Monday, May 6, 2013

புலம்பெயர் தமிழர் விளங்க வேண்டிய நாம் சிங்களவர் கொள்கைகள்…



நாம் தமிழர் என்று சிந்திப்பது நல்லது ஆனால் அதுமட்டும் போதியதல்ல சமகாலத்தில் நாம் சிங்களவர் என்ற கொள்கையும் சீர்தூக்க வேண்டும்..

முதலில் நாம் சிங்களவர் கொள்கையென்றால் என்ன.. இதோ ஆதாரங்கள்..

தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மூன்று பெரும் போர்களை தேர்வு செய்து மூன்று காவிய நாயகர்களை அடையாளம் காட்டுகிறது மகாவம்சம்..

இந்தக் காவியநாயகர்கள் கொள்கைகளில் மறைந்துள்ளதுதான் ” நாம் சிங்களவர் ” கொள்கை..

01. மகாவம்சம் பாகம் ஒன்றின் காவிய நாயகன் துட்டகைமுனு
02. மகாவம்சம் பாகம் இரண்டின் காவிய நாயகன் 1ம் விஜயபாகு
03. மகாவம்சம் கடைசிப்பாகத்தின் காவிய நாயகன் மகிந்த ராஜபக்ஷ


இனி விடயத்திற்கு வருவோம்…

இந்த மூன்று சிங்களவர்களும் தமிழருக்கு எதிராக நடாத்திய காவியப் போர்களிலும் அவர்கள் கடைப்பிடித்த “நாம் சிங்களவர்” கொள்கை ஒன்றே ஒன்றுதான்.. எளிமையாக ஒரே வரியில் சொன்னால்..

“தமிழர்களுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் எந்தவிதக் குற்றமும் பார்க்காது சேர்த்துக் கொள்ளும் சிங்களம்..”


இலகுவான விளக்கத்திற்காக முதலில் மகிந்த ராஜபக்ஷ..

01. அன்று 600 சிங்களப் போலீசாரை கொன்று புதைத்த குற்றச்சாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணாவை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக்கி, பின் மந்திரியாக்கி, அவரின் உதவியுடன் தமிழரை அழத்தார்கள்.

02. விடுதலைப்புலிகளுக்கு ஆயுத முகவராக இருந்த கே.பியை புலிகள் தலைமைக்கு தெரியாமலே நெடுகாலத்துக்கு முன்னரே நண்பராக்கிவிட்டனர்.

03. விடுதலைப் புலிகளைத் தவிர தமிழின விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய மற்றைய அனைவரும் ஏறத்தாழ இன்று சிங்கள இனவாதத்துடன் இணைந்து நிற்கிறார்கள்.

04. ராஜிவ் கொலையை காரணம் காட்டி சோனியா குடும்பத்தையும், காங்கிரசையும் வளைத்துப் போட்டார்கள்..

தமிழரை அழிப்பதென்றால் சிங்கள இனவாதம் பேயுடனும் கூட்டுச் சேரும் என்பதற்கு மகாவம்சம் மூன்றின் உதாரணம் இதுவாகும்.


மகாவம்சம் இரண்டின் காவிய நாயகன் 1ம் விஜயபாகு

01. சோழர்களை வெற்றிகொள்ள பாண்டிய இளவரசி திருலோகசுந்தரியை மணமுடித்தான் சிங்கள அரசன் முதலாம் விஜயபாகு… அதன் மூலம் பாண்டியர்களை சோழர்களுக்கு ஆதரவாக போக விடாது தடுத்தான்.

02. சேர அரசர்களுடன் விவாக பந்தங்களை ஏற்படுத்தி சோழர்களை தனிமைப்படுத்தினான்..

03. முடியுடை மூவேந்தர்களையும் மூன்றாக்கி, அதில் இருவரை தன்பக்கம் சேர்த்து, பொற்காலம் கண்ட சோழரையே ஆட வைத்தான்.

நிறைவாக 1077 ல் சோழர்களை வென்று, இலங்கைத் தீவில் அவர்களுடைய 77 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..

