Saturday, May 25, 2013

கண்ணே பாலச்சந்திரா



கண்ணே பாலச்சந்திரா
எந்தன் பாலகா
சந்திர வடிவழகா
உந்தன் நெஞ்சினில்
இத்தனை (வீர) தழும்புகளா

நெஞ்சில் உரமுடையோன் பெற்ற பிள்ளையன்றோ
அஞ்சிடாமல் ஏந்தினாயோ அத்தனையும்
நெஞ்சினிலே பிஞ்சு முகம்
அஞ்சிடா வடிவுமுகம்
நஞ்சு கொண்ட நாகபடை நாலுபுறம் சூழ்ந்து
வெஞ்சினம் கொட்டி பகைமுடித்தனரோ உந்தன்
பிஞ்சு மேனியிலே நெஞ்சு வேகுதன்றோ
தேசமகன் உன் உடல் கண்டு

கண்ணா பாலச்சந்திரா
உனது வயதில் வடிவில் எனக்கும் ஒருமகன்
சொண்டு சுழித்து நீ உண்ண முயல்கையில்
இரண்டு துண்டானது என் நெஞ்சு
வெந்து விம்மி கலங்கிப் போனது என் வயிறு

உன்தந்தை எல்லோருக்கும் தனயன் ஆனான்
தமிழ் அன்னையர் எல்லோருக்கும் நீ மகனேயானாய்
கண்ணெதிர் தோன்றும் சந்திரப்பிறைதனில்
என்னரும் மகனே நீ துயில்வாய்

மனிதம் செத்த மண்ணில் வாழ்ந்தவர்
மடிந்தவர் கதையை உலகுக்குரைத்தது
உன்மரணம் மரணிக்கப்பட்டவரை
மனிதம் மீறிய முறையில் மறைக்கப்பட்டவரை
வெளியரங்குக்கு உரைத்தது உன் மரணம்

கண்ணே பாலச்சந்திரா
வண்ண வடிவழகா
உன்னை நேசிக்கும் அன்னையர் கோடி ஐயா
முன்னே வந்து நீ மீண்டும் பிறக்கவேண்டும்
எங்கள் எல்லோர் ஆயுளும் உனக்கே அர்ப்பணமாய்
சின்னஞ்சிறு மலரே சித்திர வடிவழகே
கண்ணை மூடி கணப்பொழுது நித்திரை செய்
மண்ணை ஆள மீண்டும் நீ வருவாய்
வன்நெஞ்சோடு திரள்தோளோடு நீள் ஆயுளோடு
உன்னரும் தந்தைக்கும் உன்னரும் தாய்க்குமே
உன்னரும் சோதரன் சோதரிக்கு நல் தம்பியாய்
சுற்றம் சூழ குழுமம் கூடிய உறவினிலே
மீண்டும் பிறப்பாய் உன்தாய் மடியினிலே
அது வரை வலிமறந்து கண்ணுறங்கு
விடிகாலைப் பொழுதினில் எழுந்திட வேண்டுமையா!

கவிஞர்: ஜெயந்தி ஜீவா