அண்மையில் தமிழக மாணவர்கள் கொந்தளித்து எழுந்தபோது தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழருக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தனித் தமிழீழம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முக்கிய சரத்தும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், தற்போது அந்த தீர்மானம் குறித்து எவருமே எதுவும் கதைப்பதில்லை. அந்த தீர்மானத்திற்கு என்ன நடைபெற்றது என்றே எங்களுக்கு தெரியாது. அது தொடர்பாக அறிவதற்கு நாங்கள் மிக ஆவலாக இருக்கின்றோம் என்றும் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழக சட்டப் பேரவையின் செயற்படு திறன் குறித்து சிங்களம் குறைத்து மதிப்பிட வாய்ப்புள்ளது என்றும் குடாநாட்டு தெரிவித்துள்ளனர். உலகத்திலேயே அதிகூடிய தமிழ் மக்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு சட்டப் பேரவை தமிழக சட்டப் பேரவை மட்டுமேயாகும். இந்தச் சட்டப்பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் செயற்படு திறனுடையதாக இல்லாவிட்டால் அது தமிழ் மக்களின் இருப்பு தொடர்பில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்துமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.குடாநாட்டு மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிங்கள அரசாங்கத்தாலும் அதன் ஆக்கிரமிப்பு படைகளாலும் தமிழர் தாயகம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய இந்த நிலை நீடிக்குமாயின் இன்னும் சில வருடங்களில் தனித்தமிழ்த் தாயகம் என்ற ஒன்று இங்கே இருக்காது. எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் தமிழக அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இந்த உலகத்தில் எந்த நாடுமே எங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காது. ஈழத் தமிழ் மக்களில் அக்கறை உள்ளமை போன்று காட்டிக்கொள்கின்ற சர்வதேச நாடுகள் தங்கள் இராணுவ பலத்தையும் தங்கள் அரசியல் இராஜதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்கே ஈழத் தமிழர்களின் முதுகில் பயணிக்கின்றன. மாறாக ஈழத் தமிழர்களில் உண்மையான அக்கறையுடன் அவர்கள் செயற்படவில்லை.
இந்த நிலையில் எங்கள் உரிமைககளையும் உடமைகளையும் பாதுகாத்து தருகின்ற முக்கியமான பொறுப்பு தமிழக அரசிடமே இருக்கின்றது. குறிப்பாக நாங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள முக்கியமான பெரும் பிரச்சினை சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பு ஆகும். எங்கள் தலைவி தமிழக முதல்வர் செல்வி, ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்கின்ற அரும்பெரும் பணியை செவ்வனே செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்காக நீங்கள் குரல்கொடுக்காவிட்டால் இனிமேல் குரல்கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில், தமிழ் மக்களின் பிரதேசம் எங்கணும் தற்போது ஆக்கிரமிக்கப்படுகின்ற நிலத்தில் மிக விரைவாகவே சிங்களக் குடியேற்றங்களும் படை முகாம்களும் அமைக்கப்பட்டுவிடும். அதற்குப் பின்னர் தமிழ் மக்களுக்கென்று தனிமையாக எந்தவொரு பிரச்சினையும் இல்லையென்று சிங்களம் உலக நாடுகளுக்கு பறைசாற்றும். அதன் பின்னர் நாம் எதையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். இது தமிழர்களுக்கு ஏற்றதாக அமையாது.
எனவே, தமிழக மாணவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பொங்கியெழுந்தபோது தமிழக முதல்வர் அவர்களும் தனது தற்றுணிபான நடவடிக்கை மூலம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த தீர்மானமானது உலகெங்குமுள்ள தமிழ் மக்களால் மிகவும் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டது. தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய சர்வதேச தரப்புகளும் இந்த தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால், இந்தத் தீர்மானம் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு செய்திகளையும் அறிய முடியவில்லை. எனவே, தமிழக அரசின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஈழத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விடயத்தில் தமிழக முதல்வர் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் வலுவற்ற தீர்மானமாகவே ஈழத் தமிழ் மக்களும் சர்வதேச நாடுகளும் கணிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
சங்கதி24 செய்திகளுக்காக தாயகத்திலிருந்து வீரமணி
