Saturday, May 25, 2013

கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள் இன்றாகும்


25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Sunday, May 12, 2013

நினைவு சுமந்த கதை


அன்று விடியற் காலை 1.30 இருக்கும் தூக்கத்தைக் கலைத்தது தொலைபேசி மணி... யாராயிருக்கும் இந்த வேளையில் என்றெண்ணி எடுத்தேன் தொலைபேசியை. ‘அக்கா நித்திரையே" என்றான். சீ சீ பிரச்சனை இல்லை. என்ன செல்லம் இந்த நேரத்தில எடுத்திருக்கிற சொல் என்றேன். அக்கா கதைக்க நேரமில்ல. வீட்டச்சுற்றிப் பொலிஸ் வந்திற்றாங்கள். நான் மேல போறன். எல்லோருக்கும் சுகம் சொல்லுங்கோ, தகவலை அங்க அனுப்பிவிடுங்கோ என்றான். என்னடா தம்பி என்றேன். தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. கீக்... கீக்... என்ற சத்தம் வந்து கொண்டேயிருந்தது.

தம்பி... தம்பி... என்றழைத்தேன் பதிலேயில்லை. அவன் வைத்துவிட்டான். அல்லது துண்டித்துவிட்டான். இப்படி ஒரு நாளும் சொல்லுறதில்லை. இன்றைக்கு என்ன நடந்தது இவனுக்கு. சரி பாப்பம் திருப்பி எடுப்பான் தானே என்று இருந்தேன். ரெலிபோன் வரவேயில்லை. எனக்கு நித்திரையும் இல்லை. புரண்டு புரண்டு படுப்பதும் எழும்புவதுமாக இருந்தேன். ஆற்றாக் கொடுமையாக, நேரம் காலை 5 மணியிருக்கும், அவன் சொன்ன தகவலை அனுப்பவோம் என்று நினைத்து கணிணியை அழுத்தினேன்.

தலைப்புச் செய்தியில் குண்டு வெடிப்பு... பதறிப்போனேன். செய்தியை அழுத்தி வாசித்தேன். சந்தேகமேயில்லை. அவன் தான். அவனே தான். உடன் பிறந்த தம்பி என்னிடம் போறேன் அக்கா என்று சொல்லிவிட்டு, வித்தாகிவிட்டான். தொப்புள் கொடி ஒன்று பறந்து விட்டது.

கூடப் பிறந்த குட்டித்தம்பி இன்று, தன்னுயிரை தாய் நாட்டுக்கு ஈகம் செய்து விட்டான். ஆற்ற முடியாத துயரத்துடன் அவனை நினைந்தேன். நான் பிறந்து 12 ஆண்டுகளுக்குப்பின் பிறந்த தம்பி அவன். அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் போதே, அவனின் வளர்ச்சி கண்டு ஆனந்தப்பட்டோம். அம்மாவின் வயிற்றுக்குள் இருப்பது தம்பியா தங்கையா என்று, எப்போதும் எனக்கும் அண்ணாவுக்கும் சண்டை வரும். கடைசியில் அண்ணாவின் ஆசைதான் நிறைவேறியது.

குட்டித்தம்பி ஊர்க் கோயில் கும்பாபிசேகத்தன்று பிறந்தான். அதனால் அவனை எல்லோரும் குட்டிச்சாமி என்றே அழைத்து வந்தோம். வீட்டிலுள்ள அனைவரின் பாசமும் அன்பும் அவனுக்குத் தான். குவிந்த வாயைப் பிடித்துக்கொண்டும், பெரிய தலையை ஆட்டிக்கொண்டும் எப்போதும் இருப்பான்.

பாலும், தயிரும், மோரும் அவனுக்குப் பிடித்த உணவு. அம்மாவின் பின்னால் திரிவது அவனது வேலை. அம்மாவும் அந்தக் கடைக்குட்டிமீது அளவு கடந்த பாசம். என்ர குட்டி அல்லவா என்று அம்மா சொன்னால் போதும், அப்படியே கனிந்து விடுவான்.

அம்மாவுக்கு மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் குட்டிமீது கொள்ளை விருப்பம். அப்பா எப்போதும் கேட்பார் சாமிக்குட்டி சாப்பிட்டுவிட்டாரோ! என்று. அந்தக் குட்டித் தம்பி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவனாகிவிட்டான். நாட்டு நிலைமையும் மோசமாக மோசமாக நாட்டுப் பற்றும் அதிகரிக்க அதிகரிக்க உன்னதமான தாயக மண் மீட்புப் போரிலே தன்னையும் இணைத்துக் கொண்டான்.

ஒரு வருடமா? இருவருடமா? 12 வருடமாக தன்னை இணைத்து தாயக விடுதலை மூச்சையே சுவாசித்து அண்ணனின் கரத்தை இறுகப் பற்றி, அண்ணன் வழியில் தடம் பதித்தவன். ஒவ்வொரு தவணை பேசும் போதும், எழுதும் கடித்திலும் தமிழீழம் வெகு விரைவில் மலரும். மலரப்போகும் தமிழீழத்தின் சார்பில் இப்போதே உங்களை வரவேற்கிறேன் என்று தான் எழுதுவான்.

