Wednesday, May 8, 2013

மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி


மாவீரர் நாளின் படிமுறை வளர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர்களுக்கான நினைவு நாள் அறிவிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகின்றன. மாவீரர் நாள் நினைவு கூரப்படத் தொடங்கியதிலிருந்து அதில் ஏற்பட்ட படிமுறை வளர்ச்சியின் தொடக்க காலப்பதிவுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மாவீரர் நினைவு கூரல் ஒரு படிமுறைக் கூடாகவே வளர்ச்சி பெற்றது என்பதைச் சுட்டவும் அப்பதிவைச் செய்கின்றேன். இப்பதிவு முழுமையானதல்ல திருத்தங்களுக்கு இடமுண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதுமே மாவீரருக்கு பெருமதிப்பளித்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் அவர்கள் நினைவாக சுவரொட்டிகள் வெளியிடல் அவர்கள் நினைவாக நினைவுக் கூட்டங்களை நடத்தல் அவர்களின் வீரவரலாற்றை நூல்களில் பதிவு செய்தல் என அவர்களுக்கான மதிப்பளிக்கப்பட்டது. மாவீரர்களின் எண்ணிக்கை கூடியபோது எல்லா மாவீரர்களையும் ஒரே நாளில் நினைவு கூர்வது இன்றியமையாதது எனத் தோன்றியது.

இந்தியப்படை இங்கு நிலை கொண்டிருந்த காலத்தில் 1989ஆம் ஆண்டு தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகளில் முதல் வீரச்சாவடைந்த லெப்.சங்கரின் நாளை மாவீரர் நாளாக நினைவு கூர வேண்டுமென முடிவெடுத்தார். இதற்கமைய 27.11.1989 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் தமிழீழம் எங்கும் நினைவு கூறப்பட்டது. 24.10.1989 அம்பாறையிலிருந்து இந்தியப்படை வெளியேறி இருந்தது. அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய இடங்களில் பெருமெடுப்பில் மாவீரர் நாள் நினைவு கூறப்பட்டது. இந்தியப் படையின் அச்சுறுத்தலுக்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடி முன்மாரிக் கோட்டத்திலும் திருமலை, யாழ்ப்பாணம், வன்னிப்பகுதிகளிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது. மணலாற்றில் தேசியத் தலைவர் மாவீரர் நாளைச் சிறப்பாக ஒழுங்கு செய்து மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.


மாவீரர்களின் பெற்றோர்களுக்கான அழைப்பிதழை தலைவர் முன்னாள் போராளியான ஒலிவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி அச்சடித்து இங்குகொண்டு வந்து மாவட்டம் தோறும் அரசியற்துறையினர் ஊடாகப் பெற்றோருக்கு அனுப்பி ரோசாப்பூவை முகப்பிற் கொண்டதாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மாவீரர் நாளுக்கென ஒலிவர் வரைந்த படம் கொழும்பில் சுவரொட்டியாக அச்சடிக்கப்பட்டு எங்கும் ஒட்டப்பட்டன. அதன் சிறிய ஒரு வடிவம் சட்டைப் பைகளில் குத்தக் கூடிய வகையில் பலருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை தமிழ்நாட்டில் இளங்குமரன் அவர்களின் முயற்சியால் ரோசாப்பூவுடனான மாவீரர் சுவரொட்டியும் தலைவர் புலியுடன் நிற்கும் சுவரொட்டியும் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டன. மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் மாவீரர்களைப் பொதுச் சுடுகாடுகிளல் எரிக்கும் வழக்கம் தொடர்ந்தது. ஒருமுறை மாவீரர்களை மானிப்பாயிலிருக்கும் பிப்பிலி சுடுகாட்டுக்கு எரிக்கச் சென்றபோது அங்கு வேறொருவரின் உடலும் எரிந்து கொண்டிருந்தது. இப்படியாக இல்லாது வேறுபட்ட இடத்தில் மாவீரர்களை எரிக்க வேண்டுமென புதுவை அண்ணரோடு வேறு சிலரும் தலைவரோடு கலந்துரையாடினர். தலைவர் உடனடியாக மாவீரரை எரிக்கத் தனியான ஓர் இடத்தைத் தெரிவு செய்யுமாறு பணித்தார்.

அக்காலத்தில் கலை பண்பாட்டுக் கழகமே மாவீரர்கள் குறித்த நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து வந்தது. அதற்கமைய அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளியான ராசன் புதுவை அண்ணர் ஆகியோர் பல இடங்களைப் பார்த்து கோப்பாயில் திறந்த சிறைச்சாலையாக இருந்த இடத்தைத் தெரிவு செய்து அவ்விடம் குறித்து தலைவரோடு கலந்து பேசினர். அது பத்துப் பரப்பைக் கொண்டிருந்தது. அதற்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான பத்துப்பரப்புக் காணி விலை கொடுத்து வாங்கப்பட்டது. இருபது பரப்புக் காணி மாவீரரை எரிப்பதற்கான மாவீரர் மயானமாக தெரிவு செய்யப்பட்டது. மாவீரர்களை எரிப்பதற்கான ஒருமேடை கட்டிடக் கலைஞரான ரவி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அதற்குரிய வரைபடத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனத் தலைவர் கூறினார். அதற்கமைய கோப்பாயில் மாவீரர்களை எரிப்பதற்கான மேடை கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் மாவீரர் சுடுகாடு அமைக்கப்பட்டது. மாவீரர்களை இந்த சுடுகாட்டில் எரித்தல் சூண்ட காலம் சூடிக்கவில்லை.

 
ஒருநாள் தலைவர் பலரை அழைத்து மாவீரர்களைப் புதைப்பது குறித்து கலந்து பேசினார். மாவீரர்களைப் புதைப்பதன் மூலம் அவர்கள் நினைவை அவர்கள் உறவினரும் தமிழீழ மக்களும் என்றம் நினைவு கூர்வர். அதுவொரு போர் மரபை தமிழரிடையே வளர்க்கும் என அவர் கருதினார். மேலும் மாவீரர்களை மதச் சடங்குகளுக்குள்ளாக்காது மதங்கள் கடந்த நிலையில் அவர் புதைக்க விரும்பினார். இந்தக் கூட்டத்தை அடுத்து மாவீரர்கள் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நடுகற்கள் வைக்கப்பட்டன. இந்த நடுகற்களுக்காகக் கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கற்களும் நாவலரால் நல்லூரை மாற்றிக் கட்டவெனக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த கருங்கற்களும் பயன்படுத்தப்பட்டன. கருங்கல்லில் பெயர் பொறிக்கும் பணி கலைபண்பாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் நாளை எவ்வாறு நினைவு கூருவது என்பதை ஒழுங்கமைக்கும் பணி புதுவை அண்ணரிடம் தரப்பட்டது. அவர் மாவீரர் நினைவு கூரலுக்கான நடைமுறையை எழுதித் தலைவரிடம் காட்டி அதற்கான ஒப்புதலைப் பெற்றார். 27ம் திகதி 00:00 மணிக்கு – அதாவது 26ம் நாள் 24:00மணிக்கு – மாவீரர் நினைவொலி எழுப்பப்படும். 00.03 நிமிடத்தில் மாவீரர் சுடர் ஏற்றப்படும் என்ற வகையிலேயே மாவீரர் நாள் நினைவு கூறப்பட்டது. பின்பு அந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இன்று லெப்.சங்கர் வீரச்சாவடைந்த 18.05 மணிக்கு மாவீரர் நினைவொலி எழுப்பலுடன் மாவீரர் நாள் நினைவு கூரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கரின் உடல் தமிழ்நாட்டில் எரிக்கப்பட்டது.

இரண்டாவது மாவீரன் லெப்.செல்லக்கிளியின் உடல் அக்காலச்சூழல் காரணமாகப் புதைக்கப்பட்டது


2007 ஆம் ஆண்டு திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது