பேய்களின் ஆட்சி முடிவதெப்போ எங்கள்
பிள்ளைகள் தப்பிப் பிழைப்பதெப்போ
ஆயிரமாய் பலர் தந்துவிட்டோம்இன்னும்
ஆனதுயர் தனுக் அந்தமில்லை
நீஎழுந்தே இப் பேய்கள் பிசாசுகள்
நீதியின் முன்நிறுத் தும்வரை
ஓயுமென்றே நினையாதே உடன் எழுந்
தாவன செய்திட வேண்டுமடா
எங்கள் விருத்தனாய் எத்தனை பிள்ளைகள்
இன்னும் உயிர்விடப் போகினரோ
கண்ணைக் கசக்கிய கை எடடா இனி
காரியம் ஆற்றப் புறப்படுவோம்
துன்பம் இழைத்தவர் அத்தனை பேரும்
என்ன அதுவெனக் கண்டிடணும்
இன்னுமவர் கரம்கொண்ட விலங்குடன்
எண்ண வேண்டும்சிறைக் கம்பிதனை
கொன்றவன் மாளிகை பஞ்சணைமீது
பாலை அருந்திப் படுத்திடவும்
நெஞ்சம் சகித்து விடுவதுமோ அவன்
நித்திரை யின்றி அலைந்திடணும்
செய்தபாவமெல்லாம் எண்ணி இருட்டினில்
கல்லில் படுத்துக் கலங்கிடணும்
சங்கில்போட்டு இழுத்து நடந்திட
சக்தி யற்றவனென் றாக்கிடணும்
கட்டியமனைவி பிள்ளைகுட்டி சொந்தம்
அத்தனை யும்மறந் தேதனியே
வெட்டிமனிதனாய் வீதியிலே வெறும்
பைத்திய மாகித் திரிந்திடணும்
வெட்டி அழித்தவன் செய்தவினை தனை
மொத்தமாக அறுத் தெடுத்தே
கொட்டிஅனுபவித் தேகொடும் செந்தணல்
பட்ட புழுவாய் துடித்திடணும்
நாயும் நரிகளும் நம்மினம் சப்பிட
நாமென்ன வாய்பொத்த ஊமைகளோ
போய் இவரைபிடி த்தேஉள்ளே வைத்திட
பொங்கி எழுந்து புறப்படடா
நீஉன் சகோதரன் என்று நினைத்து
நெஞ்சு நிமிர்த்தி புறப்படணும்
நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டால் இந்த
நீதியைக் கேட்பது யார் மகனே?
கவிஞர்:கிரிஷாசன்