அருமையான இரண்டு கண்களாக கருதும் மக்களுக்கு எழுதும் போது, எமது நாட்டின் கண்கள் நீங்கள். எமது நாட்டுக்கு நீங்கள் வரும் போது விஞ்ஞானியாகவும், வைத்தியராகவும் வரவேண்டும். போராட நாங்கள் இருக்கிறோம். நீங்கள் தான் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பான். அடிக்கடி சொல்வான் அண்ணாவுக்கு வயது போகிறது அக்கா. அண்ணான்ர காலத்தில தமிழீழம் மலரவேண்டும். எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமக்கா.

இது தான் அவனது தாரக மந்திரம். அந்த உடன் பிறப்பின் குரல் இனி எமக்கு கேட்காது. எமக்கு கடிதம் எழுதாது. ஆனால் அவனுடைய அத்திபூத்தாற்போல் எழுதும் கடிதமும், அப்பப்போ கதைத்த சொற்களும் தான் எமக்கு ஆறுதல். அவனுடைய ஆத்மா சாந்தியடையவேண்டுமாக இருந்தால் எம் தலைவனின் பின்னால், நாம் அனைவரும் அணிதிரள்வோம்.

தாயகக் கனவை நெஞ்சில் சுமந்து, சுமந்து செல்லும் நாலுபேருக்கும் நன்றிக் கடன் வைக்காமல், தன் சாவுக்கு தானே திகதி குறித்து, தன் கையாலேயே தனக்கு கொள்ளிவைத்து காவியமாகிப் போன வீரரே! உங்கள் கனவை எம் தலைவன் நனவாக்குவான்.


"என் செவியில் உன் கடைசி வார்த்தை நான் இறக்கும் வரை கேட்கும்"

-இனியவள்-

இரகசியத்தின் பெறுமதி


போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர்.

ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே சென்றபோது எதிர்பாராத முகமாக தன் மகனைக் காண்கின்றாள். மகனோ ஒரு இரகசியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்தை நன்கு அறிந்த தாய் அனுடன் கதைப்பதால் தனது மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி மகனைப் பார்த்தும் கதைக்கவில்லை.

அவனும் தாயைக் கண்டுவிட்டான். ஆனால் அவன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான். ஒரு பார்வையுடன் இருவரும் பிரிந்து விட்டார்கள். தாயோ தமிழீழத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதற்குப் பிறகு தான் பெற்ற பிள்ளையைக் பார்க்கவில்லை. அன்று ஒருநாள் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

நம்பித்தான் ஆகவேண்டும் வெடிகுண்டு வெடித்து சிதைந்துவிட்ட நிலையில் தனது மகனின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டாள்.

மகன் தனது தேசத்திற்காகவும் தனது மக்களுக்காகவும் தன்னை இரகசியாக அர்பணித்தை உணர்ந்துகொண்டாள். ஆனாலும் தனது கணவருக்கு கூட கூறவில்லை. தனக்குள்ளேயே இரகசியத்தைப் பூட்டி வைத்தாள். அந்த இரகசியப் பணியின் பெறுமதி அந்த தாயுக்கு நன்கு தெரியும். அந்த தாயையும் மகனையும் சாதாரண மனிதப் பிறவிகளாக கணிப்பிட்டுவிடலாமா?

Saturday, May 11, 2013

கரும்புலி் மேஜர் அருளனின் வீரவரலாறு



அமைதியான பொழுது... சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.

அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்... இந்த இடம்தான்... தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.

ஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.

அருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு? இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்... சுபேசனாக... சிற்றம்பலமாக... ஆசாவாக... உமையாளாக... இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.

“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.

கண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.

“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்.... டொள்... என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.

இதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.

அவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.

அந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்... கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்... உமையாள்... என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.

குண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.

தாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

சந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.

அங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.

அவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான். பயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடுசேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.

“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.

“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்...” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.

கொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.

ஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.

”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ...” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.

“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.

“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ...” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.

அந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.

காலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.




துளசிச்செல்வன்

Friday, May 10, 2013

கரும்புலி மேஜர் மறைச்செல்வன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்


அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்துகொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்தபடி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன்.

அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்குநோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிகநேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போகவேண்டியிருந்தது.

வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்தபோது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான்.

அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும்.

தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்ததன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்துவிட்டு தண்ணீர் எடுத்துவரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான்.

காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்குக் காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்கவேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதிபெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்றபோது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம்தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டிநிற்பது அதுவே.

வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும்போதுதான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


கண்டிவீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்றபோது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒருபுறம் அவர்கள் தேடிவந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்றபோது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன.

வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன.

இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச்  துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவிவந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும்போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது.

அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன.


ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்துகொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூரநோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின.

கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது.

அந்தப் பெரிய சமரரங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்திவிட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது.

வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்துகொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான்.

ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்றபோது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.

துளசிச்செல்வன்