Thursday, May 30, 2013

இரவுப்பறையாக பறந்து இயக்கத்தை காத்து, போராட்டத்தை வளர்க்கப் பாடுபட்டவர் மேஜர் சுருளி


இராணுவ வாகனங்கள் யாழ்.நகர வீதிகளில் அரக்கத்தனமாக வலம்வரும் காலம், ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள், இரவு வருவதற்காக போராளிகள் காத்திருப்பர்கள். இரவுக்காக காத்திருக்கும் புலிகளில் ஒருவன் சுருளியும் ஒருவன்.

அவனது போராட்ட வாழ்வு பெரும்பாலும் இரகசியம் நிறைந்ததும், மறைவானதுமாகவே இருந்தது.

அன்றைய இரவுகள் மிகப்பயங்கரமானவை, எந்த வீதியிலும், எங்கும் இராணவ ஓநாய்கள் வாய்பிழந்து நிற்கும், சில நேரங்களில் இரவின் அமைதியை துப்பாக்கிகளின் வேட்டுக்கள் கலைக்கும். ஒரு போராளியோ, அல்லது ஏதாவதுதொரு வேலைக்குப் போன தமிழ் மகனோ வீதியை முத்தமிட்டுக் கிடப்பான்.

சுருளி இயக்கத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டதுமே அவனுக்கு கிடைத்த வேலை, எமது இயக்கத்தின் பெறுமதிமிக்கவையான இராணுத் தளபாடங்கள், ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பாகும். அந்த நேரங்களில், எம்மிடமிருந்தவையே சில ஆயுதங்கள் தான். அவற்றை இழந்துவிட நாம் ஒருபோதும் தயாராக இல்லை ஏன் என்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்கும் உன்னதமான கருவிகள் அவை. அவற்றைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு போராளியும் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அப்படிப்பட்டதொரு பொறுப்பான வேலைதான் சுருளிக்கும் கிடைத்தது.

பண்டிதர் அவர்கள் தான் அந்த நாட்களில் இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கு பொறுப்பாக நின்று செயல்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நெருக்கடிமிகுந்த நேரமிகுந்த நேரங்களில் பண்டிதர் அவர்களுக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டவர்களில் சுருளியும் ஒருவன். பண்டிதருக்கு சுருளி ஒரு செல்லப்பிள்ளை, பண்டிதர் அவனில் மிகுந்த அன்பை வைத்திருந்தார். அதேநேரம் பெரும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அவரின் கைகளிற்குள் நின்று சுற்றிச் சுழன்று வேலை செய்தவன் சுருளி. அவரின் கைகளிற்குள்ளேயே வளர்ந்தவன், அவனைப் போன்ற இரவுப்பறைகளின் பறப்புகள் தான் இயக்கத்தை காத்தது, போராட்டத்தையும் வளர்த்தது.

இயக்கத் தளபாடங்களை பாதுகாத்தல் எனபது இலகுவானது தொன்றல்ல, மிகவும் கடினமான பணி, இரவு முழுவதும் ஆந்தை மாதிரி கண்விழித்து வேலை செய்ய வேண்டும். மழையிற்கும், வெயிலுக்கும் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் எதிரியின் கழுகுக் கண்களிற்கும் மறைக்கவேண்டும். இதில் ஏற்படும் சின்னத்தவறு கூட இயக்கம் ஒர் ஆயதத்தை இழக்க வேண்டய நிலையை ஏற்படுத்தலாம்.


சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

அந்த நேரத்தில் தான் ஒரு கடுமையான சுற்றிவளைப்பிற்கு உட்பட்டு பண்டிதர் அவர்களையும், எங்களின் சில தோழர்களும் வீரமரணத்தை சந்தித்தார்கள். பண்டிதர் அவர்களின் வீரமரணம் சுருளியை நன்றாகவே பாதித்திருந்தது. இயக்கத்திற்கு வந்தநாள் தொடக்கம் பண்டிதருக்கு பக்கத்திலேயே திருந்த அவனால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் இருந்தது. அன்று தொடக்கம் எத்தனையோ இரவுகளில், பண்டிதரின் நினைவுகள் இவனது விழிகளை நனைத்திருக்கிறது.

பண்டிதரின் வேலைகளை மேஜர் அல்பேட் பொறுப்பேடுத்த பொழுது, அல்பேட்டுடன் இணைந்து சுருளியும் வேலைகளில் ஈடுபட்டான். யாழ். பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொழுது அல்பேட்டின் தலைமையில் சுருளியும் கலந்துகொண்டான் அந்த நேரங்கள் தான், இராணுவ முகாம்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தகாலம். அச்சந்தர்ப்பங்களில் பல தாக்குதல் நடவடிக்கைகளில் சுருளியும் ஒருவனாக பங்குபற்றினான்.

