Friday, June 7, 2013

தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை உளமார நேசித்து பணி செய்த உன்னத மனிதர் வண பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் நினைவுநாள்



எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார். தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று

1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்.

1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பாதர் சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

மதம் மொழி பார்க்காது மனிதனை நேசித்தம மனிதனின் மரணத்திற்காக ஓர்கணம் தலைசாய்த்து …..

எழுகதிர்

Wednesday, June 5, 2013

தியாகி பொன் சிவகுமாரன்




உரும்பிராய் தந்த 
இரும்பு மனிதன்.

பூவான மனசுக்குள் 
புரட்சி கனன்ற பெருவீரன். 

தன்னையும் 
தன்னின மக்களையும் 
நெஞ்சேந்திய 
மாணவப்பிஞ்சு. 

ஆதித் தமிழனின் 
இருப்பும் விருப்பும் 
அங்குலம் அங்குலமாய் 
சிதைக்கப்படுகிறது.

பேரவலம்! 
சுதந்திர தீயிடல். 
அரசாண்ட தமிழனின் 
ஆணிவேர் வரை 
ஊசி செருகும் குரூரம். 

சிங்களம் 
தமிழ் மாணவரின் 
கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் 
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபது.(1970) 

குறும்பும், 
தன்னுணர்வும், 
தொலை நோக்கும், 
இலட்சிய தாகமும், 
சிவகுமாரனை 
அசைவியக்கம் கொள்ள வைக்கிறது. 

தமிழ் மக்களின் 
அடிமைத் தழைகள் நீக்கி 
சுதந்திர வாழ்வுக்காய் 
சீரிய சிந்தனைகள் 
செயல் வடிவம் கொள்கிறது. 

1971ல் தமிழ் மாணவர் பேரவையில் 
சிவகுமாரனின் பிரசன்னம். 
கொதித்துக்கொண்டிருந்த நெஞ்சோடு 
கை கோர்க்கிறார்கள் தோழர்கள். 

புத்தகம் ஏந்தி, 
பள்ளியும் பாடமும், 
விளையாட்டும் வீடும் 
வாழ்ந்திருக்கலாம் இந்த 
சிவகுமாரன். 

கண்முன்னே கொடுமைகள் 
எப்படிக் கண்மூடித்தூங்க? 

உயிர் குடிக்கும் துரோகங்கள் மீது 
எழுபதுகளில் கத்தி வைக்கிறான் 
இந்தப் பெருவீரன். 

ஓட்டமும் நடையும் 
விடுதலை வேணவாவும் 
ஓய்வின்றிய மாணவத்தமிழனுக்கு 
சிறையில் சித்திரவதை. 

வெளியே வந்தும் விடவில்லை அவன்! 
மூச்செறிந்து முன்னேறுகிறான். 

மீண்டும் மீண்டும் 
அடக்குமுறைக்கு எதிரான 
இயங்கு நிலை. 

அகவை 20 
மீண்டுமொரு சிறை 
அகவை 23 
சிகரெட் காயங்களுடனும் 
சிவந்த தழும்புகளுடனும் 
சிங்கள நகங்கள் விலக 
வெளியேறுகிறான் சிவகுமாரன். 

உயிராக மதித்த தமிழ், 
அறிவாக இருந்த 
ஆங்கிலமும் சிங்களமும் 
மதியுரை வழங்குவதில் 
அவருக்கு நிகர் அவரே. 

போராட்ட வடிவமென்பது 
கொள்கைகளை முன்னிறுத்தி 
உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி, 

போராட்டம் மட்டுமே எமது 
கொள்கையாக இல்லை 
என்பதில் அவருக்குள் உறுதி இருந்தது.

தியாகி பொன். சிவகுமாரன் ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தார்.


சாத்வீகப் பாதையில்
சந்தி பிரித்தாய்
கால வெளியில்
சுவடுகள் பதித்தாய்
காலக் கரைவிலும்
உந்தன் சுவடுகள்…

பொன். சிவகுமாரனின் 15 ஆவது ஆண்டு நினைவின் போது 1989 ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இவை.

ஆண்டுகள் காலத்துள் கரைந்து சென்றாலும் அவனது சுவடுகள் இன்னமும் ஒளிர்ந்த வண்ணமேயே உள்ளன. அவனுடனான நினைவுகளும் என்னுள் கிளர்ந்த வண்ணமேயே உள்ளன.

1974 ஜனவரி 10 ஆம் நாளில் இருந்து அவனது இறுதி நாளான 1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் வரையில் நான் அவன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாதங்களும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கான ஒரு காலகட்டமெனவும் குறிப்பிடலாம்.

திரவியம் என வீட்டாராலும் நெருக்கமானவர்களாலும் அழைக்கப்பட்ட உரும்பிராய் கிராமத்தைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் தனது மரணத்தின் மூலம் ஈழப் போராட்டத்திற்கு சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன்நகர்த்தினான். தன் சாவின் மூலம் தமிழ்ச் சமூகத்தை, குறிப்பாக அன்றைய இளந்தலைமுறையை ஒரு உலுக்கு உலுக்கினான்.

அவன் தனது மாணவப் பருவத்தில் ஒரு சமூகப் போராளியாகவே அரசியலுக்குள் நுழைந்தான்.

1960-களின் பிற்கூறு இலங்கைத்தீவின் இன்றைய நிலைமைக்கான பல முகிழ்ப்புகளைக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஐன இயக்கப் போராட்டங்கள், சீனக் கலாச்சாரப் புரட்சி, பிரான்சில் எழுந்து உலகெங்கும் பரவிய மாணவர் கிளர்ச்சிகள், தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட, தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட நவரெத்தினம் அமைத்த சுயாட்சிக் கழகத்தின் தோற்றம், இரசியாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ரோஹண விஐயவீர இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் தனியான கட்சியை அமைத்தும் இளம் கிளர்ச்சிக்காராக தோற்றம் பெற்றமை போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை உள்ளடக்கிய காலகட்டம் அது.

இவை யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிவகுமாரனைப் பாதித்தது ஆச்சரியம்தான். சிவகுமாரன் கம்யூனிசக் கருத்துக்கள் கொண்ட நண்பர்களுடன் உறவுகளைப் பேணுவதிலும் சமூக நீதிக்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதிலும் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். யாழ்ப்பாணக் குடநாட்டில் எழுச்சிபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டத்தால் சிவகுமாரன் ஈர்க்கப்பட்டான். ஆர்வத்துடன் அதில் பங்கேற்றான்.

இவ்வேளையில்தான் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணி அரசமைத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன. ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை எதிர்க்கும் வகையில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது. அந்த மாணவர் அமைப்பில் சிவகுமாரனும் முக்கிய பங்கெடுத்தான்.

இந்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பின்படிதான் 1972 மே 22 ல் இலங்கைத்தீவு சிறிலங்கா பொளத்த குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலும் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.

