முன் வரலாறு புரியாதவர் பேசுவது.

பிரிட்டிஷ் ஆதிக்கம் பரவத் தொடங்கியபோது ஏற்பட்ட சமூகக் கலாசார மாற்றங்களை எதிர்கொள்ள, சிங்கள பௌத்தத் தேசியம் புத்துயிர் பெற்றது. மொழி, மதம் மூலம் தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டத் துடித்தனர். சிங்கள, பௌத்த பாரம்பர்யத்தின் அடிப்படையில் ஒரு பொதுநல அரசு அமைப்பதற்காகவே, பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களை ஒன்றுசேர்த்தனர்.

'உலக மக்களில் இருந்து சிங்களர்கள் வேறுபட்ட​வர்கள், அவர்களே இலங்கை மண்ணுக்கு உரிய​வர்கள், அவர்களே இம்மண்ணில் வாழத் தகுதியுடையவர்கள்’ என்ற 'மகாவம்ச’ப் பழைமை​வாதத்தை மீட்டெடுத்தனர். சுற்றியுள்ள இனங்கள் இந்த நாட்டைக் கைப்பற்றும் ஆபத்து உண்டு, எனவே நம் இனம் அழிக்கப்பட்டுவிடும் என்று தொடர்ந்து பயந்தனர். நமது பௌத்த தர்மம் முக்கியம், இதனால்தான் நாடு காப்பாற்றப்பட்டு வந்துள்ளது, உலகில் பௌத்த தர்மத்தைப் பேணி வளர்க்கும் பொறுப்பு சிங்கள பௌத்தத்திடம் மட்டுமே தரப்பட்டுள்ளது என்று நம்பினர். சிங்கள மன்னன் துட்டகை முனுவுக்கும் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் நடந்த சண்டையைச் சொல்லி, சிங்கள இனவாதத்தை வளர்த்தெடுத்தனர்.

மூன்றில் இரண்டு பங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தாலும், நிலங்கள் முழுமையாக தங்கள் இனத்திடம் இல்லை என்ற நெருடல் சிங்கள இனவாதிகளிடம் இருந்தது. எங்கெல்லாம் தமிழ்ச் சிறுபான்மையினர் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் பெரும்பான்மை சிங்களவர்களை குடியேற்​றும் திட்டத்தை 1931-ம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் அமைந்த முதல் அமைச்சரவையில் நில அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயகா தன்னுடைய நய​வஞ்சகத்தால் சிறுகச்சிறுகக் கபளீகரம் செய்யத் தொடங்கினார். இன்று, ராஜபக்ஷே அதை முழுமையாகச் செய்து முடித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே நில கபளீகரம் செய்தவர்களிடம் அதிகாரமும் தரப்பட்டால், என்ன ஆகும்?

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, அமலான திட்டங்கள் அனைத்தும் நில அபகரிப்பு​களாகவே அமைந்தன. சிங்களக் குடியேற்றம் பட்டவர்த்தனமாக நடந்தது. தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என்று பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் சொன்னாலும் அது அமலாகவில்லை. இப்படி குடியேற்றப்படும் சிங்களருக்கும், அதுவரை அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதுதான் ஈழப் பிரச்னையின் தொடக்கம்.

இந்த இனவாதத் தீயில் எண்ணெய் வார்க்க சிங்கள அரசியல்வாதிகள் துடித்தனர். டி.எஸ். சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயகா பிரிந்து தொடங்கியதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. கடந்த 60 ஆண்டுகளை மாறிமாறி ஆண்டவர்கள் இந்த இரண்டு கட்சியினர்​தான். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர். ஜெய​வர்த்தனா 1983-ல் தொடங்கிய இன அழிப்பை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ஷே 2009-ல் முடித்தார். தமிழின ஒடுக்குமுறையை யார் அதிகம் செய்வது என்பதில்தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்ததே தவிர, ஒன்றுபட்ட இலங்கை மக்கள் அனைவர் மீதும் இந்த அக்கறை இல்லை.

சிங்கள இனவாதத்தை தங்களது கட்சிக் கொள்கையாக மட்டுமல்லாமல், இலங்கை அரசின் கொள்கையாக இந்த இரண்டு கட்சிகளும் மாற்றிவிட்டன. சிங்களத்தின் சின்னமான சிங்கமே, தேசியக் கொடி ஆனது. சிங்களம்தான் இலங்கையின் ஆட்சி மொழி என்று 1956-ல் அறிவித்தனர். பௌத்த மதமே, அரசு மதம் என 1972-ல் பிரகடனம் செய்யப்பட்டது. 1978-ல், செய்யப்பட்ட அரசியல் யாப்பின் படி, 'இது ஜனநாயக சோஷலிசக் குடியரசு. இக்குடியரசு ஒற்றையாட்சி அரசு’ என அறிவிக்கப்பட்டது. இதில் எந்த மாறுதலையும் செய்யவே முடியாது. செய்ய வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் நடத்தித்தான் செய்ய முடியும்.

சிங்களத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக தமிழ் விலக்கப்பட்டது. பௌத்தம், அரசு மதமாக அறிவிக்கப்பட்டதால், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. ஒற்றையாட்சி என்று சொன்னதன் மூலமாக பல இனங்கள் சமத்துவமாக வாழும் ஒரு சமஷ்டி ஆட்சிமுறைக்குத் தடை விழுந்தது. அதாவது, இலங்கை என்பது பல்வேறு இனம், மதம், மொழி, பிரதேச அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பு என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் மறைத்தனர். இந்த அடிப்படையில் சலுகைகள் பெறுவதை அரசியல் சட்டத்தின் மூலமாக தடுத்தும்விட்டனர்.

உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற ராஜபக்ஷே, தான் தப்பிப்பதற்காக தமிழர் நல்வாழ்வு நாடகம் ஆட நினைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற நினைத்து, தமிழருக்கு சமவாய்ப்பும், சம அந்தஸ்தும் வழங்க முன் வந்தால்... அதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டமே  இடம் தராது. பெரும்பான்மைச் சிங்களர்கள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றத்தில் அதைத் தாக்கல் செய்யவே முடியாது. அப்புறம்தானே நிறைவேற்றுவது. பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று நம்புவதே மாயை. மதச்சார்பின்மை பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பௌத்த மதம் சார்ந்த ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். 'இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்’ என்று சொல்லக்கூடியவர்களுக்கு இலங்கை அரசமைப்புச் சட்டம் அதற்கு இடம் தருகிறதா என்கிற தெளிவு முதலில் வரவேண்டும்.

