Wednesday, May 29, 2013

தாயைக் காண்கிறோம் விடுதலைத் தாகம் ஏந்திய உம் முகங்களில்...



தூங்கி கிடந்தீர்கள்..
புன்னகைத்தார்கள்
அரசியல்வாதிகள்..
பின்னால் நின்று
உங்கள்
கன்னங்களை வருடிவிட்டார்கள்..
இன்னும் என்ன வேண்டும் என்று
இனமானத்துக்கு விலை பேசினார்கள்..
முன்னால்
உங்கள் கன்னங்களை தடவிவிட்டு
பின்னால்
உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்..
செம்மரிகளாய் இருப்பார்கள்
என்றெண்ணி
தமிழரை
செருப்பாய் தேய்த்தார்கள்..
இருப்பை உணர்த்த
ஒரு தீ பிறாக்காதோ என்று
தமிழ்க்கரு சுமந்த
மனங்கள் தவித்தன..
உள்ளே குமைந்து கொண்ட
உணர்ச்சித்தீயை
மோதி அணைத்துக்கொண்டே இருந்தது
சாப அரசியல்…

பழுத்த கிழம்கள் எல்லாம்
பாழும் அரசியலில் இருந்து
உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி
உருவேற்றி
வெளுத்ததெல்லாம் பாலென்று
தொழுது நிற்கும் தொண்டர்களின்
வேர்வைகளில்
கொழுத்துப்போய்
தம் குடும்பம் வளர்க்க…
புத்தக்கப்பையுடன் தனியே
புழுதியில் உட்கார்ந்து
சகோதரனின் விடுதலைக்காய்
சாவினை உடையாய் போர்த்தி
சரித்திரத்தை மாற்ற
கழுத்தில் நஞ்சேந்தாத
புலிகளாய்
கருத்தினில் நீங்கள்
மூட்டிவிட்டிருக்கும் தீ
இனி எம்
இருளை எரிக்கட்டும்…

நாதி அற்றுக்கிடந்த
ஈழத்தமிழன்
கால வீதியெங்கும் மிதிபட்டான்..
செந்நீரில் எழுதிய
ஈழகாவியம்
கண்ணீரில் கரைந்தழிய
வெந்நீராய் கொதித்த
எம் மனங்களுக்கு
உண்ணாவிரதமாய்
நீங்கள்
உயிர் வருத்தும் சேதி
இன்னும் இருப்பதற்கான
விருப்பை கொடுக்கிறது..
வெளுக்காத எம்வானில்
கிழக்கால் ஒரு வெள்ளி
உங்கள் உருவில்…

எத்தனைகாலம் நாம்
அடிமையாய் இருப்போம்..?
புத்திரரே..
எம் தொப்பிள்கொடிகளே
எமைப் பிடித்த
அடிமைத்தரித்திரம்
எம்முடன் தொலையட்டும்..

கல்விக்கூடங்களில்
கருக்கொண்ட இந்த விதை
எள்ளி நகையாட நினைக்கும்
அரசியல் சகுனிகளை எரித்து
இனம் அழிய
கொள்ளிகளுடன் அலையும்
கொடியவரை
துகிலுரித்து
ஊர்களை நகரங்களை
உலுப்பி
வேர்விட்டு பெருமரமாகட்டும்…
அதுகொடுக்கும் நிழலில்
இனிவரும் எம் தமிழ்
விழுதுகளாவது
சுதந்திரத்தின் வாசனையை
சுவாசித்தபடி வாழட்டும்..

இடையிலே நின்று போன
ஈழத்தேரோட
தீயாய்
உடையிலே வாளேந்தாமல்
உள்ளத்திலே வாளேந்தி
உம் தேகமுருக்கும்
சிற்பிகளே
தாயைக் கண்டு
தாழ்பணிகிறோம்
விடுதலைத் தாகம் ஏந்திய
உம் வீர முகங்களில்…..

சுபேஸ்