ஆதலால் பத்திரிகைச் செய்திகளில் அவனது பெயர் அடிபடத் தொடங்கி இருந்தது. யாழ்ப்பாண பிரதான வீதிக்கு அருகே அப்போதைய யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது, அப்போதைய ஐக்கிய முன்னணி அரசின் அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது என்பன போன்ற சம்பவங்களில் அவனது பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இவற்றிற்காக அவன் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

சிறைக்குள்ளும் அவன் கலகக்காரனாகவே இருந்ததனால் அவன் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தான். அவனது வழக்குகளுக்கான ஒவ்வொரு தவணையின் போதும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவான். அவனது வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் தவணைகளாக இழுத்தடிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டான். அப்படியாக யாழ்ப்பாணச் சிறைக்கு கொண்டு வந்த ஓரு பொழுதினில்தான், 1972 மே மாதத்தில் நான் சிவகுமாரனை முதலில் சந்தித்தேன். நான் அப்போது மே 22 ஆம் நாள் குடியரசுப் பிரகடனத்தை எதிர்த்து இடம்பெற்ற கிளர்ச்சியில் கைதானவர்களில் ஒருவனாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்தேன்.

1973 இன் பிற்பகுதியில் மலையக மக்களுடன் உறவைப் பேணவேண்டும் என்ற வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதில் சிவகுமாரன் ஆர்வத்துடன் பங்கேற்று எங்களுடன் மலையகம் வந்திருந்தான்.

மலையகத்தில் இருந்து நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பியபோது நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. (மாநாட்டை கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நெருக்குதல்களை மீறி அமைப்பாளர்கள் யாழ்பாணத்தில் நடத்த முடிவெடுத்திருந்தனர.;) ஆனால், எங்களைப் போன்ற இளம் சமூக ஆர்வலர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கணிக்கப்பட்டிருந்தோம். இது எங்களுக்குச் சினத்தை மூட்டியது.

சிவகுமாரன் தலைமையில் யாழ்ப்பாண பிரதான வீதியில் அமைந்திருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலகத்திற்குச் சென்றோம். மாநாட்டுப் பொறுப்பாளர்களைச் சந்தித்து நாங்களும் பங்களிக்கும் வகையில் செயல் திட்டத்தை வகுக்கும்படி கோரினோம்.

முதலில் அவர்கள் மறுத்தார்கள். அப்படியானால் எங்கள் பங்களிப்பு இல்லாமல் மாநாடு நடைபெற முடியாது என சிவகுமாரன் எச்சரித்தான். அதன் பின் தொண்டர் அமைப்பில் எங்களையும் இணைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சிவகுமாரன் பொறுப்பாளர்களில் ஒருவனாக அறிவிக்கப்பட்டான். நானும் வேறு பல நண்பர்களும் தொண்டாராகப் பணியேற்றோம்.

எங்கள் பணிகள் சுமுகமாகவே நடைபெற்றன. ஆனால், இருபாலைச் சந்தியில் இருந்து புறப்பட்ட இறுதி நாள் காண்பிய ஊர்திகள் பங்கேற்ற ஊர்வலத்தில் பண்டாரவன்னியன் பற்றிய காண்பிய ஊர்தி கலந்து கொள்வதற்கு மாநாட்டு அமைப்பாளர் அனுமதி மறுத்திருந்தனர்.

அரச நெருக்கடியை சமாளிக்க அமைப்பாளர்கள் எண்ணியிருக்கக்கூடும். சிவகுமாரன் தலைமையிலான தொண்டர்களாகிய நாங்கள் ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தகவல் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் ஊர்வலம் நகராதபடி தெருவை மறித்தபடி நாங்கள் மறியல் செய்தோம். மாநாட்டு அமைப்பாளர்கள் எத்தனையோ விளக்கங்கள் அளித்து கெஞ்சினர். ஆனால் சிவகுமாரன் எதற்கும் மசியவுமில்லை விட்டுக்கொடுக்கவும் இல்லை. கடைசியாக பண்டாரவன்னியன் காண்பிய ஊர்தியுடன் ஊர்வலம் நடைபெற்றது.

1974 யூன் 10 இறுதிநாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றும் பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருநது. இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக மக்கள் ஆதரவு இதற்குக் கிடைக்கும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை.

ஆதலால் சில நூற்றுக்கணக்கானவர் கலந்து கொள்ளக்கூடிய வீரசிங்கம் மண்டபத்தைப் பொதுக்கூட்டத்திற்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே எழுச்சியைத் தோற்றுவித்து விட்டது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வீரசிங்கம் மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

மண்டப ஒழுங்கைக் கவனித்துக் கொண்டிருந்த தொண்டர்களாகிய எங்களுக்கு நிலமையின் தீவிரம் தெரியத் தொடங்கி விட்டது. உடனடியாக சிவகுமாரன் எங்களை அழைத்து மாற்று வழிகளை யோசிக்கும்படி கோரினான். அப்போதுதான் நாங்கள் கூட்டத்தை எல்லாப் பொதுமக்களும் பார்க்கவும் கேட்கவும் வசதியாக மண்டபத்திற்கு வெளியே நடத்தக் கோருவதென்று தீர்மானித்தோம்.

எங்கள் அழுத்தம் காரணமாக அமைப்பாளர்கள் வெளியே கூட்டம் நடாத்தச் சம்மதித்தனர். நாங்கள் வெளியே கட்டப்பட்டிருந்த சிகரத்திற்குக் கீழே வாங்குகளை அடுக்கி தற்காலிக மேடை அமைத்தோம்.

வீரசிங்க மண்டபக் கட்டடிடத்தின் சிறு முற்றம் அதற்கும் எதிரே கோட்டைச் சுவரில் இருந்து சரிவாக அமைந்த புல்வெளி. இதனைப் பிரித்தபடி தார்ச்சாலை. நாங்கள் மேடைக்கு அருகே இருந்தோம். தார்ச்சாலை புல்வெளி எங்கும் மக்கள் தலைகளே தெரிந்தன.

திருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசத் தொடங்கினார். நாங்கள் பேச்சை இரசிக்க தொடங்கியிருந்தோம். அப்போதுதான் அந்த நாமெல்லாரும் அறிந்த துயரம் நிகழ்ந்தது. மேடையின் இடது பக்கத்தே அதாவது புல்லுக்குளம் பக்கத்தே சலசலப்பு ஏற்பட்டது.

பொலிசார், அமர்ந்திருந்த மக்களை கலைக்க முயற்சித்தித்து கொண்டிருந்தனர். சலசலப்பு உடனேயே அல்லோலகல்லோலமாக மாறத்தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். மேடையில் இருந்தவர்கள் மக்களை அமைதியாக இருக்கும்படியும் பொலிசாரை விலகிச் செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.

அவ்வேளையில்தான் அது நடந்தது. தொண்டர்கள் என்ற நிலையில் மேடையின் அருகே இருந்தோம் என்பதால் எல்லாவற்றையும் எங்களால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. அந்த மேடை அமைக்கப்ட்டிருந்த சிறு முற்றத்தையும் தார்த்தெருவையும் பிரித்த மறிப்புக் கம்பியை தாண்டுவதற்காக ஒருவர் தொட்டபோது எங்களைப் பார்த்து அலறியபடி வீழ்ந்தார்.

