Friday, June 7, 2013

தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்



தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை நடத்திய போதிலும் அவரது வீடுகள் என்ற பெயரில் இன்று வரை பத்து வரையான வீடுகளை சிறிலங்கா படைத்தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.

வன்னியில் அழகான நிலக்கீழ் பதுங்கு குழியொன்று கண்டுபிடிக்கப்படுமாயின் உடனடியாகவே பிரபாகரன் சொகுசாக வாழ்ந்த மேலுமொரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம் என்று படைத்தரப்பு தம்பட்டம் அடிக்கின்றது.

இதே போன்றே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கண்டுபிடித்த நிலக்கீழ் வீடொன்றை தற்போது படையினர் மக்களின் பார்வைக்கு விட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தின் கீழ் சுமார் 40 அடிக்கு மேல் பதுங்கு குழி போன்று வெட்டப்பட்டு மூன்று அடுக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டையே பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான சிங்கள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதிலும் உள்ளே மூன்று அடுக்கு மாளிகையாகவும் உள்ளதுடன் நிலத்திற்கு கீழே வாகன தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வீடு அமைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடுகளைப் பார்க்கின்ற போது படையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஆனாலும் இந்த வீடுகளை மக்கள் பார்வையிட விடுவதன் மூலம் புலிகளின் தலைவர் மிகவும் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்தார் என்பதையும் புலிகள் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள் என்பதையும் மக்கள் மனதில் திணிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மையை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் மக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

வன்னியில் புலிகளின் கட்டுமானங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்த வீடும் சிறப்பான கட்டுமானங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலக்கீழ் பதுங்குகுழி வீடுகள் உண்மையிலேயே தேசியத் தலைவருக்காக அமைக்கப்பட்டவையல்ல. பிரதேச மட்டத் தளபதிகள், உயர் தளபதிகள் போன்றோரின் வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள், களமுனைத் தளபதிகளின் திட்டமிடல்கள், உயர் தளபதிகளின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்காகவே வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் இவ்வாறான நிலக்கீழ் வீடுகளை அமைத்திருந்தனர்.

தமிழீழ தேசியத் தலைவர் தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டவர். அதிலும் களமுனைத் தளபதிகளில் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். தளபதிகளின் ஒன்றுபட்ட சந்திப்புகளின் போது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் அதிக கவனம் செலுத்தியிருந்தார். எங்கேயும் எப்போதும் துரோகிகள் இருப்பார்கள் என்று தலைவர் நம்பியிருந்தார். அதனால் தளபதிகளின் கலந்துரையாடல்களுக்காக நிலக்கீழ் பதுங்குகுழிகளில் வசதியுடன் கூடிய வீடுகளை அமைத்திருந்தார்.

இதற்கு மேலாக எப்போதும் தமது உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருந்த கரும்புலிகள் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தலைவர் இந்த வீடுகளை அமைத்திருந்தார். தேசியத் தலைவர் மாத்திரமன்றி போராளிகளோ தளபதிகளோ கூட இந்த வீடுகளில் வாழவில்லை. அவர்களின் கலந்துரையாடல் இடங்களாகவே இவை திகழந்தன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுக்கத்தக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடுகளை காட்சிப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. இது கூட ஒரு வகையில் தமிழ் மக்களு வெற்றியாகவே அமைகின்றது. ஏனெனில், தங்களுக்காக போராடிய புலிகள், தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் எத்தகைய கட்டுமான வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவதற்கும் புலிகளின் வீர தீரங்களை சிங்கள மக்கள் அறிவதற்கும் படையினர் சிறந்த களம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்று நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.

- தாயகத்திலிருந்து சங்கதி24 இற்காக வீரமணி

Tuesday, May 28, 2013

தலைவர் பிரபாகரன் தொடர் - 6


சரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி.

கஷ்டப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு. அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான்.

பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்’ என்று பிரபாகரன் சொன்னார். அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்து மெயின் ரோடிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்’ என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார்.

தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே?

சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோஷத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள். உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப் பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள்.

யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

நண்பர்களே, ஒரு விஷயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?’

பிரபாகரன் கேட்டார். அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான லாகிரி வஸ்துக்களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?’

சரி என்றார்கள்.

இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம். நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?’

முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு போலீஸ் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை. அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார்.

எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது. புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விஷயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை. மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?’

அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன. மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சி களுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான். ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம் மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை. தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான். அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது? பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம். இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார்.

தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது.

பிரச்னை என்பது பூத மாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

தொடரும்

தலைவர் பிரபாகரன் தொடர் - 5

Friday, May 24, 2013

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு - பிரபாகரன் அந்தாதி 2




பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!
இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)
ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்
மார்பிளந்த நீயன்றோ மன்! (13)

மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்
உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய
துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்
கைய! எமக்குநீ காப்பு! (14)

காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்
கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை
பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)
உற்றதுணை ஆனாய் உவந்து! (15)

உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே
உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*
இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்
இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)

என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்
இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்
தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே
அமிழ்தினும் மிக்க அரிது! (17)

அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;
அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது
கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);
உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)

உவரி* நடுவே உதித்த தமிழர்
உவலை*க் கடலில் உழலும் –அவலம்
களையப் பிறந்த கரிகாலா! உன்னை
அளைய*ப் புகுமெம் அகம்! (19)


அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்
பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட
மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி
ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)


குறிப்பு:

கார் -மழைமுகில்
உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்
மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள
உவட்டா -அருவருப்பில்லாத
பொன்றாத -அழிவில்லாத
அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்
உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்
மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.


அன்புடன்
அகரம்.அமுதா

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! - பிரபாகரன் அந்தாதி 1

தலைவர் பிரபாகரன் தொடர் - 5


‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. சேலம் சென்று என்ன செய்வது? வெறுமனே ஊர் சுற்றுவது தவிர வேறு எந்தப் பயனுமில்லை. தப்பித்து வந்தது, பதுங்கியிருப்பதற்காக என்று அவர் கருதவில்லை. செயல், செயல் முக்கியம். ஏதாவது செய்தாக வேண்டும். மிகத் தீவிரமாக இயங்கவேண்டிய தருணம் என்று தனக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். ஒரு தாற்காலிக ஏற்பாடாகவே தமிழகப் பயணத்தை அவர் எண்ணினார். சில நாட்கள் சென்னைக்குச் சென்று தலைவர்களைச் சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. யாராவது உதவ வேண்டும் அதற்கு. யார்?

ஒரு செய்தி வந்திருந்தது. அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம் மயிலாப்பூரில் வசித்துக்கொண்டிருக்கிறான்.

அடடே அப்படியா என்றார் பிரபாகரன். செட்டியை அவருக்குத் தெரியும். வெகு நன்றாகத் தெரியும். அவனது சகோதரன் செல்லக்கிளியையும் தெரியும். செட்டியின் பெற்றோர், உறவுக்காரர்கள் அனைவரையும் தெரியும். செட்டி ஒரு மாதிரியான ஆள். ஒரு மாதிரி என்றால், உள்ளூர் கிரிமினல் என்று பொருள். கொள்ளைத் திட்டங்களில் ஆர்வம் கொண்டவன். அவனது வயதை ஒத்த தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் ஆயுதம் ஏந்திய சமயம், எந்த வங்கியில் கைவைக்கலாம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன். போராளி இளைஞர்கள் தமது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பதை தமக்குத்தாமே அனுமதித்துக்கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு வரிசையாகக் கைவரிசை காட்டுவதில் மும்முரமாக இருந்தவன்.

விடுதலை, தமிழர் நலன், மேலான சகவாழ்வு, சுதந்தரக் காற்று குறித்தெல்லாம் செட்டிக்கு எக்காலத்திலும் அக்கறை கிடையாது. போராளி இளைஞர்கள் வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுகிறார்களா? நல்லது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஆயுதம் வாங்கிக்கொண்டு போகட்டும். நான் கூடச் சென்று என் பங்குக்குக் கொஞ்சம் அடித்துக்கொள்கிறேன். எனக்கு ஆயுதம் வாங்க வேண்டாம். ஆனால் ஆகவேண்டிய காரியங்கள் வேறு பல உண்டு.

பிரபாகரனுக்கு இது தெரியும். செட்டி அப்படித்தான். அவனைத் திருத்த முடியாது. அது வேறு வார்ப்பு. ஆனாலும் பழகுவதற்கு நல்லவன். பலமுறை உடன் உட்கார்ந்து பேசியிருக்கிறான். போராளி இளைஞர்களின் பல காரியங்களுக்கு அவ்வப்போது உதவிகூட செய்திருக்கிறான். யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாத போராளிகள் கிடையாது. குட்டிமணி, தங்கதுரை தலைமுறையைச் சேர்ந்தவர்களிலிருந்து பிரபாகரன் தலைமுறைக்காரர்கள் வரை அனைவர் மத்தியிலும் அவன் பிரபலம். மாணவர் பேரவை, இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கெல்லாம் கூட அவனைத் தெரியும்.

தெரியுமே தவிர யாரும் மதிக்கமாட்டார்கள். பார்த்தால் ஒரு வணக்கம். நீ சுகமா, நான் நலம். தீர்ந்தது விஷயம். சற்று ஒதுங்கியே இருப்பது வழக்கம்.

பிரபாகரனும் அப்படித்தான். ஆனாலும் இந்தச் சமயத்தில் மயிலாப்பூரில் செட்டி வந்து தங்கியிருப்பது ஒரு முக்கியமான செய்தி. சென்னைக்குப் போகும் எண்ணத்தில் இருந்த பிரபாகரனுக்கு அது ஒரு நல்ல செய்தியாகவும் பட்டது. குறைந்தபட்சம் தங்கிக்கொள்ள ஓரிடம். போதாது?
பிரபாகரன் வேதாரண்யத்திலிருந்து பஸ் ஏறிப் புறப்பட்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.

அதற்குள் அவர் செட்டியுடன் சென்று சேருவது பற்றி, பெரியஜோதி சேலம் சென்றிருந்த தங்கதுரைக்கும் குட்டிமணிக்கும் தகவல் சொல்லி விட்டார்.

அவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனே பிரபாகரனைத் தொடர்பு-கொண்டார்கள். தம்பி வேண்டாம். அவன் ஆபத்தானவன். தவிரவும் உன்னுடைய நோக்கத்துடன் ஒத்துப்போக முடியாதவன்.

அப்படியா? செட்டி பிரபாகரனுடன் வேறு விதமாகத்தான் பேசிக்-கொண்டிருந்தான். நீங்கள் எல்லோரும் என்னைத் தவறாகப் புரிந்து-கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அக்கறை இருக்கிறது. எனக்கும் போராட்டத்தில் ஈடுபாடு இருக்கிறது. நம் மக்களின் நல்வாழ்வின்மீது ஈடுபாடு இருக்கிறது. யாழ்ப்பாணம் திரும்பியபிறகு நீ வேறு செட்டியைப் பார்க்கப் போகிறாய், பார்.

பிரபாகரனிடம் இயல்பாக ஒரு வழக்கம் உண்டு. அவரால் எந்தக் கூட்டத்திலும் சகஜமாக இருக்கமுடியும். ஆனால் எந்தக் கூட்டத்தின் சட்டைச் சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக்கொள்வார். பின்னாளில் `டெலோ’வாக உருப்பெற்ற தங்கதுரையின் நண்பர் வட்டத்தில் இருந்தபோதும் பிரபாகரன் தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்ததில்லை. செட்டி போன்ற கிரிமினல்களுடன் தொடர்பு இருந்தாலும் தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டதில்லை.