சிங்கள மொழி, பௌத்த மதம் ஆகிய இரண்டுக்கு மாறாக எதைச் செய்வதற்கும் இலங்கையின் அரசியல், சமூக, மத, நிர்வாகவியல் சூழ்நிலை இடம் தராது,அரசமைப்புச் சட்டம் இடம் கொடுக்காது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்று...

1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் நிறைவேறியது. பெரும்பான்மை தமிழர் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒன்றாக்குவது அதில் முக்கியமான ஷரத்து. இதை இலங்கையின் கட்சிகள், பௌத்த பிட்சுகள், அமைப்புகள் அனைத்துமே கடுமையாக எதிர்த்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அந்தந்த நாட்டின் உச்ச நீதிமன்றம். இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்த ஷரத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுனா வழக்குப் போட்டது. தமிழர்களுக்கு ஓரளவாவது நன்மை பயக்கும் இந்த ஷரத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

'இலங்கை ஒரு கூட்டாட்சியோ குடியரசோ கிடையாது. இது ஓர் ஒற்றையாட்சி அரசமைப்பு. அரசு மதம், பௌத்தம். அரசு மொழி, சிங்களம். ஒற்றையாட்சி அரசமைப்பில் மொழி வழியாகவோ, இன வழியாகவோ மாகாணங்கள் அமைக்க, இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை’  என்று, தீர்ப்பளித்த பிறகு இலங்கை அரசாங்கத்திடம் வெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொள்வது நாள் கடத்த, கணக்குக் காட்டப் பயன்படுமே தவிர நேரமையானதாக இருக்காது. இது 'குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை’ அல்ல.

சிங்களமே ஆட்சிமொழி என்ற தீர்மானம் வந்தபோது, இலங்கை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் டாக்டர் கெல்வின் ஆர்.டி. சில்வா சொன்னார்...

'இரு மொழி எனில் ஒரு நாடு;

ஒரு மொழி எனில் இரு நாடுகள்!’

தொடரும்..

நன்றி - விகடன்

Wednesday, May 8, 2013

ஆசான் சொன்னதும் கேலிக்கூத்தா? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 4



'பிரிந்துபோவது பொருத்தமான தீர்வு அல்ல’ என்று சொல்லும் தோழர் உ. வாசுகி, 'இலங்கை அரசு இன ஒடுக்கு​முறையை மட்டுமல்ல, வர்க்க ஒடுக்குமுறையையும் கட்ட​விழ்த்திருக்கிறது. இத்தகைய சூழலில் இரு பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று​சேர்ந்து அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொருத்த​மான அணுகுமுறையாக இருக்கும்’ என்கிறார்.

 அதாவது, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இனரீதியாக ஒடுக்கப்​படுகிறார்கள் என்று பேசினாலே, 'தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் ஒடுக்கப்​படுகிறார்களே’ என்று திசை திருப்புவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கமாக இருக்கிறது. அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'தீக்கதிர்’ தீட்டி இருக்கும் தலையங்​கத்தில் (20.3.2013) 'இலங்கையில் உள்ள ராஜபக்ஷே அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமின்றி, அந்த நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கு எதிராகவும் எதேச்சதிகாரப் பாதையில் நடந்து அனைத்துப் பகுதி மக்களின் மனித உரிமைகளையும் மறுத்துவருகிறது என்பது கண்கூடு. இதற்குப் பல ஆதாரங்களைக் கூற முடியும்’ என்கிறது.

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை​களைப் பட்டியலிட்டால், 'சிங்களவர்கள் மீது மனித உரிமைத் தாக்குதல் நடந்துள்ளதே’ என்று சொல்வது தமிழர் படுகொலைச் சம்பவங்களின் வீரியத்தைக் குறைக்கும் திசை திருப்பும் காரியமே தவிர, வேறல்ல.

கொத்துக் குண்டுகளை முள்ளிவாய்க்காலில்தான் போட்டனர். அனுராதபுரத்தில் அல்ல. வெள்ளை பாஸ்பரஸ் தூவப்பட்டது வன்னி நிலத்தில்​தான். சிங்களப் பகுதியில் அல்ல. எதைவைத்து தமிழர்களையும் சிங்களவர்களையும் பொதுமைப்​படுத்துவீர்கள்?

ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட உதாரணத்தை உ.வாசுகி காட்டுகிறார். 1971 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் நடந்தது ஒரு திடீர் கலகம். அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு அப்படியே உருக்குலைக்கப்பட்ட கொடூரம். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் வீடுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகள், உள்ளூர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு திடீரென ஒருநாள் தேதி குறித்து, 'அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் கைப்பற்றுவோம்’ என்று 1971ல் அறிவித்தது ஜே.வி.பி. இடதுசாரி சித்தாந்தம் என்று சொல்லிக்கொண்ட இனவாதம்தான் அதற்குள் இருந்தது. 'இந்திய விஸ்தரிப்புவாதம்’ என்று சொல்லி தமிழர் எதிர்ப்பு வகுப்புகளைத்தான் அவர்கள் நடத்தினர். 1987 காலகட்டத்தில் நடந்ததும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மூலமாக தமிழர்களுக்கு சலுகைகள் தரப்படக் கூடாது என்பதே நோக்கம். எனவே, அவர்களை இடதுசாரிப் புரட்சியாளர்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு தடவை நடந்த அந்தக் கலவரங்களும் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிவாங்கி அடக்கப்பட்டது. அதன் பிறகு, ஜே.வி.பி. இலங்கை அரசியலில் முக்கிய இனவாத இயக்கமாக வளர்ந்தது. இன்று இவர்கள் ராஜபக்ஷேவின் சலுகைகளுக்காக அவரது கூட்டணியில் கும்பிடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு கலகங்களும் அந்த நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையே தவிர, வர்க்கப் போராட்டம் அல்ல. சிங்கள இளைஞர்கள் மீது இத்தகைய கொடும் தாக்குதல் தொடர்ந்து நடந்ததா? ஆனால் கடந்த 40 ஆண்டுகளில்தானே ஓர் இனம் மொத்தமாக கருவறுக்கப்பட்டது. இரண்டையும் எப்படிப் பொதுமைப்படுத்த முடியும்?

