Sunday, May 19, 2013

முள்ளிவாய்க்காலும் தமிழீழப் போராட்டமும்



மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள். அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.

தமிழினத்தின் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை மறக்கமுடியாத மிகப்பெரிய துயரச் சம்பவமாகக் கருதப்படுகிறது. இந்த மகா இனவழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை சிறிய தண்டனை கூட வழங்கப்படவில்லை, ஆனால் இனவழிப்பில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திறார்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவுச் சக்திகள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதத்தைக் கீழே வைக்காமல், தமிழீழப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு என்று சென்றவருடம் கூறியிருந்தார் எரிக் சோல்ஹெயம். இவ்வாறான பரப்புரைகளை இன்றுவரை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள்.

சிங்களப் படையினர் தமிழர்களின் பகுதிகளில் இருந்து வெளியேறினால் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராகத் தான் இருக்கிறோம் என்று சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறினார். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காமலும், தமிழர் வாழும் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை அகற்றாமலும் இருந்து கொண்டு. தமிழர்கள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைத்து அவர்கள் சரண் அடைந்தும், சிங்களப் பேரினவாதிகளின் காலில் விழுந்திருக்கவேண்டும், அப்படி அவர்கள் நடந்து கொள்ளாமையினால் தான் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதிகள் அழிந்தார்கள் என்று கூறுகிறார்கள் சிலர். ஹிட்லரின் இனவெறியினால் உண்டான போர் வெறியால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் காரணம்? ஹிட்லருக்கு அடிபணிந்து சரண் அடையாதவர்களா காரணம்?

தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, ஊடகங்களை அனுமதிக்காது இனவெறி கொண்ட போர் வெறியில் இனவழிப்பை மேற்கொண்ட சிங்களப் பேரினவாதிகளின் செயலை மனிதவுரிமைகளை மதிப்பவர்களும், மனிதநேயமுள்ள எவராலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் சிலர் இவற்றை நியாயப்படுத்திச் சிங்கள அரசின் மீதுள்ள பழியையும் சர்வதேச சமூகத்தின் மீதுள்ள பழியையும் புலிகள் மீது போட்டு சிங்களப் பேரினவாதிகளைக் காப்பாற்ற முனைகிறார்கள்.

தேசியத் தலைவர் ஆயுதத்தைக் கீழே வைத்து, சிங்களப் பேரினவாதிகளின் காலில் விழாமல், தமிழீழப் போராட்டத்தை இறுதிவரை முன்னெடுத்தது தான் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு என்று எரிக் சோல்ஹெயம் கூறியவாறு உலகில் உண்மையில் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களால் நடந்து கொள்ளமுடியாது. அடிபணி இல்லையென்றால் எல்லோரையும் அழிப்பேன் என்ற சர்வாதிகாரத்தை எவராலும் எற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு தான் சிங்களப் பேரினவாதிகள் நடந்து கொண்டார்கள். அதனைச் சிலர் ஏற்றுக் கொண்டு சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை நியாயப்படுத்திப் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான பரப்புரைகளை முன்னெடுப்பவர்கள் ஹிட்லரின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுகிறார்களா?

அன்று மேற்கத்தேயர்கள் பல நாடுகளைக் கைப்பற்றி மக்களை அடக்கி ஆண்டு வந்தார்கள், அவர்களிடமிருந்து மக்கள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றார்கள். அன்று அடக்கி ஆண்ட மேற்கத்தேயர்கள் சிங்களப் பேரினவாதிகளைப் போன்று இனவழிப்பை மேற்கொள்ளவில்லை. மக்கள் அடக்கு முறையை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடும் உரிமையுள்ளது. அவர்களின் உரிமையை மறுத்து அவர்களை அழிப்பதே மிகப்பெரிய குற்றமாகும். தன்னுடைய சிங்கள மக்கள், அல்லது தன்னுடைய நாட்டு மக்கள் முள்ளிவாய்க்காலில் இருக்கிறார்கள் என்ற சிந்தனை சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்திருந்தால் அங்கே மிகப்பெரிய இனவழிப்பு நடைபெற்றிருக்குமா? சமாதானத்தின் ஊடாக தங்களின் உரிமையைப் பெற்றுவிடலாம் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த தமிழினத்தின் மீது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் சிங்கள அரசு போர் தொடுத்து தமிழினத்தை அழித்தது. தனது சுயநலத்திற்காக ஒரு பக்கச் சார்பான நிலையில் இருந்து கொண்டும், சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகவும் இருந்து கொண்டும், தமிழின அழிப்பிற்கு உதவியும் புரிந்து, இனவழிப்பை வேடிக்கை பார்த்தது சர்வதேச சமூகம்.

ஹிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் பல ஆண்டுகளாக தமிழருக்கு உரிமை வழங்க மறுத்து வருபவர்கள், அப்படியானவர்களுக்கு அதிகமான அழுத்தங்களைக் கொடுத்து தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய சர்வதேச சமூகம் சிங்களப் பேரினவாதப் பொய்யர்களின் பொய்ப் பித்தலாட்டங்களுக்கு தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்டுக் கொண்டு புலிகள் மீதே அதிக அழுத்தங்களைக் கொடுத்து, இறுதியில் தமிழின அழிப்பிற்கு துணையாக நின்றது. சர்வதேச சமூகம் இன்றுவரை தமிழ் மக்களுக்கு என்ன ஆக்கபூர்வமான நன்மைகளைச் செய்தது? உண்மையில் சிங்களப் பேரினவாதிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைச் செய்து இன்னும் மிகமோசமான நிலமைக்குத் தமிழ் மக்களை சர்வதேச சமூகம் கொண்டு சென்றுவிட்டது. இன்றுவரை தமிழ் மக்களின் மனிதவுரிமைகளுக்கும் அவர்களின் குரல்களுக்கும் மதிப்பளிக்காமல் சிங்களப் பேரினவாதத்தின் பித்தலாட்டங்களை நம்பிக் கொள்ளுகிறது சர்வதேச சமூகம். ஆனால் இவர்களைத் தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்பினார்கள் அவர் நேர்மையுடன் தான் நடந்துகொள்வார்கள் என்றும் இவர்கள் தங்களுக்கு நிரந்தர விடிவைப் பெற்றுத்தருவார்கள் என்றும் நம்பினார்கள். ஆனால் உறவாடி முதுகில் குத்தினார்கள்.

அன்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய கவிதை வரிதான் ஞாபகம் வருகிறது. இக்கவிதை புலிகளின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல ஈழத்தமிழரின் உள்ளக்குமுறலும் தான்.

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

உண்மையில் சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்தியாக இருந்திருந்தால் முதலில் அழிக்கப்படவேண்டியவர்கள் சிங்களப் பேரினவாதிகளே. இவர்கள் அழிக்கப்படாவிட்டால் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது என்ற உண்மையை உணர மறுக்கிறது சர்வதேச சமுகம்.

இன்று உயரிய இலட்சியத்திற்கான தமிழீழப் போராட்டத்தின் மீதும் அதனைத் தோளில் சுமந்த தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பழியைத் தூக்கிப் போடுவதற்கு சில கயவர்கள் முற்படுகிறார்கள். இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புதிய தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் வெளியாகிய கட்டுரையின் சில பகுதிகள் இவை.

ஒரு புரட்சியில் தோல்வி ஏற்படுவதுண்டு. அதனால் புரட்சி முடிந்து போனதாகிவிடாது. தோற்றதனாலேயே புரட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என்றும் ஆகிவிடாது.

பொலிவியாவில் சேகுவேரோவுக்குத் தோல்வி ஏற்பட்டது. பிடிபட்டார். பொலிவியப் படை அவரை ஒரு கிரிமினல் குற்றவாளிபோல் இழிவுபடுத்தித்தான் சுட்டுக் கொன்றது.

பின்னர் இந்நிகழ்வு பற்றி செய்தியாளர்கள் பிடல் காஸ்ட்ரோவிடம் “சேகுவேரா பெரிய தவறு செய்து விட்டார் அல்லவா” என்று கேட்டனர். அதனை உடனடியாக மறுத்து காஸ்ட்ரோ கூறினார், “ஒரு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாலேயே அதற்கான நோக்கம். முயற்சி, செயல்முறை அனைத்தும் தவறு என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. கியூபப் புரட்சியில் கூட முதலில் எங்களுக்குத் தோல்விகள் ஏற்பட்டன” என்றார்.

1905-இல் ரசியப்புரட்சி குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. மீண்டும் புத்துயிர் பெற்று 1917-இல் அப்புரட்சி வெற்றி பெற்றது.