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கு அந்த மறிப்புக் கம்பியிலும் பரவியிருப்பதை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஆதலால் அதனைத் தொடவேண்டாம் என்று நாங்கள் கத்தித் தடுத்துக் கொண்டிருந்த போதும் அதைத் தொட்டவர்கள் அலறியபடி செத்து வீழ்ந்தார்கள்.

எல்லாம் அடங்கிய இறுதி நேரம் வரையில் நானும் சிவகுமாரனும் அங்கிருந்தோம். இதற்குப் பழிக்குப் பழி வாங்குவதென்று நாங்கள் இருவரும் சபதம் செய்து கொண்டோம்.

காலையில் சந்திப்பதற்கான இடத்தையும் தீர்மானித்துக் கொண்டோம். ஆனால் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசி விட்டான். பொலிசார் காயமடைந்தார்கள்;. சிவகுமாரன் தேடப்படுபனாக மாறிவிட்டான். இது அவனது குண இயல்பை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1974-01-10 ஆம் திகதியில் இருந்து 1974-06-05 ஆம் திகதி வரையில் நான் அவனுடன் கூடவே இருந்தேன். அந்த ஐந்து மாத எல்லாச் செயல்பாடுகளிலும் பங்கேற்றேன். வெடிமருந்துகள, ஆயுதங்கள் தேடி சாதிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு அவனுடன் கூடவே சென்றிருக்கிறேன். நானும் சாவகச்சேரியை சேர்ந்த ஜீவராசாவும் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் சயனட்டைத் தேடிப் பெற்று வந்ததும், இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் ஓரு 39 ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வு.

இனி ஒரு தடவை பொலிசின் கையில் தான் பிடிபடுவதில்லை என்பதில் சிவகுமாரன் உறுதியாகவே இருந்தான். எங்களைப் பொலிசார் பிடித்தால் எல்லாப் பொறுப்பையும் தனது தலையில் சுமத்தி விடும்படியும் கூறியிருந்தான். இந்த ஐந்து மாத காலமும் ஒரு காவியத்திற்கான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன, எல்லாவற்றையும் இப்போது கூறுவதும் தேவையற்றதாகும்.

தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துயர நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிபர் சந்திரசேகராவை பழிவாங்குவதே எங்களின் நோக்கமாக இருந்தது. மிகச் சரியான அந்தத் திகதி எனக்கு நினைவில் இல்லை. கைலாசப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் சந்திரசேகராவை மறித்துக் கொலை செய்வது என்பது எங்கள் திட்டமாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி எங்களுக்குப் பாரிய தோல்வியையே தேடித்தந்தது. சந்திரசேகரா உயிர் தப்பிவிட்டான். சிவகுமாரன் மிக உயர் தேடலுக்கு உரியவனாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

1974 ஆம் ஆண்டில் அவனது ஊரான உரும்பராய்க் கிராமம் எழுநூறு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டைக்கு உள்ளானாது.

இன்றைக்கு போராட்டம் முதிர்ந்த நிலையில் இவையெல்லாம் சாதாரணமாக இருக்ககூடும். இந்நிலையில் சிவகுமாரனை இந்தியாவுக்கு அனுப்ப முடிவெடுத்தோம். இரகசிய கடல் வழிப் பயணத்திற்குத் தேவையான பணம் எம்மிடம் இருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுச் சேகரிப்பது எனது பணியாயிற்று. அப்போது புகழ்மிக்க பெண்மணி ஒருவர் ‘என்னிடம் தாலிக்கொடி மட்டும்தான் இருக்கின்றது” என்ற பொன்மொழியை உதிர்த்தார். எல்லோரும் கைவிரித்து விட்டார்கள். இந்நிலையில்தான் பணம் தேடும் வேறு முயற்சிகளை ஆராயத் தொடங்கினோம். கோப்பாய் கிராமிய வங்கி எங்கள் கவனத்திற்கு வந்தது.

1974 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி காலை பத்து மணியளவில் மருதனார்மடத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட வாடகை வண்டியில் உரும்பிராயில் இருந்து நாங்கள் நால்வர் (சிவகுமாரன், மகேந்திரன், ஜீவராசா, நான்) கோப்பாய் நோக்கிப் பயணித்தோம். எங்கள் திட்டம் சொல்லளவில் மிகச் சிறந்ததாகவே இருந்தது. ஆனால் நடைமுறையில் இறங்கியபோது கட்டுத் தோட்டாக்கள் கொண்ட எங்கள் ஆயுதங்கள் எதுவும் ஒத்துழைக்கவில்லை. ஒன்று பிழைக்க மற்றவையெல்லாம் குழப்பமாகிவிட்டன. கார்ச்சாரதி திறப்புடன் ஓடிவிட்டான். திறப்பில்லாமல் காரை இயங்கச் செய்ய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஊர்மக்கள் கூடிவிட்டார்கள். எங்கள் கால்களை நம்பி குடிமனைகளுக்கு ஊடாக ஓடத்தொடங்கினோம். கொள்ளைக்காரர் என்றபடி மக்கள் எங்களைத் துரத்தத் தொடங்கினர். கற்காளால் எறியத் தொடங்கினர்.

ஊர்மனை தாண்டி தோட்டப்பகுதிக்கு வந்துவிட்டோம்;. வெடிக்காத கட்டுத் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியைக் காட்டி துரத்தி வருபவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் யார், எதற்கு வந்தோம் என்பதை விளங்கப்படுத்தினோம். சிவகுமார் தன்னை அறிமுகப்படுத்தியதும் சிலருக்கு அவனைத் தெரிந்திருந்தது. நாங்கள் மெதுவாக ஆசுவாசப்படுத்தியபடி நீர்வேலி நோக்கி தோட்ட வரப்புகள் வழியே நடக்கத் தொடங்கினோம். ஊர்மக்கள் பின்னே எங்களைப் பார்த்தபடி நின்றிருந்தனர். நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் எதிரே மண்பாதையில் விரைந்து வந்த பொலிஸ் வாகனங்கள் எங்களை வழிமறித்தன. பின்னால் திரும்பிய போது அங்கேயும் பொலிசார் எங்களை நோக்கி வருவது தெரிந்தது. நாங்கள் முற்றுகைக்குள் அகப்பட்டோம். இப்போது எல்லோரது கைகளிலும் இருந்த குண்டுகள் இல்லாத ஆயுதங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன. நால்வரும் ஓன்றாகப் பிடிபடாமல் நான்கு திசையில் பிரிந்து செல்வதுபோல் போக்கு காட்டுவதென்றும் தீர்மானித்துக் கொண்டோம். இதனால் சிவகுமாரன் உட்பட எல்லோரும் தப்ப முடியுமென்று நம்பினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக சிவகுமாரனே பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டான்.

ஏறத்தாழ நண்பகல் நேரம். உச்சி வெயிலை உயர்த்திப் பிடித்தபடி சூரியன். மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் அவன் வீழ்ந்து கிடந்தான். அவனது குதிக்காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. துப்பாக்கியால் குறிபார்த்தபடி காக்கிச் சட்டைக் காவலர்கள் சூழ்ந்து நின்றனர். இனித் தப்ப வழியில்லை என்னும் நிலையில் தன் சட்டைப்பையில் இருந்த சிறிய வெற்று வாசனைத் திரவிய குப்பிக்குள் பத்திரப்படுத்தியிருந்த சயனைட்டை அவன் அருந்தினான்.