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சிங்கள மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் தமிழர் துன்பங்களை உணர்ந்தனர். அவர்களைச் சிங்கள பேரினவாத அரசு விட்டுவைக்கவில்லை. லசந்த விக்கிரமசிங்கே மாதிரியான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுனந்த போன்ற சில பத்திரிகையாளர்கள் நாட்டைவிட்டுத் துரத்தப்​பட்டனர். தமிழர்களுக்கு ஆதரவான எண்ணம் துளிகூட வந்துவிடக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது என்றுதான் இதைப் பார்க்க​வேண்டுமே தவிர, தமிழர்களைப் போல சிங்களர்களும் சிதைக்கப்பட்டனர் என்று சொல்​வது மழுப்பல்.

ஒடுக்கும் நாட்டின் தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் நாட்டின் தொழிலாளர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் மார்க்சியப் பாலபாடம்.

'இரண்டு தரப்புத் தொழிலாளர்களையும் எப்படிப் பார்க்க வேண்டும்? இரண்டும் ஒன்றாக வா இருக்கின்றன?’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட  லெனின், ''இல்லை; இவை இரண்டும் ஒன்றே அல்ல'' என்றும் சொன்னார்.

''ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழி​லாளர்களையும் பெருந்திரள் மக்களையும் சூறையாடுகின்ற சொந்த நாட்டு முதலாளி வகுப்பினரின் கூட்டாளியாகவே, ஒடுக்குகின்ற நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் ஓரளவுக்கு இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, அரசியல் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் மேலுரிமையைப் பெற்றிருக்கிற ஒரு நிலையைக்​கொண்டிருப்பதே அந்த வேற்றுமை'' என்று லெனின் எழுதியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைவாதிகள் படிக்க மறந்தார்களா? படித்ததை மறுக்கிறார்களா?

தமிழர் படுகொலையின் வீரியத்தைக் குறைக்கும் உத்தியாகவே, 'சிங்களர்களும் பாதிக்கப்​படுகிறார்கள்’ என்ற சமாளிப்பைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதில் மட்டு​மல்ல, பிரபாகர​னின் மகன் பாலச்சந்திரன் கொலை குறித்த நிலைப்​பாட்டிலும் இது தெரிகிறது.

''தமிழர்கள் குருதியில் மூழ்கடிக்கப்பட்ட அந்த நாட்களில் இழைக்கப்பட்ட அநீதிகள், பறிக்கப்​பட்ட மனித உயிர்கள் குறித்து வெளிவரும் தகவல்​கள் மற்றும் புகைப்படங்கள் மனித இதயம் படைத்த யாரையும் நடுங்கவைப்பதாக உள்ளன. அதில் ஒன்றுதான் எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான படங்களாகும்'' என்று தலையங்கம் தீட்டிய 'தீக்கதிர்’, உடனே அந்தப் பக்கம் திரும்பி, ''ஆனால் இந்தப் படம் போலியானது என்று இலங்கை கூறுகிறது'' என்கிறது (9.3.2013).

அது போலியானது என்று இலங்கை அரசு சொல்லட்டும். அப்படித்தான் சொல்லும். மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதை உண்மையான படம் என்கிறதா? போலி என்கிறதா?

மதுரை லீலாவதி கொலை பற்றி எழுதும்​போதும் போராடும்போதும்... அரிவாள் எடுத்த ரௌடிகளின் மறுப்பு வாக்குமூலங்களைச் சேர்த்துச் சொல்வார்களா? மேற்கு வங்க இந்திய மாணவர் சங்கத் தலைவர் மரணம் தொடர்பாக மம்தா செய்த சமாளிப்பை, தலை​யங்கத்தில் சேர்ப்பார்களா? சேர்த்தாலும் மம்தா எத்தகைய பொய் சொல்கிறார் என்பதை நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்களா? அந்தத் துடிப்பு, ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டும் இல்லாமல்போகிறதே?

தமிழ்நாட்டு மாணவர்கள் அதிசயமாக, தெருவுக்கு வந்தனர். அந்தப் போராட்டம்தான் மத்திய அரசிடமும் கருணாநிதியிடமும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மனமாற்றத்தை ஏற்படுத்​தியது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி...

அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மா​னத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதையே வழிமொழிந்துகொண்டிருந்தபோது, இந்த மாணவர் அமைப்புகள்தான் மாறுபட்டு, 'உலகம் முழுக்க மனித உரிமை மீறல்களைச் செய்து​கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. அமெரிக்கத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தனர். அமெரிக்க எதிர்ப்பில் (மட்டும்!) தீவிரமாக இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் இதுதானே? அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

'இப்போது தேர்வுகள் நெருங்கிக் கொண்டுள்​ளதால் மாணவர்கள் போராட்டங்களை விலக்கிக்​கொண்டு கல்வி நிலையங்களை அமைதியான முறையில் நடக்க முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்’ - இப்படிப் பேசியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி பேசினார். 'மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்தார். மேற்கு வங்க மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை ஒட்டி, இந்தியா முழுக்க மாணவர் புரட்சி நடப்பதாகக் குதூகலிப்பதும்... தமிழகத்தில் 17 நாட்கள் அனைத்துக் கல்லூரிகளும் செயல்படாத நிலை ஏற்பட்டதை உணர மறுத்து, 'படிப்பு முக்கியம்’ என்றதும், தமிழர் பிரச்னைக்கு ஒரு சிந்தனை... மேற்கு வங்கத்துக்கு மறுசிந்தனை அல்லாமல் வேறு என்ன?

இந்த இரட்டை அளவுகோல் தானே ஈழத் தமிழர் தீர்விலும் எதிரொலிக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துப் புரிந்துவரும் அட்டூழியத்தைக் கண்டிப்ப வர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் கூரிய நகம் கண்ணுக்குத் தெரியாமல் போவதால்தானே, தமிழர் நிம்மதியைவிட சிங்களர் நிலம் துண்டாடப்படக் கூடாது என்ற அக்கறையே அதிகம் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு கார்ட்டூன் வெளியானது. 'தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்தது. இது ராஜபக்ஷே மகிழ்ச்சி அடையும் முடிவு என்று கிண்டலடிக்கிறது அந்தக் கார்ட்டூன். ராஜபக்ஷேவின் இரு புறத்திலும் நின்று பிரகாஷ் காரத்தும் ஜி.ராமகிருஷ்ணனும் டான்ஸ் ஆடுவதுபோல வரையப்பட்டு இருந்தது. 'இது கேலிச்​சித்திரம் அல்ல, கேலிக்கூத்து’ என்று அந்தக் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் எழுதி இருக்கிறார். (5.4.2013- தீக்கதிர்)

கார்ட்டூன் பார்த்துக் கோப்படுகிறார் தோழர் டி.கே.ஆர். ஆனால், கம்யூனிஸ்ட் மூலவரான லெனினே அப்படித்தான் சொல்கிறார்.

'ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தால் சில ஆட்கள், ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவிவிடுகிறார்கள்’ என்பது  லெனின் வாதம்.

ஆசான் சொன்னதும் கேலிக்கூத்தா?


தொடரும்

நன்றி - விகடன்

Monday, May 6, 2013

தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போலி பொதுவுடைமைக் கொள்கையும் அவர்களின் தனித் தமிழீழ எதிர்ப்பும்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள் தங்களின் கட்சியின் வாக்கு வங்கிக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றை இயக்கி வருகிறார். ஈழத்தில் நடைபெற்ற இனவழிப்பில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக இவரும் இவரது மாதர் சங்கமும் குரல்கொடுத்துப் போராட்டங்களை நடத்தவில்லை.

ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைகளைப் போன்று இவ்வுலகில் அதற்கு நிகரான கொடுமைகளைக் காணமுடியாது. பெண்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் உ.வாசுகி அவர்கள் ஈழத்தமிழ் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமையைப் பற்றிப் பேசியதுண்டா? ஈழத்தில் தற்போதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமைகளைப் பற்றியாவது பேசியதுண்டா? ஆனால் தமிழக மக்களின் வாக்குகளுக்காக அங்குள்ள பெண்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன் என்ற உயரிய இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார் உ.வாசுகி அவர்கள். இதனைப் போன்று தான் வாக்குகளைப் பெற்று அரசியல் கட்சியை வளர்ப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகளுக்காகப் போலிச் சங்கங்களையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்,

ஈழத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக தனது திருவாயைத் திறக்காத வாசுகி அவர்கள் தனித் தமிழீழம் உருவாகுவதற்கு தனது எதிர்ப்பையும், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறையினால் தமிழருக்கு தீர்வு ஏற்பாடாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படியென்றால் தந்தை செல்வா அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக தமிழரின் உரிமைக்காகப் போராடிய போதும் ஏன் தமிழருக்கு தீர்வும் விடிவும் ஏற்படாமல் போனது? தந்தை செல்வா அவர்கள் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்காமல் விட்டமையினால் தான் தமிழருக்கு தீர்வும் விடிவும் ஏற்படாமல் போனது என்று கூறுவது சரியான விவாதமா? அல்லது தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கூடாது என்று சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாகக் கொண்ட அணுமுறையா காரணம்? வாசுகி அவர்கள் சிங்களப் பேரினவாதிகள் தமிழருக்கு உரிமை வழங்குவதற்கு தயாராக இருந்தார்கள் ஆனால் விடுதலைப் புலிகளின் அணுகுமுறையினால் தமிழருக்குத் தீர்வு ஏற்பாடாமல் சென்றுவிட்டது என்று கூறவருகிறார் போல.

ஈழத்தமிழரின் விடயத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமலும் அறிந்துகொள்ளாமலும் தமிழகத்தில் உள்ளவர்கள் மத்தியில் விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் வாசுகி அவர்கள்.

அன்று யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான காலப்பகுதியில் தனித் தமிழீழம் என்ற கோரிக்கையையும் கைவிட்டு சமவுரிமைக்கான தீர்வுத் திட்டத்தை வைத்து சிறிலங்கா அரசை பேச்சு வார்த்தைக்கு விடுதலைப் புலிகள் அழைத்தார்கள், ஆனால் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் அவற்றை குழப்பி மஹிந்தவை ஜனாதிபதியாக அமரவைத்தார், அதன்பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சமாதானம் மூலமாக தீர்வை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீது பாரிய இனவழிப்பை மேற்கொண்டார்கள் சிங்களப் பேரினவாதிகள். ஈழத்தில் என்ன நடந்தது என்று கூடத் தெரியாமல் உண்மைகளை மறைத்து யாரோ கூறியவற்றை வைத்துக்கொண்டு மிகக்கேவலமான இழிவான அரசியலை செய்துகொண்டு இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள்.

மேலும் வாசுகி அவர்கள் கூறுகிறார் இலங்கையில் உள்ள முஸ்லிம் தமிழர்கள் கடந்த காலத்தில் புலிகளால் புறக்கணிக்கப்பட்டனர் என்று பொய்யான விசமத்தனமான கருத்துக்களைக் கூறுகிறார். இதற்கு உதாரணமாக வடக்கில் இருந்து முஸ்லிம்களைப் புலிகள் துரத்தியடித்தார்கள் என்கிறார். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துடன் இணைந்து இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் முஸ்லிம்கள் ஈடுபட்டு அயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தும், அம்பாறை மாவட்டங்கள் முதல் பல இடங்களில் வசித்தவந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து துரத்தியடித்தமையினால் தான் வடக்கில் இருந்த முஸ்லிம்களை புலிகள் வெளியேறச் சொன்னார்கள். ஆனால் வாசுகி அவர்கள் முஸ்லிம்களை புலிகள் புறக்கணித்தார்கள் என்று கூறிப் புதிய குண்டைப் போடுகிறார்.

மேலும் சமாதான காலப்பகுதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் தான், அவர்களின் பூர்வீகத் தாயகம் வடக்கு கிழக்கு மாகாணங்கள், தமிழர்களைப் போன்று அவர்களுக்கும் சமமான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களே கூறுவதற்கு மறுத்து வந்த விடயங்களை அங்கிகரித்து கூறியவர் தான் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள். உண்மையில் புலிகளின் அமைப்பிலேயே முஸ்லிம்கள் இருந்தார்கள் என்ற உண்மையைக் கூடத் தெரியாமல் புத்தி பிசங்கிய நிலையில் உளறுகிறார் வாசுகி அவர்கள். தமிழர்கள் என்று இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தங்களை ஒருபோதும் கூறுவதில்லை என்ற உண்மையைக் கூட அறியாமல் ஈழவிவகாரத்தைப் பற்றி உண்மைக்குப் புறப்பானவற்றைக் கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுகி அவர்கள்.