தமிழன் மற்றவனில் குறைபிடித்து, இவன் உண்மைத் தமிழனா என்று துருவித் துருவி ஆராய்ந்து, தனக்குத்தானே குறைபிடித்து, தனிமைப்பட்டு செல்லும் இனம் என்பது அவனுடைய கணிப்பு..

அவர்களை வெல்ல சிறந்தவழி, அவர்களுடைய எதிரிகளுடன் கூட்டுவைப்பதே என்று விஜயபாகு சிங்களவருக்கு சொல்லி வைத்தான்.

அதுதான் “நாம் சிங்களவர்..!” கொள்கை…!


இனி மகாவம்சத்தின் முதல் காவிய நாயகன் துட்டகைமுனு..

01. தமிழருக்கு எதிராகப் படையில் சேரும் ஒவ்வொருவரும் தன்னோடு புதிதாகப் பத்துப்பேரை சேர்க்க வேண்டும், அவர் தமிழராக இருந்தாலும் காரியமில்லை.

02. சிங்களவரின் ஒரேயொரு பொது நோக்கம் தமிழரை அழிப்பது, அதற்காக ஒன்றைப் பத்தாக பெருக்குவதே தமிழருக்கு எதிரான நாம் சிங்களவர் என்ற பொதுக்கொள்கை என்று அறிவித்தவன்.

தமிழ் நாட்டு தமிழர்பற்றி அவன் சொன்ன செய்தி…

தமிழ் நாட்டு தமிழர்கள் சாவதற்கு முன் பொங்கி எழ மாட்டார்கள், செத்த பின் கேட்கும் ஒப்பாரி போல பொங்குவார்கள்…

உதாரணம்…

எல்லாளனுக்கு உதவ வந்த தமிழகத் தளபதி பாலுகன் தலைமையிலான படை எல்லாளன் இறந்த பின்னர் ஒரு வாரம் தாமதமாகவே மன்னாருக்கு வந்தது, அனைத்துப் பலத்தையும் ஒன்றுகூட்டி பாலுகனையும், படைகளையும் கொன்று கடலில் வீசினான்…

பாக்கு நீரிணை தமிழ் இரத்தத்தில் சிவந்தது….

தமிழகத் தமிழரின் பிரதான குறைபாடு ” லேற்…”

இன்னொரு உதாரணம் உடனடியாக போரை நிறுத்த வழியிருந்தும் மு.கருணாநிதி தாமதமானார்..

வீண் உண்ணாவிரதம் இருந்து காலம் தாழ்த்தி, பாலுகன் போல தவறிழைத்த மு. கருணாநிதி தமிழக “லேற்..” வரலாற்றின் இன்னொரு சாபக்கேடு..

இப்போது அவருடைய டெசோ செத்தபிறகு கேட்கும் ஒப்பாரி..

இதை நாம் சொல்லவில்லை துட்டகைமுனு கதை சொல்கிறது.

இனி சென்ற வார உதாரணம் :

தமிழனுக்கு எதிராக படுகொலைக்களத்தில் இறங்குகிறானே இந்தப் புத்தபிக்கு இவன் கருணா, கே.பி பற்றி வாயே திறக்காமல் இருக்கிறானே.. ஏன்..?

தமிழனுக்கு எதிரென்றால் பேயுடன் அவனும் கூட்டு வைப்பான்..

தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, குழந்தைகளை புணர்ந்து, சர்வதேச போர்க்குற்றம் புரிந்தாலும் புத்தபிக்குவின் பார்வையில் அவன் காவிய நாயகனே..

இல்லாவிட்டால் மகாவம்சம் தனது வரலாற்றை நீட்டி மகிந்தராஜபக்ஷவை காவிய நாயகனாக்குமா..?

நேற்று முன்தினம் தமிழ்ப்படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்றவன் கூடவே என்ன சொன்னான்..?

கேரளப்படங்களை பாருங்கள் என்றான்…

பாருங்கள் எவ்வளவு நுட்பமாக அவன் திராவிடர்களைப் பிரிக்கிறான் என்று..

ஆம்…

திராவிடனை பிரிக்க வேண்டும் என்ற அவனுடைய கொள்கை மிகப்பழையது..

இனி சென்றமாத உதாரணத்தைப் பாருங்கள்…

சிங்கள இனவாத அரசின் இந்தியத் தூதுவன் பிரசாத் காரியவசம் என்ன செய்தான்..?

சிங்களவரின் 75 வீதமானவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களே.. ஆகவே தமிழகத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை ஆதரிக்க வேண்டாம் என்று வட இந்திய தலைவர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் போட்டான்..

இதன் நோக்கமென்ன..? வடக்கு, தெற்கு என்று இந்தியாவை பிரித்து, வடக்கை தன்பக்கம் இணைக்க முயன்றது அவனுடைய கொள்கை..

இதுவும் மிகப் பழையது 1ம் விஜயபாகுவினுடையதுதான்…

சரி இனி என்ன நடக்கும்…

ஒரு வேளை இந்தியா சிறீலங்காவிற்கு எதிராக மாறினால்…

மாறியவர்களின் எதிரியைக் குறிவைத்து, இந்தியாவிற்குள் கூட்டு வைத்துக் கொள்வார்கள் உதாரணம் : சுப்பிரமணியசுவாமி போன்றவர்கள்.

மறுபுறம் சர்வதேச அளவில் இந்திய எதிரிகளுடன் கூட்டு வைப்பார்கள்.

இனி… மறுபக்கமாக…

கடந்த 2000 ம் ஆண்டுகளாக நடைபெறும் தமிழ் சிங்கள இனப்போரில் தமிழர்கள் கடைப்பிடிக்கும் கொள்கை என்ன..?

அவன் தெலுங்கன், இவன் மலையாளி, இவன் காக்கைவன்னியன், அவன் அந்தச்சாதி, இவன் இந்தச்சாதி என்று தன் இனத்தையே தனக்குள் பிளவுபடுத்தி தாமே தனிமைப்படுகிறார்கள்.

சிங்கள இனவாதம் கொடியது அழுக்கானது என்றாலும் அது கூட்டல் விதியைக் கடைப்பிடித்து வெற்றி பெறுகிறது..

தமிழர்களோ கடும் தூய்மைவாதம் பேசி எல்லோரையும் விலத்தி, விலத்தி கழித்தல் விதியைக் கடைப்பிடித்து கடைசியில் தனிமரமாகித் தோல்வியடைகிறார்கள்.

தன் தம்பி விபீடணனை இழந்து தோற்ற இராவணன், நண்பன் எட்டப்பனை இழந்து தனிமரமாக புளியமரத்தில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன்.. இப்படி உதாரணங்களை அடுக்கலாம்..

இனி… சிங்கள இனவாதத்தை வெல்ல என்ன செய்ய வேண்டும்..

சிங்களம் என்றால் கூட்டல் தமிழர் என்றால் கழித்தல் என்ற பழைய விதியை மாற்ற வேண்டும்..

நாம் தமிழர் என்றால் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்…

முதலில் கையில் இருக்கும் கழித்தல் அடையாளத்தை தூக்கி வீசிவிட்டு, கூட்டல் அடையாளத்தை கையில் எடுக்க வேண்டும்.

சற்று முன் நடந்த ஒரு நிகழ்வு…

வடகொரியாவின் உற்ற நண்பனான சீனாவை தனது பக்கம் சேர்த்து, உலகம் வடகொரியாவுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறது..

வடகொரியாவின் கையில் அணு ஆயுதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் யோன் கர்ரி பெய்ஜிங்கில் நின்று கூறியுள்ளார்..

இதையெல்லாம் ஒப்பிட்டு மக்கள் மன்றில் பேசாமல் வெற்று உணர்ச்சி அரசியல் பேசக்கூடாது..

ஆம்…

தமிழர்கள் எங்கோ தொலைத்த திறப்பை வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடும் இனமாக இனியும் பயணிப்பதை அனுமதிக்க முடியாது.. அனுமதிக்கக் கூடாது என்பதற்காக ஆதாரங்களுடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது..

நாம் தமிழர் என்று தமிழர் ஒன்றுபடுவதை வரவேற்க வேண்டும், ஆனால் அது நாம் சிங்களவர் என்ற கொள்கையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, செம்மைப்படுத்தப்பட வேண்டும்..


கி.செ.துரை

அலைகள்