ஈழப் போராட்டத்தின் முதல் வித்தாய், முன்னறிவித்தவனாய், மாணவர் எழுச்சியின் குறியீடாய் மாறிப்போனான் சிவகுமாரன்.

நண்பா
உந்தன் இளவயதில்
உயிரை வெறுக்கவும்
சயனைட் குப்பியை
உயிரெனக் கொள்ளவும்
செய் அல்லது செத்துமடியென
பிரகடனம் செய்யவும்
எவை உன்னை உந்தியதோ
இன்னமும் அவை
அப்படியே உள்ளன
உந்தன்
ஒளிரும் சுவடுகளும்
எம்மெதிரே விரிகின்றன…

நன்றி: நிலவரம் (13.06.08)

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன்



எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.

இம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26 இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.

தியாகி பொன். சிவகுமாரன் இவர் தனது தாயிடம் சென்று? ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன? என்று கேட்டானாம்.

இயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் ?தினப் புழுகு? என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர்?பி.எஸ்.கே? என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவிறந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு? தரப்படுத்தல்? நடைமுறையை பல்கலைக்கழக கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும். இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970 இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.

அந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை? தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி? என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன்? அப்பா நான் எங்கும் போகமாட்டேன். இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்.

என் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினார். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம் ? அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு?

தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுப் பேராளர்களையும் காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர். தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின் கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் இது.

அகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து ? அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன்? அவலக் குரல் எழுப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னை தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி காயாகி கனியாகி விதையாக முன்பே கருகி விடுகின்றது.

தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது சிங்களம். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன் சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.

இதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது ? அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான். அதனால் நான் ஒன்றும் செய்யவில்லை?

கடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து புகட்ட முற்பட்ட போது அதைக்கூட் சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.

தியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில். ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞிகளும் தியாகி பொன். சிவகுமாரன் இறுதி நிகழ்வில் திரண்டனர்.

தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6 ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.

இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.

போராளி செ.கதிர்நிலவன்

தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நாள்




பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.

யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.

போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.

பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

தியாகி பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை!


அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்து அறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.

தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டுத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது.

பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள் அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன்.

பொன்.சிவகுமாரனின் வாழ்வானது 1950ல் தொடங்கி 1974 யூன் மாதம் 5ம்திகதி தற்கொடையுடன் முடிவடைகின்றது என்பதற்கும் அப்பால், சிவகுமார் எறிந்ததும்,வைத்ததுமான சில வெடிகுண்டுகளின் வெடிப்புகளுக்கும் அப்பால்,சிவகுமாரால் குறிவைக்கப்பட்டும் தப்பிய தமிழினவிரோதிகளின் தலைவிதிக்கும் அப்பால் சிவகுமாரனின் வாழ்வு மிகவும் வீரியம்மிக்கதும் தியாக ம் நிறைந்ததும் ஆகும்.

பொன்.சிவகுமாரன் விடுதலைக்கான போராட்டத்தை நடாத் தினான் என்று சொல்வதைவிட விடுதலைக்கான போராட்;டத்துக்கான அமைப்பு ஒன்றை கட்டும்முயற்சியிலும் விடுதலைக்கான உண்மையான போராளிகளைதேடி அறியும்இடைவிடாத தேடலிலும் இறுதிவரை முயன்றவன்.

அவனுடைய இந்தத் தேடல் அவரை 1960களின் இறுதியில் நடைபெற்ற மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச போராட்டகளத்துக்கும் கொண்டுசென்றது.அங்குநின்றுகொண்டிருந்த சாதியப்பெரு மகன்களின் வெறிச்செயலால் மனம்கொதித்துப்போனவன் சிவகுமாரன்.

அந்தப் பொழுதில்தான் சிவகுமாரனுக்கு அவனுடைய உணர்வுகளைப்போன்ற ஒத்த உணர்வுகளுடன் அங்கு திரிந்துகொண்டிருந்த ‘பட்டு அண்ணா’வின் தொடர்பு கிடைக்கிறது.

அதற்கு முன்பே ஆயுதப்போராட்டக்குழு ஒன்றுடன் தொடர்பாக இருந்த பட்டுஅண்ணாவின் தொடர்பு பல கதவுகளை சிவகுமாரனுக்கு திறந்து வைக்கிறது. குண்டு செய்யவேண்டும்.

குண்டு தமிழினஎதிரிகளுக்கு எதிராக பயன் படுத்தவேண்டும் என்ற சிவகுமாரனின் கனவுகளுக்கு பட்டுஅண்ணா பாதை காட்டு கிறார்.வல்வெட்டித்துறையில் அந்தநேரம் இயங்கிவந்த ஆயுதப்போராட்ட அமைப் பான ‘தங்கத்துரை அண்ணா, பெரியசோதி அண்ணா’ குழுவினருடன் பொன். சிவகுமாரனுக்கு தொடர்புஏற்படுகின்றது.

அதற்கு முன்னரே குண்டுசெய்யும் முயற்சி களிலும்,ஆயுதம் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த தங்கத்துரை அண்ணா, பெரியசோதிஅண்ணா குழுவினரின் வெடிகுண்டு சம்பந்தமான பட்டறிவுகளும்,சிவகுமாரனின் குண்டுசெய்யும் முயற்சிசம்பந்தமான அறிவும் இணைந்தபோதினில் சிவகுமாரனின் முதலாவது குண்டுவைக்கும் முயற்சி 1971ம் ஆண்டு யூன்மாதம்19ம் திகதி அரங்கேறியது.

சிவகுமாரன் படித்த உரும்பராய் சைவப்பிரகாசவித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமசிறீ சந்திரசிறீயின் வாகனத்தின் கீழ்வைக்கப்பட்ட இந்த முயற்சி வெற்றியீட்டாத போதிலும் ஆயுதஎதிர்வினை பரணாமம் கொள்வதை சிங்களத்துக்கு புரியவைத்த நிகழ்வாக இதுஇருந்தது.

அதன்பின்னர் பலபல முயற்சிகள்.வெற்றியளிக்காத முயற்சிகள். ஆனாலும் சிவகுமாரன் ஒருபோதும் தன்னுடைய இலக்கினில் சமரசம் செய்து கொண்டதோ, பின்வாங்கியதோ இருந்திருக்கவில்லை.

தமிழீழம் சம்பந்தமான எல்லா தளங்களிலும் தன்னுடைய ஒப்புயர்வான ஈடுபாட்டை வெளிக்காட்டியவன் அவன். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற ஊர்திகளின் பவனியின்போது அன்னபூரணிகப்பல் ஊர்திக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பண்டாரவன்னியன் ஊர்தியின் முகப்பில் எழுதப்படடிருந்த ‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்ற வாசகத்தை அகற்றும்படி சிங்கள காவல்துறை வற்புறுத்தியபோது சிவகுமாரன் அதனைஎதிர்த்து கொதிக்கும் வீதி யிலேயே மறியல் செய்தவன்.

அவனுடைய உறுதியான எதிர்ப்புடன் மற்ற இளைஞர்களும் இணைந்தபோது சிங்களம் பணிந்து பின்வாங்கியது.இப்படியாக எமது சமூகத்தின் அவலங்கள் அனைத்துடனும் மல்லுக்கட்டியவன் சிவகுமாரன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் சாதியஏற்றத்தாழ்வுக் கொடுமைக்குஎதிராக அவன் நிறையவே முயன்றவன்.

இன்று அவனின் நினைவுநாள் ஒரு ஊமைப்பொழுதில் வந்து இருக்கின்றது.அவன் போராடிகாலத்தைப்போன்ற ஒரு காலகட்டத்தில் அவனின் நினைவை ஏந்துகிறோம். எமது முழுஇனமும் ஒரு மௌனப்பொழுதுக்குள் முகம் புதைத்துநிற்கும் அவநம்பிக்கைப்பொழுது இது.

சிவகுமாரனின் நினைவு இந்த பொழுதை ஊடறுத்து நம்பிக்கையை விதைக்கட்டும்.பொன்.சிவகுமாரன் எந்த நம்பிக்கையுடன் விடுதலைக்காக அலைந்தானோ,அந்த நம்பிக்கையை எமக்குள் நாமே ஊட்டுவோம்.புன்னகைமாறாத அந்த போராளியின் முகமும் அவனின் தியாகமும் வரலாற்றின் மிகப்பெறுமதியான தடங்களாக என்றும் இருக்கும். 

ச.ச.முத்து

Thursday, May 9, 2013

தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஷ் மாமாவின் நினைவு நாள்



சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக் கலைவாணர் கணேசு மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.

‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். போராட்டத்துக்காக கலை வடிவில் போராடிய உண்மை கலைஞன்….எத்தனை படங்கள், குறும்படங்கள்…வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராட்டத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.

09.05.2009 அன்று 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்.


உயிரம்புகள் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சிக் காணொளி




Wednesday, May 8, 2013

“இராசாத்தியின்” இராஜபாட்டையில் !……


நடுநிசி எங்கும் ஒரே இருட்டு. ஆனாலும் அந்த மண் உறங்கவில்லை. அது உறங்குவதுமில்லை. விடியலைத்தேடி நேரம் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் வல்வெட்டித்துறை மண்ணோ அந்த இரவிலும் தமிழ் இனத்தின் விடிவிற்காக போராடிக்கொண்டிருக்கும். எங்கள் ஈழமண் முழுமையாக அங்குலம் அங்குலமாக இந்திய வல்லாதிக்கத்தின் காலடியில் மிதிபட்டு எங்கும் பயப்பிராந்தியே குடிகொண்டிருந்த வேளையிலும் அந்த கடற்கரையோர மண் உறங்கவில்லை. எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் எந்த வீடும் சுற்றிவளைக்கப்பட்டு எந்த வீட்டுக்கதவும் தட்டப்பட்டும் தட்டப்படாமலும் வேலிகள் வெட்டப்பட்டும் சுவரேறிக் குதித்தும் இந்திய இராணுவம் உள்நுழையலாம் எனும் அச்சுறுத்தல் நிலவிய போதும் அந்தவீட்டில் சிறு விளக்கொன்று எரிந்து கொண்டே இருக்கும். அதன் அருகில் சாய்மனைக்கதிரையில் படுத்திருந்தும் உறங்காது எப்பொழுதும் வரப்போகும் தனது பிள்ளைகளிற்காக விழித்திருப்பாள் அந்தத்தாய். எந்தநிலையிலும் இந்திய இராணுவத்தினர் உள் நுழையலாம் என எதிர்பார்த்து தத்தமது வீடுகளைப் பூட்டிவிட்டு மக்கள் ஒழிந்து கொள்ளும் நிலையிலும் இராணுவம் நுழையும் என எதிர்பார்க்கப்படும் அந்த வீட்டிலேயே குழுமி இருக்கும் சில அயலவர்கள் தமது பாதுகாப்பிற்கு அந்த தாயையே நம்பி அந்த வீட்டின் சில பகுதிகளில் உறங்கிக்கொண்டிருந்தனர்

டொக்……டொக்……டொக்……!!!

மூன்று தடவைகள் அந்த வீட்டின் கதவுகள் மெல்லத் தட்டப்படுகின்றன. பெரியசத்தமின்றி இடைவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக தொடராகவும் எச்சரிக்கையுணர்வுடன் அதேவேளை கூர்மையுடன் தட்டப்படும் அச்சத்தங்களினைத் தொடாந்து பபரபரப்புடன் எழுந்து கொள்ளும் அனைவரும் பார்த்திருக்கவே யாரடா அவன்? என்னும் கேள்வியுடன் பயமின்றியே கதவைத் திறக்கும் அந்த தாய்குப் பின்னாலேயே திபு திபு என ஆயுதங்களுடன் உள்நுழையும் ஐந்து ஆறு பேர்; “அது நாங்களனை” எனும் வாஞ்சையுடன் ஆயுதங்களைச் சுவரோரம் சாத்தி வைத்துவிட்டு அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொள்ளவும் அங்கு குழுமி நின்ற பெண்கள் அவசர அவசரமாக உணவைப் பரிமாறுகின்றனர். சாப்பிடும் அவர்களின் அருகில் சென்று ஒவ்வொருவரின் தலையையும் தடவி அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வையும் கூறுகின்றாள் அந்தத் தாய். சாப்பிடும் போதே சுகநலம் விசாரித்து சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வந்தவழி தெரியாது மறைந்துவிடுகின்றனர்; அவ்விளைஞர்கள். அதன்பின் சிறிது நேரத்திலேயே இந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்படுகின்றது அந்தவீடு.

படபட…… படபட……படபட…… எனப் பல தடவைகள் ஓங்கி அறையப்படும் அந்த வீட்டின் கதவுகளை சாவகாசமாக மீண்டும் திறக்கும் அந்தத் தாய். இது “இராசலக்ஸ்சுமி வாசா” எனக்கூறப்படும் அந்த வீட்டிற்கும் அந்தவீடு இருக்கும் “உடையாமணல்” ஒழுங்கைக்கும் அது அமைந்திருக்கும் “வேம்படி”ப்பகுதிக்கும் ஏன் “வீரஞ்செறிந்த வல்வெட்டித்துறை” மண்ணிற்கும் பழகிப்போன அன்றாடவிடயங்களே !………..

உறங்கும்போதும் ஆயுதங்களை அணைத்தவாறே உறங்கும் அந்த இளைஞர்களால் அந்த வீட்டில் எப்படி ஆயுதங்களை இறக்கி வைக்க முடிந்தது ?…… தனிமனிதர்களின் உயிரைப் பாதுகாக்க அல்ல !…… தமிழர்களின் மண்ணைப் பாதுகாக்க தூக்கப்பட்டவையே அவைகள். அதனால் தான் எதிரியிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காகவும் தமது சிறு ஆயுதங்களைக் கூட தாம் உயிருடன் இருக்கும் போது எதிரியிடம் இழந்துவிடக் கூடாதென்பதற்காக தமது உயிரையே இழந்தவர்கள் பல விடுதலைப்புலிகள். அவர்களிற்குத்தான் தெரியும் “தொடராக மூன்று முறை” கதவைத்தட்டும் தொனியின் அடையாளமே தமது அடையாளம் என. இது அநத வீட்டிற்கு மட்டுமல்ல. தமிழீழத்தின் முதலாவது பொலிஸ் மாஅதிபரும் குறுகியகாலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியற்துறையை சர்வதேச இராஜதந்திர மட்டத்திற்கு உயர்த்திய நடேசனுடைய வீடு மற்றும் மேஜர் ஜேம்ஸ்சினால் வல்வெட்டித்துறைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட “கடாபி” மாஸ்ரரின் (இவரே பின்னாட்களில் மாவீரர் பணியகப்- பொறுப்பாளரான பொன்தியாகம் ஆவார்) வீடு. மேற்படி வீடுகளிற்கும் விடுதலைப் புலிகளிற்குமான தகவல் தொடர்பாடல் குறியீடாக இந்திய இராணுவ காலத்தில் மூன்று முறை தொடராக கதவைத்தட்டும் அத்தொனியே விளங்கியது!……….ஆதனால்த்தான் எந்த நேரத்திலும் அந்தவீட்டை அவர்களால் தட்டமுடிந்தது. அத்துடன் அந்த நள்ளிரவு வேளையிலும் அவர்களால் நிம்மதியாக ஆயுதங்களை இறக்கிவைத்து விட்டு பகல் முழுவதும் பசியால் வாடிய வயிற்றிற்கு உணவு கொடுக்கமுடிந்தது. அந்த வீடு இந்திய வல்லாதிக்க இராணுவகாலத்தில் மட்டுமல்ல. அதற்கு முன்பு இலங்கை இராணுவம் நடமாடிய வேளையிலும் போராளிகளிற்காக காத்திருந்தது. ஏன்?….. ஆயுதப்போர் எமது மண்ணில் கருவாவதற்கு முன்பே 1956 இல் தமிழ்த்தேசிய உணர்வு எமது மண்ணில் சூல் கொண்ட வேளையில் இருந்தே அந்த “இராசலக்ஸ்சுமி வாசா” இனஉணர்வு கொண்டோரை வரவேற்க எப்பொழுதும் காத்திருந்தது. அதனால்தான் அந்த வீட்டில் அந்தத் தாயிடமிருந்து வெளிவந்த மகனால் ஈழத்தமிழரின் விடுதலைப்பாதைக்கு பெருவெளிச்சத்துடன் கூடிய மைல் கல்லாக வழிகாட்டமுடிந்தது. அந்ததாய் தான் போராளிகளிற்கெல்லாம் தாயாக விளங்கியரும் தமிழ்த்தாய் என்றும் வீரத்தாய் என்றும் போற்றப்படும் “கிட்டம்மா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட “இராசாத்தி” எனப்படும் “இராசலக்ஸ்மி சதாசிவம்பிள்ளை” ஆகும்.

தளபதி கிட்டுவினால் உணவு கொடுத்து பயிற்சிப்பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர் தளபதி பொட்டு. 1987 ஒக்டோபர் இறுதிப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான புலிகளின் மரபுசார் நேரடிமோதலில் யாழ்ப்பாண போர்முனையின் ஒருபுறத்தில் பலத்த காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இவருடன் வீதிகளினால் நகர முடியாமல் வீடுகளிற்குள்ளாலும் வாழைத்தோட்டங்களிற் குள்ளாலும் முன்னேறிவந்த இந்திய இராணுவத்தினரின் இரண்டு தாங்கிகளை அவர்களுடைய “பசுக்கா” வகை மோட்டாரினாலேயே ஒரே அடியில் தகர்த்து வல்லாதிக்கத்தின் முன்னேற்றத்தை திருநெல்வேலியில் தடுத்துநிறுத்திய மாவீரன் “மேஜர்; ஜேம்ஸ்” உட்பட இன்னும் பல காயமடைந்த போராளிகளளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்த போரினால் காயமடையும் போராளிகளினதும் மக்களினதும் தொகை வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை பாரிய பிர்சனையானது. இதனைவிட எக்கணத்திலும் வடமராட்சிக்குள்ளும் இந்திய இராணுவம் உள்நுழையலாம் என களநிலமை மாற்றமடைய ஆரம்பித்தது. அவ்வாறான நிலையில் அவர்களின் முதல் இலக்கு வைத்தியசாலைகளாகவே இருக்குமென்பதால் அங்கிருந்த பொட்டு வல்வெட்டித்துறையில் கிட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் படுகாயமடைந்த அவரையும் அவருடன் இணைந்த போராளிகளையும் குளிப்பாட்டி மருந்தூட்டி உணவுகொடுத்து ஒரு “மேரி கியூரி” அம்மையாராகவே கிட்டம்மா அக்காலத்தில் எமது மண்ணில் விளங்கினார்;.

1987 நவம்பர் 4 ந்திகதி வடமராட்சிப்பகுதியில் உள்நுழைந்த இந்திய இராணுவம் குறிப்பாக விடுதலைப்போராட்டம் கருக்கொண்ட வல்வெட்டித்துறையில் காயமடைந்த போராளிகளையும் போராளிகளிற்கு உணவு கொடுத்து ஆதரவு அளிக்கும் தன்மானத்தமிழர்களையும் குறிவைத்து வேட்டையாடிவந்தது. உயிராபத்து நிறைந்த அக்காலத்திலும் உடையாமணல் ஒழுங்கையில் அமைந்திருந்த கிட்டம்மாவுடைய வீடான “இராசலக்ஸ்சுமி வாசா” காயமடைந்த போராளிகளின் வைத்தியசாலையாவே இரவு பகலாக சேவையாற்றி வந்தது. 1984 ஆம் 1985 ஆம் ஆண்டுகளில் தமிழீழ மகளிரை நேரடியாக போராட்டத்தில் இணைக்கும் முயற்சியாக ஆரம்பத்தில் அவர்களிற்கு முதலுதவிப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் “கப்டன்” சுந்தரி போன்ற இளம்யுவதிகளுடன் இணைந்து அவாகளிற்கு வழிகாட்டியாக கிட்டம்மாவும் பயிற்சி பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது இனியமகன் களத்தில் ஒருகாலை இழந்துவிட்ட நிலையில் “மாவீரர்” எனப்பெயர் பெற்ற தமிழக அரசியல் தலைவாகளில் ஒருவரும் எப்பொழுதும் ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பனுமான நெடுமாறனின் கேள்வியொன்றிற்கு “எனது மகனிற்கு ஒரு கால் போனால் என்ன ?….. அவனிற்கு இரண்டு கைகளும் இன்னும் ஒரு காலும் இருக்கு அவன் இனத்திற்காக இறுதிவரை போராடுவான்” என புறநானூற்றுத் தாய்மாரை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டியவர் அல்லவா எங்கள் கிட்டம்மா !. தனதுமகனை, தலைவனின் தம்பியை எங்களின் அன்புத்தளபதியை இயக்க வேலைகளிற்காக தமிழகம் அனுப்பி வைத்துவிட்டு காயமடைந்த போராளிகளை பெற்றதாய்க்கும் மேலாக பராமரித்து வந்த வேளையில் ஒருநாள்………பொட்டுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் நுழைந்த இந்தியஇராணுவம் சத்தம் கேட்டு கிணற்றடிக்கு செல்ல முயன்றது. உடனே குளிப்பாட்டிக் கொண்டிருந்த கிட்டம்மா குளிக்கும் கிட்டம்மாவாக மாறி “யாரடா அவன் பொம்பிளை குளிக்கும் இடத்திற்குள் வருபவன் என ஆக்ரோசமாக சத்தமிட்டபடி வெளியே வந்ததைக் கண்ட வல்லாதிக்க இராணுவம் வந்தவழியே திரும்பிப் போனது. இவ்வாறான இக்கட்டான நேரங்களிலெல்லாம் சமயோசிதமாக செயற்படும் அதிசக்தி வாய்தவராக அவர் வாழ்ந்துகாட்டினார்.