சமாதானத்தின் ஊடாகத் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீது இனவழிப்பை மேற்கொண்டது சிங்களப் பேரினவாதம், தமது நாட்டுச் சிங்கள மக்கள் போன்று தமிழர்களை அது கருதியிருந்தால் சிங்களப் பேரினவாதம் ஒன்றரை லட்சம் மக்களைப் படுகொலை செய்திருக்காது, 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்றுவரையும் எதுவுமே தமிழர்களுக்கு தரப்போவதில்லை என்று கூறிவருகிறது சிங்களம். தமிழினம் அழிக்கப்பட்டும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும் தொடர்ந்து அவலத்தில் வாழும் தமிழர்களுக்கு தனி தமிழீழத்தை தவிர வேறுவழியில்லை. நிரந்தர விடிவிற்கும் ஈழத்தமிழர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தனித் தமிழீழம் தான் தீர்வு. வந்தேறிகள் தங்களின் நாடு என்று கூறும் போது அதனை அங்கிகரிக்கும் கூட்டம் தனி தமிழீழத்தை அங்கிகரிக்க மறுக்கிறது.

மேற்கத்தையர்கள் இலங்கையில் படையெடுக்க முன்னர் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டார்கள். இலங்கையில் சுதந்திரம் கிடைத்தது அதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மாறி சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்பில் வந்தார்களே தவிர இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆண்ட ஆச்சியாளர்கள் மாறினார்களே தவிர தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காமல் இன்றுவரை ஆங்கிலேயர்களின் ஆட்சியை விட பல மடங்கு அடக்கு முறையையும் கொடுமைகளையும் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டு வருகிறார்கள் ஈழத்தமிழர்கள். ஏன் இந்தியர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்? எங்களுக்கு ஆங்கிலேயரின் ஆட்சியில் சம உரிமை கொடுத்தாலே போதும் என்று அவர்கள் அன்று கேட்டிருக்கலாமே? இக்கேள்வியானது தவறானதாக கருதப்படுகிறதோ அதனைப் போன்று தான் தனித் தமிழீழம் கோருவது தவறு என்று கூறும் கருத்துக்களும் தவறானவையே. இலங்கையில் ஆண்ட ஆட்சியாளர்கள் மாறினார்களே தவிர தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அந்தச் சுதந்திரத்தை கேட்பது தவறு என்பவர்கள் தமிழினத்திற்கு விரோதமானவர்கள்.

சிறிலங்காவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. தனி ஈழத்துக்காக இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு எதிர்புத் தெரிவித்திருந்தது. மற்றும் போர்க்குற்றம் குறித்த விசாரணையை இலங்கை அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.கே.ரங்கராஜன் சென்ற முறை ஜநாவின் மனிதவுரிமை பேரவையில் சிங்கள அரசிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என்று கூறியிருந்தார். சென்றவருடம் இந்திய அரசின் குழுவினருடன் சிறிலங்காவிற்குச சென்று திருப்பிய டி.கே.ரங்கராஜன் கூறுகையில் ஈழத்தில் நிலைமை சகஜமாகி விட்டதாகவும், மக்கள் சகஜநிலைக்குப் போய் விட்டதாகவும், யாரும் தனி ஈழம் கேட்கவில்லை என்றும் ஏதோ ஈழத்தில் தமிழர்களுக்குப் பிரச்சனையும் இல்லை என்பதைப் போல பேசியிருந்தார்.

தனி ஈழத்துக்காக இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பாகும் அதனை கூறுவதற்கு முதுகெலும்பில்லாமல் வடவரின் எழும்புத் துண்டிற்காக தமிழகத்தில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தமிழக கட்சியல்ல அது வடவரின் கைப்பொம்மையாகச் செயல்படும் கட்சியாகும். மத்தியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அம்மனமாக நின்று கூத்தாடச் சொன்னால் அதற்கு ஆடுவதற்குத் தயாராகத்தான் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புலிகளைத் தீவிரவாதிகள் என்றும் பயங்ரவாதிகள் என்றும் கூறுகிறார்கள் அவர்கள் முதலில் சே குவேரா கூறியதனைப் படிக்கவேண்டும்.

நாங்கள் தீவிரவாதிகளா, அயோக்கியர்களா என்பதைக் குறித்து பரீசிலனை செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை.

எல்லாக் காலங்களிலும் மக்களுக்காகப் பேசுபவர்களையும் அவர்களுக்காகப் போராடுபவர்களையும் வல்லரசு நாடுகள் தீவிரவாதிகள் என்றால் அவரவர் நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை மட்டும் தியாகிகள் என்றார்களே ஏன்?

- சே குவேரா

இதனைத் தமிழகத்தில் உள்ள காங்கிரஸாரும் டி.கே.ரங்கராஜன் முதல் அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல தடவை மனப்பாடம் செய்து மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும், புலிகளை அமெரிக்கா பயங்ரவாதிகளாக தனது பட்டியலில் இணைத்தது அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைப் பயங்ரவாதிகளின் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டது. இவ்வாறு அன்று சிங்கள அரசின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு 30க்கு மேற்பட்ட நாடுகளில் புலிகளை தடைசெய்தவதற்கு அமெரிக்கா தீவிர முயற்சியில் இறங்கியது. உண்மையில் போலி பொதுவுடைமை கொள்கை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவின் கொள்கையையே ஈழவிடயத்தில் பின்பற்றுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி அவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்களுக்காக இதுவரை குரல் கொடுக்காதவராகவும் மனிதநேயமும், தாய்மை உணர்வும் இல்லாத பிழைப்பு நடத்தும் அரசியல்வாதியாக மட்டுமே இருக்கிறார். ஜே.வி.பி என்ற சிங்களப் பேரினவாதிகளுடன் தொடர்பை வைத்துக்கொண்டு விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்ளுகிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். வரும் தேர்த்தலில் காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அடக்கம் செய்துவது தமிழரின் கடமையாகும்.

தயவுசெய்து தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினேரே உங்கள் அரசியல் பிழைப்பிற்காக பொதுவுடைமை கொள்கை, பெண் உரிமை இவற்றையும் மற்றும் மார்க்ஸ், லெனின், சே குவேரா போன்றவர்களையும் நாறடிக்க வேண்டாம்.