இதோ பார் செட்டி, வங்கிக்கொள்ளை உனக்கு மிகுந்த கிளுகிளுப்புத் தருகிறது என்பதை நான் அறிவேன். கொள்ளையடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் இயக்கம் நடக்கப் பணம் வேண்டும். வங்கியில் இருப்பது மக்கள் பணமல்லவா என்று கேட்காதே. அது அரசாங்க வங்கி. கொள்ளையுடன் நீ தேங்கிப் போவதால் நீ கிரிமினல் என்று கருதப்படுகிறாய். பணமே இல்லாது போனாலும் என் செயல்பாடு நிற்கப்போவதில்லை. வித்தியாசம் புரிகிறதா?

நிறையப் பேசினார்கள். யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பிறகு என்ன-வெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிப்பேசித் திட்டமிட்டார்கள். திட்டங்கள் செயல்படுத்தப்படத் தேவையான பணத்துக்குத் தானே பொறுப்பு என்று செட்டி சொன்னான். வேறென்ன? வங்கிக்கொள்ளைதான்.

1974-ம் ஆண்டு மத்தியில் பிரபாகரன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். பரபரவென்று காரியங்கள் நடைபெறத் தொடங்கின. சாத்வீகிகள் அங்கே தபால் தலைப் போராட்டம் என்று ஒன்றை நடத்திக்கொண்டிருந்த போது, பிரபாகரன் தனது நண்பர்களை அழைத்தார்.

காத்திருந்தது போதும் நண்பர்களே. நாம் தொடங்கலாம் என்று சொன்னார். ஒரு பக்கம் வங்கிக்கொள்ளைகள் ஆங்காங்கே நடைபெற்றன. பொறுப்பு செட்டியுடையது. பிரச்னையே அங்குதான். இயக்கப் பணிகளுக்காக என்று சொல்லிவிட்டு நடத்திய கொள்ளைகளில் பாதிப் பணம் வந்து சேரவே இல்லை. அடடே, செட்டி கார் வாங்கிவிட்டானாமே? அப்படியா? அவன் பளபளவென்று சில்க் சட்டை போட்டுக்கொண்டு போகிறான், கமகமவென்று செண்ட் அடித்துக்கொண்டு வருகிறான் என்று ஆளுக்கொரு தகவல் சொன்னார்கள்.

பிரபாகரனுக்கு வெறுப்பாக இருந்தது. ம்ஹும். சிலரைத் திருத்தமுடியாது. அதற்காக வருத்தப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. சரி, நாம் குண்டு வைக்கலாம் என்று எழுந்தார்.

ஒரே நாள். ஒரே சமயம். யாழ்ப்பாணத்தின் முக்கியமான ஒரு கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன், ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று தேர்ந்தெடுக்-கப்பட்ட சில இடங்களில் பிரபாகரன் வைத்த குண்டுகள் வெடித்தன. சிறீமாவோ பண்டாரநாயகா திரும்பி உட்கார்ந்து வடக்கிருக்க ஆரம்பித்தார்.

உண்மையில் பிரபாகரனுக்கு அப்போது பொது அமைதிச் சீர்குலைவு நோக்கமாக இருக்கவில்லை. அவரது இலக்கு வேறு. ஒரு பெரும் படுகொலையைத்தான் தொடக்கப்புள்ளியாக மனத்தில் குறித்து வைத்திருந்தார். முதல் அத்தியாயத்தில் பார்த்த ஆல்ஃப்ரட் துரையப்பா. நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டிய கிருமி என்று தீர்மானம் செய்திருந்தார்.

அந்த வருடம் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று காவல் துறையும் நகர மேயரான துரையப்பாவும் இணைந்து நடத்திய கலபரத்தில் ஒன்பது தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர். தமிழர்கள் அத்தனை பேரின் வெறுப்பும் அவர் பக்கம் திரும்பியிருந்தது.

துரையப்பாவின் கணக்கைத் தீர்த்ததுதான் பிரபாகரனின் வெளியே தெரிந்த முதல் செயல். அதன்பிறகு அவரது `புதிய தமிழ்ப் புலிகள்’ புதிய வேகம் கொண்டு இயங்க ஆரம்பித்துவிட்டது. 1976 மே 5-ம் தேதி பிரபாகரன் இயக்கத்துக்கு வேறு பெயர் வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள். புதிய விதிமுறைகள் வகுத்தார். புதிய ஒழுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பழைய அமைப்பில் இருந்த பிசிறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன. சரி செய்ய முடியாதவை களையப்பட்டன, செட்டியைப் போல.

(தொடரும்)

தலைவர் பிரபாகரன் தொடர் - 4

முள்ளிவாய்க்கால் முடிவல்ல : தேசியத் தலைவரின் சிந்தனையும் மகிந்த சிந்தனையும்



முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மகிந்தவுக்கும் சிங்களப் படைகளுக்கும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது படைகளின் ஆற்றல் ஆளுமைகளையும் கண்டு அச்சமடைந்த மகிந்தவும் அவரது படைகளும் உலக நாடுகளில் போய் இரந்து பெற்று வந்த இரசாயன ஆயுதங்களையும் வல்லரசு நாடுகளில் உள்ள இராணுவப்படைத் தளபதிகளின் தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் பெற்றுவந்து வன்னியில் வைத்து எமது மக்களைக் கொன்று குவித்தனர்.

ஆனால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் செயல்களையும் சிங்களத் தரப்பால் இன்றுவரை வெற்றிகொள்ள முடியவில்லையென்பதை தமிழ் மக்கள் தெளிவாகவே சிங்களத்திற்கு உணர்த்தியிருக்கின்றனர். முப்பது வருடங்களாக இலங்கைத்தீவை ஆட்சி செய்த எமது தலைவர் பிரபாகரன் அவர்களே இன்றும் இலங்கைத் தீவை ஆட்சி செய்கிறார் என்பது கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறீலங்காப் படைகளுக்கும் மகிந்த குடும்பத்திற்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.

ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள். இவர்களை நாங்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம். அடிக்கலாம். உதைக்கலாம். கொலைசெய்யலாம். கிடங்கு வெட்டி உயிருடன் புதைக்கலாம். நாங்கள் செய்வதைக் கேட்க யாருமில்லை என்ற மகிந்த குடும்பத்தின் கற்பனைகளுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆப்பு வைப்பதாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தனித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அடித்தால் உலகம் ஆர்ப்பரித்து எழுந்து வரும் என்பதை உலகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழர்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஏனைய சமூகத்தவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் கலந்துகொண்டுள்ளமை ஈழத் தமிழருக்கு பெரு வெற்றியாக அமைந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களைத் துன்ப துயரங்களுக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சவும் அந்த அயோக்கியனின் படைகளும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியை எதிரி நாட்டை வெற்றிகொண்டதைப் போன்று பறைசாற்றின.

சொந்த நாட்டு மக்களுடன் எதிர்நின்று சமர் புரிந்து வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாத மகிந்தவின் சிங்களப் படைகள் உலக நாடுகளில் பெற்றுவந்த எரி குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தமிழர்களின் தலைமேலே கொட்டி அவர்களை எரித்தழித்த தினத்தை யுத்த வெற்றித் தினமாக பிரகடனப்படுத்தி வருடா வருடம் கொண்டாடி வருகின்றன.

பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகள் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தைக் கொண்டாடும் போது தமது படைபலத்தையும் படைக்கலங்களின் பலத்தையும் காட்சிப்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், சிறீலங்கா அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்களில் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்று குவித்த தினத்தை தனது தேசிய வெற்றித் தினமாகக் கொண்டாடி வருகின்றது.

உலகின் ஏனைய நடுகளுடன் ஒப்பிடுகின்ற போது மகிந்தவின் இந்தச் செயலானது உண்மையிலேயே வெட்கப்பட
வேண்டியது. சிறீலங்காவின் தென்பகுதியில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழர் தாயகம் எங்கணும் இந்த வருடமும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. வன்னியில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்ற நிலையில் நான்காவது வருடமாகிய இந்த வருடம் மிகவும் வித்தியாசமான முறையில், மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

உயிரிழந்த மக்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அஞ்சலி செலுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று வன்னி மாவட்ட சிறீலங்காவின் படைக் கட்டளைத் தளபதி பொணிபஸ் அறிவித்திருந்த நிலையிலும், யாழ். மாவட்டம் உட்பட தமிழர் தாயகம் முழுவதும் படையினரின் சோதனைகளும் ரோந்துகளும் கெடுபிடிகளும் அதிகமாக்கப்பட்டிருந்த நிலையிலும், யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் எதனையும் பொருட்படுத்தாத மக்களும் மாணவர்களும் தமிழர் தாயகம் எங்கும் எமது உறவுகளுக்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

படையினர் முற்றத்தில் நிலைகொண்டிருந்த போதிலும் உள்வீட்டில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய வீரம் இந்தத் தடவைதான் தாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இந்த வருடம் மக்கள் பெரும் எழுச்சியடைந்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிவோடு எழுச்சியடைந்திருக்கிறார்கள். இந்த எழுச்சியானது சாதாரணமானதன்று. மக்கள் மீண்டும் துணிவோடு புறப்பட்டுவிட்டார்கள் என்பதையே இந்த எழுச்சி புலப்படுத்துகிறது. தங்கள் தலைகளில் இனிமேல் யாரும் மிளகாய் அரைக்க முடியாது என்பதை தமிழ் மக்கள் இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறா£ர்கள்.

ஈழத் தமிழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவிலுள்ள தமிழ் மக்களும் இந்த வருடம் என்றுமில்லாதவாறு எழுச்சியடைந்துள்ளார்கள். இதிலும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மிக உணர்வுபூர்வமாகவே நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழின விடுதலை மிக விரைவாகவே எட்டப்படும் என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே துளிர்த்திருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது புதிய ஆரம்பம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவே நோக்கப்பட்டது. ஆனால், இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாக அந்த வார்த்தையின் அர்த்தம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது. ஈழத்தமிழர்களின் போராட்டம் கூட முள்ளிவாய்க்காலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது என்றே சிங்களம் உட்பட அனைவரும் கருதினார்கள். இந்தப் பாடத்துடன் தமிழன் படுத்துவிடுவான். இனிமேல் அவன் நிமிர்ந்தெழ முடியாது என்று சிங்களம் கனவு கண்டது.

ஆனால், தமிழீழத் தேசியத் தலைவரும் போராளிகளும், ‘எமது கல்லறைகளில் புற்கள் முளைக்காது, புதிய போராளிகள் முகிழ்த்தெழுவார்கள்’ என்று கூறியதைப் போல இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவுடன் புதிய போராட்ட அத்தியாயம் ஒன்று முகிழ்த்துள்ளது. அதுதான் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டம். மக்கள் புரட்சி வெடித்தாலே நாம் சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க முடியுமென்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் கூறியிருந்தார்கள். அது போன்று இப்போது மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. ஈழத்தில் மட்டுமல்ல, உலகம் பூராக மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. இதன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டமும் சிறீலங்காவிற்கு எதிராக தமிழீழத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டமும் உலகப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அதிலும் தமிழீழப் போராட்ட முறைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட யுக்திகள் குறித்தும் வியந்து பேசப்படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த திறமை. அஞ்சாத துணிவு. இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போரிடும் ஆற்றல். இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது எங்கே தங்கியிருக்கிறது? போராட்ட மௌனிப்போடு அந்த ஆற்றல், ஆளுமைகளும் மௌனித்துவிட்டனவா? இல்லை இல்லை. தமிழருக்கு என்று சிறப்பாக இருக்கின்ற ஆற்றல், ஆளுமைகளும் வீரமும் உலகில் எந்த இனத்திற்கும் இல்லை. புலிகளிடமுள்ள போர்க்குணம் என்றுமே மாறப்போவதில்லை. தமக்கு இரை கிடைக்காவிட்டால் உரிய இரை, பெரிய இரை தன்னைத் தேடி வரும்வரை புலி பதுங்கியிருக்கும் என்பது வன ஆராய்ச்சியாளர்கள் புலியைப் பற்றி ஆராய்ந்து கூறிய முடிவு. அதேபோல்தான், தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் சாதாரணமான காரியங்களுக்கு எல்லாம் அவர்கள் மண்டையைப் போட்டு உடைப்பதில்லை. உரிய காலம் வரும் வரை அவர்கள் அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். இந்த அமைதியைப் பார்த்து சிங்களம் போரில் புலிகளை வென்றுவிட்டோம் என்று எக்காளத்தொனி எழுப்புகிறது. ஆனால், இது அவர்களுக்கோ அவர்களின் மக்களுக்கோ நல்லதல்ல.

போர் என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். தமிழ்த் திரைப்படங்களில் கூறுவதைப் போல ‘சண்டை என்றால் சட்டை கிழியும் தான்.’ அதற்காக கிழிந்த சட்டையைத் தொடர்ந்து அணிந்துகொண்டு திரிய முடியாதே. என்றோ ஒரு நாள் சட்டையைத் தைப்பதற்கு முயலத்தானே வேண்டும். சட்டையைத் தைப்பதற்கு முயன்று முடியாவிட்டால் புதிய சட்டையை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்களின் நிலையும் இன்று இது போலத்தான் இருக்கின்றது. சண்டை வந்தது. சட்டை கிழிந்துவிட்டது. தைப்பதற்கு முயன்றார்கள். முயல்கிறார்கள். முடியாவிட்டால் புதிய சட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டும். எமது போராட்டத்தை புதிய வழியில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் துணிந்துவிட்டார்கள்.

தமிழர்களும் தமிழீழப் போராட்டமும் புதைக்கப்பட்டுவிட்டதாக மகிந்தவும் மகிந்தவின் படைகளும் நம்பிக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்கள் சென்று இந்த வருடம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். சிங்களம் இதனைச் சற்றேனும் எதிர்பார்த்திருக்காது. தமிழன் மீண்டும் துணிந்து எழக்கூடாது என்று கருதிய சிங்களத்தின் மனங்களில் தமிழரின் மீளெழுச்சியானது இடியாக அமைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வரை புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சி நின்ற மகிந்த அரசாங்கம் இப்போது தாயகத்திலேயே தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அச்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சம் மகிந்த குடும்பத்தை அமைதியாக இருக்கவிடப்போவதில்லை.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்திய வாழ் உறவுகளும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெரும் அச்சத்துடன் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உங்கள் எழுச்சியே மீள் பலத்தைக் கொடுத்தது. ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நீங்கள் அங்கே நடத்திய போராட்டங்களும் எழுச்சி நிகழ்வுகளுமே இங்கே இவர்களையும் எழுச்சியடையச் செய்தது. இனி நாங்களும் எழுச்சியடையாவிட்டால் நாங்கள் அடக்கப்படுவோம் என்ற உணர்வு ஈழத் தமிழ் மத்தியில் மேற்கிளம்புவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்பதை நீங்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களிலும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஈழத் தமிழ் மக்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் உறுதியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இவர்களின் உறுதியான எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இந்ந வருடம் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக நீங்கள் எழுச்சியடைந்தமையாலேயே ஈழத்தில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய அனைத்து இடங்களிலும் வாழ்கின்ற மக்களும் இந்த நினைவு தினத்தைக் நினைவு கொள்ளத் துணிந்தனர். எனவே, எதிர்காலத்திலும் நீங்களே ஈழத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் காவலர்களாகவும் இருக்க வேண்டும் என்றே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்து ஈழத்தில் தமிழர் தாயகமான தமிழீழம் மலர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு என்றைக்குமே இருக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் தமிழீழம் மலரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு

Monday, May 20, 2013

இமாலய வெற்றிகளின் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர்




தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,

விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.



பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.



தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.



பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே.பிரபாகரன் தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Sunday, May 19, 2013

முள்ளிவாய்க்காலும் தமிழீழப் போராட்டமும்



மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள். அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.

தமிழினத்தின் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை மறக்கமுடியாத மிகப்பெரிய துயரச் சம்பவமாகக் கருதப்படுகிறது. இந்த மகா இனவழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை சிறிய தண்டனை கூட வழங்கப்படவில்லை, ஆனால் இனவழிப்பில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திறார்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுச் சக்திகள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதத்தைக் கீழே வைக்காமல், தமிழீழப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு என்று சென்றவருடம் கூறியிருந்தார் எரிக் சோல்ஹெயம். இவ்வாறான பரப்புரைகளை இன்றுவரை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள்.

சிங்களப் படையினர் தமிழர்களின் பகுதிகளில் இருந்து வெளியேறினால் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராகத் தான் இருக்கிறோம் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறினார். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காமலும், தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை அகற்றாமலும் இருந்து கொண்டு. தமிழர்கள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைத்து அவர்கள் சரண் அடைந்தும், சிங்களப் பேரினவாதிகளின் காலில் விழுந்திருக்கவேண்டும், அப்படி அவர்கள் நடந்து கொள்ளாமையினால் தான் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதிகள் அழிந்தார்கள் என்று கூறுகிறார்கள் சிலர். ஹிட்லரின் இனவெறியினால் உண்டான போர் வெறியால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் காரணம்? ஹிட்லருக்கு அடிபணிந்து சரண் அடையாதவர்களா காரணம்?

தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, ஊடகங்களை அனுமதிக்காது இனவெறி கொண்ட போர் வெறியில் இனவழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதிகளின் செயலை மனிதவுரிமைகளை மதிப்பவர்களும், மனிதநேயமுள்ள எவராலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் சிலர் இவற்றை நியாயப்படுத்திச் சிங்கள அரசின் மீதுள்ள பழியையும் சர்வதேச சமூகத்தின் மீதுள்ள பழியையும் புலிகள் மீது போட்டு சிங்களப் பேரினவாதிகளைக் காப்பாற்ற முனைகிறார்கள்.

தேசியத் தலைவர் ஆயுதத்தைக் கீழே வைத்து, சிங்களப் பேரினவாதிகளின் காலில் விழாமல், தமிழீழப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு என்று எரிக் சோல்ஹெயம் கூறியவாறு உலகில் உண்மையில் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களால் நடந்து கொள்ளமுடியாது. அடிபணி இல்லையென்றால் எல்லோரையும் அழிப்பேன் என்ற சர்வாதிகாரத்தை எவராலும் எற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு தான் சிங்களப் பேரினவாதிகள் நடந்து கொண்டார்கள். அதனைச் சிலர் ஏற்றுக் கொண்டு சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை நியாயப்படுத்திப் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான பரப்புரைகளை முன்னெடுப்பவர்கள் ஹிட்லரின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுகிறார்களா?

அன்று மேற்கத்தேயர்கள் பல நாடுகளைக் கைப்பற்றி மக்களை அடக்கி ஆண்டு வந்தார்கள், அவர்களிடமிருந்து மக்கள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றார்கள். அன்று அடக்கி ஆண்ட மேற்கத்தேயர்கள் சிங்களப் பேரினவாதிகளைப் போன்று இனவழிப்பை மேற்கொள்ளவில்லை. மக்கள் அடக்கு முறையை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடும் உரிமையுள்ளது. அவர்களின் உரிமையை மறுத்து அவர்களை அழிப்பதே மிகப்பெரிய குற்றமாகும். தன்னுடைய சிங்கள மக்கள், அல்லது தன்னுடைய நாட்டு மக்கள் முள்ளிவாய்க்காலில் இருக்கிறார்கள் என்ற சிந்தனை சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்திருந்தால் அங்கே மிகப்பெரிய இனவழிப்பு நடைபெற்றிருக்குமா? சமாதானத்தின் ஊடாக தங்களின் உரிமையைப் பெற்றுவிடலாம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த தமிழினத்தின் மீது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் சிங்கள அரசு போர் தொடுத்து தமிழினத்தை அழித்தது. தனது சுயநலத்திற்காக ஒரு பக்கச் சார்பான நிலையில் இருந்து கொண்டும், சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகவும் இருந்து கொண்டும், தமிழின அழிப்பிற்கு உதவியும் புரிந்து, இனவழிப்பை வேடிக்கை பார்த்தது சர்வதேச சமூகம்.

ஹிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் பல ஆண்டுகளாக தமிழருக்கு உரிமை வழங்க மறுத்து வருபவர்கள், அப்படியானவர்களுக்கு அதிகமான அழுத்தங்களைக் கொடுத்து தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய சர்வதேச சமூகம் சிங்களப் பேரினவாதப் பொய்யர்களின் பொய்ப் பித்தலாட்டங்களுக்கு தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்டுக் கொண்டு புலிகள் மீதே அதிக அழுத்தங்களைக் கொடுத்து, இறுதியில் தமிழின அழிப்பிற்கு துணையாக நின்றது. சர்வதேச சமூகம் இன்றுவரை தமிழ் மக்களுக்கு என்ன ஆக்கபூர்வமான நன்மைகளைச் செய்தது? உண்மையில் சிங்களப் பேரினவாதிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைச் செய்து இன்னும் மிகமோசமான நிலமைக்குத் தமிழ் மக்களை சர்வதேச சமூகம் கொண்டு சென்றுவிட்டது. இன்றுவரை தமிழ் மக்களின் மனிதவுரிமைகளுக்கும் அவர்களின் குரல்களுக்கும் மதிப்பளிக்காமல் சிங்களப் பேரினவாதத்தின் பித்தலாட்டங்களை நம்பிக் கொள்ளுகிறது சர்வதேச சமூகம். ஆனால் இவர்களைத் தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்பினார்கள் அவர் நேர்மையுடன் தான் நடந்துகொள்வார்கள் என்றும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர விடிவைப் பெற்றுத்தருவார்கள் என்றும் நம்பினார்கள். ஆனால் உறவாடி முதுகில் குத்தினார்கள்.

அன்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய கவிதை வரிதான் ஞாபகம் வருகிறது. இக்கவிதை புலிகளின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல ஈழத்தமிழரின் உள்ளக்குமுறலும் தான்.

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

உண்மையில் சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்தியாக இருந்திருந்தால் முதலில் அழிக்கப்படவேண்டியவர்கள் சிங்களப் பேரினவாதிகளே. இவர்கள் அழிக்கப்படாவிட்டால் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது என்ற உண்மையை உணர மறுக்கிறது சர்வதேச சமுகம்.

இன்று உயரிய இலட்சியத்திற்கான தமிழீழப் போராட்டத்தின் மீதும் அதனைத் தோளில் சுமந்த தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பழியைத் தூக்கிப் போடுவதற்கு சில கயவர்கள் முற்படுகிறார்கள். இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புதிய தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் வெளியாகிய கட்டுரையின் சில பகுதிகள் இவை.

ஒரு புரட்சியில் தோல்வி ஏற்படுவதுண்டு. அதனால் புரட்சி முடிந்து போனதாகிவிடாது. தோற்றதனாலேயே புரட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என்றும் ஆகிவிடாது.

பொலிவியாவில் சேகுவேரோவுக்குத் தோல்வி ஏற்பட்டது. பிடிபட்டார். பொலிவியப் படை அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் இழிவுபடுத்தித்தான் சுட்டுக் கொன்றது.

பின்னர் இந்நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் பிடல் காஸ்ட்ரோவிடம் “சேகுவேரா பெரிய தவறு செய்து விட்டார் அல்லவா” என்று கேட்டனர். அதனை உடனடியாக மறுத்து காஸ்ட்ரோ கூறினார், “ஒரு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாலேயே அதற்கான நோக்கம். முயற்சி, செயல்முறை அனைத்தும் தவறு என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. கியூபப் புரட்சியில் கூட முதலில் எங்களுக்குத் தோல்விகள் ஏற்பட்டன” என்றார்.

1905-இல் ரசியப்புரட்சி குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புத்துயிர் பெற்று 1917-இல் அப்புரட்சி வெற்றி பெற்றது.

ஒரு தோல்வி வந்தவுடன், நடந்த அனைத்துமே தப்பாக நடந்து விட்டன என்று பேசுவோர் இரு வகையினராகத்தான் இருப்பர். ஒரு வகையினர் சந்தர்ப்பவாதிகள், இன்னொரு வகையினர் எதிரியின் கையாட்கள். ஒரு தோல்வி குறித்துத் திறனாய்வு செய்ய வேண்டாமா எனில், கட்டாயம் திறனாய்வு செய்யவேண்டும். அத்திறனாய்வுத் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த பாய்ச்சலுக்கு செய்யப்படவேண்டும்.

புரட்சிக்கு எந்த வகையிலும் ஆதரவாகச் செயல்படாமல், வேடிக்கை பார்த்தவர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. பகைவனின் பக்கச் சார்பாளர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. அப்படிப்பட்ட ஆட்களின் திறனாய்வை தமிழீழ விடுதலைப் புரட்சியின் ஆதரவாளர்கள் பொருட்படுத்தக் கூடாது, புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அக்கட்டுரையில் உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன.

உங்களது கடமையையும், உங்களது சுமையையும் தனது உயிரிலும் மேலாகக் கொண்டு அதனை இறுக்கிப் பிடித்துக்கொண்டார் தமிழீழத் தேசியத் தலைவர், இறுதிவரை அவர் இறுக்கிப் பிடித்துக்கொண்ட கொள்கைக்காகப் போராடினார். அவர் போராடாமல் விட்டிருந்தால் சிங்களவன் தமிழனக்கு கோவணத்தைக் கூட விட்டு வைக்காமல் அதனைக் கூட பிடித்து இழுத்து எடுத்திருப்பான். இன்று வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு முன்னரே சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை வடக்கில் சிறுபான்மையானவர்களாக மாற்றுவதற்கு கொடிய சிங்களப் பேரினவாதிகள் திட்டம் போட்டு செயல்படுத்துகிறார்கள். இது முள்ளிவாய்க்கால் போன்ற வேகமான தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான்.

ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிகழ்த்தியது, ஆனால் நவின ஹிட்லரான மஹிந்த பயங்கரவாத அழிப்பு என்றும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில் அவர் மேற்கொண்ட இனவழிப்பு என்பது ஹிட்லரின் சிந்தனையை விழுத்தி அதனையும் மிஞ்சிவிட்டது மஹிந்தவின் சிந்தனை. இது தான் சிங்களப் பேரினவாதிகள் கண்ட உண்மையான வெற்றி. இன்று ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு மஹிந்த எப்படி இனப்படுகொலையைப் பயங்கரவாத அழிப்பு என்றும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில் மேற்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றிய பாடங்களைக் ஹிட்லருக்கு சிறப்பாகக் கற்றுக்கொடுத்திருப்பார்.

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே சிங்களப் பேரினவாத அடக்குமுறையில் இருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீளுவோம் என்று. அதற்கு நமது இனப்படுகொலையை உலகம் அங்கீகரிக்க ஒன்று பட்டு உழைப்போம். நமது உரிமைக்காகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் ஜனநாயக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடி அழித்து அடக்கப்பட்டு விட்டோம். இனி இவற்றுக்கு நீதி கேட்டுப் போராட வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். அதனை நாம் செய்யாவிட்டால் ஈழத்தமிழினத்திற்கு ஒருபோதும் விடிவு ஏற்படாது, கடவுளால் கூட நமது இனத்தைக் காப்பாற்ற முடியாது. ஆகையால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர விடியலை ஏற்படுத்த உலகத்தமிழினம் கடுமையாக உழைக்க வேண்டும். அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் சிங்கள அரசிற்கு எதிராகத் தொடர்ந்து தீர்மானங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கும், இதனால் ஈழத்தமிழருக்கு நன்மைகள் விளைந்து கொண்டே இருக்கும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டே தமிழர்கள் இருந்துவிடக் கூடாது. சர்வதேச மட்டத்தில் உரிமைக்களுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்கள் மேற்கொள்ளுகின்றன முயற்சிகளை விடச் சிங்கள அரசு அவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளே மேலோங்கி நிற்கின்றன.

தமிழர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழரின் உரிமைக்காகப் போராட வேண்டும் ஆனால் ஒன்றிணைவோம் என்ற அழைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழரின் நலனுக்கு எதிராகவும் எதிரிகளிடம் சரணடைவதற்கான செயல்பாடுகளாகவும் இருந்துவிடக்கூடாது.

நாம் உறுதியாக சபதம் எடுக்க வேண்டிய தருணத்திலேயே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதத்தை நன்கு உணர்ந்து கொண்ட ஞானி எமது தேசிய தலைவர், அவர் வழியில் சென்று நமது இனத்தின் விடுதலையைப் பெறுவதற்கு இந்நாளில் உறுதிகொள்வோம். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான் அது தமிழீழம். அதனை தமிழர்கள் வென்றெடுக்காவிட்டால் ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறு மட்டும் தான் இனி இருக்கும்.

தமிழினப் பெண்களை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அவர்களை நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் மார்பில் தனது கால்களை வைத்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சிங்களவனுக்கு தமிழர்கள் சொல்லும் செய்தி என்ன? மறப்போம், மன்னிப்போம் என்பதா? அல்லது குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தூக்குக்கயிறுக்கு அனுப்புவோம் என்பதா? வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்பது நமது மறத்தமிழர் பிரபாகரன் அவர்களின் வாக்கு.

விஸ்வா

Friday, May 17, 2013

பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியம் ஒரு பார்வை..



மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் தொடாத சிகரங்களைத் தொட்டவன் பிரபாகரன்…

இது முள்ளிவாய்க்கால் நினைவுகளின் நான்காவது ஆண்டு பருவம்..

பிரபாகரன் எங்கே.. என்ற கேள்விக்கு அவர் இருக்கிறார்… இல்லை.. என்ற இரண்டு கருத்துக்களையும் ஒரே நேரத்தில் பரப்பியது யார்..

மேலை நாடுகளா.. இல்லை இந்தியாவா.. தமிழர்கள் இதுவரை விடை காணவில்லை.. தேடவும் இல்லை..

ஆனால் ஒரு விளக்கு மெல்ல மெல்ல முள்ளிவாய்க்காலின் புதர்களுக்குள் ஒளியை வீசியபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இப்போது அந்த விளக்கு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் முகத்தில் ஒளியடிப்பது வரை முன்னேறியிருக்கிறது.. அது மேலும் நகரும்..

ஏனென்றால் அந்த விளக்கைக் கையில் வைத்திருப்பவன் வேறு யாருமல்ல..

விடுதலைப் போராட்டத்தின் கடைசி நேரத் தலைவிதியை நிர்ணயித்தவன் அவனே.. அவன் தனது அடுத்தகட்ட நோக்கத்திற்காக விளக்கை கச்சிதமாக நகர்த்திச் செல்கிறான்..

இந்த மர்மக்கதைகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை..

ஆனால் ஒரு கேள்வி…

இவ்வளவுக்குப் பிறகும் சிங்கள இனவாத அரசு மாறியதா.. இல்லை.. தமிழரின் குடியிருப்புக் காணிகளையே கொள்ளையிட அது முன்னேறிக் கொண்டிருக்கிறது..

இந்தியன் மாறியிருக்கிறானா.. இல்லை.. முன்னைய காலத்தைவிட அவன் மேலும் மேலும் தனது இதயத்தை இரும்பாக்கிச் செல்கிறான்..

ஏன்..

தீமையைச் செய்யும்வரைதான் வில்லனுக்கு வாழ்வு.. ஆகவே அவன் அதைத் தொடர்ந்தபடி முன்னேறுகிறான்.

இந்தியா – சிறீலங்கா இரண்டும் ஈழத் தமிழர்கள் மீதான பழிவாங்கலை மேலும் மேலும் இறுக்கிச் செல்வதன் காரணம் இதுதான்… இது மேலும் தொடரும்..

இது நின்றால் இருவரும் இறந்து கிடக்கும் காட்சியை இயல்பாகக் காணலாம்..

இது எதிரியின் கையில் இருக்கும் விளக்கின் கதை.

விளக்கு எதிரியின் கைகளில் மட்டுமா இருக்கிறது.. இல்லை நமது கையிலும் இருக்கிறது..

கடந்த நான்கு ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென பூச்சாண்டி காட்டுவதற்காக வீசப்படும் எதிரியின் விளக்குப் பக்கமாகவே நமது விளக்குகளையும் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நமது அறிவியல் விளக்கு வெளிச்சமின்றிக் கிடக்கிறது.. இனியாவது அதைக் கொஞ்சம் எதிர்ப்பக்கமாக திசை திருப்ப வேண்டும்..

ஏனென்றால் பிரபாகரனின் வெற்றியை அடையாளம் காண்பதற்கு அந்தத் திருப்புகை அவசியம்.

அப்படித் திருப்பினால் பின்வரும் உண்மைகளை நீங்கள் காண்பீர்கள்..

உலகம் போற்றும் மாபெரும் வீரன் மகா அலெக்சாண்டர் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியம் இப்போது எங்கே..?

அவனுக்கு அடுத்து உலகத்தின் பெரிய வீரன் நெப்போலியன் என்கிறார்கள்.. அவன் கைப்பற்றிய நிலங்கள் எல்லாம் எங்கே..?

எதுவுமே இல்லை.. அவர்கள் விட்ட பிழை என்ன.. அவர்கள் பிடித்த நிலங்களில் அவர்களுடைய மக்கள் வாழவில்லை..

பிரபாகரனும் மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வீரன்தான்.. ஆனால் அவர்களால் சாதிக்க முடியாத ஒரு வெற்றியை பிரபாகரன் சாதித்திருக்கிறார்.

பிரபாகரனின் சாம்ராஜ்ஜியம் இன்று உலகம் முழுவதும் வியாபித்து, அழிக்க முடியாத பேரரசாக பொன்னொளி வீசி இலங்குகிறது.

தமிழீழம் என்ற போராட்டத்தை உலகத்திற்குக் காட்டி, மறுபுறம் உலகத்தையே தனது இனத்தின் தாயகமாக்கியிருக்கிறார் பிரபாகரன்.

தனது இனத்திற்காக தனித்தனி நாடுகளை உருவாக்கிய வீரர்களையே இதுவரை எழுதிய வரலாறுகள் பேசுகின்றன.

ஆனால்..

உலகத்தையே தனது இனத்திற்கான நாடாக்கிய வீரன் எங்காவது இருக்கிறானா என்று தேடுவீர்களானால் ஒரேயொருவன் மட்டும் இருப்பான் அவன் வேறு யாருமல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன்தான்..

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று வசதி மிக்க உலக நாடுகள் எல்லாம் இன்று ஈழத் தமிழனின் நாடுகளாகிவிட்டன.

வாழ்க்கைத்தரத்தில் அவன் ஆசியக் கண்டத்தின் அளவுகளை எல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டான்.

கல்வி அறிவில் தொட முடியாத சிகரங்களை எல்லாம் தொட்டுவிட்டான்.

