Sunday, June 9, 2013

பொறுத்து போதும் புறப்படு



சங்கு முரசொலி எங்கும் பரவிட
சொந்தமண் ஆண்ட இனம் - இன்று
சிங்கமழைத்திடச் சென்ற முயலென 
கொண்ட உயிர் தரவா
எங்கள் சிறுவரை இன்பமழலையை
இம்சை வதைபுரிந்தே - பகை
செங்குருதி யெழச்செய்பவர்கண்டுமே
சோர்ந்து கிடந்திடவோ

எங்கும் பரந்ததாம் இன்பத் தமிழெனில்
இன்னும் இழிமைசெய்து அவர்
எங்கள் தமிழினம் இல்லையென்றாக்கிட
ஏழையென் றாவதுவோ
சங்கதமிழ் சொல்லும் மங்கையர்வீரமும்
சற்றும் இளைத்தல்ல என்று
செந்தமிழர் இனம்சேரும் உரிமையை
சேர்ந்தொன்றாய் கேட்டிடவா

பொங்கி யெழு இன்னும் என்னதடையிது
பென்னம் பெரிதுயிரோ - கடல்
வங்கமெழும் புயல் என்றுமனம்கொண்டு
வீழ்த்த எழுகுவையோ
மங்கை இளையவர் மட்டுமல்ல முது
மாந்தர் மழலைகளும் இனி
செங்கனல் கண்ணொளி சீறத் துடித்துடன்
சேர்ந்து எழுந்திடுவீர்

தங்கம் கிடைத்திடத் தாயெனும் மண்ணையும்
தாஎன விட்டிடவா -நாமும்
அங்கம் குறைந்த அறிவிலியோ எங்கள்
அன்னையை விற்றிடவோ
எங்களினம் குடிகொண்ட நிலமதில்
ஏவல் பிசாசுகளும் -வயல்
தங்களுடையதென் றோடிவிதைத்திட
தந்து மகிழுவதுவோ

நங்கையர் எந்தமிழ் நாட்டவரை படை
நானிலம் பார்த்திருக்க - அவர்
தங்களின் பேய்மன தாகமும்தீர்த்திட
தந்து கிடப்பதுவோ
செங்குருதி காணச் சேர்த்தவர் கண்டுமே
சோர்ந்த்து படுத்திடவோ - இன்னும்
பங்கம் இழைத்திடப் போகட்டும் என்றுடல்
போர்த்துப் படுத்திடவோ

சொந்தஅரசும் சுதந்திரமும் இவர் சொல்லும்
இறைமையதும் - நம்
முந்தையர் கொண்டு அரசுசெய்த நில
மேன்மைகள் சொல்லிடடா
மந்தைகளாய் மதி கெட்டிடவோ எங்கள்
மண்ணை இழந்த பின்பு - மன
சிந்தனையில் தரம் கெட்டுகிடப்பதோ
சீறி எழுந்திடடா

எந்த சலனமுமின்றி அழிவினை
ஏற்று வணங்கிடவோ - அல்ல
சொந்த உயிர்துடித் தெங்கள் தமிழ் அன்னை
சீருறச் செய்குவையோ
நொந்துகிடந்ததுபோதும் புரண்டெழு
நில்லு புரட்சிஎனும் - ஒரு
மந்திரமன்றி மருந்தில்லை முற்றிய
மாபெரும் நோயிதற்கு

கிரிகாசன்

எழுந்துவா ஈழம் மீட்க!



நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ
நீயெழுந்து எல்லைபோட வேண்டும்
ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து
தூரமில்லைநீ நடக்கவேண்டும்
வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப
பாரமில்லை தோள் சுமக்க வேண்டும்
யாருமில்லை ஈழம்காக்க நின்னையன்றி! பார்த்திருக்க
நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும்

போருமில்லை தீயுமில்லை பூகம்பக்கள் ஏதுமில்லை
பீதிகொள்ள ஒன்றுமில்லை யென்று
யாருமில்லை என்றிருக்க நானுமில்லை என்னறெமக்குள்
வாரிமுள்ளை வீசிசெல்ல வேண்டாம்
வேருமில்லை என்று வெட்டும் கோடரிக்கு கைபிடிக்க
கூடிநிற்பதென்று எண்ணிடாதே
தீருமென்று நீயெழுந்து தேசமண்ணைக் காதலித்துத்
தேவை கொள்ளு தூங்க நேரமில்லை

நேரமில்லை என்று சொல்லி நேரமுள்ளை நீநிறுத்த
நேரம்நிற்பதில்லை அங்குஓடும்
தீரமில்லைச் சாரமில்லை செல்வதற்குப் பாதையில்லை
சேரவில்லை என்று சாட்டுவிட்டு
தூரமுள்ள வானவில்லைப் போலவண்ணம் காட்டி யுந்தன்
சோருமுள்ளம் நீவிடுத்தல் வேண்டும்
ஓரமில்லை நீயும் அஞ்சி ஓடுமெல்லை வாழ்வு விட்டு
ஓர்மையோடு ஈழம் மீட்க வேண்டும்

கிரிகாசன்

Saturday, June 8, 2013

வீரம் தாரும் மைந்தர்காள்!



நீங்கள் நின்றபோது எங்கள் நிலமிருந்தது - அந்த
நிலமிழந்தபோது உங்கள் நினைவு மீந்தது
தாயிருந்தபோதும் பிள்ளை தனியிருக்குது - இன்று 
தவித்திருக்கும் மக்கள் நெஞ்சு உமைநினைக்குது
பாயிருந்தபோது தூக்கம் வரமறுக்குது - இங்கு
பாய்ந்துவந்துபேய்கள் எமது தலையறுக்குது
நீங்கள் வந்து எங்கள் உள்ளே சேர்ந்திருப்பது -
இனி எந்தநாளிலன்றுதானே பயம் விடுப்பது

மயிரிழக்க மானம் என்று உயிரிழப்பது - கவரி
மானின் எண்ணம் அதனையொத்த தமிழிருந்தது
பெயரிழந்து பேச்சிழந்து பெருமை உடைமைகள் - இன்னும்
பேணிக் காத்த கலைவளங்கள் இவையிழந்துமே
துயரெழுந்து அழுதபோதும் அலறிஓடியும் - பெண்ணின்
துகிலிழந்து உயிரிழந்து துடிதுடிக்கவும்
எவரெழுந்தும் கேட்கவில்லைப் புவனம் மீதினில் - இனி
எது இழக்க உண்டு நீங்கள் எழுந்துவாருங்கள்

கையிழந்து கையில்கொண்ட கனமிழந்ததும் - எம்மைக்
காக்க ஏதுமில்லை யென்று காலம்சொன்னதும்
மெய்யிழந்த புத்தன் நாட்டை பையக் கொள்கிறான் - இந்த
மேதினியில் பலர் இணைந்து பாவம் செய்கிறார்
நெய்யிழந்த தீபமாக நாம் அணைவதா? இல்லை
வெய்யிலாக வான்வீதி உதயமாவதா?
பொய்யிழந்த நேர்மை இன்று வாழமுடியுமா இன்று
பேய்கள்கூடிக் கூத்தடிக்கும் பூமியல்லவா

இடியெழுந்து மேகமின்றி மின்னிக் கொண்டது - அன்று
எதிரிவானில் உங்கள்வீரம் புகையைவைத்தது
துடித்தெழுந்து நடை நடந்தீர் கிடுகிடுத்தது எதிரி
துரத்திஓட செய்தீர் ஈழம் பளபளத்தது
எலிபிடித்துவைக்க பூமி வலையறுத்தது - உலகம்
எழுந்து எங்கள் நெஞ்சின் நேரே இலக்கு வைத்ததும்
கடிகடித்து காட்டு நாய்கள் வேட்டையாடவே - இன்று
கையை விட்டுக் காத்திருந்து காட்சிகாணுது

ஐயோ நானா என்ரு ஐநா பின்னிழுக்குது - அது
அத்தனையும் வைத்திருந்து என்னசெய்யுது?
குய்யோ தானோ என்று கத்திக் குமுறினாலுமே - அது
குடைசரித்து கடமைதன்னை குப்பையாகுது
எய்யும் அம்பு எடுத்த கையை இன்னொருநாடு - மெல்ல
இல்லையென்று பின்னிழுத்து மூடிவைத்தது
பெய்யும் மழை, இடியிடிக்கும் புயலடிக்குமே - நீங்கள்
உங்கள்வீரம் எமக்களித்தால் உயிர் பிழைக்குமே!

செயல்வளர்த்து சீற்றம்கொண்டு சீறும் வேங்கையாய் - நீவிர்
சென்ற பாதை நாம்தொடர்ந்து செல்லும்போதிலும்
புயல் எழுந்தபோது பேய்கள் சிங்களம் யாவும் - பேச
பயமெடுத்து மனம்கலங்கி பதுங்கிச் சோர்ந்தன
கயலெழுந்து வாழுமோடும் அலைகடல்தனின் - கூட
ஊயரெழுந்து ஓடிக் கரும்படைகள் ஆண்டன
தயவெழுந்து இன்று எம்மைக் காக்க வாருங்கள் - எங்கள்
தரை, கடலும் வானும் மீட்கும் திறனைத்தாருங்கள்

கிரிகாசன்

Friday, June 7, 2013

தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்



தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை நடத்திய போதிலும் அவரது வீடுகள் என்ற பெயரில் இன்று வரை பத்து வரையான வீடுகளை சிறிலங்கா படைத்தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.

வன்னியில் அழகான நிலக்கீழ் பதுங்கு குழியொன்று கண்டுபிடிக்கப்படுமாயின் உடனடியாகவே பிரபாகரன் சொகுசாக வாழ்ந்த மேலுமொரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம் என்று படைத்தரப்பு தம்பட்டம் அடிக்கின்றது.

இதே போன்றே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கண்டுபிடித்த நிலக்கீழ் வீடொன்றை தற்போது படையினர் மக்களின் பார்வைக்கு விட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தின் கீழ் சுமார் 40 அடிக்கு மேல் பதுங்கு குழி போன்று வெட்டப்பட்டு மூன்று அடுக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டையே பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான சிங்கள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதிலும் உள்ளே மூன்று அடுக்கு மாளிகையாகவும் உள்ளதுடன் நிலத்திற்கு கீழே வாகன தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வீடு அமைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடுகளைப் பார்க்கின்ற போது படையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஆனாலும் இந்த வீடுகளை மக்கள் பார்வையிட விடுவதன் மூலம் புலிகளின் தலைவர் மிகவும் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்தார் என்பதையும் புலிகள் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள் என்பதையும் மக்கள் மனதில் திணிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மையை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் மக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

வன்னியில் புலிகளின் கட்டுமானங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்த வீடும் சிறப்பான கட்டுமானங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலக்கீழ் பதுங்குகுழி வீடுகள் உண்மையிலேயே தேசியத் தலைவருக்காக அமைக்கப்பட்டவையல்ல. பிரதேச மட்டத் தளபதிகள், உயர் தளபதிகள் போன்றோரின் வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள், களமுனைத் தளபதிகளின் திட்டமிடல்கள், உயர் தளபதிகளின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்காகவே வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் இவ்வாறான நிலக்கீழ் வீடுகளை அமைத்திருந்தனர்.

தமிழீழ தேசியத் தலைவர் தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டவர். அதிலும் களமுனைத் தளபதிகளில் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். தளபதிகளின் ஒன்றுபட்ட சந்திப்புகளின் போது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் அதிக கவனம் செலுத்தியிருந்தார். எங்கேயும் எப்போதும் துரோகிகள் இருப்பார்கள் என்று தலைவர் நம்பியிருந்தார். அதனால் தளபதிகளின் கலந்துரையாடல்களுக்காக நிலக்கீழ் பதுங்குகுழிகளில் வசதியுடன் கூடிய வீடுகளை அமைத்திருந்தார்.

இதற்கு மேலாக எப்போதும் தமது உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருந்த கரும்புலிகள் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தலைவர் இந்த வீடுகளை அமைத்திருந்தார். தேசியத் தலைவர் மாத்திரமன்றி போராளிகளோ தளபதிகளோ கூட இந்த வீடுகளில் வாழவில்லை. அவர்களின் கலந்துரையாடல் இடங்களாகவே இவை திகழந்தன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுக்கத்தக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடுகளை காட்சிப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. இது கூட ஒரு வகையில் தமிழ் மக்களு வெற்றியாகவே அமைகின்றது. ஏனெனில், தங்களுக்காக போராடிய புலிகள், தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் எத்தகைய கட்டுமான வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவதற்கும் புலிகளின் வீர தீரங்களை சிங்கள மக்கள் அறிவதற்கும் படையினர் சிறந்த களம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்று நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.

- தாயகத்திலிருந்து சங்கதி24 இற்காக வீரமணி

தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை உளமார நேசித்து பணி செய்த உன்னத மனிதர் வண பிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களின் நினைவுநாள்



எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.

மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.

1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.

பாதர் சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன

வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார். தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று

1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .

உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்.

1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .

பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.

இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.

மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.

இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .

இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன

இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பாதர் சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது

உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.

காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.

மதம் மொழி பார்க்காது மனிதனை நேசித்தம மனிதனின் மரணத்திற்காக ஓர்கணம் தலைசாய்த்து …..

எழுகதிர்

தீ பரவட்டும்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள் 
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு 
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும் 
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன் 
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர் 
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப் 
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட 
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் தவர் தீயும்- பல
கற்றிடும் மாணவர் உள்ளம் பிடித்திடக் 
காற்றினிலே பெரிதாகும் - தீயைப் 
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களே இனி 
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம் 
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக் 
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும் 
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி 
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்திடு 
சந்தண மார்பெடு தீரம் பெண்ணே
பொங்கிப் புறப்படு மாணவர்கள் திசை 
செல்லும்வழி வரும்தீர்வும்

கிரிகாசன்

தமிழீழத்தின் தேசியக் கொடியும் கீதமும்


ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

ஏறுது பார் கொடி ஏறுதுபார்

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது - பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சாத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது - சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சமதர்மத்தின் கொடியிது
எங்கள் தாயவள் கொடியிது

ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது 
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது

Thursday, June 6, 2013

தமிழீழ தேசியக்கொடி


வீரத் தேசக் கொடிபறக்குது  விண்ணில்பாரடா - அது
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர்  கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?

என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம்  ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?

தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - ஈழம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?

தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா

தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.

கவிஞர்:கிரிஷாசன்

முப்படை தந்தான்


மும்மனி தந்தான் புத்தன்
முப்பால் தந்தான் வள்ளுவன்
மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர்
முப்பெரும் தேவிகளுக்கும் 
முத்துறைகள் கொடுத்தனர்

மூவேந்தர்கள் ஆண்டனர்
ஆனாலும் தமிழ் தேசியம்
உலகமும் அறியவில்லை
தமிழனும் அறியவில்லை

முப்படை தந்தான் தலைவன்,
தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்
உலகமும் அறிகிறது….

“தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை”


தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

காசி ஆனந்தன்