ஒரு தோல்வி வந்தவுடன், நடந்த அனைத்துமே தப்பாக நடந்து விட்டன என்று பேசுவோர் இரு வகையினராகத்தான் இருப்பர். ஒரு வகையினர் சந்தர்ப்பவாதிகள், இன்னொரு வகையினர் எதிரியின் கையாட்கள். ஒரு தோல்வி குறித்துத் திறனாய்வு செய்ய வேண்டாமா எனில், கட்டாயம் திறனாய்வு செய்யவேண்டும். அத்திறனாய்வுத் தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்த பாய்ச்சலுக்கு செய்யப்படவேண்டும்.

புரட்சிக்கு எந்த வகையிலும் ஆதரவாகச் செயல்படாமல், வேடிக்கை பார்த்தவர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. பகைவனின் பக்கச் சார்பாளர்கள் திறனாய்வு செய்யக்கூடாது. அப்படிப்பட்ட ஆட்களின் திறனாய்வை தமிழீழ விடுதலைப் புரட்சியின் ஆதரவாளர்கள் பொருட்படுத்தக் கூடாது, புறந்தள்ள வேண்டும். இவ்வாறு அக்கட்டுரையில் உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தன.

உங்களது கடமையையும், உங்களது சுமையையும் தனது உயிரிலும் மேலாகக் கொண்டு அதனை இறுக்கிப் பிடித்துக்கொண்டார் தமிழீழத் தேசியத் தலைவர், இறுதிவரை அவர் இறுக்கிப் பிடித்துக்கொண்ட கொள்கைக்காகப் போராடினார். அவர் போராடாமல் விட்டிருந்தால் சிங்களவன் தமிழனக்கு கோவணத்தைக் கூட விட்டு வைக்காமல் அதனைக் கூட பிடித்து இழுத்து எடுத்திருப்பான். இன்று வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு முன்னரே சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை வடக்கில் சிறுபான்மையானவர்களாக மாற்றுவதற்கு கொடிய சிங்களப் பேரினவாதிகள் திட்டம் போட்டு செயல்படுத்துகிறார்கள். இது முள்ளிவாய்க்கால் போன்ற வேகமான தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கைதான்.

ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிகழ்த்தியது, ஆனால் நவின ஹிட்லரான மஹிந்த பயங்கரவாத அழிப்பு என்றும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில் அவர் மேற்கொண்ட இனவழிப்பு என்பது ஹிட்லரின் சிந்தனையை விழுத்தி அதனையும் மிஞ்சிவிட்டது மஹிந்தவின் சிந்தனை. இது தான் சிங்களப் பேரினவாதிகள் கண்ட உண்மையான வெற்றி. இன்று ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு மஹிந்த எப்படி இனப்படுகொலையைப் பயங்கரவாத அழிப்பு என்றும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற போர்வையில் மேற்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றிய பாடங்களைக் ஹிட்லருக்கு சிறப்பாகக் கற்றுக்கொடுத்திருப்பார்.

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே சிங்களப் பேரினவாத அடக்குமுறையில் இருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீளுவோம் என்று. அதற்கு நமது இனப்படுகொலையை உலகம் அங்கீகரிக்க ஒன்று பட்டு உழைப்போம். நமது உரிமைக்காகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் ஜனநாயக வழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடி அழித்து அடக்கப்பட்டு விட்டோம். இனி இவற்றுக்கு நீதி கேட்டுப் போராட வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். அதனை நாம் செய்யாவிட்டால் ஈழத்தமிழினத்திற்கு ஒருபோதும் விடிவு ஏற்படாது, கடவுளால் கூட நமது இனத்தைக் காப்பாற்ற முடியாது. ஆகையால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர விடியலை ஏற்படுத்த உலகத்தமிழினம் கடுமையாக உழைக்க வேண்டும். அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் சிங்கள அரசிற்கு எதிராகத் தொடர்ந்து தீர்மானங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கும், இதனால் ஈழத்தமிழருக்கு நன்மைகள் விளைந்து கொண்டே இருக்கும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டே தமிழர்கள் இருந்துவிடக் கூடாது. சர்வதேச மட்டத்தில் உரிமைக்களுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்கள் மேற்கொள்ளுகின்றன முயற்சிகளை விடச் சிங்கள அரசு அவற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளே மேலோங்கி நிற்கின்றன.

தமிழர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழரின் உரிமைக்காகப் போராட வேண்டும் ஆனால் ஒன்றிணைவோம் என்ற அழைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழரின் நலனுக்கு எதிராகவும் எதிரிகளிடம் சரணடைவதற்கான செயல்பாடுகளாகவும் இருந்துவிடக்கூடாது.

நாம் உறுதியாக சபதம் எடுக்க வேண்டிய தருணத்திலேயே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதத்தை நன்கு உணர்ந்து கொண்ட ஞானி எமது தேசிய தலைவர், அவர் வழியில் சென்று நமது இனத்தின் விடுதலையைப் பெறுவதற்கு இந்நாளில் உறுதிகொள்வோம். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான் அது தமிழீழம். அதனை தமிழர்கள் வென்றெடுக்காவிட்டால் ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறு மட்டும் தான் இனி இருக்கும்.

தமிழினப் பெண்களை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அவர்களை நிர்வாணமாக்கி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களின் மார்பில் தனது கால்களை வைத்துப் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சிங்களவனுக்கு தமிழர்கள் சொல்லும் செய்தி என்ன? மறப்போம், மன்னிப்போம் என்பதா? அல்லது குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தூக்குக்கயிறுக்கு அனுப்புவோம் என்பதா? வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்பது நமது மறத்தமிழர் பிரபாகரன் அவர்களின் வாக்கு.

விஸ்வா

ஆர்மேனிய இனப்படுகொலை, குவாதமாலா அதிபருக்கு வழங்கப்பட்ட தண்டனை தமிழருக்குத் தரும் நம்பிக்கைகள்.


முதலாம் உலகப் போர் நடைபெற்ற, 1915-1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒட்டோமான் பேரரசினால் 1.5 மில்லியன் வரையான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று சிறீலங்காவின் இனப்படு கொலைகளுக்கு அஞ்சி தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்ததுபோன்றுதான், அன்று ஒட்டோமன் பேரரசின் தாக்குதலுக்கு அஞ்சி உலகம் முழுவதும் ஆர்மேனியர்கள் சிதறிப் போனார்கள். ஒட்டோமான் பேரரசின் இந்த அழிப்பு நடவடிக்கையை ஒரு இனப்படுகொலை என்றே ஆர்மேனியா கூறிவந்தது. ஆனாலும், உலகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

படுகொலை நடைபெற்று நூற்றாண்டுகளை எட்டும் நிலையில், ஒட்டோமன் பேரரசு நடத்திய இந்தப் படுகொலையை, இனப்படுகொலை என்று பிரான்ஸ் தேசம் அங்கீகரித்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் பிரென்சு மேலவையில் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதுடன், நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 45,000 ஈரோக்கள் வரை அபராதமும் விதிககும் சட்டமூலத்தையும் நிறைவேற்றியது.

ஆனாலும், ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிய குடியரசு, நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த இந்தப் படுகொலையை இனப்படுகொலை அல்லவென்றும், கொல்லப்பட்டவர்கள் மிகக் குறைவென்றும், பிரான்ஸ் அரசு தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டிவருகின்றது. ஆனாலும், காலம் கடந்தேனும், தங்கள் இனத்தின் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை இந்த உலகம் ஏற்றுக்கொண்டதில் ஆர்மேனியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாதமாலா 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

எனினும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களாலும், அயல்நாட்டு அரசியல் தலையீடுகளாலும் குவாதமாலாவின் பூர்வீக குடிகளான மாயா இன மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். அகிம்சை வழியிலான அவர்களது போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில், 1960களில் ஆயுதத் தாங்கிய கெரில்லாப் போராட்டங்களில் குதித்தார்கள். விளைவு தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதில் கங்கணம்கட்டிநின்றார்கள்.