விஸ்வா

Saturday, May 4, 2013

மார்க்ஸ், லெனின் சொன்னது என்ன? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 3


பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, மார்க்சீய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்தது. அவர்கள் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு உல்டா​வாகச் செயல்படுகிறது.

 தோழர் உ.வாசுகி சொல்கிறார், ''குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது, ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிஸ தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து, எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது. மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை'' என்கிறார். மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல. அப்படி ஆகிவிடவும் கூடாது.

ஆனால், 'மார்க்ஸ் சொன்னதையும், லெனின் வழிகாட்டியதையும் எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது’ - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே சொல்ல ஆரம்பித்​திருப்பது காலக் கொடுமை. எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும்?

'ஏகாதிபத்திய’ இங்கிலாந்துக்கு மார்க்ஸ் சொன்னது இலங்கை அரசுக்குப் பொருந்தாது என்றால், இலங்கை அரசு என்ன சோஷலிஸ அரசா? அதனிடம் ஏகாதி​பத்தியக் குணாம்சங்கள் இல்லையா? மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறையை வைத்துக்கொண்டு இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு; நான் மட்டுமே அரசு’ என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. தனக்கு விரோதமாகத் தீர்ப்​பளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே அவதூறுகள் கிளப்பி வீட்டுக்கு அனுப்ப அதிகாரம் படைத்த ஆட்சி. தேர்தல் கமிஷன்கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் முடக்கிவைக்கப்படும் ஆட்சி. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லும் ஆட்சி. பௌத்தம் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழவேண்டியது இல்லை என்று சொல்லும் ஆட்சி. இந்துக் கோயில் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் ஆட்சி. ஹலால் முத்திரையிடப்பட்ட கறியை வாங்கத் தடைசெய்யும் ஆட்சி. ராஜபக்ஷேவின் குடும்பத்தினர் மட்டுமே அனைத்து அதிகார மையங்களிலும் இருக்கலாம் என்று அறிவித்த ஆட்சி. ராணுவத் தளபதியையே கைதுசெய்து சிறைவைத்த ஆட்சி. இது சிங்கள, பௌத்த, பேரினவாத ஏகாதிபத்தியம் அல்லவா? ஏகாதிபத்தியம் என்றால், பெரிதாக அமெரிக்கா போலத்தான் இருக்க வேண்டுமா? ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து குண்டு வீசுபவர்களைத்தான் ஏகாதிபத்தியம் என்பார்களா? மாற்று இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக சொந்த தேசத்து மக்கள் மீதே குண்டுபோட்ட அரச பயங்கரவாதிகள், இங்கி​லாந்து ஏகாதிபத்தியத்தைவிட எந்த விதத்தில் குறைச்சல்?

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பச்சைப்படுகொலைகளைப் போல ஈழத்தில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ஜெனரல் டயர் போல கொழும்புவில் 100 பேரை அடையாளம் காட்ட முடியும். என்ன நிலைமை மாறிவிட்டது?

ஏகாதிபத்திய இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டுமா கூடாதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கே குழப்பம் இருந்தது.

''இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது நடக்க முடியாதது என நான் கருதியது உண்டு. ஆனால், அயர்லாந்தின் பிரிவினைக்குப் பின்னர் ஒரு கூட்டரசு தோன்ற நேர்ந்தாலும், இத்தகைய பிரிவினை தவிர்க்க முடியாதது என இன்று நான் கருதுகிறேன்'' என்று எங்கெல்ஸுக்கு மார்க்ஸ் (1867- நவம்பர் 2) கடிதம் எழுதினார்.

உலகப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்துவதையே தனது வாழ்க்கை லட்சியமாகக்கொண்ட மார்க்ஸ், இன்னோர் அதிர்ச்சிக்குரிய ஆலோசனையையும் சொன்னார். 'இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்தால், இங்கிலாந்து பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டபோது, 'அயர்லாந்துடன் இங்கிலாந்துகொண்டிருக்கிற ஒன்றியத்தைக் கலைத்துவிட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பளித்​தார். ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்று பிரித்துப் பார்த்தார்.

ஒடுக்கும் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள், அயர்லாந்து நாட்டை தேசிய ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று மார்க்ஸ் முதலில் நம்பியது உண்டு, சிங்களப் பாட்டாளிகள், தமிழ்ப் பாட்டாளிகளுக்காகப் பேசுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நம்புவதைப் போல. ஆனால் அது சாத்தியமில்லை என்று மார்க்ஸின் சிந்தனை அப்போதே முடிவுக்கு வந்தது.  இதை 150 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் நகமும் முகமும் கூர்மை அடைந்த பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர மறுக்கிறது.

அயர்லாந்து விவகாரத்தில் மார்க்ஸ் எடுத்த நிலைப்பாட்டையே சோவியத் நாட்டில் லெனின் அமல்படுத்தினார். இதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருந்தாது என்கிறது. 'சோஷலிஸத் தேசக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் லெனின் சொன்னதை நகலெடுக்கக் கூடாது’ '' என்கிறார் வாசுகி. பிரிந்துபோகும் தன்மை​யுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது சோஷலிஸ அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று லெனின் சொல்லவில்லை. 'சோஷலிஸத்தை அடைகிற வரையில் அந்தத் தேசிய இனச்சிக்கலை ஒதுக்கிவைக்காமல்...’ என்று அறிவுறுத்தியவர் லெனின். சோஷலிஸக் கூட்டமைப்பிலேயே தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டுமானால், பேரினவாதக் கட்டமைப்பில் அதனுடைய அவசியம் இன்னும் முக்கியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி உணரத் தவறுவது ஏன்?

தேசிய இனச் சிக்கல் 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எழுந்தது. அது கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது. 1886-ம் ஆண்டு இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது பேராயம் லண்டனில் நடந்தபோது, தேசிய இனங்களின் தனிநாட்டு உரிமை தொடர்பான தீர்மானம் வந்தது. ''தேசிய இனங்கள் எல்லாவற்றுக்கும் தனி நாட்டுரிமை உண்டு. மேலும், எல்லா நாட்டு தொழிலாளர்களும் சேர்ந்து உலகளவில் வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தேசிய இனப் பிரச்னை விவாதம் ஆனது. வர்க்க முரண்பாடுகளை வென்றெடுக்க நினைக்கும் மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இனப் பிரச்னை விவாதப் பொருளானது. அப்போது துணிச்சலாக தேசிய இனப் பிரச்னையையும், பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமையையும் பேசியவர் லெனின்.