மகா அலெக்சாண்டரும், நெப்போலியனும் கட்டிய சாம்ராஜ்ஜியங்கள் அவர்கள் மக்களால் வாழப்படாத காரணத்தால் அழிந்தே போயின..

ஆனால் பிரபாகரன் கண்ட உலக சாம்ராஜ்ஜியமோ அவன் மக்களால் வாழப்படுவதனால் அழியாத பேரரசாக உலகப்பந்தில் உருவாகிவிட்டது.

” யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்றான் கணியன் பூங்குன்றன்.. அதுவே எமது வாழ்க்கையின் இறுதி இலக்கு என்றான் ஆதித் தமிழன்..

இன்று உலகின் பணக்கார நாடுகளில் உள்ள எல்லா ஊர்களிலும் ஈழத் தமிழன் வாழ்கிறான்..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கை அவன் எட்டியும் தொட்டுவிட்டான்..

இந்த உன்னதத்திற்குள் தன் இனத்தை உந்தி நகர்த்தியவன் யார்..?

அவன்தான் : உலகத்தின் ஈடு இணையில்லாத ஒரேயொரு வீரன் தங்கத் தமிழன் தம்பி பிரபாகரன்..

தமிழன் உள்ள மட்டும் அவனுக்கில்லை மரணம்.. ஏனென்றால்

தமிழன்தான் பிரபாகரன்…!

பிரபாகரன்தான் தமிழன்..!

தமிழா கோழை போல அழாதே.. மகிழ்ச்சி கொள்..! எழுச்சி கொள்..! உனக்காக உலக சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறான் உன் தலைவன் பிரபாகரன்..

விளக்கை மாற்றி வீசு.. உன் பெருமையை உணர்ந்து கொள்.. மற்றவை பின்னர்..


கி.செ.துரை

தலைவர் பிரபாகரன் தொடர் - 4


வல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக்கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக்கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்துவிட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டுவிட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்துவிட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்டபின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக்கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக்கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக்கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.

எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

கஷ்டம்தான் இல்லை? யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். இல்லையே என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகிவிட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். அப்பா, நீங்களா? இங்கேயா?

போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல; அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..


தொடரும்

தலைவர் பிரபாகரன் தொடர் - 3

Thursday, May 16, 2013

தேசியத் தலைவரைப் புரிந்து கொள்ளுதல்



தமிழீழப் போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார்.

அந்த ஒற்றைமனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை தூக்கிநிறுத்தி அதனை தாங்கி நின்ற தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீரவிளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமை மறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும், சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது.

இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். இதற்கான ஆற்றலையும், அறிவையும் அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்.? அனுபங்கள் என்ற அற்புதமான பாடத்திலிருந்தே நிறையப்பெற்றுக் கொண்டார். காலகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான ஒரே தலைவர் என்ற முறையில் அந்தப் போராட்டம் சந்தித்த அனைத்து தேக்கங்களையும், சவால்களையும், வளைவுகளையும் அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் விடுதலைக்கு சாதகமானதாக்கி முன்னெடுத்தார்.

ஒரு ஓப்புவமை இல்லாத தலைவர் என்ற முறையில் அவர் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அனுபவங்களை நீதியை, ஒழுக்கத்தை, உறுதியை என்று அனைத்தையும் தனது தோழர்களுக்கு தளபதிகளுக்கு கற்பித்தார். தான் கற்றுக்கொண்டதை மற்றவர்க்கு தனது நடைமுறைமூலமும், செயலின் மூலமும் சொல்லிக் கொடுத்தவர் தேசியத்தலைவர். தேசியத்தலைவர் அவர் பார்க்கும், கேட்கும், அறியும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொண்டார். பெற்றுக் கொண்டார்.


தேசியத்தலைவர் கற்றுக் கொண்ட முதலாவது பள்ளிக்கூடமாகவும், பல்கலைக் கழகமாகவும் அவரின் தந்தையாரே இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள ராணுவச் சிறை ஒன்றில் மரணமாகிய அவரின் வாழ்வும், வழமையும், பழக்க வழக்கங்களும், நேர்மையும், ஓர்மமும் தலைவரின் வாழ்வில் ஏற்பத்திய தாக்கங்கள் அற்புதமானவை. ஆழமானவை. அமரர் வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் மிகவும் எளிமையானவராகவும், அதே நேரம் உறுதிமிக்கவராகவும் இருந்தவர். கடல்களை பிளந்து தேச எல்லை கடந்து சென்று தொழில் செய்யும் கப்பல்களை சொந்தமாக கொண்டதும், செல்வச் செழிப்புமிக்கதுமான ஒரு குடும்பத்தின் முத்த வாரிசான வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் தனது குடும்ப சிறப்புகள் எதுவும் தனது நிதி இருப்புகள், நில இருப்புகள் எவற்றின் தாக்கமும் இன்றி மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்தவர். மிகவும் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தின் தலைமகனான வேலுப்பிள்ளை அப்பா அவை அனைத்தையும் உதறியவராக உலாவந்தவர்.

மிகவும் மெதுவாக நடக்கும் பழக்கமுள்ள அவர் மிகவும் உன்னிப்பாக தனது பார்பையை பதித்தபடியே நடைபோடும் அவரின் அந்தப் பழக்கமே தலைவரின் இயல்பான எந்தநேரமும் பார்வையை கூர்மையாக வைத்திருப்பதாக வந்திருக்கலாம். தேசியத்தலைவரின் புத்தகங்கள் மீதான தேடல்கூட அவரின் தந்தையாரிடம் இருந்தே வந்ததுதான். தேசியத்தலைவர் தனது தந்தையை ஆழமாக புரிந்துகொண்டவர். தனது தந்தையின் ஆளுமைகளை அந்தப் புரிந்து கொள்தலுக்கு ஊடாகவே தலைவர் உள்வாங்கினார்.

சின்னஞ்சிறு மழலை தனது தந்தையையைப் பார்த்தே நடக்கப்பயில்வதைப் போன்றே தலைவரும் தனது தகப்பனாரின் இயல்புகளையே தனதாக்கினார். அவருடைய எளிமை அவருடைய நேர்மை அவருடைய உறுதி அவருடைய பார்வை என்றே எல்லாமுமே. தேசிய தலைவருக்கு அவர் வளர்ந்த பின்னர் நிறைய நண்பர்களும் தோழர்களும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலும் தேசியத் தலைவருக்கு கிடைத்த முதலாவது நண்பராக அவரின் தந்தையாரே இருந்திருக்கிறார். இதனை நிறைய இடங்களில் தலைவர் சொல்லியுள்ளார். ஒரு நண்பனுக்கு அறிவுறுத்துவது போலவே வேலுப்பிள்ளை அப்பா எல்லா விடயங்களையும் தோழமையுடன் தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தார். தனக்குள்ளே யாகம் வளர்க்கும் அதி உயர் ஞானத்தைக்கூட தந்தையிடம் இருந்தே தனக்குள் பெற்றார் தலைவர்.

இதை எல்லாவற்றையும் விட வேலுப்பிள்ளை அப்பாவிடம் இருந்த பொங்கிவரும் சத்திய ஆவேசம்தான் தலைவர் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கற்றுக்கொண்ட அதிஉச்ச பாடமாகும். அந்த சத்திய ஆவேசம் தான் தேசியவிடுதலைப் போராட்டமாக பிறப்பபெடுத்தது. தன்னுடைய ஒரு பிரதியாக ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தலைவனை உருவாக்கிய அந்த தந்தை என்றும் நினைவுகூரத்தக்க ஒரு பரிமாணம். இப்படியாக தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட இயல்புகளையும், தானே கற்றுக்கொண்ட அனுபவங்களையும் தலைவர் தனது தோழர்களுக்கு கற்பித்தார்.

அந்தவகையில் தலைவர் எப்படி தனது தந்தையை அணு அணுவாக தனக்குள் உள்வாங்கினாரோ அப்படியே கிட்டு என்ற உன்னத தளபதியும் தவைரை அணுஅணுவாக தனக்குள் உள்வாங்கி தனது ஆத்மத்தை வளர்த்தவர். போர்க்குணத்தை கூர்தீட்டியவன். ஜனவரி 16ம் திகதியுடன் அவன் வீரமரணமடைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தேசியதலைவரின் ஆளுமைகளை முழுமையாக தரிசிக்கவிரும்பும் எந்த ஒரு மனிதனும் தேசியத்தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையில் எந்தநேரமும் ஓடிக்கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத உணர்வலைகள் பற்றியும் புரிதல்பற்றியும் முதலில் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.

தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையிலான உறவு என்பது தலைவர்-போராளி, தலைவர்-தளபதி என்ற பொறுப்புநிலைகளை எல்லாம் கடந்த ஒரு உன்னதநிலையிலானது. தேசியத் தலைவர் சொல்வது போல ஓரே இலட்சியத்தை ஆழமாக வரித்துக்கொண்ட இருவருக்கு இடையிலான ஆன்ம உறவு அது. ஒரு கோபக்கார இளைஞனாக போராட்த்துக்கு வந்த குமார் என்ற அந்த பொடியனை செதுக்கி செதுக்கி எல்லா ஆளுமைகளும் நிறைந்த கிட்டு என்ற அதிமானுடனாக மாற்றியவர் தலைவர்தான்.

தான் தனது தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைதியான உறுதி, உறுதி நிறைந்த அமைதி என்பனவற்றை கிட்டுவுக்கும் சொல்லிச்சொல்லி அவனை நிதானமான உறுதியான வீரனாக்கினார். முகாம்களிலிருந்து ராணுவம் வெளிவந்துவிட்டது என்ற போதிலும், கடற்கரையால் நேவி படகின் மூலம் கடற்படை இறங்குகிறான் என்ற நிலையிலும், ஏன் சுதுமலையில் தனதுமுகாம் கெலிகப்டரில் வந்திறங்கிய சிங்களப்படையால் சுற்றி வளைக்கப்பட்டபோதிலும் கிட்டு நிதானமாக ஆனால் மிக வீரமுடன் உறுதியாக நின்ற பொழுதுகளும்… இறுதியிலும் இறுதியாக அந்த கடைசி நாளான ஜனவரி 16 அன்று வங்கக்கடலில் இந்தியக்கடற்படை சுற்றி நின்று சரணடைய சொல்லி வற்புறுத்தியபொழுதிலும் அதே நிதானத்துடன் தனது காலை இழுத்து இழுத்து நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து படகுமுழுதும் சக்கை வைத்த உறுதியும் மரணித்த நிமிடம்வரை காட்டிய அமைதியும் தலைவர் சொல்லித் தந்தவைதான்.


கிட்டுவும் தேசியத்தலைவரைப் போன்றே தேடல் மிகுந்த ஒரு மனிதன். புத்தகம் என்றாலும் சரி, சகமனிதனின் அனுபவங்கள் என்றாலும் சரி, திரைப்படம் என்றாலும் சரி, தலைவர் எப்படி அவற்றை உள்வாங்குவாரோ அப்படியே கிட்டுவுக்கும் சாத்தியமானது. வேட்டைத் துப்பாக்கிக்கு மின்னி வைப்பதிலிருந்து தான்பிரின் என்ற அயர்லாந்து போராளியின் வரலாறு வரைக்கும், சக்கை அடையும் முறையிலிருந்து சனங்களுடன் வேலை செய்யும் முறை வரைக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து கிட்டுவுக்கு கற்பித்தவர் அந்த தலைவர்தான்.

