கார்த்திகை – 27 தமிழீழ மாவீரர் நாள் தமிழர் இலட்சியக் கனவுக்கு உயிர்களால் வரலாறு எழுதிவிட்ட புனிதர்களை நினைவுகொள்ளும் நாள். காலம் முழுதும் தமிழர் காவிய அடிமை இடரை தீ மூட்டும் கனவில் ஆகுதியாகிப் போன அற்புதங்களை நினைவில் அழுது நிமிரும் திருநாள். ஒன்று பத்தாகி தாயக விடுதலைப் போருக்காக நாம் 35,000 மேற்பட்ட மாவீரர்களைக் கல்லறைகளில் விதைத்து எங்கள் மனங்களில் நினைவுகளைச் சுமந்து வருகின்றோம். தலையில் குட்டவும் கால்களில் மிதிக்கவும் காறி உமிழவும் வாய்த்துப் போன பரிதாபத்துக்குரிய இனமாகிக் கிடந்த தமிழினத்திலிருந்து வீழ்ந்த விதையொன்றின் மூலம் தமிழர்மான உணர்ச்சிப் பெருவிருட்சமாகிய நாள். 27.11.1982. லெப். சங்கர் எதிரியின் முற்றுகை ஒன்றை உடைத்து உடலிடை ஊடறுத்துச் சென்றவரை வழி சிந்திய குருதியோடு தன் பாசறை சென்றவன் அன்று காத்தது துப்பாக்கியும் இயக்கத்தின் இரகசியங்களும்தான்.
ஆனால் இன்று அந்த வீரன் மூட்டிய நெருப்பு ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் பெருவீரமாக எரிகிறது. எத்தனை ஆண்டுகளாய்… எத்தனை ஆட்சியாளர்கள்… எத்தனை முறை பெரும் காட்டாற்று வெள்ளம் போல திரண்டு தமிழர் விடுதலைத் தீயை அணைத்துவிட முயன்றனர், முயல்கின்றனர். ஆனால் முடிகிறதா? விழ, விழ எழுவோராய் தமிழினம் தலைவர் வழியில் தன் இலட்சியத்தில் உறுதி பூண்டு எழுகிறது. சின்ன விதையாய் நிலத்தில் வீழ்ந்தபோது எதிரி கூட நினைத்திருக்கமாட்டான் இந்த விதைக்குள் இத்தனை வீரியமிருக்குமென்று. அன்று வீழ்ந்தது சங்கர். ஆனால் அவனை வளர்த்தது பிரபாகரன் என்பதைப் பகைவன் காலம் கடந்துணர்ந்த போதுதான் புரிந்தது தமிழர் வீரத்துக்கு பிரபாகரன் உரமூட்டத் தொடங்கியிருப்பது. தனியொருவாய்த் துணிந்து தமிழர் வீரத்தை இனத்துக்குள் பரவச் செய்து தமிழினத்தையே புரட்சிக்குத் தட்டியெழுப்பிய அந்தத் தலைவனின் முன்னால் எங்கள் முதல் வீரன் லெப். சங்கர் களப்புண்ணோடு மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தான். அன்று தம்பி, தம்பியென தன் தலைவனைக் கூவியழைத்தவனின் மரணத்தைத் தடுக்க முடியாது கண்ணீர்த் துளிகள் பனிக்க தன் விரல்களால் அவன் தலையைக் கோதியபடி துயரத்தில் இடிந்து. இலட்சியத்தால் உறுதி கொண்டு நின்ற தலைவர் அவன் இலட்சியத்தை தன் நெஞ்சில் சுமந்து உறுதிகொண்டு நிற்கிறார். இன்று எத்தனை மாவீரர்கள். இலட்சியம் ஒன்றே தங்கள் உயிர் மூச்சென உறுதியோடு களமாடி நிலத்தில் வீழ்ந்து விட்டனர்.
துப்பாக்கி ரவை கிழித்து குருதி கொப்பளிக்க நிலத்தில் வீழ்ந்தவர். நஞ்சை உண்டவர், குண்டடித்தவர், கரும்புலியாய் வெடித்தவர், உண்ணாது தன்னை அழித்தவர், சுடடா என்னைச் சுடடா எனச் சாவே சாவைக் கண்டஞ்சும் வகையில் பல வடிவம் எடுத்தவர். நினைவில் உருகித் தலைவர் முகம் நிலம் பதிந்து நிற்க அவர் முன்னே எட்டுத்திக்கும் தாவிப் பாய்ந்து மீண்டும் அவர் முகம் நோக்கும் தீயின் முகத்தில் தலைவர் வீழ்ந்தவர் மீது உறுதிகொண்டு நிற்பார். அந்தோ தேசமே மாவீரர் நாளில் உறுதி பூண்டு நிற்கிறது. கனகபுரம் துயிலுமில்லத்தில் 24.03.1990 முதல் இன்று வரை பணியாற்றிவரும் தியாகராசா 14.12.1989 இல் இருந்து எம்முடன் சேர்ந்து பணியாற்றத்தொடங்கினார். அங்கு முதலில் 24.03.1990 இல் எரிக்கப்பட்ட போராளி குணா- நடராசா இராசுவேந்திரன், இராமநாதபுரம் என்று குறிப்பிட்டார். 1991- இல் கனகபுரம் துயிலுமில்ல மேடை கட்டடப் பணிதொடங்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு மாவீரர் நாளுடன் அது பயன்பாட்டிற்கு வந்தது இத்துயிலுமில்லத்தில் 346 வித்துடல்கள் எரிக்கப்பட்டன 8.09.1991 பிரகரி இரத்தினசேவரி சரவணமுத்து உருத்திரபுரம் என்ற போராளியின் வித்துடலே அங்கு விதைக்கப்பட்ட முதல் வித்துடலாகும். இதுவரை அங்கு 1426 வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. 900 நடுகற்கள் நடப்பட்டுள்ளன இந்த மாவீரர் துயிலுமில்லத்தை அமைக்க மேஜர் இலக்கியனோடு போராளி நாகூர் முன்னாள் போராளிகள் சித்திரன் தோமசு ஆகியோர் கடுமையாக உழைத்தாக அவர் குறிப்பிட்டார் 1996 இல் சிங்களப் படை அப்பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில் லெப். கேணல் குமணன், மேஜர். நியாசு, கப்டன். பாபு உட்பட்ட ஐவர் அங்கு விளக்கேற்றினர் என்றும் 1997 இல் அருகிலிருந்த சிங்களப் படையை சண்டையிட்டு விரட்டிவிட்டு கேணல். தீபன் கேணல். பால்ராஜ் ஆகியோர் விளக்கேற்றினர் எனவும் குறிப்பிட்டார். தியாகராசா அவர்கள் இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு திரு. யோகரட்ணம் யோகி அவர்களால் எழுதப்பட்டது