இலங்கைத் தீவைப்போல் மாறிமாறி ஆட்சியிலமர்ந்த எல்லோருமே, கெரில்லாக்களை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அந்த மக்களை ஒடுக்குவதிலேயே முன்னின்று செயற்பட்டார்கள். இவர்களில் மாறுபட்ட ஒருவராக இராணுவ அதிகாரியாக இருந்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்தான் எஃப்ரெய்ன் ரியோஸ் மான்ட் (Efraín Ríos Montt). 1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் ஆட்சியைக் கைப்பற்றியபோது, அமைதியான நாட்டை உருவாக்கியுள்ள

தாகக்கூறி இவருக்கு பெரும் தொகைப் பணத்தை அள்ளிக்கொடுத்தது அமெரிக்கா. ஆனால், அந்தப் பணம் இன்னும் அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவே என்பதை பின்னர்தான் பலரும் உணர்ந்துகொண்டார்கள். சுமார் 15 மாதமே (1983 ஓகஸ்ட் வரை) இவர் பதவி வகித்தபோதும், இவரது ஆட்சியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 50 ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கடத்தப்பட்டவர்கள் உலங்குவானூர்திகளில் ஏற்றிச்செல்லப்பட்டு பசுபிக் பெருங்கடலில் உயிருடன் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவரது ஆட்சிக் காலமே மிகவும் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டது. இலட்சக் கணக்கானவர்களின் படுகொலைக்கு இவர் காரணமானபோதும், 1771 பேரது படுகொலைக்கு இவரே காரணம் என்றும் இதுவொரு இனப்படுகொலை என்றும் இவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை ஏற்றுக்கொள்ள குவாதமாலா அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில்தான் 2006ம் ஆண்டும் இவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் முடிவில் இவர் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் அவருக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. “இனப் படுகொலை நிகழ்ந்ததற்கு ரியோஸ் மூல காரணமாக இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இனவெறி காரணமாக ஒரு குறிப்பிட்ட இனம் முழுவதையும் அழிக்க முயற்சி செய்துள்ளார். இதுபோல அவர் மீதான போர்க்குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை குற்றத்துக்காக 50 ஆண்டுகளும், போர்க்குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்படுகிறது” என்று இந்த வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன், ரியோஸின் வீட்டுக் காவலை இரத்து செய்து அவரை சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் குழுமியிருந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரியோஸ் மேல் முறையீடு செய்ய முடியும் என்றபோதிலும், ரியோஸ் மான்ட் இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் இலத்தீன் அமெரிக்கர் ஆகியுள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என மனித உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்துவெளியிட்டுள்ளனர். ஏனெனில், உலகிலேயே முதன்முறையாக இனப்படுகொலை வழக்கில் அதே நாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இன, மத, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட இன மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காலம் கடந்தேனும் ஆர்மேனியர் மீதான இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட்டதும், குவாதமாலா முன்னாள் ஜனாதிபதிக்கு இனப்படுகொலைக்காகத் தண்டனை வழங்கப்பட்டதும், இன அழிப்பிற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்திகளாக உள்ளன. சிங்களப் பேரினவாதம் இவர்களையெல்லாம் விட மிகக்கொடூரமான இனப்படுகொலையை தமிழர்கள் மீது புரிந்துள்ளது. 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இந்தப் பேரினவாதம் நடத்திய தனது இன அழிப்பின் உச்சத்தை தற்போதை ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எட்டியுள்ளார். இந்த இன அழிப்பைத் தனது ஆட்சியின் பெரும் வெற்றியாக கொண்டாடியும் வருகின்றார்.

கிடைத்துவரும் உலக ஆதரவுகளும், பாதுகாப்பும் தற்போது இவர்களை விட்டுவைக்கலாம். ஆனால், இவர்களும் இனப்படுகொலையாளிகளாக இந்த சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் நாள் விரைவில் வந்தே தீரும். காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதியை விடக் கொடுமையானது. காலத்தைக் கடத்ததாது அந்த நாளை புலம்பெயர்ந்த தமிழர்கள் விரைந்து உருவாக்கவைப்பதே, முள்ளிவாய்க்கால் இறுதிவரையும் அதற்குப் பின்னரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தளவு நீதியாக இருக்கமுடியும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

Friday, May 17, 2013

ஒன்று சேரடா!


வெட்டும்போது கைகள் தட்டி ஆடவா- குண்டு
வீசும்போது பாசம் விட்டுஓடவா
தட்டி எம்நிலம்பறிக்க தாங்கவா - எங்கள்
தாய்நிலத்தை விட்டு எங்கும் ஓடவா
கட்டிஎங்கள் மாதர் கொல்ல மூடவா - கண்கள்
காணலற்ற பேடியென்று ஆகவா
எட்டியெம் பிணம் உதைக்க ஏங்கவா - இல்லை
எம்நிலத்தை மீட்க ஒன்றுகூடவா

சொட்டி இரத்தம் ஆறுபோலஓடவா - நாமும்
சொல்லதற்ற ஊமையென்று நோகவா
முட்டி எம்மை கீழ்விழுத்த வீழாவா - வீழும்
மூடரென்றவன் இழிக்க வாழ்வதா
தட்டியென்ன வென்று கேட்ட தலவனாம் - அன்று
தலைநிமிர்ந்த வாழ்வுகண்ட தமிழனாம்
பெட்டியுள்ளே பாம்பு அல்ல நாமடா - அவன்
பேசிப் பொய்யை ஊதநின்று ஆடவா

எத்தனையென் றெண்ணும் ஆட்கள் நாங்களா நீயும்
செத்தபின்பு பார்க்கலாம் என்றாரடா
புத்தன்வம்சம் வெட்டவெட்ட பாரெல்லாம் - உளம்
புல்லரித்து கண்ட காட்சி நூறடா
சத்தியத்தை நம்பிநம்பி வீழ்ந்தமோ இந்த
சங்கதிக்கு இன்னம் நூறு வேசமோ
பொத்தி பொத்திவைத்த உண்மை தெரியுதா -இந்தப்
பேய்கள்வாழும் பூமி என்பதுண்மையா

ஒற்றைப்பாதை ஒன்றுசேர்ந்து கொள்ளடா - எங்கள்
உரிமையென்று பகைவிடுத்து சேரடா
வெற்று வாதம்விட்டு உண்மை எண்ணடா - உன்
வேலை எங்கள் ஈழம் காத்தல் தானடா
கற்றும் வாழ்வில் தூய்மைகெட்ட உலகடா - எம்
காக்கும் தெய்வமென்று எண்ணல் பொய்யடா
சொற்களோடு சென்று பேசு பேசடா - உன்
சொல்லில் வில்வளைத்து கொள்ளப் பாரடா

வாயிருக்க ஆயுதங்கள் வேண்டுமா - உன்
வார்த்தை என்ப இறைவ னீந்த வேலடா
போயிருந்து பேசு உண்மை கூறடா - உன்
பேச்சுவன்மை வெல்லும் உள்ளம் நூறடா
தேயிதென்றே எண்ணி திங்கள் சோர்வதா- அது
தேறும் மீண்டுமென்ப தென்ன அறியடா
ஆயிரமென் றேயுன் கைகள் இணையடா - அதில்
அன்னைத் தமிழ் ஈழம் வெல்லும் பாரடா

கிரிகாசன்

Wednesday, May 15, 2013

மே 18, கூடுவோம் வா



தேகம் துடித்திட வேண்டும் உந்தன்மன

திண்மை கொதித்தெழ வேண்டும் சுதந்திர
தாகம் வருத்திட வேண்டும் ஈழமது
தாங்கும் துயர் எண்ண வேண்டும் நிலமதின்
பாகம் பிரித்தொரு எல்லை வகுத்திடும்
பாங்கு மனம் கொள்ளவேண்டும் எதற்கென
வேகம் விடுத்துமே தோழா காலமதை
வீணாய் கழிப்பதோ சொல்லு!

மேனி பதைத்திடவேண்டும் மனதினில்
மின்னல் வெடித்திடவேண்டும் உந்தன்மன
வானின் இடியெழும் சேதி வந்துஉந்தன்
காதில் ஒலித்திடவேண்டும் சுதந்திர
ஆணை யுடன் திருநாட்டை ஆளுமொரு
ஆசை பிறந்திடவேண்டும் இதைவிட்டு
ஏனோ தயங்கினை தோழா பகைவனை
ஏனென்று கேட்டிட வாடா

கெட்டியாகக் கைகள் பின்னே பிணைத்துமே
கீழ்மன தோடவர் சட்டை கழற்றியே
கட்டியவர் கண்கள் மூடிக் கொடியவர்
காலாலு தைத்தவர் மெய்யை இழிசொல்லு
கொட்டிச் சிரித்தவர் சுட்டு உயிரது
கூட்டைவிட்டுவெளியேறத் துடித்திட
விட்டு வெறுமனே வீட்டில் இருந்துநாம்
வேடிக்கை காண்பதோ தோழா

ஓடி நரம்பினில் சூடு எழுந்துன
துள்ளமதில் வீறு கொண்டு சுதந்திரம்
தேடி நீதிதனைக் கேட்க மறந்துமே
தின்று படுப்பதோ தோழா பலருடன்
கூடிக் கதைகளைப் பேசி உறவுடன்
கொஞ்சிப்பேசி விளையாடிப் படுத்துமே
ஆடித்திரிந் தனையாகில் வருவது
ஆக அவலமென் றாகும்

உற்ற வரையறை யெல்லாம் விட்டேஅவர்
உண்மைதனைப் போர்வையிட்டு நேர்மையதை
விற்று விலைதனைக் கொண்டு தமிழனை
வெட்டி அழித்திட விட்டு செய்யுமந்த
குற்றந்தனை கேட்க நீயும் தெருவினில்
கூடிஎழவில்லை என்னில் உனதரும்
சுற்றம் உறவுகளோடு சேர்ந்துநீயும்
சொல்லாத் துயருற நேரும்

கவிஞர்:கிரிஷாசன்

குமுதினிப்படகு கோரப்படுகொலை – 28வது வருட நினைவறா நாள்!



சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 28 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை உலகம் கண்டும், கண்டுகொள்ளாததைப் போல்மௌனித்திருக்கிறது.

குமுதினிப்படகின் கொடுமை நடந்து சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின்னால் அதே மே மாதத்தில் ஒட்டுமொத்த வன்னித் தமிழினமும் பிய்த்தெறியப்பட்டு உயிரோடு எரித்தும், உயிரோடு மண்ணுள் புதைத்தும், எஞ்சியவர்கள் நடைப்பிணங்களாகவும் ஆக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடிய வலிகளைத் இன்னமும் தாங்கி,மனதை விட்டகலாத் துயரோடு அந்த மண்ணின் மலர்களுக்கு கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.
இன்றைக்குப் போலிருக்கிறது அந்த அனர்த்தம்.

28 ஆண்டுகழிந்து விட்டது என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
கடல் வெளியில் பிணந்தின்னிப் பேய்களினால் அனாதரவாய்க் கிள்ளியெறிந்த எம் ஊரின் உறவுகளுக்கு எம் கண்ணீரைக் காணிக்கையாக்கத் துடிக்கின்றோம்.
எம்மிடமிருக்கும் கடைசிச்சொட்டுக் கண்ணீராலும்,
உங்கள் காலடியை நனைக்கத் துடிக்கின்றோம்.
இன்னமும் மானிட இருத்தலை மறுதலித்தெறிந்து
சுடுகாடாய்க்கிடக்கிறது இத் தேசம்.
திரும்பும் திசையெங்கும் மரண வலி.
ஊருக்காய் உயிர் கொடுத்த உத்தமர்களே,
உங்களை எங்கள் மனதினுள் பத்திரப்படுத்துகின்றோம்.
இதைத் தவிர உங்களுக்கு உறுதியாகச் சொல்லவல்ல
வார்த்தைகள் எதுவும் இன்று எம்மிடம் இல்லை..


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இறுமாப்போடு தனித்த தமிழ்த் துண்டாய் நீண்டு கிடக்கும் நிலம் தான் நெடுந்தீவு. ஒல்லாந்தியரும், போர்த்துக்கேயரும், பிரித்தானியருமாய் நெருக்கிப் போட்ட நெருக்குவாரப் பிடிகளிலிருந்தெல்லாம் தப்பித்து தனித்துவமாய் நிலைத்து நிற்பது நெடுந்தீவு. இந்துமாக் கடலினுள் செருக்கோடு நீட்டி நிமிர்ந்து கிடக்கிற இந்த நெடுந்தீவைப் பட்டணத்தோடு இணைப்பதற்கான பாலமாகத் திகழ்வன படகுகள்தான். இவ்வாறான படகுகளின் வரிசையில் குமுதினியும் ஒன்று. இந்தப்படகினைத்தான் 28 வருடங்களுக்கு முன்னர் அரச கூலிப்படைகள் நட்டநடுக் கடலில் வைத்துத் துவம்சம் செய்தார்கள்.

குமுதினிக் கோரக்கொலைகளின் கடைசிச் சாட்சியமாயும்,சத்தியமாயும் ஓடிஓடிக் களைத்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம். குமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் அவர்.அந்த வாக்குமூலங்களால் இத்தனைகாலமாக அரச படைகளால் துரத்தப்பட்டு தலைமறைவாயிருந்தவர். தன் அன்பு மனைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவர் இப்போ இலண்டனில் அகதியாகியுள்ளார்.

ஈழநேசனுக்காக அவரிடம் தொடர்பு கொண்டபோது, ‘குமுதினிப் படுகொலை யென்பது ஒரு தனிமனிதப் படுகொலையல்ல. அது ஒரு ஊரின் மரணம். அது ஒரு இனத்தின் மரணம் பூவும் பிஞ்சும் காயுமாய் குதறியெறிந்த ஒரு நந்தவனத்தின் முற்றுப் புள்ளி. பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல் குதறித் தின்ற கொடிய பேய்களின் கோரத்தாண்டவம்.

நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.

பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்ற நம்பிக்கை கூட அரசப் பேய்களின் வன்னி வெறியாட்டத்திற்குப் பிறகு வற்றிப் போய்விட்டது.என்றார் அவர். நெடுந்தீவிலிருந்து அன்று புறப்பட்ட குமுதினியை கடல் பேய்களிடமிருந்து தப்பித்து வைப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.அப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது. இயலாமையோடு, அந்த அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் மட்டுமே எழுப்பினர். ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின.

கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.அப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடிப் பெருமையுடன் சூட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது. பெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள்,கணவன் முன்னால் மனைவி எனத் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர். குமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று எவருக்கும் தெரியாது போயிற்று.

புத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணத்தில் 7 மாதப் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ….? என்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. சிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் J.R.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் முதல் 70 வயது தெய்வானையம்மை ஆகியோரோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். கசப்பான அந்த அனுபவப் பதிவில் என்னப்போல் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.


ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகம் இதனைக் கொடுரங்களாக நோக்காது வெறும் காட்சிப்படங்களாகப் பார்த்து மகிழ்ந்தது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த ஒட்டுமொத்த அவலமாகக் கடந்த வருடமும் அமைந்து போனது.. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் குமுதினியின் அன்றைய நாளினை ஒரு தடவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்…. ஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது.

உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா….? நீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா…? கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா…? 28 ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி தினமும் ஓடிகொண்டிருந்த குமுதினி 28 ஆண்டு கடந்து இன்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த காட்சிக்கு சாட்சியாக ஓடிக்களைக்கிறது. 28வது ஆண்டு குமுதினிப் படகு படுகொலையின் நினைவு நாள் மே 15 ந் திகதியாகும்.

துவம்சம்” அல்லது நினைவறா நாள் – ( 15-05-1985 )

குமுதினி ………
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்
இனிய தீவினை ……..
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்…….
ஓலையும், ஒடியலும் ………
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்……..
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
“மனிதமே, நேயமென்று”
தன் மடிமீது சுமந்து ……
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..
காலில் நசிபடும் செருப்பு ……..
தீபாவளிப் புத்தாடை …..
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….
எல்லாமே …… எல்லாமே ……….
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் – என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….
மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……
அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ……….
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..

பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….
குடவிலி, குவிந்தா …….
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..
பெருந்துறையீறாய்………
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் …….
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ……..
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..
அலைகடலின் மடியிருந்து ……
வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!


“மா.சித்திவினாயகம்” – மாவிலி” மலரிலிருந்து …

நெருப்புமிழ்ந்த மே 18...



இருப்பிழந்த இனத்தின் மேல் 
பேரினவாதம் 
நெருப்புமிழ்ந்த மே 18... 
நிஜங்களைத் தொலைத்துவிட்டு 
வலிகளை வாங்கிவந்த மே 18 
முடக்கப்பட்டுவிட்ட 
எம்மினத்தின் 
முகவரிகளைத் தான் தேடியலைகின்றோம்.. 
ஒவ்வொருவரும்.... 
உறவுகளை இழந்து 
உரிமைகளைத் தொலைத்து 
ஊமைகளாக வாழ்கின்ற 
எங்களைத் தழுவிச் செல்லும் 
காற்றே......... 
சற்று நின்று 
இரத்தமும் சதையும் மக்கிப் போய். 
மண்ணோடு மண்ணான 
எங்கள் உறவுகளின் தொகையை ஒரு முறை 
உலகுக்குச் சொல்வாயா??? 

சாஹாரா

யார் குற்றம்


ஒற்றை கொலுசோடு
உருகுலைந்து கிடக்கும்
பெற்றவள் உடலருகெ
பிள்ளையும் நசுங்கி…
… …. … 
உலகே…. ….
இங்கே குற்றம் என்ன?

ஈழத்தில் தமிழினமாய் பிறந்ததா?
இல்லை _ நீ
இலங்கையை கண்டிக்க மறந்ததா?