மீண்டும் ஒரு சம்பவம்

இரவில் அமைதியைக் கழித்துக்கொண்டு இந்திய இராணுவத்தின் செல்லடியும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்க ஆரம்பிக்கின்றன. 1987 நவம்பர்; முதல் வாரத்தில் வடமராச்சிக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தைத் தாக்காமல் கரந்துறைந்த விடுதலைப்புலிகள் 1988 ஒகஸ்டில் வடமராட்சியின் புதிய பொறுப்பாளராக மக்களின் அபிமானத்தைப்பெற்ற “மேஜர் ஜேம்ஸ்” பதவியேற்றதைத் தொடர்ந்து வல்லாதிக்க இராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிரடித் தாக்குதல்களை தீவீரப்படுத்தி இருந்தனர். துப்பாக்கி வேட்டுச்சத்தங்களினாலும் செல்லடியினாலும் அந்த இரவின்அமைதி கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தத்தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக கோயில்களை நோக்கி மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.

வீட்டில் இருக்கவும் பயம். கோவில்களிற்கு தனியாக போகவும் பயத்தினால் பக்கத்து வீட்டை நோக்கி ஓடிய அந்தப்பெண் வல்லாதிக்கத்தின் துப்பாக்கி வேட்டிற்கு பலியாகி கொத்தங்கலட்டி ஒழுங்கையில் அமைதி ஆகின்றார். சில நிமிடங்களின் முன் தனது குழந்தைகளுடன் ஆனந்தமாக இருந்த அந்தப்பெண் அநாதரவாக வீதியில் வீசப்பட்டிருந்தார். துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டவுடனேயே எட்டிப்பார்க்கவும் அஞ்சி அயலவர்களும் வீடுகளைப்பூட்டி வீடுகளிற்குள்ளேயே முடங்கிக்கொண்டனர். சம்பவம் நடந்ததை அறிந்து கொண்டதும் எதற்கும் அஞ்சாத கிட்டம்மா சம்பவ இடத்திற்கு விரைந்து அயலவர்களைத் தட்டியெழுப்பி அலங்கோல நிலையில் கிடந்த பெண்ணின் உடலை வீட்டிற்குள் கொண்டுவந்து அலங்கரித்து அவரின் இறுதிக்கிரியைகளை நடத்துவதில் முன்னின்றார். போர்க்களங்களில் முன்னிற்கும் வீரனைப்பெற்ற கிட்டம்மா அந்த வீதியையே களமாக்கி வேட்டொலிகளிற் கிடையிலும் வெறுங்கையுடன் அந்த இரவில் நடந்தது ஆச்சரியமன்று.


1981 ஆம் ஆண்டு மார்ச் 25 ந்திகதி நீர்வேலியில் நடந்த மக்கள் வங்கியின் 81இலட்ச ரூபாய் பணப்பறித்தெடுப்பும் அதனுடன் நடந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முத்துபண்டா, அபயேரத்தினா ஆகியோரது படுகொலைகளின் பின்னான பலத்ததேடுதல் வேட்டையில் எதிர்பாராத விதமாக பருத்தித்துறை மணற்காட்டுக்கடற்கரையில் போராட்டத்தின் முன்னோடிகளான குட்டிமணி. தங்கத்துரை, தேவன் ஆகியோர் கைதாயினர். இதனைத்தொடர்ந்து யாழ் குடாநாடு எங்கும் போராளிகளைத் தேடி பெருவேட்டையொன்று சிறிலங்கா காவற்துறையால் மேற்க்கொள்ளப்பட்டது. தலைவர் பிரபாகரனது மறைவிடங்களும் தொடர்சியாக மாறிமாறி முற்றுகையிடப்பட்டன. ஆனாலும் அவர் பொலிசாரின் முற்றுகையினை உடைத்துக்கொண்டு தப்பிக்கொண்டிருக்கின்றார். என்னும் செய்திகளும் பத்திரிகைகளினூடாகவும் செவிவழி புகுந்து வாய்வழியாக வதந்திகளாகவும் பரவிக்கொண்டிருந்தன. அவ்வாறான நாளொன்றில் நண்பகலிற்கு பின்னான ஒருசில மணித்தியாலங்களில் எங்களுடைய இராசலக்ஸ்சுமி வாசா வின் முன்னால் கிரீச்சிட்டப்படி நின்ற ஜீப்பில் இருந்த குதித்தோடி வந்த பொலிசார் வீடு முழுவதையும் சல்லடை போட்டு தேடினர். இறுதியில் இவ்வளவையும. அமைதியாக பார்த்துக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த கிட்டம்மாவிடம் வந்த அதிகாரி எங்கே உனது மகன் என அதட்டலாக கேட்டார்;?…… அத்துடன் கிட்டம்மாவிற்கு அருகாமையில் உணவருந்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இருந்த உணவுத் தட்டைக் காட்டி யார் ?…..சாப்பிட்டது !……. என உறுமினார். எதற்கும் கலங்காத கிட்டம்மா அமைதியாக நான் உணவைபோட்டு ஆறவைத்துள்ளேன் !…..எனக்கூறி அவர்களை முட்டாளாக்கியதையும் பின்னாட்களில் நினைத்துச் சிரிப்பார்; எங்கள் கிட்டம்மா. ஏனெனில் அவருக்குத்தானே தெரியும் வாசலில் ஜீப்வந்து நிற்கும்வரை அந்தத் தட்டில் உணவருந்திக் கொண்டிருந்தவன். அன்று காலையில் பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சையில் இந்து நாகரீகம் பாடத்தின் முதல்ப்பகுதிக்கு விடையளித்து விட்டு வந்த தனதருமை மகன் குமார்; என்றும் கிருஸ்ணகுமார் என்றும் அழைக்கப்பட்ட “தளபதி கிட்டு” என்பது அவருக்குத்தானே தெரியும். அன்றிலிருந்து இலங்கை இந்தியப் படைகளினால் அந்த வீடு சூழ்ந்து கொள்ளப்படும் போதெல்லாம் வீட்டிற்குள் காலணியுடன் படையினரை ஏறவிடாது தடுக்கும் போராட்டத்தையும் இயன்றவரை தொடர்ந்தவர்;. ஆதனால்தான் போலும் தனது வீட்டிற்குள் காலணியுடன் நுழைவதை எதிர்த தாய்போல தமிழ் மண்ணாம் யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் அந்நியர் காலடிபடுவதை தடுத்து நிறுத்தியவன் எங்கள் கிட்டு. தாயிலிருந்து தாரத்தை நாடுபவர்கள் வாழும் காலத்தில் தாயிலிருந்து தமிழ்த்தரணிக்கு வந்த “தங்கமகன்” வந்த வழியல்லவா கிட்டம்மா!……..