ஒன்றுபட்ட சோவியத் புரட்சியை முன்னெடுத்துக்கொண்டு இருந்த லெனின், அங்கு பெரும்பான்மை இனமான மாருசிய தேசிய இனத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடாமல் தன் கருத்தைச் சொன்னார்.

''நம்முடைய சொந்த மாருசிய தேசிய இனத்தைச் சேர்ந்த சொந்த நாட்டவர்கள் கொண்டிருக்கிற தேசிய காழ்ப்புகளை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்னும் அச்சத்தைக் கருதி இந்த (தனிநாட்டு) உரிமையை முன்வைக்க நாம் மறக்கவோ தயங்கவோ செய்வோமாயின், 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்னும் அறைகூவல் அப்போது உதட்டளவிலான வெட்கங்கெட்ட பொய்யாக மட்டுமே இருக்கும்'' என்று எச்சரித்திருக்கிறார் லெனின்.

தேசிய இன உணர்ச்சி என்பது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி, சோஷலிஸத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்று லெனின் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் அவரே, ''ஒரு தனித் தேசிய அரசை அமைத்துக்கொள்கிற உரிமையாகிய பிரிந்துபோகிற உரிமையைவிட மிகப் பெரிய உரிமை ஏதேனும் ஒரு தேசிய இனத்துக்கு உண்டா?'' என்று கேட்கும் அளவுக்குப் போனார்.

ஸ்வீடனில் இருந்து நார்வே தனி நாடு ஆவதை (1905-ல்) ஆதரித்தார். பிரியலாமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது.  பெரும்பான்மைத் தீர்ப்புப்படி நார்வே பிரிந்தது. 'நாடுகள் பிரிந்து​போவதை, நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தீர்த்துவைக்கப்பட்ட ஒரே வழியில் மட்டும் தீர்த்துவைக்க வேண்டும்’ என்றும் லெனின் எழுதினார். ஸ்வீடனுக்குள் இருந்தாலும், தனக்கெனத் தனியாக நாடாளுமன்றம் வைத்துக்கொள்ளும் உரிமை நார்வேக்கு இருந்தது. 'ஸ்வீடன் மன்னர் எங்கள் மன்னர் ஆக மாட்டார்’ என்று தீர்மானம் போடும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக நார்வே நாட்டவர்கள் இருந்தனர்.

ஆனால், ஈழத்தில் பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதியை ஒன்றிணைத்து ஒரு மாகாணம் ஆக்குவதற்கோ, அந்தப் பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. யாரெல்லாம் நிலம் வைத்திருந்தார்களோ, அவர்களிடம் இருந்து அவையெல்லாம் பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் அனைத்தும் சிங்களருக்கு, ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மை இனத்தை வஞ்சத்தோடு வறுத்தெடுக்கிறது. வாழவிடாமல் தடுக்கிறது.

'அயர்லாந்து மக்களுக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. அழிவதா அல்லது தனி நாடா?'' என்று கேட்டு உண்மையை உடைத்துச் சொன்னார் மார்க்ஸ். 'தமிழர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று  சரணடைவது அல்லது கடலுக்குள் விழுந்து சாவது’ என்று அறிவித்தார் சிங்கள ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா.

மார்க்ஸ் படம் பிடித்த அதே குணாம்சம்தான் 150 ஆண்டுகள் கழித்து பொன்சேகாவிடம் வெளிப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மாறவில்லை. மார்க்சிஸ்ட்டுகள் மாறிப் போனார்கள்.


ப.திருமாவேலன்

நன்றி - விகடன்

Friday, May 3, 2013

மிரட்டிய அமெரிக்கா... மீறிய புலிகள்... மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 2



கியூபா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா, நமீபியா, பாலஸ்தீனம் போலவே ஈழத்தில் நடந்ததும் விடுதலைப் போராட்டம். இதை உணர்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் தயக்கம் என்ன? இந்த நாடுகளின் கோரிக்கையை சில ஏகாதிபத்திய சக்திகள் ஆதரித்தன அல்லது ஆதரிக்கும் என்பதற்காக, அதன் போராட்ட நியாயங்களை சமூக - ஜனநாயக சக்திகள் புறந்தள்ளிவிட முடியுமா?

கியூபாவுக்கும் சோசலிஸ நாடுகளுக்கும் அமெரிக்கா செய்ததை, யாழ்ப்பாணத்துக்கும் வன்னிப் பகுதிக்கும் சிங்களம் செய்தது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தடுத்தும், சொந்த தேசத்துக்குள் வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தும், விலைகொடுக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை உயர்த்தியும், 'பொருளாதாரத் தடை’ செய்யப்பட்ட பகுதியாக தமிழீழத்தை சிங்கள இனவெறி நடத்தியது. அப்போது, இன்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்காவோ அல்லது தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் நாடுகளோ அன்று குரல் கொடுக்கவில்லை. காரணம், ஒன்றுபட்ட இலங்கைதான் அவர்களுக்குத் தேவை. அது இருந்தால்தான் தங்களது சந்தை செழிக்கும் என்று நினைத்தனர். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ புலிகளை அமுக்கப் பார்த்தனர். அதனால், ஏகாதிபத்திய சக்திகள் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கா.வெ.பாலகுமாரன், ''கியூபா எங்களுக்குப் ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலைபெற்றாலும்கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக் கூடும்'' என்று, அமெரிக்காவை மனதில்வைத்தே சொன்னார்.

