Tuesday, June 4, 2013

உயிர் தந்து மரணத்தை வென்றவர் !



உலகின் திசையெங்கும் 
ஊர்கள்தான் பிரிந்து
கண்கள் கார் பொழிய
கரைகள் தெரியாது

யாரும் துணைக்கின்றி
துடித்துத் தவித்த நாம்
துயர் சூழ்ந்து வாழ்விழந்து
துன்பத்தில் உழல்கையிலே
விம்பத்து வாழ்வென்று
எம் நெஞ்சத்துள் தீமூட்டி
தம் உடலோடு உயிரீந்த
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

மரணத்தை வென்றெங்கள்
உயிருக்குள் ஒளியானோர்
புகழ் பாடும் தகுதியற்ற
நிழல் தேடும் மானிடர் நாம்
புனிதர்களே நீங்கள்
மரணத்தை வென்றவர்கள்
மானுடம் காத்தவர்கள் !

உயிர்ப் பூவை ஊதிவிட்டு
ஒளிப் பூவை எமக்காக்கி
எம் நெஞ்சத்து மனவெளியில்
நீக்கமற நிறைந்துவிட்டீர்
நிலைத்திருக்கும் உங்களது
பெரும் செயல்கள் தாய்மண்ணில்! 
பெயர்ந்த தமிழினமும்
தாம் வாழும் தேசமெங்கும்
புகழ் பாடித் தாள் பணியும்
ஓரழகும் பேரழகாய்
உலகினிலே திகழ்கிறது !

ஆதியாய் அநாதியாய்
அவதரித்த செந்தமிழை
யார் வந்து தடுத்தாலும்
எவர் வந்து தடுத்தாலும்
உயிரீந்து தடுப்பதொன்றே
உயர்வென்று சென்றவரே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !
அடிமுடி அறிந்திட முடியாத
அற்புதச் சோதிகளாய்
கடலிலும் தரையிலுமாய்
கண்ணிமைக்கும் பொழுதினிலே
எம் நெஞ்சம் பிளந்து விட்டு
நெருப்பாகிப் போனவரே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

தமிழீழத்தின் பிறப்புக்காய்
ஈகத்தில் உயரீகம்
உயிர்க்கொடையை ஏற்றுச்சென்று
தமிழ்க்குலத்தைக் காத்து நின்று
தண்ணொளியர்ய் எம் வெளியில்
தருமத்தின் தலை காக்கும்
எம் தமிழ்க்குலத்து வீரர்களே
மானிடத்துள் ஞானிதரே
மரணத்தை வென்றவரே !

கவிஞர்:மா.பாஸ்கரன்