Friday, June 7, 2013

தீ பரவட்டும்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள் 
நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு 
கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும் 
இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன் 
சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
வாழ்வினுக்கோர் அத்திவாரம்
சுற்றி மனங்கொண்ட செந்தீ எழுந்துயிர் 
கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப் 
பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட 
முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
பாசமிகுந் தவர் தீயும்- பல
கற்றிடும் மாணவர் உள்ளம் பிடித்திடக் 
காற்றினிலே பெரிதாகும் - தீயைப் 
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களே இனி 
முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம் 
வெற்றிவரை தொடரட்டும்

செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக் 
குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும் 
தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி 
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்திடு 
சந்தண மார்பெடு தீரம் பெண்ணே
பொங்கிப் புறப்படு மாணவர்கள் திசை 
செல்லும்வழி வரும்தீர்வும்

கிரிகாசன்