நான் சித்தன்

மே-18 : விழிமழைக் காலம் விரைவில் மாறும்



காலம் எழுதிய துயரக் காவியம்
கண்களை இன்னும் நனைக்கிறதே-மன
ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை
உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.

இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை 
ஏந்திய படியே அழுகிறதே-அலை
புரளும் கடலும் மௌனம் நோற்று
புவியை வெறுத்து எழுகிறதே.

உறக்கம் குதறும் ஊமை நினைவுகள் 
உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்
உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்
ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.

முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது 
முளைத்த மரணப் புதர்களிலே-எம்
பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட
பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.

விழிமழைக் காலம் விரைவில் மாறும் 
வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்
வழிநடைப் பயணம் ஈழம் அடையும்
வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.

-ஆரூர் தமிழ்நாடன்

Tuesday, May 14, 2013

இறந்து வடித்தக் கண்ணீர்!




கருவறைக்குள்ளேயே…
புறச்சூழலின் அதிர்வுகளை
புரிந்துணர்ந்தேன்.

என்னைச் சுமந்தவள்
ஏக சக்திகளை இழந்திருந்தாள்
என்னைக்காக்கும் பொருட்டு.

என்னை பெற்றெடுக்க
ஒரு காட்டு மரம்
நிழல் தந்தது!.

தாக்குதல் அத்தனையிலும்
என்னைக்காக்கவே
எல்லா நாளும் போராடினாள்
அம்மா.

“அம்மா”
என்று அழைத்தப்பின்னும்,
“அம்மா”
என்பதைக் கேட்டப்பின்னும்
நிகழ்த்தப்பட்டிருந்தால்…
நிறைவை தந்திருக்கும்,
எங்கள் மரணம்.

இது,
நீங்கள்
இரங்க வடித்தக் கவிதையல்ல.
நான்,
இறந்து வடித்தக் கண்ணீர்.

( ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009. சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் மாண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில்…இந்த அழகிய மழலையும் அடக்கம்)

நான் சித்தன்

அதிசய மரணம்!


கருவறையை
கல்லறையாக்க,
துப்பாக்கி ரவைகள்,
கர்ப்பிணியின் உடல் புகுந்து
சிசு உயிர் துளைத்து…

பிறப்பிற்கு முன்னேயும்
மரணத்தை நிகழ்த்தும்
இலங்கையின் இனவெறிக்கு
இது உதாரணம்,
இதைவிட எது உலகரணம்?

நான் சித்தன்

Friday, May 10, 2013

நம்புவோம் நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்



"த பியானிஸ்ட்" சமகால வலியின் நிழல்: யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு நட்சத்திரக் குறியிட்ட கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும் என்று ஜேர்மானிய ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அதற்குப் பணியாதவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அடையாள அட்டை இல்லாத தமிழர்கள் வீதிகளில் இறங்கவே அச்சப்படுவதை அது நினைவூட்டியது. அது எங்களில் ஒரு அங்கம்போல, ஆடைபோல கூடவே இருந்தது. மறுவளமாக, தமிழர்கள் என்று இனம்பிரித்துக் காட்டவும் கைதுசெய்யவும் அது பேரினவாதப் படைகளுக்கு உதவியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அஞ்சிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் அணிந்துகொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜேர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யூதர்கள் அனைவரும் பெயர்ந்து சென்றுவிடவேண்டும் என்று மேலும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?)

“வார்சாவில் நாங்கள் நான்கு இலட்சம் யூதர்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்குள் எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் இங்கேயே தங்கிவிடலாம்.”என்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. இந்த நான்கு இலட்சம் என்ற எண்ணிக்கையை நாம் எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆம். வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களாலும் எண்ணிக்கைகளாலுமே வனையப்பட்டிருக்கிறது.


இதனிடையில் ஷ்பில்மானின் பிரியத்திற்குரிய பியானோவையும் விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சொற்ப உடமைகளுடனும் சோர்ந்த முகத்துடனும் அவர்கள் சாரிசாரியாகப் பெயர்ந்து செல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போகிறார்கள். முதியவர்களை சக்கரநாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போகிறார்கள். 1995இல் ‘ரிவிரச’இராணுவ நடவடிக்கையின் போது பெயர்ந்துசென்ற மக்களையும், 2009இல் பதறிய முகங்களோடு உயிரொன்றே மிச்சமாக வவுனியாவுக்குப் பெயர்க்கப்பட்டவர்களையும் நினைவூட்டியது அக்காட்சி. தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அவர்களது விசும்பல் அவ்விடத்தை நிறைக்கிறது. ஷ்பில்மானும் அவனது குடும்பமும் அந்தக் கூட்டத்தில் நடந்துபோகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அந்த செலோ வாத்தியக்காரியை ஷ்பில்மான் காண்கிறான். “இது நீதியில்லை”என்கிறாள் அவள்.

அனைத்து யூதர்களையும் ஓரிடத்தில் குவித்தான பிறகு அந்த இடத்தை மறித்து சுவர் எழுப்புகிறது நாஜிப்படை. இப்போது போலந்து இரண்டுபட்டுவிட்டது. யூதர்கள் – யூதர்கள் அல்லாதவர். இப்போது ஜேர்மானியர்களோடு சேர்ந்து வறுமையும் அவர்களை வதைக்கிறது. பிழைப்பதற்கு வழியில்லை. வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவனைக் கண்டீர்களா என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் கேட்டபடியிருக்கிறாள். அவள் மனம் பிழந்து போயிருக்கிறாள். பசியில் விழுந்து இறந்தவர்களின் பிணங்கள் தெருக்களெங்ஙணும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த ஜனங்கள் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள். இங்கே ‘யூதர்கள்’என்று வருமிடங்களில் ‘தமிழர்கள்’என்று பிரதியீடு செய்தும் வாசிக்கலாம். நொந்து நோய்மைப்பட்ட அந்த ஜனங்களை நடனமாடும்படி பணிக்கிறார்கள் ஜேர்மானியச் சிப்பாய்கள். கண்களில் அடக்கப்பட்ட கோபம் ஒளிந்திருக்க அவர்கள் ஆடுகிறார்கள்.


கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிலும் இல்லாமல் இல்லை. ஆட்சியாளர்களுடன் கூடிக் குலவும் ஒருவன் ஷ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமானவனாக இருக்கிறான். “நீங்களும் என்னைப்போல ஜேர்மானியர்களிடம் பணியில் அமருங்கள்”என்கிறான். “நீ பொலிஸ் ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோ வாசிக்கலாம்”என்று சகோதரர்களுக்கு ஆசை காட்டுகிறான். ஷ்பில்மானும் சகோதரன் ஹென்ரிக்கும் மறுத்துவிடுகிறார்கள். அவன் வன்மத்தோடு வெளியேறிச் செல்கிறான். வன்மத்தோடு வெளியேறிச் செல்பவனில் நீங்கள் யார் யாரைக் காண்கிறீர்கள் நண்பர்களே?

இதனிடையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட சில இளைஞர்கள் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தன்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும்படி ஷ்பில்மான் கேட்கிறான். “நீ அறியப்பட்ட இசைக்கலைஞன். உலகத்திற்கே உன்னைத் தெரியும். உனக்குப் புரட்சி ஒத்துவராது”என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.

படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ‘வரலாறு ஓ இந்த வரலாறு!’ என்று நினைத்துக்கொள்ளும்படியாக அத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன ஒடுக்குமுறைகளுள், இனவழிப்பில்.

“நாங்கள் இங்கே அடிமைகளாகச் செத்துமடிந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவிலிருக்கும் யூதர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள்? ஜேர்மனி மீது படையெடுக்கும்படி அங்குள்ள யூதர்கள் அமெரிக்காவைத் தூண்டவேண்டும்”என்று ஷ்பில்மானின் தந்தை ஓரிடத்தில் ஆதங்கம் பொங்கச் சொல்வார்.

‘நீங்கள் எழுதிய வார்த்தைகளை யாரோ உங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார்கள்’என்ற கவிதை நினைவுக்கு வருகிறதா? ஒரே சாயலுடைய வார்த்தைகளை வரலாறு செவிமடுத்தபடியே இருக்கிறது. எனக்கு தமிழகத்தின் நினைவு வந்தது. ஆறரைக் கோடித் தமிழர்கள் தமிழகத்தில் இருந்தும், இந்திய மத்திய அரசை இலங்கை அரசுக்கெதிராக சுண்டுவிரலசைக்க வைக்கக்கூட முடியவில்லை. அதற்கு ஆறரைக் கோடித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக அரசின் அசமந்தப் போக்கும், அவலங்கள் மீதான பாராமுகமும், அதிகாரத்தோடான சமரசங்களும் தானேயன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது. 1940ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அறுபத்தொன்பது ஆண்டுகளில் மனிதநாகரீகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறதென்று யாராவது சொல்வரெனில் அது மனதறிந்த பொய்யாகவே இருக்கமுடியும். காலந்தோறும் அறம் செத்துச் செத்துச் சீவித்துக்கொண்டிருக்கிறது.


ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தில், நிறத்தில் மட்டுமே வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களது குரூரமும், பிறவதையில் களிக்கும் மனமும் ஒன்றேதான். பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தனித்துவைக்கப்பட்டிருக்கும் அவர்களை நோக்கி நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் கூரிய நகங்கள். இதை வாசிக்கும் பலருக்கு அந்த இருளிலும் இருளான கொடிய இரவுகள் நினைவில் வந்து எலும்புக்குருத்துக்களைச் சில்லிட வைக்கலாம். நாய்களும் அச்சத்தில் மௌனித்திருக்கும் வீதிகளில் இராணுவ வண்டிகள் கிரீச்சிட்டபடி வந்து நிற்கும். விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் சுவாசிக்கும் ஒலி எங்களுக்கே பேரதிர்வாய் கேட்க உயிர் உறைந்து மரணத்தின் காலடி நெருங்குவதைக் கேட்டிருப்போம். தடதடவென கதவுகள் நடுங்க அறைந்து பிறழ்ந்த தமிழிலோ சிங்களத்திலோ கூப்பிடுவார்கள். சிலரைத் தேர்ந்தெடுத்து பிடரியில் அறைந்து வண்டிகளில் ஏற்றிச்செல்வார்கள். அல்லது வண்டிகளை ஏற்றிக்கொல்வார்கள்.

‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து எறிந்துகொல்கிறார்கள். பிடித்துக்கொண்டு போனவர்களை கட்டிடத்தின் கீழேயே வைத்துச் சுட்டுக்கொல்கிறார்கள். பிடிவிலக்கித் தப்பியோடியவனின் தலையில் பாய்கிறது சன்னம். இராணுவ வாகனங்கள் நகரும்வரை, வெடித்தெழும் கண்ணீரையும் கதறலையும் நெஞ்சடக்கிக் காத்திருக்கிறார்கள் பெண்கள்.

ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை பொலிஸ் கைதுசெய்துகொண்டு போகிறது. தனது சகோதரனை விட்டுவிடும்படி ஏற்கெனவே பரிச்சயமான அந்த யூதப் பொலிஸ்காரனை மன்றாடுகிறான் ஷ்பில்மான். வழக்கமான பதிலை அவன் சொல்கிறான். “ஹென்ரிக்கை நான் காணவில்லை” இதே பதிலை ஈழத்தில் இராணுவ முகாம்களின் வாசல்களிலும் பொலிஸ் நிலையங்கள் முன்பும் காலையிலிருந்து இரவு வரை தவம்கிடக்கும் தாய்மார் அடிக்கடி கேட்க விதிக்கப்பட்டவர்கள். ஜேர்மானியர்களை நத்திப் பிழைக்கும் அந்த யூதப் பொலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலை செய்கிறான். அந்தப் பொலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனது இசைத்திறமையினாலோ எதனாலோ வெளிக்காட்டப்படாத அபிமானம் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நெஞ்சை உருக்கும் சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. சிங்கள இராணுவத்தினர் எறியும் உணவுப் பொட்டலங்களுக்காக கூட்டத்தில் இடிபட்டபடி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக தமிழர்கள் மாற்றப்பட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்தப் புகைப்படங்கள் நினைவுக்கு வந்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது. பிறகு… பிறகென்ன… நீங்கள் நினைப்பதுதான். ‘த பியானிஸ்ட்’இல் ஒரு முதிய பெண் தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வாள். அதைத் தெருவாசியொருவன் தட்டிப்பறிக்கப் பார்ப்பான். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்திவிடும். நிலத்தில் சிந்திய உணவை அந்த மனிதன் மிருகத்தைப்போல படுத்து நாக்கினால் வழித்துச் சாப்பிடுவான். அந்தப் பெண் திகைப்பும் ஆற்றாமையும் பொங்க அவனை அடித்து அடித்து அழுவாள். அவனோ அடியைப் பொருட்படுத்தாமல் ஒரு துளியும் விடாமல் உண்பதிலேயே கவனமாக இருப்பான். பசி மனிதர்களை மிருகங்களிலும் கீழாகச் சபித்துவிடுகிறது.

1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி.

யூதர்களில் பெரும்பாலானோரை புகைவண்டிகளில் ஏற்றி கண்காணாதோர் இடத்திற்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் ஜேர்மானியப்படையினர்.

“எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?”என்றொரு பெண் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து ஒரேயொரு சூடு. அதுதான் அவளுக்கான பதில்.

புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”ஒரு பெண் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

“எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.

இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.

இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்க முடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

“எங்களை எங்கே கொண்டு போகிறார்கள்?”முதியவர்கள் தங்களுக்குள் விசனத்தோடு கிசுகிசுக்கிறார்கள்.

“கடூழியத்திற்காக நாம் கொண்டுசெல்லப்படுகிறோம்”

“அங்கவீனர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?”

மௌனம் மரணத்தைக் கட்டியம் கூறுகிறது.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள்.

“அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?”ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள்.

“வெளியேறும்படி ஜேர்மானியர்கள் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென்று அவள் நினைத்தாள். ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்கமுயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சடங்கிச் செத்துப்போயிற்று.”

“நான் ஏன் அப்படிச் செய்தேன்… நான் ஏன் அப்படிச் செய்தேன்…?”

புகையிரதம் மரணவண்டியென வந்து நிற்கிறது. அவர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல இழுத்தெறியப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு புகையிரதத்தினுள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து பிரித்து வெளியில் எறிகிறது. அந்த யூதப் பொலிஸ்காரனுடைய கைதான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை, சகோதரர்களை விளித்துக் கூவியழுகிறான். அவர்களை நோக்கி ஓட முயல்கிறான். பொலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.

“முட்டாளே! நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன். ஓடு”

விடை கிடைத்துவிட்டது.

புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்துசெல்கிறான் ஷ்பில்மான். அவனது வீடு சூறையாடப்பட்டிருக்கிறது.


அதன்பிறகான அவனது நாட்கள் உயிர்தரித்திருப்பதற்கான எத்தனத்தில் கழிகின்றன. கடூழிய காலத்தில் சில புரட்சியாளர்களின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஆயுதங்களை ஒளித்துவைக்க அவன் உதவிசெய்கிறான். கடூழியத்திலிருந்து தப்பித்து பாடகி ஒருத்தியின் உதவியால்- பூட்டப்பட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறான்.

ஒருநாள் ஜேர்மானியர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சண்டை நடக்கிறது. ஈற்றில் கிளர்ச்சியாளர்களை ஜேர்மானியர்கள் அடக்குகிறார்கள். எஞ்சியவர்களைச் சுட்டுக்கொல்கிறார்கள். அடைபட்டிருக்கும் வீட்டிலிருந்து அத்தனைக்கும் மௌனசாட்சியாகிறான் அந்த இசைக்கலைஞன். அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பீங்கான்கள் விழுந்து நொருங்கும் ஓசை அவனது ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அசூசையும் ஆத்திரமும் பொங்க ‘யூதன்… யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்… பிடியுங்கள்’என்று கத்துகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்ளும்படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் பெண்ணினுடையதாக – செலோ வாத்தியக்காரியினுடையதாக இருக்கக் காண்கிறான். காதல் மலர் கண்ணெதிரில் உதிர்கிறது. அவள் இப்போது வேறொருவனின் மனைவி.

அவளும் அவளது கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் ஒளித்துவைக்கிறார்கள். எப்போதாவது உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் கணத்தில் அவனது உயிர் பிரிந்துவிடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். வெறுங்காற்றில் அவனது விரல்கள் இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் மஞ்சள்காமாலையில் விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவளும் கையசைத்து வேறிடம் போகிறாள். இதனிடையில் அவனுக்கு எப்போதாவது உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துபோகிறான். அவன் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறான் நோயோடும், பசியோடும், நம்பிக்கையோடும்.

புரட்சியாளர்களுக்கும் ஜேர்மானியப் படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழும்பி ஓடுகிறான். பார்த்துக்கொண்டிருப்பவர்களை மரணபயம் தொற்றிக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு அது. இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டிருக்கிறான். தோற்றமும் நடத்தையும் மாறிவிட்டிருக்கின்றன.

மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள் ஜேர்மானியர்கள். உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது? பதுங்குகுழியினுள் ஒன்றாகப் போட்டுப் புதைக்கப்பட்டவர்களா? ஒன்றாகக் குவித்து எரிக்கப்பட்டவர்களா?

அவ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி நடந்துபோகிறான் அந்த இசைக்கலைஞன். அந்தக் காட்சி மனதில் எப்போதும் அழிக்கமுடியாத சித்திரமாகப் பதிந்திருக்கும். வைத்தியசாலை போல தோற்றமளிக்கும் ஒரு கட்டிடத்தினுள் ஒளிந்துகொள்வதற்காக இடம்தேடுகிறான். பசியும் தாகமும் அவனைச் சிதைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது சித்தம்பிறழ்ந்த தன்னுடைய மனப்பிரமை என்றே அவன் எண்ணுகிறான். கைக்கு அகப்பட்ட ஒரேயொரு திரவ உணவு டின்னை உடைக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச்சென்று எவருடையவோ காலடியில் முட்டிநிற்கிறது.

ஜேர்மானிய அதிகாரி ஒருவன் நின்றுகொண்டிருக்கிறான். முடிந்தது! இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக்கொண்டிருந்த உயிர் இதோ பறந்துவிடப்போகிறது என்றெண்ணுகிறான். இனி ஓடச் சக்தியில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான்.

“நீ யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”

“யூதனா? இங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாயா?”

“ஆம். நான் ஒரு பியானோ வாத்தியக்காரன்”

அந்த ஜேர்மானிய அதிகாரி அழைத்துச்சென்ற இடத்தில் ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி பணிக்கிறான். உண்மையிலும் உண்மையாகவே ஒரு பியானோ! பசித்திருந்த, தாகித்திருந்த விரல்களுக்கும் ஆன்மாவுக்கும் உணவு. அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் கசியவாரம்பிக்கிறது. பிறகு பேராழியின் ஆழம், புயலின் சீற்றம், ஆகாயத்தின் நீலம், நெருப்பின் பெருநடனம். பேருன்னதமான உலகொன்றினுள் அவன் விரல்கள் வழியாகப் பிரவேசிக்கிறான். ஜேர்மானியன் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறான்.

“அங்கே என்ன சத்தம்?”வாசித்து முடிந்ததும் ஷ்பில்மான் கேட்கிறான்.

“ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கிவந்துவிட்டார்கள். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும்”

அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவுகொண்டு வந்துகொடுக்கிறான். கிளம்புகையில் ஏதோ நினைத்துக்கொண்டவனாக தனது கோட்டைக் கழற்றிக்கொடுக்கிறான். ‘போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?’என்று கேட்கிறான். ‘நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன்’என்கிறான் ஷ்பில்மான் கண்கள் மினுங்க. ‘உனது பெயர் என்ன? நான் உனக்காக அந்த வானொலியைக் கேட்பேன்’என்றுகூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி.

“நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை?”கலங்குகிறான் ஷ்பில்மான்.

“கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான்”

கடைசியில் நமக்கு வாராத, வாய்க்காத அந்த நாள் அவனை வந்தடைகிறது. ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் பேருவகையோடு நடந்துபோகிறான். பியானோ இசை பின்னணியில் ஒலிக்கிறது.

காட்சி மாறுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்கள் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலையான போலந்தியர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள்.

“கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்”

அதிலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.

“நான் ஒரு இசைக்கலைஞன். எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் வயலினைப் பறித்துக்கொண்டீர்கள். என் ஆன்மாவை…”

சிறைப்பிடிக்கப்பட்ட ஜேர்மானியர்களிலிருந்து ஒருவன் அந்தக் கருணையுள்ள அதிகாரி எழுந்து வருகிறான். ‘நீ ஒரு இசைக்கலைஞனா? உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்தபோது அவனுக்கு உணவுகொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா’ அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான். ஜேர்மானியனை இழுத்து அமர்த்துகிறார்கள் ரஷ்யர்கள்.

மறுபடியும் அதே வானொலி நிலையத்தில் பியானோ முன்னமர்ந்திருக்கிறான் ஷ்பில்மான். அவன் விரல்கள் வழியாக அழுதுகொண்டிருக்கிறான். தாயை, தந்தையை, சகோதரர்களை, மலர்ந்து உதிர்ந்த காதலை, இருப்பிற்காக நெருப்பில் நடந்த நாட்களை, கொல்லப்பட்ட தனது மக்களை நினைத்து உருகுகிறான். அந்நேரம் அவன் முகம்தான் எத்தனை வேதனையில் வெடித்துக்கொண்டிருந்தது!

“இதோ இடத்தில்தான் அவர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். இதோ இங்கேதான் அந்த ஜேர்மானியன் அமர்ந்திருந்தான். உன்னைக் கேட்டான்”புல்தரையைக் காட்டுகிறான் நண்பன் பிறகொருநாள்.

பெருமூச்செறிகிறான் ஷ்பில்மான். பியானோ அமைதியின் ஆழத்திலிருந்து எழுந்து பொழிகிறது. மேலும் பொழிகிறது. பொழிகிறது.

‘தனது 88ஆவது வயதில் இறக்கும்வரை ஷ்பில்மான் வார்சோவில் வாழ்ந்திருந்தார்’என்ற வரிகள் திரையில் மேலுயர்ந்துசெல்கின்றன.

‘ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட அந்த ஜேர்மன் அதிகாரி 1953ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே மடிந்துபோனான்’ என்ற தகவலும்.

இப்போது பியானோ அதன் பாரத்தோடு நம்மேல் இறங்கியிருக்கிறது. அந்த இசையின் துயர் நமக்குள் கடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம் நம்மை ஏங்கியழ வைக்கிறது. அவலப்பட்டவர்களின் கண்ணீர் நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்குகிறது.

நினைத்துப் பார்த்தேன். இவ்வளவும் நடந்தது ஏறத்தாழ 68 ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு மனித ஆயுளிலும் குறைவான காலப்பகுதிக்கு முன்னர்தான். மானுடகுலத்தின் விரோதியெனப்பட்ட ஹிட்லர் பிறந்த ஜேர்மனி அமைதியாகிவிட்டது. மீட்பனாகத் திகழ்ந்த ரஷ்யா துண்டுதுண்டாகச் சிதறிவிட்டது. அறுபது இலட்சம் பேரை இனவெறிக்குத் தின்னக்கொடுத்த யூதர்கள் அதன்பிறகும் உயிர்த்திருந்தார்கள். அதட்டல்களையும் மிரட்டல்களையும் மீறி அவர்களுக்கென்றொரு நாட்டைப் பிறப்பித்தார்கள். ஈழத்தில் முப்பத்தைந்தாண்டு காலப் போராட்டம் பேரினவாதத்தாலும் அதன் பின்பல நாடுகளாலும் பிடுங்கியெறியப்பட்டுவிட்டது. மிருகங்களை அடைத்துவைப்பதைப் போல, வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தடுப்புமுகாம்கள் எனப்படும் வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள். ஹிட்லரின் நாஜிப்படைகளை நினைவூட்டும் இராணுவத்தினர் முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலியிட்டு கண்துஞ்சாது காவல்புரிகின்றனர். நோய், பட்டினி, மனவழுத்தம், காணாமல் போதல் இன்னபிற காரணங்களால் அகதிமுகாம்களிலிருந்து

வாரத்திற்கு 1,400 பேர் இறந்தும் மறைந்தும் போவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மூன்று இலட்சம் மக்களுக்குள் வைத்தியர்கள், சட்டம் படித்தவர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், மாணவர்கள், கவிஞர்கள், பொறியியலாளர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள் என்று உள்ளடங்குவார்கள். மெதுவாக மிக மெதுவாக திட்டமிட்டு தமிழ் மக்களை பேரினவாதிகள் காலிசெய்வதற்கு முன் நாம் கண்விழிக்காதிருந்தால், மரணக்குழிக்குள் புதைப்பதற்கு முன் நாம் அதற்கெதிராகக் குரலெழுப்பாதிருந்தால், நமது கதையைச் சொல்ல, எழுத, ‘த பியானிஸ்ட்’போல படமெடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.

நினைவிருக்கட்டும். 68 ஆண்டுகளுக்கு முன்னிருந்த உலகம் இன்றில்லை. அது மேலிருந்து கீழாகிவிட்டது. நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே; துயர்ப்படுவதிலும், மீள உயிர்த்தெழுவதிலும்.

வவுனியாவிலுள்ள தடுப்புமுகாம்களைப் பற்றி அன்று இவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல்: இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதைமுகாம்களைப் போன்ற மரணமுகாம்களாக இருக்கின்றன. இன்று நாம் இலங்கையில் பார்ப்பதும் இன அழிப்பே. இதை அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

நம்புவோம். நாங்களும் யூதர்களைப் போன்றவர்களே ஆக்கிரமிப்பிலிருந்து நாங்கள் மீட்கப்பட்டுவிடுவோம்’


நன்றி: உயிரோசை இணைய இதழ்

Monday, May 6, 2013

ஐநா அமைப்பு ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளை மதிக்கிறதா?



சென்ற மாதம் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை அணியில் கடமையாற்றுவதற்காக ஒரு தொகுதி இராணுவத்தினர் ஹெயிட்டிக்குச் சென்றுள்ளனர், இதில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்தின் 18ஆவது படை பிரிவைச் சேர்ந்த 750 பேர் சென்றுள்ளது.

அன்று சிங்களப் பேரினவாத அரசால் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள், சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் குற்றவாளிகளே. உண்மையில் ஐநாவில் உள்ள சிலர் குற்றவாளிகளும் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். பான் கி மூன், விஜய் நம்பியார் போன்றவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணை செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே ஆவார்கள். இவர்கள் மீது விசாரணை செய்யப்படாமல் விட்டால் ஈழத்தமிழின அழிப்பு விடையத்தில் ஐநா சபை நடந்து கொண்டதனைப் போலவே எதிர்காலங்களில் மற்றைய தேசங்களிலும் இவ்வாறான இனவழிப்பும் மிகப்பெரிய மனிதப்பேரவலமும் இடம்பெறலாம்.

இறுதியுத்தத்தின் போது ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஐநா அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார்ல்ஸ் பெட்ரி ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அன்று தமிழின அழிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலப்பகுதியின் போது ஐநா அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தமையையும், சிங்கள அரசின் தலையாட்டிப் பொம்மையாகச் அது செயல்பட்டதனையும் அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தது.

ஐ.நா மனிதவுரிமைகளை மதிக்கும் அமைப்பா? அல்லது ஐநாவில் உள்ளவர்கள் மனிதவுரிமைகளை மதிப்பவர்களா? என்ற கேள்வி ஈழத்தமிழ் மக்களால் தொடர்ந்து எழுப்படுகிறது. ஐ.நா என்ற அமைப்பு இன்று போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அரணாக மாறியுள்ளது. தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரான போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. தற்போது நியூயோர்க்கில் சிறீலங்காவிற்கான ஐ.நாவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருக்கிறார். இவர் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழின அழிப்பை நடத்தியவர். தற்போது போர்க்குற்றங்களில் இருந்து தன்னை பாதுக்காத்துக் கொள்ளுவதற்கு ஐ.நா என்ற அமைப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழின அழிப்பை அரங்கேற்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினரை (போர்க்குற்றவாளிகளை) ஐ.நாவின் அமைதிப்படையில் இணைக்கப்பட்டு ஆபிரிக்க நாடுகளில் இவர்கள் அனுப்பப்பட்டார்கள். அங்கே சென்ற சிங்களப் போர்க்குற்றவாளிகள் பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டமையினால் இவர்களை ஐநா அமைப்பு சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பியிருந்தது. ஆனால் தற்போது ஐநா அமைப்பு மறுபடியும் சிங்களப் போரக்குற்றவாளி இராணுவத்தை ஐ.நா அமைதிப்படையில் இணைத்து வருகிறது. இவற்றை அவதானிக்கும் போது ஐ.நா என்ற அமைப்பு உண்மையில் மனிதவுரிமைகளை மதிக்கும் அமைப்பா? அல்லது ஐ.நாவில் உள்ளவர்கள் மனிதவுரிமைகளை மதித்து இதயசுத்தியுடன் செயல்படுகிறார்களா? என்று கேள்விகள் எழுகின்றன.

ஐநா அமைப்பு ஈழத்தமிழரின் குரல்களுக்கு மதிப்பளிக்கிறதா? அது ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளை மதிக்கிறதா? அது ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளித்து ஆக்கபூர்வமாக செயலபட்டிருந்தால் அன்று தமிழின அழிப்பு நடைபெற்றிருக்காது. வெறும் வாய் மொழிகள் பயன் அற்றவை, செயல்வடிவம் கொடுப்பதே ஆக்கபூர்வமானவையாக இருக்கும், அதன்படி ஐநா நடந்து கொள்ளவில்லை.

சிறீலங்கா அரசு மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறிவருகிறது ஐநா. ஆனால் சிறீலங்கா அரசு தொடர்ந்து மனிதவுரிமைகளுக்கு எதிராகவே நடந்து வருகிறது. இவ்வாறு செயல்படுகின்ற அரசினை தண்டிக்காமல் அதற்குத் துணை நிற்கிறது ஐநா. மற்றும் தொடர்ந்து மனிதவுரிமை மீறல்களைத் தடுக்காமலும், அதில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்காமலும் இருப்பது எனபது மனிதவுரிமைகளை ஐநாவே மதிக்கவில்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. குற்றம் செய்பவன் குற்றத்தை செய்யட்டும் என்று அனுமதித்துக் கொண்டு குற்றவாளியின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்படுகிறது ஐநா,

மனிதவுரிமைகளை மதிக்க வேண்டும் என்று அது உபதேசம் கூறி தனது பொறுப்பில் இருந்து நழுவி விடுகிறது. இவ்வாறு ஐநா தொடர்ந்து செயல்படுவதனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மனிதவுரிமை மீறல்களையும், இனச்சுத்திகரிப்பையும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆகையால் ஐநா சிங்கள அரசை மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறிவருவதைப் போன்றே ஐநாவும் மனிதவுரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என்பதை தமிழர்கள் அழுத்தமாக கூறவேண்டிய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். உண்மையில் ஐநா ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை அதனைப் போலவே சர்வதேச சமூகமும்.

சர்வதேச சமூகமும், ஐநாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு சர்வதேச சமூகமும், ஐநாவும் ஈழத்தமிழரின் மனிதவுரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதினால் முதலில் அவர்கள் செய்ய வேண்டியது தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்களப் போரக்குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் மீது மனிதவுரிமை மீறல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும், அவர்களின் மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு கௌரவமாக வாழுவதற்கும் கண்டிப்பாக சிங்களப் போரக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய அவசியமுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் கதறல்களைக் கேட்காதே, ஈழத்தில் இடம்பெறும் தமிழினச் சுத்திகரிப்பைப் பார்க்காதே, ஈழத்தமிழின அழிப்பைப் பற்றிப் பேசாதே! என்ற நிலையில் ஐநா தொடர்ந்தும் செயல்படக் கூடாது.

விஸ்வா

Sunday, May 5, 2013

ஏன் படைத்தான் எமை?



கண் படைத்தா னேன் அழுவதற்கா 
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா 
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா 
மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா  

விண் படைத்தான் ஒளி வருவதற்கா 
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா 
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே 
கடும்புயலாய் எம்மை வருத்திடவா  

பூக்கள் செய்தானதைப் பறித்திடவா 
பூவித ழேன்கைகள் பிரித்திடவா...
பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா
போதை கொண்டேமலர் வருத்திடவா 

பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா
பருவ உடல்தினம் வதைசெய்யவா
தேவை என்றாலின்பம் துய்த்திடவா
தேடியதும் அதைத் தீயிடவா 

நாடு என்றால்அது நரகமதா
நரபலி தானவர் அறநெறியா
தேடு என்றால்ஒரு திரவியமா
தீதுசெய்தே வரும் பாவங்களா 

அரசன் என்றால் அவன் அறிவுளனா
.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா 

இனமழித்தால் அது இறைமை என்றா
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா
திருகு தாளம் சன நாயகமா 

உலகமென்றால் அது உழலுவதா
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா
கலகமென்றால் பெருங்காவியமா
கண்களில் நீரிடல் அரசாங்கமா 

வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான்
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா
கட்டுகிறான் கடல் வீசுகிறான்
கையறு நிலைகொண்ட கவினுலகா 

எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம் 

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க
தீய்ந்தது ஈழம் தேம்பியழ 

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல
பெருகி யதோ பேரவலமல்ல
பேய்களின் பிடியின் ஆழங்களே 

இறந்தது ஈழ தமிழனல்ல
இயற்கையின் தர்மதிருவுளமே
எரிந்தது தீயில் ஊர்களல்ல
இறையவன் கோவில் வாசல்களே 

கவிஞர் கிரி காசன்