சுருளி ஒரு சாதாரண சுருட்டுத் தொழிலாளியின் மகன். யாழ் மாவட்டத்தில் உள்ள சுதுமலை கிராமம் தான் அவனின் பிறப்பிடமாகும். அங்குள்ள அம்மன் கோயிலடி வீதியிலும், மழை வெள்ளக் காலங்களில் வயல் வெளிகளிலும் விளையாடித்திருந்த இவனின் நெஞ்சத்தில் விடுதலை உணர்வும் துளிர்க்கத் தொடங்கியது.

அது ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப காலம், விடுதலை இயக்கம் எது, சமூக விரோதக் கும்பல்கள் எதுவென பிரித்தறிய முடியாத நிலை, நரிகளெல்லாம் புலி வேசம் போட்டு நின்றன. உண்மையான விடுதலை இயக்கமொன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தாகம் சுருளியில் படிந்து கொண்டது, அவனுடன் அவனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுகளும் இணைந்து கொண்டார்கள்.

அவர்கள் அறிந்துகொண்டதெல்லாம் தலைவர் பிரபாகரனைப் பற்றி, அவரின் வீரத்தனைப் பற்றி, அவரால் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றித்தான், புலிப்படைத் தேடி அவர்கள் அலைய வெளிக்கிட்டார்கள். புலிகள் மட்டும் கண்ணுக்குத் தெரியவே இல்லை, மற்றும் படி எல்லா இயக்கத்தவர்களும் கால்களிற்குள் நின்றனர். "இயக்கத்தில் சும்மா ஆள்ப்பொலிவுக்கு சேரக்கூடாது. செயல்படவேண்டும், ஒழுங்கும், கட்டுப்பாடும் வேண்டும், அத்தோடு விடுதலைப் போராட்டத்தை கொண்டு செல்லுகிற உறுதியும் தீவிரத்தன்மையும் வேண்டும் இதை எல்லாம் பார்த்துத் தான் நாங்கள் இயக்கத்தில் சேரவேண்டும்" என்று கூறித் தன் நண்பர்களை தவறான வழிகளிற்கு சென்று விடாமல் பார்த்துக்கொண்டான் சுருளி.

இறுதியில் அவன் தான் எங்கோ அலைந்து திரிந்து புலிகளில் ஒருவரை சந்தித்துக் கொண்டான். அந்த நேரங்களில் தான், ஒருநாள் மானிப்பாய் கிராமங்களை துப்பாக்கி வேட்டோசைகள் கண்விழிக்கச் செய்தன. காலை 6 மணிக்கு பிரயாணிகள் பேரூந்தொன்றை மறித்த பச்சைப் பேய்கள் அதிலிருந்தவர்களை இறக்கி, வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்றனர்.

காலையில் படிப்பதற்காக வந்தமாணவர்கள், பேரூந்துச்சாரதி இன்னும் பொது மக்கள்கள் சிலர்- உடல் சிதறி உயிரற்றுக் கிடந்தார்கள். அந்த இராணுவ மிருங்கள் இந்தச் செய்தியைத் தெரியாமல் வந்த மினி பஸ் ஒன்றையும் மறித்து அதில் ஏறினர். அந்த மினி பஸ் மானிப்பாயிலிருந்து மாதகல் இராணுவ முகாமை நோக்கி ஒட வெளிக்கிட்டது அங்கே ஒர் துயரம் நிறைந்த சம்பவம், அந்த பஸ்ஸிற்குள் இருந்த ஒவ்வொரு தமிழனும் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு சுடப்பட்டு வீதிவீதியாக வீசப்பட்டார்கள். அந்தப் பச்சை மிருங்களின் கோரப்பற்கள் எங்கள் தேசத்தின் வீதிகளைச் சிதைத்துச் சென்றன.

அந்தச் சம்பவத்தின் பின்பு, வெளியில் வாழ்வதற்கு சுருளியின் மனம் இடந்தரவில்லை, அவன் ஒரு முழுமையான போராளியாக மாறிவிட்டான். பண்டிதருடன் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினான். காலங்கள் ஓடின, விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. சுருளியின் தம்பிகளில் ஒருவனான ரதிதரனும் புலிகளுடன் இணைந்து கொண்டான்.