தனது படிப்பினைகளை தனது வரலாற்றிலிருந்தே பெற்றுக்கொணட தலைவர் தன்னைப் போன்றே ஓர்மமும் ஒழுக்கமும் வீரமும் வழிகாட்டும் திறனும் தனது தளபதிகளுக்கும் அவர்களினூடாக தனது போராளிகளுக்கும் பரவச்செய்தார். இதுவே ஈழத்தமிழினத்தின் எழுச்சியானது. இந்த எழுச்சியானது ஆளுமைகளினதும் உணர்வுகளினதும் நீட்சிதான். இந்த உணர்வுகளும் ஆளுமைகளும் இருக்கும்வரை எமது விடுதலைப் போராட்டத்தை எவராலும் பிடுங்கி எறிந்துவிட முடியாது. ஏனென்றால் இது தலைமுறை தலைமுறையாக கண்ணுக்குத் தெரியாத அலையாக எமது மக்களுக்குள் பிறப்பெடுத்து வருகிறது நாமும் கற்றுக் கொள்வோம். வாழ்வின் இறுதி நாள்வரைக்கும் தேடுவோம். இன்னும் நிறைய கற்றுக்கொள்வோம் எங்களின் தேசியதலைவரிலிருந்து…

நன்றி: – ச.ச.முத்து


மொழி காத்த தலைவன்


மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது. ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும் கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள். இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவரின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை 7 கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழக தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது. இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காத்த அந்தத் தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலி நிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

கண்மணி

தேசியத் தலைவரின் அரசிலே…


நாம் சிந்திக்கும் காலங்களிலிருந்து செயல்படும் காலத்திற்கு பெயர்ந்திருக்கிறோம். பழைய நிகழ்வுகளின் பட்டறிவை தேக்கி வைத்து அதை நிகழ்கால போருக்கு பயன்படுத்தப்போகிறோம். நமக்கு பட்டறிவைப் போன்று ஒரு ஆசிரியர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. இப்போதும் கூட நாம் சிதறி இருக்கின்றோம். ஆனால் சிந்திப்பவர்களாக மாறி இருக்கிறோம்.

உலகெங்கும் நாம் சிறுசிறு கூட்டங்களாக பிரிந்து கிடந்தாலும் நம்மை இணைக்கும் ஒரே ஆற்றல் மொழி. நம்மை உறவென்று சொல்லிக் கொள்ள மொழியே பாலமாக இருக்கிறது. நமக்கான சிந்தனைகள், செயல்கள், பணித்தளங்கள், பாடநூல்கள், பகுத்தறிவு சிந்தனைகள், பல்வேறு நிலையில் பிளவுப்பட்டு இருந்தாலும் நாம் மொழியால் ஒன்றுபட்டிருக்கின்றோம். மொழியின் வலிமை மகத்தானது, மாறாதது. ஆகவே தான் நாம் மொழியை நேசிக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மொழியை பேசச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம்.

நாம் வேறு கலாச்சார ஆடை அணிந்து கொண்டு வேறு இனமாக நம்மை காட்டிக் கொள்ளலாம். ஆனால் நாம் பேசும் மொழி நம்மை யாரென்று அடையாளப்படுத்தும். ஒரு மொழியை நாம் காக்க வேண்டுமே அதற்கு என்ன செய்யலாம்? என்று இதுவரை இந்த உலக அரங்கில் தமிழ், தமிழ் தேசியம், தமிழ் மான உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழ் கலாச்சார காப்பாளர்கள் என பல்வேறு அடையாளங்களோடு புறப்பட்டவர்களெல்லாம் ஒரு செடி வளர மண் தேவை என்பதை உணரத் தவறினார்கள்.

ஒரு செடி வளர மண் தேவையைப் போல ஒரு மொழி வளர ஒரு நாடு தேவை. நாட்டை தவிர்த்து நாம் மொழியை காப்போம், அந்த மொழிக்கு செந்தமிழ் என பெயரிடுவோம், கன்னித் தமிழ் என வாழ்த்துவோம், முத்தமிழ் என முழக்கமிடுவோம் என்றெல்லாம் கூறிகொண்டிருந்தோம் என்றால் நம் மொழி நம்மோடு மண்ணில் புதைக்கப்பட்டு சமாதியாக்கப்பட்டுவிடும். ஆனால் மொழி வளர காலமெல்லாம் அம்மொழி செழித்திருக்க பன்னெடுங்காலமாய் நாம் காத்த மொழி நம் மூதாதையர் எல்லாம் பேசிய மொழி, அவர்கள் அந்த மொழியிலே தான் நம்மை கொஞ்சினார்கள். நமக்கான செய்யுள்களை வடித்து வைத்தார்கள். இலக்கியங்களை புனைந்து தந்தார்கள். புராணங்களை எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட நம் மொழி இன்னும் நம் சந்ததியாராலும் காக்கப்பட வேண்டும் என்றால், பேசப்பட வேண்டும் என்றால் நமக்கு நமது மொழி அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மொழி அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த மொழி பேசும் இனத்திற்கான ஒரு நாடு இன்றியமையாதது மட்டுமல்ல, அது கட்டாயமானது. இதை நம் முன்னோர்களை விட நமது தேசிய தலைவரே மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். ஆகவேதான் தமிழீழ தாகம் என்ற ஒரு சொல்லை அவர் பயன்படுத்தினார். இந்த தமிழீழ தாகம் ஒவ்வொரு தமிழனுக்கும் இயற்கையாக வரவேண்டும். இது மென்பானங்கள் அருந்தி தனித்துக் கொள்வதல்ல. களிம்புகளால் சரிசெய்து கொள்வதல்ல. இது உயிருணர்ச்சி. இதன் சொல், செயல் அனைத்தும் நமது உயிருக்கு நிகரானது. உயிர் போனால் திரும்ப வராது. மொழி போனாலும் அதுதான் நடக்கும்.

ஆகவே நம் உயிர் கொடுத்தாவது மொழி காக்க வேண்டிய கடமை நமக்குள் ஆயிரம் ஆயிரம் விருட்சமாய், வீரமாய் வளர்ந்தெழ வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்க நாம் களத்திற்கு வருவதற்கு முன்னால் குடும்பங்களில் பழக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு உண்டியல் வைக்கலாம். யாரெல்லாம் பிற மொழி கலக்காமல் தமிழ் பேசுகிறார்களோ அவர்களை தினமும் பாராட்டலாம். பிறமொழி கலந்து தமிழ் பேசுபவர்களை அவர்கள் வீட்டில் உள்ள உண்டியலில் தண்டம் கட்டச் சொல்லலாம். பின்னர் அப்பணத்தை சேர்த்தெடுத்து ஒரு நல்ல தமிழ் நூலை அந்த வீட்டிற்காக வாங்கலாம். இது மிக எளிதாக தோன்றினாலும்கூட இதனால் முதலில் நம் குடும்பத்தில் மொழி உணர்ச்சி ஏற்பட துணைபுரியும். எந்த ஒரு செயலும் குடும்பங்களிலிருந்துதான் சமூகத்திற்கு மாறுகிறது. ஆகவே நம் குடும்பங்களுக்குள் நமக்கான மொழி அடையாளங்கள் குறித்து விவாதித்து விளக்கம் தரலாம்.

இதன்மூலம் நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழர்கள் என்கிற உணர்ச்சியை ஊட்டி வளர்க்கலாம். இந்த உணர்ச்சி நம் பிள்ளைகளிலிருந்து அவர்களின் பிள்ளைகளுக்கு நகர்ந்து செல்லும். ஆகவே இது ஒரு செயலாக செய்ய நாம் முனைப்பு காட்ட வேண்டும். உலகெங்கும் உள்ள நமது உறவுகள் மற்ற சிறு சிறு இனங்களை காட்டிலும் பெரியது. ஆனால் சிறு சிறு இனங்கள் கூட தமக்கான ஒரு நாட்டை கட்டி, தமக்கான ஒரு அரசை அமைத்து, விடுதலையோடு எவ்வித அடக்குமுறையோ அச்சுறுத்தலோ இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிகப்பெரிய தொகை கொண்ட தமிழினமோ, தமக்கான ஒரு நாடு இன்றி தவிக்கின்றது.

நமது கவலையெல்லாம் என்னதென்றால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது இனத்தை காக்க, தாய் தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்கின்ற சொந்த மண்ணில் நம் இனத்திற்கு எதிராகவே நம் இனப்பகைவர்கள் இருக்கிறார்களே அதுதான். இதை மாற்றி அமைக்க நாம் இந்திய தேசியத்தை உடைத்தெறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்திய தேசியத்தை மறுக்க வேண்டிய ஒரு அவசியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த மொழி காக்கும் சமருக்காகத்தான் நாம் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீரவித்துக்களை தமிழீழ மண்ணில் புதைத்திருக்கிறோம்.

நாம் நமது இனத்தை காக்க வேண்டும் என்பதற்காகத்தான் முப்பது ஆண்டு காலமாக கருவி ஏந்தி களத்திலே இருந்திருக்கின்றோம். நாம் நம் உயரைக் குறித்து எந்த நிலையிலும் சிந்தித்தது கிடையாது. எமது நாட்டிற்கு, எமது இனத்திற்கு, எமது உயிரிழப்பால் ஒருத்துளி நன்மை கிடைக்கும் என்றால் நாம் ஓராயிரம் முறை உயிரிழக்க தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இதுதான் தமிழீழத்திலே தேசிய தலைவரின் தலைமையில் நிகழ்ந்த போரின் ஆன்ம நிகழ்வு. இதுதான் நமது தேசிய தலைவரின் அடிமனதில் உறைந்து கிடந்த இன சிந்தனை. அவர் அந்த மண்ணை காத்து அரசாள விரும்பவில்லை. அந்த மண்ணை காப்பதின் மூலம் நம் மொழியை காக்க விரும்பினார், நம் இனத்தை காக்க விரும்பினார்.

ஆனால் இன துரோகிகள் தலைவரை மட்டுமல்ல, நம் இனத்தையும் காட்டிக் கொடுத்தார்கள். எப்போதெல்லாம் இயேசுவைக் குறித்துப் பேசுகிறோமோ அப்போதெல்லாம் யூதாசைக் குறித்தும் பேசுவோம். எப்போதெல்லாம் கட்டபொம்மனைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் எட்டப்பனைக் குறித்தும் பேசுகிறோம். நாம் எப்போதெல்லாம் நம் தேசியத் தலைவரின் ஆற்றல்மிகு செயல்பாடுகளைக் குறித்து பேசுகிறோமோ அப்போதெல்லாம் இந்த இன துரோகிகளைக் குறித்து பேசிக் கொண்டே இருப்போம். நாம் பேசுவோம், காலாகாலத்திற்கு வரலாறு அதை பேசிக் கொண்டே இருக்கும்.

நிகழ்காலத்தில் கேவலம், பதவிக்காகவும், சுகத்திற்காகவும் இனத்தை அழிவுக்குள்ளாக்கிய இந்த அயோக்கியர்கள் நாளை வரலாற்றில் வாசிக்கப்படும் போது அவமானப்பட்டு அவர்களின் சந்ததி தலைகுனியும். அதைக்குறித்த கவலை இவர்களுக்கு இருக்கப்போவது கிடையாது. காரணம் இவர்களுக்கு சுகமும் மகிழ்ச்சியும் பணமும்தான் தேவை. இந்த மானங்கெட்டவர்கள் இனமானத்தை மட்டுமா கெடுத்தார்கள். தன்மானத்தையும் இழந்து தரம்கெட்டு போனார்கள்.

இதை எப்படி சமன் செய்வது? எப்படி முறியடிப்பது? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னதென்றால் நமது தேசிய தலைவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதாகும். அவரின் உயரிய ஆற்றல் வாய்ந்த தன்மான, இனமான உணர்வுகளோடு நாமும் வளர்கிறோம். நமது உறவுகளும் வளர்கின்றது. சில துரோகிகள் தோன்றுகிறார்கள். இது வரலாற்றெங்கும் காணப்படுகின்ற நிகழ்வுகள் தான். ஆனால் வெற்றியை மட்டும் வரலாற்று நாயகர்கள்தான் தக்கவைத்துக் கொள்வார்கள். அந்த வரிசையிலே நமது தேசியத் தலைவர் ஒரு வரலாற்று நாயகன்.

தமிழ் வாழும் மட்டும் அந்த தலைவரின் பெயர், அவரின் உயரிய சிந்தனை, அவருக்கான உள் கட்டுமான அமைப்பு, அவரால் விளைந்த சீரிய தமிழ் சிந்தனை, அவரிடமிருந்து பிறந்த வீரம், அவரால் அளிக்கப்பட்ட தமிழ் எழுச்சி, அவரோடு வாழும் தமிழினம் என்றும் அவரை மறுதலிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ முயற்சிக்காது. காரணம் தமிழனுக்கான அடையாளத்தை அவர் பெற்றுத்தர களத்திற்கு வந்தார். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை காடுகளிலேயே கழித்தார். தமது வாழ்க்கையின் பெரும் நாட்களை ஆயுதங்களிலே செலவழித்தார்.

அவருக்குள் எப்போதும் ஒரே ஒரு தத்துவம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அது விடுதலை தத்துவம். அந்த விடுதலை தத்துவம் தான் நம்மை விடுதலை பாதைக்கு அழைத்து வந்தது. இதுவரை நமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்கின்ற சிந்தனை எவருக்கும் எழாதபோது அவருக்கு மட்டும் எழுந்ததே! எப்படி? அது அவர் இந்த இனத்தின் மேல் கொண்ட பற்று. இந்த இனத்தின்மேல் கொண்ட பாசம். இந்த இனத்தின்மேல் அவர் வைத்த அன்பு. அதைவிட மேலாக இந்த இனத்தை காக்க வேண்டும் என்கின்ற ஆவல். ஆகவேதான் இதுவரை எந்த தலைவரும் செய்யாத பெரும் செயலை அவர் செய்துகாட்டினார். நமக்கான ஒரு நாட்டை கட்டியமைத்தார். போரிலே மண்ணிழப்பதும், மீண்டும் பெற்றுக் கொள்வதும் மிகச் சாதாரண நிகழ்வு. நமது மண் நமக்கானது.

மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் வீழ்த்தப்பட்டு பின்னர் சொந்த மக்கள் அதை வெற்றிக் கொண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பதிவுகளாய் இருக்கிறது. ஆகவே இப்பொழுது சிங்கள பேரினவாத பாசிசம் தமது கொடும் கரங்களால் கருவிகள் தரித்து ஒரு இனத்தை அழித்து போட்டுள்ளது. இப்போதல்ல, எப்போதுமே தமிழினத்தை வெல்ல எந்த ஒரு அடக்குமுறையாளனாலும் முடியாது. இது ஒரு சாதாரண சொல் அல்ல. தமிழினம் என்பது காற்றோடு கலந்த உயிராதாரம். ஆகவே இதை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகெங்கும் வாழும் தமிழுறவுகள் தயார் நிலையில் இயங்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். தொடர்ந்து செயல்படுவோம், தமிழீழம் மலரும். தமிழ் தேசியம் வெல்லும்.

தமிழ் தேசியத்தின் தலைவரோடு நாம் அரசமைப்போம். அந்த அரசிலே அடக்குமுறை இருக்காது. அதிலே பாசம் இருக்கும், பரிவு இருக்கும், அங்கே சாதியம் இருக்காது, பெண்ணடிமை இருக்காது, ஆண்டான் அடிமை இருக்காது, நாம் தமிழர் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அங்கே ஓங்கி உயர்ந்து காணப்படும். நம்முடைய வாழ்வின் உயர்வு இருக்கும். அது நாம் காணாத ஒரு சொர்க்கத்தை கண்டதைப்போன்று நிகழ்வாக இருக்கும். அந்த காலம் இதோ மிக மிக அருகில் இருக்கிறது. அது நிச்சயம் அடைந்தே தீருவோம். நம்முடைய செயலால் அதை விரைவுப் படுத்துவோம். விரைவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நாம் செயலாற்றுவோம்.

கண்மணி.

தேசியத் தலைவரின் ஆன்ம பலம்


இலங்கையின் போக்கு உலகப் பார்வையாளர்களை தமது பக்கம் ஈர்த்துள்ளது. இலங்கையின் விடுதலை தமிழர்களின் வாழ்வியல் தன்மைகளைத் தடமாற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கையின் இறையாண்மை, தமிழர்களை அடிமையாக்கத் துணை புரிந்தது. இலங்கையின் விடுதலைக்குப்பிறகு தான் தமிழினத்தின் அடிமை வாழ்வு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்மை வாய்ந்த ஒரு இனம் தம்முடைய வாழ்வுரிமைக்காக அமைத்தக் களங்கள், அழித்த உயிர்கள், இழந்த செல்வங்கள், அளவிடமுடியாதவை. ஆனாலும் தமக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள தாம் எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருந்துகொண்டு வருகிறோம்.

வரலாறு என்பது ஆற்றைப் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். தமிழீழ மக்களின் போராட்ட வரலாறும் அவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஓடாத ஆறு தேக்க நிலையை அடைந்து குட்டையாகிவிடும். ஆகவே வரலாறு என்பது ஆற்றைப் போல இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். எந்த ஒரு இயக்கமும் தமது தேவையை கருத்தில் கொண்டே அமைகிறது. தேவைகளே படைப்புகளின் தாய் என்கிற கூற்றின்படி விடுதலை என்னும் தேவையை போராட்டம் என்கிற வடிவங்களை படைத்தளிக்கிறது. தமிழீழ போராட்ட வரலாறும் தேவையை முன்னிருத்தியே தொடங்கப்பட்டதால் அது தமக்கான தேவையை அடையும் வரை தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாது. நிறுத்திக் கொள்ளாது என்று சொல்வதைவிட நிறுத்திக் கொள்ள முடியாது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் போராட்டமென்பது சாதனைகளின் தொகுப்பல்ல. சாதித்தப் பின்னர் ஓய்வெடுக்க முடியாது. தமிழீழ மீட்பு என்பதும் மீட்புக்குப்பின் ஓய்வெடுக்கக் கூடிய இயக்கமல்ல. மாறாக தமது மக்களின் விடுதலையை வென்றெடுத்தப் பின் தாம் இழந்த இன மான அடையாளத்தை மீண்டுமாய் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும். தொன்மை வாய்ந்த தமது மொழி அடையாளங்களை, இலக்கியப் பதிவுகளை பண்பாட்டுத் தன்மைகளை, கலாச்சார உருவகங்களை, அழுத்தமாய் சந்தேகத்திற்கு இடமின்றி வழிவழியாய் காக்கப்படுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், அரிய அறிவியல் படைப்புகளாலும், பன்னாட்டு மயத் தன்மைகளாலும், உலக முதலாளித்துவ சுரண்டல்களாலும் தேசிய இனங்களின் தன்மைகள், உலகெங்கும் சிதைவடைந்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழ் தேசியம் உயர்ந்தோங்கி நிற்பதற்கும் தமிழ் தேசிய தலைவரே காரணம். கலை இலக்கிய பண்பாட்டுத் தளங்கள் மட்டுமின்றி அவர்களுடைய தனிமனித வாழ்வும், பொருளாதார தேடல்களும், அவர்களுக்கானத் தேவைகளும் நிறைவாக்கப்பட வேண்டும். இதுதான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அடையாளமாகத் திகழும். இந்த அடிப்படையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் நமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தார்.

தமிழீழ குடியரசு அமையும்போது தமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக பாசன வழிமுறைகளை விவசாய நிலங்களின் பாதுகாப்பை உழவுத் தொழிலின் அடிப்படைக் கட்டமைப்புகளை மறுசீரமைப்புச் செய்ய இத்துறை குறித்த பல்வேறு அறிஞர்களை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். இயக்க உறுப்பினர்களை உலகெங்கும் பரவலாக அனுப்பி அவர்களை விண்வெளி ஆய்வு, ஆழ்கடல் ஆராய்ச்சி, அதி நவீன தொழில் நுட்பங்களை அறிந்துவர கட்டளையிட்டிருக்கிறார். சட்டம், அறிவியல், புவியியல், வேதியியல், இயற்பியல், கல்வித் தொடர்பான பாடத்திட்டங்களை முழுக்க முழுக்க தமிழிலேயே கற்றுத்தரத் திட்டம் வகுத்து அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை சிந்தித்து பாடதிட்டங்களை உருவாக்கியிருந்தார். போராளிகளை மட்டுமல்ல, நாட்டின்மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவனும், போராளியாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக தமிழீழ மக்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தார்.

இந்த தொலைநோக்கு ஏதோ இனம் புரியாத பரவசத்தால் தோன்றியது அல்ல. இது மக்கள் மேல் கொண்ட அக்கறையால் பன்னெடுங்காலத்திற்கு தமிழீழம் என்கிற மண், அந்த மண்ணின் பாரம்பரியம், அந்த மண்ணிற்கே உரிய ஒழுக்கம் ஆகியவை எக்காலத்திலும் அழியாதவாறு ஒரு தெளிவான சித்தாந்தத்தை நமது தேசிய தலைவர் வகுத்து வைத்திருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தின் அரசு இருக்கும்போது இந்தியாவில் இருந்து சென்ற ஒரு கணித மேதை அங்கு பள்ளிகளை பார்வையிடச் சென்றார். அங்கு நான்காம் வகுப்பு அறைக்குச் சென்று அங்குள்ள மாணாக்கரை கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு மாணவனை எழுப்பி ஒரு ஆப்பிள் நான்கு ரூப்பிள் வீதம் என 5 ஆப்பிள்களை வாங்கி, அதை ஆறு ரூப்பிள்கள் வீதம் விற்பனை செய்தால் நமக்கு எத்தனை ரூப்பிள் லாபம் கிடைக்கும் என கேட்டாராம்.

அதற்கு அந்த மாணவன் குறைந்த பட்சம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 500 ரூப்பிள் தண்டமும் செலுத்த நேரிடலாம் என கூறினானாம். கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சி. ஏன் என்று அந்த மாணவனைக் கேட்டபோது, அந்த மாணவன் கூறினான். பொருளிற்கான விலை நிர்ணயம் செய்ய நமக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த ஒரு பொருளுக்கும் விலையை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. ஆகவே இதுதான் கிடைக்கும் என்றான்.

ஆக சிறு குழந்தைகளுக்குக் கூட ஒரு பொருளின் விலையை மட்டுமல்ல, அந்த நாட்டின் தன்மைகளை கற்றுத் தந்து தமது நாட்டின் மேல் மரியாதையையும், நேர்மை மீது நம்பிக்கையையும், உருவாக்கி வைத்திருந்த மாமனிதன் லெனினுக்குப் பிறகு தமது நாட்டில் இந்த நேர்மையும், உண்மையும் செழித்தோங்க வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவராக நமது தேசிய தலைவர் திகழ்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். இதுதான் நம்மை தமிழீழ மண்ணின் மீது பற்றுக் கொண்டவர்களாக உருமாற்றும்.

அதைப்போன்று வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தோழர் ஹோசிமின்னுக்கு எதிராக சவால் விடுத்தது. எங்களிடம் இத்தனை அணுகுண்டுகள் இருக்கின்றன. இனி நடக்கும் போரில் நாங்கள் அணுகுண்டுகள் வீசுவோமென ஹோசிமின் பதிலளித்தார். எங்கள் மண்ணில் வாழும் ஒவ்வொரு வியட்நாமியனும் அணுகுண்டுகள் தான் என்பதை மறந்து விடாதீர்கள் என. இதைத்தான் தேசியத்தலைவரும் சிங்கள பேரினவாதத்திற்கெதிராக அறைகூவல் விடுத்தார்.

நாங்கள் கருவிகளின் பலத்தால் களத்தில் இருக்கவில்லை. மாறாக எங்கள் ஆன்ம பலத்தால் களமாடிக் கொண்டிருக்கிறோம் என. ஆக விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று நிகழ்வுகளோடு தமிழீழ மீட்புப் போராட்டமும் இணைந்து போனதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசியத் தலைவரின் ஆன்ம பலம் தான் சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து முறியடித்தது. எந்த நிலையிலும் தம்மின மக்களுக்காகத் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாத அச்சமற்ற மனநிலைதான் நமது தேசியத் தலைவரோடு வெற்றியாய் தொடர்ந்து நடந்தது. நமது தேசியத்தலைவரின் சிந்தனைப் போக்கே இப்போது வெற்றி வாகை சூடியிருக்கிறது. சரத்பொன்சேகவின் துணைவியார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இலங்கை மக்கள் அனைவரும் ராஜபட்சேவின் அடக்குமுறைக்கெதிராக போராட முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் போட்ட ராஜபக்சேவின் அடக்குமுறைகளை, அநியாயங்களை, குருதி வெறியை சிதறடித்து அந்த பேரினவாதியின் குடைசாய்க்க எலி, புலிகள் முன் கருவியேந்த வேண்டியதில்லை. நமது தேசிய தலைவரின் ஆன்ம பலமே அந்தக் கொடுங்கோலனை வீழ்த்த போதுமானது.

நமது தேசியத்தலைவரும், தமிழீழ மக்களும், இணைந்து குரலெழுப்பி அறிவித்த போது, அறியாமல் வாழ்ந்த உலகச் சமுதாயம், இப்போது மஹிந்தவின் கொடூர குணத்தை அறிந்து வருகிறது. இப்போது உலகிற்கு தெரியும், நமது தேசியத் தலைவரின் ஆன்ம பலம்.

கண்மணி.

தமிழீழத்தை படைத்தளிப்போம்



2009 ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.

இப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோடு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது.

நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும். அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே சர்வதேச அரசியல் களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிய எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.

கொன்றுவிட்டார்கள், கொன்றுவிட்டார்கள், லெனினை கொன்றுவிட்டார்கள் என்ற கூக்குரல் ஸ்தெப்பான் கில் காதில் விழுந்தபோது தடுமாறி விட்டார். அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த தோழர் லெனினின் மகிழ்வுந்து ஓட்டுநரான அவருக்கு இந்த ஓசை நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலை உயர்த்தி பார்த்தபோது, இளம் பெண் ஒருத்தி தோழர் லெனினுக்கு நேராக தமது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தாள். தாம் வாசித்துக் கொண்டிருந்த இதழை வீசி எறிந்துவிட்டு, அவளை நோக்கி ஓடுவதற்குள்ளாக அவள் மூன்று ரவுண்டுகள் லெனினை நோக்கி சுட்டிருந்தாள். பின், தமது துப்பாக்கியை அவரின் காலுக்கு அடியிலே வீசி எறிந்துவிட்டு ஓடினாள்.

அவளை பிடிக்க ஓடிய கில், தோழர் லெனின் அடிப்பட்டு கிடப்பதை நினைவு கூர்ந்து பின்நோக்கி திரும்ப வந்தார். அங்கே குழுமியிருந்த தொழிலாளர்கள் லெனினை தாங்கிப் பிடித்து காருக்கருகே கொண்டு வந்தார்கள். அந்த கார் உலக வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமான அழுக்குச் சட்டை போட்டவன் ஆள முடியுமா? என்கின்ற முதலாளித்துவ நையாண்டிக்கு முடிவுக் கட்டிய உலக வரலாற்றிலே தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டியமைத்த விலைமதிப்பற்ற ஒரு உயிரை சுமந்து கொண்டு அதைக் காப்பாற்றும் முகமாக பறந்தது. ரஷ்ய புரட்சியின் தலைவன் தோழர் லெனின் புரட்சி நடைபெற்று ஓராண்டு முடிவதற்குள்ளாக கொல்ல முயற்சி செய்த அந்த பெண்ணின் பெயர் ஃபான்னி கப்ளான் என்று தெரிய வந்தது.

சோசிலிட் ரெவல்யூசனரி என்னும் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அவள், 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று அந்த விலைமதிப்பற்ற உயிரை கொல்வதற்கு முயற்சி செய்தாள். மகத்தான அக்டோபர் புரட்சியை தகர்க்க, எதிர் புரட்சியாளர்கள் தொடர்ந்த முயற்சிகளில் ஒன்றுதான் இது. லெனின் செய்த தவறென்ன? ரஷ்ய மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி அவர்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருந்த ஜார் என்னும் எதேச்சதிகாரியை அவனின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அகற்றி ஒரு புதிய தொழிலாளி வர்க்கத்தினுடைய ஆட்சியை கொண்டு வந்தார். வேலை செய்பவர்களின் கடினங்களை அகற்றினார். 1917 அக்டோபரில் கடும் காற்றும் மழையும் கொண்ட ஒரு நாளில் லெனின் கிராடில் மோல்னி என்னும் கட்டிடத்தை தலைமையிடமாகக் கொண்டு புரட்சிக்கு தலைமைத் தாங்கினார்.

அதன்மூலம் உலகத்தின் வரலாறு தலைகீழ் மாற்றமடைந்தது. ரஷ்யாவின் வரலாற்றை மாற்றி அமைப்பேன் என்று தாம் ஏழாம் வயதில் உறுதி எடுத்த அவர், ஜாரின் எதார்த்த முகத்தை அந்த வயதிலேயே புரிந்து கொண்டிருந்தார். தமது அண்ணன் அலெக்ஸாண்டரை 1877 மே 8ஆம் நாள் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கிலிட்டு கொன்றது. அவன் செய்த தவறு, நரோத்னிக்குகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதுதான் அவனின் மரண தண்டனைக்கு காரணமாக அமைந்தது.

வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை தகர்த்தெறிவதின் மூலம்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை லெனின் போன்ற சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதே பாதையில்தான் எமது தேசிய தலைவரும் உணர்ந்தார். விடுதலையை எப்படி வென்றெடுக்க வேண்டும். வென்றெடுக்கப்பட்ட விடுதலையை எவ்வாறு மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்கின்ற மகத்தான சிந்தனை கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

அவரைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்தது. அது துப்பாக்கி குண்டுகளால் நடைபெற்ற முயற்சி மட்டுமல்ல. கருத்துக்களால் நடைபெற்ற முயற்சி. துப்பாக்கிக் குண்டுகளால் நடக்கும் முயற்சிகளைக் கூட மிக எளிதாக முறியடித்துவிட முடியும். தோழர் லெனின் காப்பாற்றப்பட்டது போல, காப்பாற்றப்பட்டு பின்னர் தமிழீழம் கட்டியமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கள பேரினவாத அரசு, இந்திய பார்ப்பனிய அரசோடு இணைந்து கொண்டு எமது தேசிய தலைவரை பரப்புரையால் கொன்றுகொண்டிருக்கிறது. இதுதான் கடந்த 2009 மே திங்களில் நடைபெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி ஒரு தகவலை சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டது.

ஒரு பொய்யை நிரூபிக்க அது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது. சிங்கள நாட்டின் பொய்யை நம்பிக் கொண்டிருக்க உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைக்கான போர்க்களத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தயாராக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சர்வதேச தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. உலகமே தலை கிறுகிறுத்து இது சரியா? இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா? என்றெல்லாம் வெறும் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள். கடும் சமரில் பாதிக்கப்பட்டிருந்த எமது உறவுகளுக்கு உலகெங்கும் வாழும் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து, உடைகளை ஏற்றிக் கொண்டு வணங்கா மண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கிச் சென்றபோது, சிங்கள ராணுவம் இப்படித்தான் தமது அடங்காப்பிடாரித் தனத்தை காட்டியது. பல்வேறு அச்சுறுத்தலுக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகும்கூட அவை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழீழ மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்திலிருந்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உணவையும், மருந்தையும் இந்திய பாசிச அரசு தமிழ் விரோத கருணாநிதி அரசு தடை விதித்து, அது எம் மக்களுக்கு சென்றடையாமல் சிதைவடைந்து போனது. கோடிக்கணக்காக கொட்டிக் கொடுக்கப்பட்ட எம் உறவுகளின் உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கு இந்திய பார்ப்பனிய அரசும், அதன் காலடிகளில் வீழ்ந்து கிடக்கும் கருணாநிதி அரசும் காரணமாக இருந்தார்கள். உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்கா மண் கப்பலை தடுத்தது சிங்கள பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளின் அரசுமாகும்.

இப்போது காட்டு கத்தல் போடுகிறார்களே, இதே தான் இலங்கையிலே தமிழீழ மண்ணில் வசிக்கும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க அன்றே சர்வதேச சமூகம் முன்வந்திருக்குமேயானால் இன்று சிங்கள அரசிற்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. ஆகவே, எங்கு தீமை நடக்கிறதோ, எங்கே அநியாயக்காரன் வசிக்கிறானோ, அங்கே அவனுக்கெதிராக நாம் கொதித்தெழும்போதுதான் ஒட்டுமொத்த உலகச் சமூகமும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் மனநிறைவுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியும். இது தமிழீழ மக்கள் தானே என்று அசட்டையாக இருந்த காரணத்தினால் இன்று வேறொரு அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த உலகம் மிக சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தாலும், அறிவியல் காரணங்களாலும் வேகமாக கருத்துப் பாறிமாறிக் கொள்ளும் களம் இருப்பதால் மிக விரைவாக ஒரு நிகழ்வு அடுத்தவர் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்று எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தால், இன்று சிங்கள அரசிற்கு இந்த திமிர் வந்திருக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை தடுத்தால், உலகமே எழுந்து நிற்கும் என்று அன்று சிங்கள பாசிச வெறியன் ராசபக்சேவுக்கு அவனை தோள்மீது வைத்துக் கொண்டு சமருக்கு அழைத்துச் சென்ற இந்திய பார்ப்பனிய அரசுக்கு இந்த உலகம் எச்சரிக்கை விடுவித்திருக்குமேயானால், இன்று இஸ்ரேலும் அமைதி காத்திருக்கும். ஆகவே, இனி வரும் காலங்களிலாவது நாம் எங்கு அநீதி நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்பட உறுதியாக பணியாற்ற வேண்டும்.

எமது தேசிய தலைவரின் மரணத்தைக் குறித்த செய்தியாகட்டும், இதையெல்லாம் கடந்துதான் தமிழீழம் வரலாறு படைக்க இருக்கிறது. இந்த பரப்புரைகளை எல்லாம் உடைத்தெறிந்துதான் நமது தேசம் உயிர்பெற இருக்கிறது. நாம் பதிவு செய்யும் தகவல்கள் நமது உயிரை பிழிந்து வடிக்கும் எழுத்துக்கள். இவற்றிற்கு உயிர் இருக்கிறது, இவை உலகெங்கும் விழிப்பூட்டும். அது நமது விடுதலையை வென்றெடுக்க பெரும் துணை புரியும்.

தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுக்க முடியாது.

பரப்புரைகளை உடைத்தெறிவோம்.

கருத்துறைகளால் களம் படைப்போம்.

நாம் தமிழீழத்தை படைத்தளிப்போம்.

அதுவரை தொடர்ந்து இடைவிடாமல் தொடர் பயணம் செய்வோம்.


கண்மணி