1961 ஆண்டில் சாத்வீகவழியில் தமிழரின் உரிமைக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் இருந்தும் கால்நடையாக வந்த சத்தியாக்கிரகிகள் யாழ் கச்சேரி முன்பாக ஒன்று கூடினர். அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து புறப்படும் குழுவினருடன் ஒருவயதுக் குழந்தையான கிட்டுவையும் தூக்கிக்கொண்டு “குண்டாந்தடிக்கு அஞ்சமாட்டோம்” எனக் கோசம் இட்டபடி முன் நடந்தவரும் கிட்டம்மாவே !……… அதனால்தானே குண்டு மழைக்குள்ளும் அவர் மைந்தனால் சென்றுவர மட்டுமல்ல வென்றுதரவும் முடிந்தது.

இன உணர்வினால் அகிம்சைப் போராட்டங்களில் முன்னின்ற சதாசிவம்பிள்ளை காந்திய பக்தராக இருந்து தனது மூத்தமைந்தனிற்கு “காந்திதாசன்” எனப்பெயரைச் சூட்டினார். அத்துடன் ஆரம்பகாலங்களில் இடதுசாரி இயக்கங்களையே பெரிதும் ஆதரித்து செயற்பட்டவர். எனினும் 1956இல் இலங்கை முழுவதும் ஏற்பட்ட தமிழுணர்வினால் உந்தப்பெற்று வடமராட்சிப்பகுதியில் தமிழரசுக்கட்சியின் மூளையாக உருவெடுத்தார். வல்வெட்டித்துறையில் “குமார் அச்சகம்” எனும் இவருடைய ஸ்தாபனமே அன்றைய தமிழரசுக்கட்சியின் காரியாலயமாக இயங்கியது. இவர் வாழ்ந்த இராசலக்ஸ்மி வாசாவிலேயே அன்றைய இனவுணர்வு படைத்தகட்சியினரின் சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன. அன்று பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினரான துரைரத்தினத்தின் வலதுகரமாகவும் அவருடைய வெற்றிக்கும் காரணமாக சதாசிவம்பிள்ளையே விளங்கினார். அகிம்சை வழியில் இவருடைய மகன் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கையுடன் பல வெற்றிகளைப்பெற்று “கேணல் கிட்டு” என்னும் பெயருடன் வங்கக்கடலில் வெந்தணல் வேங்கையாகினான். அதேபோல திரு. துரைரத்தினத்தின் மகன் “வண்டையலூர் பரமேஸ்வரன்” மேஜர் கமலாகி நெல்லியடியில் மில்லருடன் சங்கமமாகினான். அறப்போரில் உரிமை வேண்டிப்போராடிய பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டனர். காலம் காலமாக ஏமாற்றப்பட்ட இனத்தின் விடுதலைக்காக ஆயுதப்போரைத் தேர்ந்தெடுத்து களத்தில் தம்மை அர்ப்பணித்தனர் இவர்களுடைய பிள்ளைகள். தமிழீழத்திற்காக மண்ணிலும் வங்கக்கடலிலும் விதைக்கப்பட்ட மாவீரர்களாகிய இவர்களின் முன்னால் இவர்களை வித்தாக்கிய வீரத்தாய் தந்தையருக்கு உதாரணபுருசர்களாக இராசலக்ஸ்சுமி அம்மாவும் சதாசிவம்பிள்ளையும் விடுதலைவானில் வலம் வருகின்றார்கள்.

கிட்டுவின் தாய்……சதாசிவம்பிள்ளையின் மனைவி…… ஈழத்தமிழினத்தின் கிட்டம்மா என்னும் நிலைகளிற்கு முன்பாக பொன்னுக்கண்டு வள்ளியம்மா என்பவர்களின் மகளாக அஞ்சாது வலம்வந்தவர் எங்கள் கிட்டம்மா!

இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என்பவர்களை தனது உடன்பிறப்புகளாக பெற்ற கிட்டம்மா இரண்டு ஆண்பிள்ளைகளாக காந்திதாசன், கிருஸ்ணகுமார் (கிட்டு) என்பவர்களையும் சதாலக்ஸ்சுமி, தயாலக்ஸ்சுமி எனும் இரண்டு பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தவர் கிட்டம்மா, கிட்டம்மாவின் தந்தையார் கப்பல் ஓட்டும் மாலுமியாக கடல்மீது பணியாற்றியவர். இந்திய கரையோரப் பட்டினங்களான நாகபட்டினம் விசாகபட்டினம், மசூலிப்பட்டினம், காக்கநாடு, காரைக்கால், சிதம்பரம் என்னும் இடங்களில் பெற்றுக்கொள்ளும் உடுபுடவைகள், மற்றும் துணிகள், கண்ணாடிகள் என்பவற்றை அந்தமான், நக்கவாரம் (நிக்கோபார்) போன்ற இடங்களில் தேங்காய்க்காக மாற்றி அத்தேங்காய்களிற்கு பண்டமாற்றாக பர்மாவில் நெல், அரிசி என்பவற்றை கொள்வனவு செய்து அவற்றை எம்மண்ணிற்கு எடுத்துவந்து எமது மக்களின் பசியாற்றியவர். எங்கள் கிட்டுவோ அதே நிக்கோபார் கடற்பாதையிலேயே வஞ்சகர் வலையை அறுத்து 16 தை 1993 இல் வீரவரலாறு படைத்தார்;.

மகளாக மனைவியாக தாயாக, தமிழ்த்தாயாக நடமாடிய எங்கள் கிட்டம்மாவின் வாழ்கை எழுதுவதற்கு அரியது. எங்கள் கண்முன்னால் ஒரு விடுலைச் சாம்ராச்சியத்தை கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான பணிகளைக் காலம் காலமாக ஆற்றிய அவர் 28 மார்கழி 1996 இல் இடம் பெயர்ந்து வன்னியில் வாழ்கையில் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாங்களும் வாழ்கின்றோம் என நினைக்கையிலேயே எங்கள் தலை சாய்கின்றதல்லவா !

“கிட்டம்மாவின்” நினைவு தினத்தை முன்னிட்ட சிறப்புக் கட்டுரை


பொன்.சிவகுமாரன்