ராஜபக்ஷேவை வைத்துப் புலிகளை வீழ்த்துவதும் பின்னர் ராஜபக்ஷேவை வீழ்த்துவதன் மூலமாக சீனாவை மிரட்டுவதும் என்ற தந்திரம் மட்டுமே ஜெனிவா தீர்மானமே தவிர, இது தமிழருக்கு ஆதரவானதும் அல்ல; சாதகமானதும் அல்ல. சர்வதேச அரசியலையே சர்வமும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கும்’ என்று நம்புவதுதான் ஆச்சர்யமானது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் குறித்து 'தீக்கதிர்’ பத்திரிகையில் தோழர் உ.வாசுகி 'சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகம் வர வேண்டாமா?’ என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார். கொலம்பஸில் தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து, பாலஸ்தீனம் வழியாக வந்து, வியட்நாமைத் தொட்டு, ஈராக் அநியாயத்தை அடையாளப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். ஆனால், இந்த நாடுகளில் நடந்த அட்டூழியங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சமும் குறையாதது ராஜபக்ஷே சகோதரர்கள் ஈழத்தில் நடத்தியது. ஆனால், அதைப் பற்றி கரிசனமான வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறதே... அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நுண்மையான அரசியல். இவர்களுக்குத் தூரப் பார்வைதான் உண்டு போலும். கிட்டப் பார்வை கிடையாதோ?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான சித்துவிளையாட்டுகள் பகிரங்கமாக நடந்த இடம் இலங்கை. ஓஸ்லோவில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தபோது, அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அமிட்ரேச் இடையில் புகுந்து, 'ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இருந்தார். 'ஒரு சமாதானக் கூட்டத்தில் தமிழரின் சுதந்திரப் போராட்டத்துக்கு இகழ்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடன் ஒரு உயர்தர அமெரிக்க அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்குச் சினத்தை ஏற்படுத்தியது. என்று பாலசிங்கம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை 2003-ம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் செய்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நிதி அளிக்க ஒப்புக்கொண்டன. அளவுக்கு அதிகமான நிதி இலங்கைக்குள் வருவதை புலிகள் அமைப்பு கண்டித்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை.

ஜப்பானில் நடக்க இருந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் ஆலோசனை மாநாட்டை வாஷிங்டனில் நடத்தப்போகிறோம் என்று திடீரென அறிவித்து, அதற்கு புலிகள் அமைப்பை அழைக்காமல்விட்டது அமெரிக்கா.  'எங்கள் நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
அதனால், அவர்களை அழைக்க முடியாது’ என்று சொன்னார்கள். 'நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் நடத்தியுள்ளீர்கள்’ என்றார் பிரபாகரன். புலிகள் பங்கேற்காமலேயே அந்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. 'நாசகாரச் சுழற்சிகள் நிலவும் அரசுகளது சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்த சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்துவிடாது சுதந்திரமாகச் செயல்படவே நாம் விரும்பினோம்’ என்று பிரபாகரன் கடுமையாக அமெரிக்காவைக் கண்டித்தார். இனி பேசிப் பயனில்லை என்று புலிகள் முடிவுக்கு வந்தது அதன் பிறகுதான்.

இதுபற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்துக்கு, அவர் பதில் அனுப்பவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஸ்லி வில்ஸ் பதில் அனுப்பினார்.

'விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதாயின், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பெரும் படை அணிகளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதால், புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அது அவர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தும்’ என்று, அமெரிக்கத் தூதர் சொன்னார். 'எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஆயுதம் வைத்துள்ளோம்’ என்று பதில் சொன்னார் பாலசிங்கம். 'இனப் பிரச்னையை இரு தரப்பும்தான் தீர்க்க வேண்டும். பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள வெளிநாட்டுச் சக்திகளை அநியாயமாகத் தலையீடு செய்யவைத்தது தவறு’ என்று ரணிலுக்கு புலிகள் கடிதம் அனுப்பினர். 'சமாதானத்தின் பெயரால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ரணில் அரசு விரித்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில், எமது இயக்கத்தின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழரின் தேசிய இனப் பிரச்னையை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் அதேவேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட லட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு தலையீடு செய்வதை நான் வன்மையாக எதிர்த்தோம்’ என்று பாலசிங்கம் அறிவித்தார்.

அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தங்கள் சந்தை வளத்துக்கும் மூலதனத்துக்கும் புலிகளையும் தமிழர்களையும் பண்டமாக மாறுவதற்கு அமெரிக்கா கட்டாயப்படுத்திய வரலாறுதான் இவை. கொலம்பஸ் காலம் முதல் அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அமெரிக்க நெருக்கடிகள் தெரியாதா? தெரிந்தும் பார்க்கத் தவறினார்களா?இதைப் பற்றிச் சொன்னால், தேசிய இனப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதால் பீதி அடைகிறார்களா?

தேசிய இனப் பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே உள்வாங்க மறுப்பதால்தான், ஏகாதிபத்தியப் போர்வைகளைப் போட்டுமூடி, நாட்டில் நடக்கும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.

அப்படியே அமெரிக்கா, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் என்ன முடிவெடுப்பது? இதற்கு லெனின் வழிகாட்டுகிறார்...

''ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இதனால் சமூக - ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். அதேபோல், அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்ஷ்வாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை'' என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.

தேசிய இனப்பிரச்னை, சுயநிர்ணய உரிமை, பிரிந்துபோதல் ஆகியவற்றை எப்போது எழுதினாலும் லெனின், குடும்ப உதாரணம் ஒன்றைக் காட்டுவார். அதுதான் விவாகரத்து.

''சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்துபோகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது'' என்கிறார் லெனின். குடும்பத்துக்குள் சித்ரவதை செய்யப்படும் பெண் ஒருத்தி, அதில் அடங்கி இருப்பதைவிட அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நிம்மதியானது என்று நித்தமும் மாதர் சங்கங்கள் கவுன்சிலிங் நடத்துகின்றன. ஆனால், 'என்ன கொடுமை செய்தாலும், அந்த நாட்டுக்குள் வாழத்தான் வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறது. மாதர் சங்கத்தின் அறிவுரை குடும்பத்துக்குக் குடும்பம் மாறாது. ஆனால் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு நாடுகளுக்கு நாடு மாறுகிறதே?

- தொடரும்

ப.திருமாவேலன்

நன்றி - விகடன்

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1



இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கை​யின் இறையாண்மையைக் காப்பாற்று​வதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.

''இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்​களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்​பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்​தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்!

தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.

முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.

திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை!

இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்​துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு மாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது.

1983... சிங்களப் பேரினவாதத்​தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகை​யில் பயங்கரவாதிகள் நடந்து​கொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.

சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்​பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்து​வதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதி​பத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்​களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்​காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்​களும் தெளிவுப்படுத்தினர். அதனா​லேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது.

ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்​படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை  வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா?

'வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ - என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.
அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது.

'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்​தார். 'இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்​கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.

2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்​காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம்.

2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை!

- தொடரும்


ப.திருமாவேலன்

நன்றி - விகடன்