Sunday, May 19, 2013

மகிந்த சிந்தனையால் நாய்களுக்கே நன்மை



இலங்கையில் தெருநாய்களுக்கு இருக்கின்ற மதிப்புக்கூட தமிழ் மக்களுக்கு இல்லை. உலகத்தில் நாய்களைச் சுடுவதற்கே அனுமதிகள் பெறப்படவேண்டும். நாய்களால் பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் நாய்களைப் பிடித்து கொல்வதற்கு உரிய அனுமதிகள் இருக்கின்றன. இலங்கையில்கூட ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் தொடங்கியவுடன் நாய் பிடிக்கும் படலம் ஆரம்பிக்கும். மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஊழியர்கள் உரிய அனுமதிகளைப் பெற்று நாய்களைப் பிடித்துக் கொல்வார்கள்.

ஆனால் தற்போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதாவது, எக்காரணம் கொண்டும் தெருநாய்களைக் கொல்லக்கூடாது. மீறி கொல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த நடைமுறையாகும். நாய்கள் விடயத்தில் காட்டிய அக்கறையைக் கூட மகிந்த தமிழ் மக்கள் விடயத்தில் காட்டவில்லை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னரே இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சாட்சியமற்ற யுத்தம் ஒன்றை நடத்தியதன் மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பில் வைத்து தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இதனைவிட, தமிழர் தாயகம் முழுவதும் இளைஞர்கள் வகை தொகையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் மகிந்த ராஜபக்ச யாரிடமும் அனுமதியெடுக்கவில்லை. நாய்களைச் சுடுவதற்கே, தெருநாய்களைக் கொல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இது தொடர்பாக யாருமே குரலெழுப்பவில்லை. உலக நாடுகளின் கண்முன்னாலேயே இந்த இனப்படுகொலை நடந்தபோது எந்தவொரு நாடும் யுத்தத்தை நிறுத்துமாறு மகிந்தவிடம் கோரிக்கை விடுக்கவில்லை. புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்ற நாட்டில் அதே போதனைகளை ஒதியவாறு சென்ற படையினர் தமிழர்களைக் கதறக் கதறக் கொன்றனர்.

இந்த நிலையில் சிறீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் நாட்டில் நாய்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது. மகிந்த சிந்தனையின் அடிப்படையில் நாய்களைக் கொல்லக்கூடாது என்றும் கொன்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிந்த எச்சரித்திருப்பதால் நாட்டிலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் நாய்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. நாய்கள் விசர் நோயால் பாதிக்கப்பட்டு பொதுமக்களைக் கடிக்கும் பட்சத்தில் மக்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கும்? நிலை ஏற்படுகின்றது.

இதனைவிட நாய்க்கு விசர் உள்ளதோ இல்லையோ நாயன்று கடித்தால் கடித்த காயத்திற்குள்ளேயே ஒன்பது ஊசி மருந்துகள் ஏற்றப்படுகின்றன. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருமே இதனால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தமிழர் தாயகத்தில் யாழ்.குடாநாட்டிலும் வன்னிப் பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் அண்மையில் பொது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் நாயால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், கிராமங்களுக்கு கிராமம் இராணுவ காவலரண்கள். மினி முகாம்கள். இந்த காவலரண்களிலுள்ள இராணுவத்தினர் பொதுமக்கள் மீளக்குடியேற முன்னர் தமது முகாம்களில் அதிகளவான நாய்களை வளர்த்து வந்தனர்.

தமது பாதுகாப்பின் நிமித்தம் வளர்க்கப்பட்ட நாய்களுக்கு அப்பால் தெரு நாய்களையும் இவர்களே உருவாக்கி விட்டிருந்தனர். இந்த நாய்கள் தற்போது மீள்குடியேறிய மக்களை இலக்குவைத்து தமது காரியத்தை நிறைவேற்றுகின்றன. பொது மக்களைத் துரத்தித் துரத்திக் கடிக்கின்றன. இதனால் வன்னியிலும் வலி வடக்கிலும் அண்மையில் மீளக் குடியேறிய மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், இராணுவ முகாம்களில் உள்ள இந்த நாய்கள் கிராமங்களுக்குள் ஊடுருவி மக்களின் கால்நடைகள், கோழிகள் போன்றவற்றையும் கடித்துக் கொன்று தின்கின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கூட வளர்க்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினாலும் அவர்கள் ஏனோ தானோ போக்கை கடைப்பிடிப்பிடிப்பதாகவும் இதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லையென்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பிரதேச சபைகளுக்கு அறிவிக்கின்ற போதிலும் மகிந்த சிந்தனையைக் காரணம் காட்டி நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிரதேச சபைத் தவிசாளர்கள் கைவிரிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் பெருக்கம் காரணமாக பொது மக்கள் தினமும் துன்பங்களை அனுபவிக்கின்ற போதிலும் மகிந்த சிந்தனையைக் காரணம் காட்டி நாய்களைப் பிடித்து அழிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் வீண் மரணங்களை எதிர்நோக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த சிந்தனை கொண்டுவரப்பட்ட பின்னர் நாய்களால் கடிக்கப்பட்ட பல பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றமையையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வருடாந்தம் வெயில் அதிகமாக உள்ள காலங்களில் நாய்களுக்கு விசர் நோய் ஏற்படுவதால் இந்தக் காலத்தில் மாநகர, நகர, பிரதேச சபைப் பணியாளர்கள் நாய்களைப் பிடித்து அழிக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது நாய்களைக் கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் கிராமப் புறங்களின் நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் இதனால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. விசர்நாய் கடிக்கு இலக்காகும் மக்கள் சிகிச்சை பயனின்றி மரணமடையும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

குறிப்பாக வலி வடக்கில் அண்மையில் பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட இடங்களில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாகியுள்ளதுடன் நாயால் கடிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கே இராணுவ முகாம்களிலுள்ள நாய்கள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வருகை தந்து மக்களையும் கால் நடைகளையும் கடித்துக் குதறுகின்றன. இங்கு மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள வித்தகபுரம் பகுதியில் தினமும் பல பொதுமக்கள் நாய்க்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் பொதுமக்கள் பிரதேச சபை மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வித்தகபுரம் பகுதியில் பலர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ள நிலையில் அங்குள்ள மக்களைக் கடித்து வரும் நாய் ஒன்று அண்மையில் இறந்துள்ளது. இந்த நாயின் கழுத்து வெட்டப்பட்டு தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயால் கடிக்கப்பட்ட பத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நாய் இறந்ததைத் தொடர்ந்து சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் வித்தகபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாய்கடி சம்பந்தமான விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்களையும் வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை, நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை யாழ்.போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகரித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். நாய்க்கடி நோயானது பொதுமக்களுக்கு எமனாக அமைவதன் காரணமாக தெரு நாயைக் கண்டால் பொதுமக்கள் பெரும் அச்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த சிந்தனை என்ற ஒரு காகித அறிக்கையை மகிந்த கொண்டு வந்ததுடன் அதில் அனைத்து மக்களுக்குமான நன்மைகள் உண்டென்று கூறினார். அந்த காகித அறிக்கையையே தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்த மகிந்த அந்த விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே வெற்றியும் பெற்றார். ஆனால், அந்த அறிக்கையானது நாட்டு மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை.

குறிப்பாக இந்த மகிந்த சிந்தனையால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு விமோசனமும் கிடைக்கவில்லை. மாறாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலுள்ள நாய்களுக்கே நன்மை ஏற்பட்டுள்ளது என்பதே வெளிப்படையாகும்.


தாயகத்தில் இருந்து வீரமணி.

நன்றி : ஈழமுரசு