இந்தியப் படை தமிழீழத் தேசத்தின் மீது ஆக்கிரமிப்பை நடாத்தி, ஒர் போரைத் தொடங்கிய நேரம் எம் தேசமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், தமிழ்ப் பெண்களில் பலர் படுமோசமாக பாலியல் வன்முறைக்காளானார்கள். இந்த மண்ணை நேசித்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள், தமிழீழ தேசத்தில் விலக இடமின்றி இந்தியர்கள் நிறைந்து போய் நின்றார்கள்.

அந்த நிலைகளில் ஆயுத தளபாடங்களையும், ஆவணங்களையும் பாதுகாக்க சுருளியும் அவனது தோழர்களும் கடுமையாக போராடினார்கள், அந்த நாட்களில் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை பாதுகாத்தார்கள், அதற்காக ஆயுதங்களைப் பாதுகாத்தார்கள். சில நாட்கள் சென்றன, இந்தியப் படைகள் சுருளியைத் தேடத் தொடங்கினார்கள். சுருளியின் வீடு அடிக்கடி சுற்றிவளைக்கப்பட்டது. போராட்டத்திற்காக இருவரைத் தந்த அவனின் குடும்பம் கொடுமையான சித்திரவதைக்காளானது. பல வருடங்களாக இருந்த பகையுணர்வை சமூகவிரோதி ஒருவன் இந்தியர்களுடன் சேர்ந்து நின்று தீர்க்கத் தொடங்கினான்.


அப்போது தான் ஒரு நாள் சுருளியின் தம்பி ரதிதரனும், அவனது தோழர்களும் இந்தியப்படைகளாலும், தேசவிரோதிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டார்கள், சின்னதொரு சண்டை அதில் ரதிதரனின் உடலிலும் சில ரவைகள் பட்டன, அவனது தோழர்கள் தப்பிச் சென்றார்கள், ரதிதரனின் உயிரற்ற உடலை இந்திய படையினர் வீதியால் இழுத்துச் சென்றார்கள். இந்த மண்ணை நேசித்த போராளி ஒருவன் தேசவிரோதிகளாலும், இந்தியர்களாலும் இந்த தேசத்தின் தெருக்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டான்.

இந்திய இராணுவத்தினர் இங்கு நின்ற போது, சில காலம் வன்னியில் நின்ற சுருளி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து செயல்படத் தொடங்கினான். ஆபத்து நிறைந்த அந்த நேரத்தில் சுருளியும், அவனது தோழர்களும், மிக அவதானமாகச் செயல்பட வேண்டி இருந்தது. தேசவிரோதிகளும் இந்தியர்களும், வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி முகாமிட்டு நின்றார்கள், தமிழீழ மக்கள் இந்தியத் துப்பாக்கிகளின் முனைகளில் நின்று வாழ்ந்தனர்.

அந்த நேரம் தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை மறைவில் இருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஏனையவற்றைப் பாதுகாக்கவேண்டியிருந்தது. இதற்காக சுருளியும் அவனது நண்பர்களும் நம்பிக்கையானவர்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது.

இந்தியப் படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிய பின்பு, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்து சுருளி செயற்பட்டான். சுருளிக்கு கொடுக்கப்படும் வேலைகளைப் பொறுப்புணர்ச்சியுடன், சிறப்பாகச் செய்து முடிப்பவன். பண்டிதரிடமிருந்து இவனிடம் தாவிக்கொண்டத்தில் ஒன்று எளிமை.

தன்னைக் கவனியாது, ஒரு சைக்கிளில் கிராமத்து வீதிகளில் ஏதோ ஒரு வேலைக்காக ஓடித்திரியும் சுருளி... ஒரு வெடி விபத்தில் சிக்கினான். மூன்று நாட்கள், அவன் சாவுடன் போராடினான், ஆனாலும் 30.05.1991 அன்று மேஜர் சுருளி வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான்.

Saturday, May 25, 2013

கரும்புலி மேஜர் சதா வீரவணக்க நாள் இன்றாகும்


25.05.2000 அன்று ஓயாத அலை -03 நடவடிக்கையில் யாழ் – மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Wednesday, May 22, 2013

''அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" - கரும்புலி மேஜர் குமலவனின் வீரவணக்கம் நாள் இன்றாகும்


''அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் - அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான்.

"இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்" "ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்" இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின.

பள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள்.

கிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள்.


அந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்... அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்... மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன்.

சிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, "இப்படித்தான் ஒங்களிற்கும்" என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான்.

குமழவன்... 1980.09.12இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது.

மட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான்.

களங்களில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன.

வயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது.

வன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான்.


ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது.

ஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது.

சின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 22.05.2000 அன்று ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்காய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான்.

”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

Saturday, May 11, 2013

லெப் கேணல் அன்பு, கவியழகி,சஞ்சனா, மேஜர் மலர்நிலவன் ஆகிய கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்



கடற்கரும்புலிகள் லெப் கேணல் கவியழகி, லெப் கேணல் அன்பு, லெப் கேணல் சஞ்சனா, மேஜர் மலர்நிலவன் ஆகிய கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்

11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.





தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.





கரும்புலி் மேஜர் அருளனின் வீரவரலாறு



அமைதியான பொழுது... சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.

அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்... இந்த இடம்தான்... தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.

ஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.

அருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு? இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்... சுபேசனாக... சிற்றம்பலமாக... ஆசாவாக... உமையாளாக... இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.

“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.

கண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.

“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்.... டொள்... என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.

இதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.

அவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.

அந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்... கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்... உமையாள்... என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.

குண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.

தாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

சந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.

அங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.

அவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான். பயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடுசேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.

“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.

“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்...” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.

கொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.

ஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.

”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ...” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.

“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.

“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ...” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.

அந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.

காலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.




துளசிச்செல்வன்

மேஜர் அருளன் மற்றும் மேஜர் சசியின் வீரவணக்க நாள் இன்றாகும்


05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்த வேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் நினைவு நாள் இன்றாகும்.


தமிழீழத் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.





மேஜர் அருளன், மேஜர் சசி உயிராயுதங்களிலிருந்து: காணொளி




Friday, May 10, 2013

கரும்புலி மேஜர் மறைச்செல்வன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்


அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்துகொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்தபடி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன்.

அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்குநோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிகநேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போகவேண்டியிருந்தது.

வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்தபோது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான்.

அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும்.

தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்ததன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்துவிட்டு தண்ணீர் எடுத்துவரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான்.

காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்குக் காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்கவேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதிபெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்றபோது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம்தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டிநிற்பது அதுவே.

வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும்போதுதான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


கண்டிவீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்றபோது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒருபுறம் அவர்கள் தேடிவந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்றபோது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன.

வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ்மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன.

இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச்  துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவிவந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும்போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது.

அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன.


ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்துகொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூரநோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின.

கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது.

அந்தப் பெரிய சமரரங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்திவிட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது.

வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்துகொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான்.

ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்றபோது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.

துளசிச்செல்வன்

Tuesday, May 7, 2013

கரும்புலி மேஜர் சிறிவாணி


தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள். அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது.

அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.

அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே.

அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது.

அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி.

அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள்.

சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?!

அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே.

அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன.

மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.

"வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம், திருதிருவென விழித்தபடியும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் 'வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம்.

எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும், அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும், கலகலப்பிற்கும் குறைவே இல்லை.

இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும், எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ, அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.

இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது, பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று, அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம், நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள்.

ஒருநாள்.....

இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால், அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.

"கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன.

அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த ஸ்ரீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள்.

"நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும்.

கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள்.

மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று, சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்து, கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து, நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி, இராணுவ முகாமிற்குள்ளேயே இநருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது.

ஸ்ரீவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நிதை;த பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை.

அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான்.


அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து, சில காலடி து}ரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது.

தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் து}ரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை.

இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் ஸ்ரீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள்.

அதன் பின்னும், அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது.

ஸ்ரீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் து}க்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து ஸ்ரீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை.

பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது.

இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள்.

எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூ}ரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் ஸ்ரீவாணிதான் அந்த நீண்ட து}ரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள்.

இப்படி எந்த நேரத்திலும் சோராதவள், எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள், தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள், மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள், அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை, துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது.

அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள்.

பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள், தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது.

அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள்.

ஸ்ரீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள்.

அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் ஸ்ரீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள்.

அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால், இந்தக் களத்தில்;தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஸ்ரீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள்.

தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள், அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை, களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள்.

அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள், நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு, அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின.

"நிறையச் செய்ய வேணும், தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்"

இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள், அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள்.

ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள்.

வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05.07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா...? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள்.

அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டது, அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது.

விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள்.

காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு, ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை, மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை.