ஈழத் தமிழர்க்குக்
கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர்
கரங்கள் நீளுக…
ஈழத் தமிழர்க்குத்
தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள்
தளங்கள் ஆகுக…
ஈழத் தமிழர்க்கு
ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ஆயுதம் செய்க…
ஈழத் தமிழர்க்கு
ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர்
ரத்தம் பாய்க!…
ஈழத்திலிருந்து நீளும் கரங்களை
தோழமை கொள்வதெம் பிறப்புரிமை
கோழியின் செட்டைக்குள்
குஞ்சுகள் அடங்கும்.
பாழும் கழுகுக்கு பாசமா புரியும்?
ஈழம் வெல்வது புலிகளின் உரிமை
ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை.
வாலை ஆட்டாதே இந்திய அரசே
வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே!
மக்கள் கவிஞர் இன்குலாப்.
ஒரு இனத்திற்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படக் கூடாது. எத்தனை மறுப்புகள், எத்தனை இழப்புகள். தமிழ் மக்கள் சிந்திய கண்ணீரை எடுத்தால் கரிப்பு மிக்க ஒரு கடலையே உருவாக்கலாம். ஒரு இனத்தின் விடுதலைக்காக அவர்கள் நடத்திய போராட்டம் தான் எத்தனை? தம்முடைய எண்ணங்கள் முழுக்க லட்சியங்களை சுமந்து கொண்டு விடுதலை வேள்வியில் தம் உயிரையே எரித்துக் கொண்ட இளம் கொழுந்துகள் எத்தனை பேர்? விடுதலைக்கான களத்தில் கதற கதற வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வன்னித் தமிழச்சிகள் எத்தனைபேர்? அதனையும் மீறி விடுதலைக்கான நியாயத்தை நெஞ்சினில் சுமந்து. வாழ்க்கையை விடுதலை பயணத்திற்காய் ஒப்புவித்து ஈகையுடன் வாழ்ந்த இளம் வீரர்கள் எத்தனை பேர்? தாம் வார்த்தெடுத்த வரலாற்று ஆவணத்தை சிதைந்து போன தமது பண்பாட்டு அடையாளத்தை மறு உருவாக்கிய ஒரு மாபெரும் இயக்கத்தை, தமிழர்களின் மனசாட்சியை கொன்றொழித்த பெரும் பழியை சிங்கள இன வெறியன்களோடு சேர்ந்து இந்தியாவும் பகிர்ந்து கொண்டது. தமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் ஆவணத்தை பாதுகாக்க முனைந்த ஒரு திறன்மிக்க ஆற்றலை அடக்கிவிட பல நாடுகளின் துணையோடு பாரிய படை நடத்தி நசுக்கிப்போட்டதாய் கர்ச்சனை செய்கிறது சிங்கள இனவெறி அரசு.
இன்றைய மக்கள் குடிதண்ணீருக்காய் வரிசையில் நிற்கிறார்கள். கால்வயிறு கஞ்சிக்காய் காத்திருக்கிறார்கள். கதறிஅழும் பச்சிளங்குழுந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் பரிதவிக்கிறார்கள். காற்றின் புழுதி எமது தமிழச்சிகளின் தலையை சீரழிக்கிறது. திறந்த வெளி சிறைச்சாலையாய் பாதுகாப்புவலையம் என்ற பெயரிலே உயிருக்கு பாதுகாப்பற்ற ஒரு முகாம் அங்கே. பசிக்கு ஏங்கும் சிறுவனுக்கு, நமது பாட்டன் காலத்து கதை தெரியுமா? அவன் அந்த மண்ணை கீறி சீர்படுத்தி வயலாய் மாற்ற பட்ட வதை தெரியுமா? காடாய் இருந்தவைகளை கழனியாக்கி, நிலமாக்கி, ஊராக்கி உறவுகளை வளர்த்த நிலை தெரியுமா. இதையெல்லாம் கற்றதினால் தான் புலிகள் கரம் உயர்த்தினார்கள். இன்று தேசியம் பேசும் துரோக முகங்களுக்கு அங்கே தோன்றிய தமிழ்தேசியத்தின் வரலாறு தெரியாதா என்ன ஆனால், எல்லோரும் ஒன்று கூடி தமிழின அடையாளத்தை சிதைக்க முயற்சிப்பதேன்? எமது தமிழ்தாயின் அழுகுரல் ஓசை கடல் தாண்டி வந்து நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள இரவையும், இருளையும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மினப் பெண்கள் உங்களுக்குத் தெரியுமா நம்முடைய வரலாறு.
புத்தரின் போதனை தமிழர்மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இயல்பாக பிற உயிர்களை நேசிக்கும் பண்பு தமிழரிடையே உயர்ந்தோங்கி இருந்ததனால் பௌத்த சித்தாந்தங்கள் அவர்களை வெகுவாய் ஈர்த்தது. இதுவே பல தமிழர்கள் பௌத்தத்திற்கு மாறிட காரணமானது. சாத்தனார் எழுதிய மணிமேகலையிலும் மாகராமர் கபாலி மொழியில் எழுதிய மகாவமிசத்திலும், ஒத்த செய்தி ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியான யாழ்நாட்டை அராசாண்ட அரசரின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு அரியணை மோதலுக்காய் புத்தர், மன்னரிடமும், பிணக்கு ஏற்பட்ட மருமகனிடமும் பேசி சிக்கலை தீர்த்து வைத்ததாக அறிகிறோம். இந்த வரலாற்றுச் செய்தியை இங்கே பதிவு செய்ததற்கான காரணம் இலங்கை சென்ற புத்தர் தமிழ் மன்னர்களின் அரவணையிலே தான் தமது பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்காகத்தான். இதைப்போன்றே தென்மேற்கே களனி ஆற்றங்கரையில் அரசாண்ட தமிழ் மன்னன் புத்தரை தமது பகுதிக்கு அழைத்துச் சென்று பேசச் செய்தான். அங்குவாழ்ந்த தமிழர் பலர் பௌத்தத்திற்கு மாறினர்.
தமிழ் நாட்டிலும், இலங்கைத்தீவிலும் வாழ்ந்த தமிழர்கள் தம்மை நாகர்கள் என்று அழைத்துக் கொண்டனர். “மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு என்கிற நூலில் அண்ணல் அம்பேத்கர் இந்த வரலாற்றுச் சான்றை உறுதிபடுத்துகின்றார். கி.மு.550 களில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனை அமைந்தது. இக்காலத்தில்தான் இலங்கைத்தீவிற்கு விஜயன் என்னும் இளவரசன் இந்தியாவில் இருந்து வருகை புரிந்தான். அதுவரை ஒரே மொழியை கொண்டிருந்த தமிழர்கள் முதல் முறையாக ஒரு புதிய மொழியை கேட்கத்தொடங்கினர். இது அவர்களுக்கு புதிய அனுபவத்தையும், இனம்புரியா உணர்வுகளையும் தந்திருக்கவேண்டும். கி.மு.269-227 அளவில் தமிழகத்திலும் இலங்கையிலும், பௌத்தத்திற்கு மாறுவதற்கு அரசு துணைபுரிந்ததால் ஏராளமான மக்கள் சமயம் மாறத் தொடங்கினார்கள். இக்காலகட்டத்தில் கலிங்கத்து அசோக பேரரசரின் சார்பாக புத்தபிக்குவான மகேந்தர் இலங்கைக்கு வருகிறார். அவர் இலங்கை அரசரின் மனம்மாற்றி அரசரோடு சேர்த்து மக்களையும் பௌத்தத்தில் இணைத்தார். ஆக புத்த சமயம் படர்ந்து விரியத் தொடங்கியது. இந்நேரத்தில் சங்கமித்திரை என்னும் பௌத்த மத பிக்குனி கயாவில் இருந்து அரசமரக்கிளை ஒன்றை இலங்கைக்கு கொண்டு வந்து அரசரின் ஆதரவுடன் அனுராதாபுரத்தில் அதை நட்டு வைக்கிறார். அவர் நட்டு வைத்த அரசமரம் இன்றுவரை அனுராதாபுரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பௌத்தம் பரவிய போது பௌத்த பீடத்தின் மொழியாக பாலி மொழி இருந்தது சிறிதுநாளில் பிராகிருதமும் பாலிமொழியோடு இணைக்கப்பட்டது. இவை இலங்கைத் தீவின் பயன்பாட்டிற்கும் வந்தன. மண்ணின் மொழியான தமிழ் பிற்காலத்தில் இத்தனை இன்னல்களை அனுபவிப்பதற்கு இந்நிகழ்வே காரணமாக இருந்தன. கலிங்கச் சொற்களுடன் விஜயன் வந்தான். பாலி மொழியைக் கொண்டு மகேந்தர் வந்தார். இவை இரண்டும் இணைந்து வட்டார வழக்குகளாக உருமாறத் தொடங்கின. இப்படி வளரத் தொடங்கிய இம்மொழிச்சொற்களையே பிற்காலத்தில் சிங்கள மொழியென அழைக்கத்தொடங்கினர்.
வரலாற்றில் தமிழன் இலங்கையின் தொல்குடி என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. கரிகால சோழன் காலத்தில் சோழப் பேரரசு இலங்கையின் மீது படையெடுப்பு நிகழ்த்தி அங்கிருந்தே ஆற்றை மறைத்து அணை கட்டும் தொழில் நுட்பத்தை கற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கரிகாலன் கல்லணையைக் கட்ட இலங்கையில் இருந்தே 12 ஆயிரம் பேரை அழைத்து வந்ததாக வரலாற்று நிகழ்வுகள் அழுத்தமாய் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கரிகாலனின் படையெடுப்பிற்கு பின்னர். சோழ சிற்றரசுகளின் தன்னிகரற்ற அரசனாக தலைநிமிர்ந்து நின்றான் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அவன் இலங்கைத்தீவு முழுவதையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி மிகச்சிறப்புற வழிநடத்திக் கொண்டிருந்தான்.
எல்லாளன் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலம் கி.மு. 161-117 இந்த சிறப்புமிக்க ஆட்சியை பொறுக்க முடியாத துட்டகாமனி என்ற விஜயன் வழி வந்த அரசன் தெற்கே கடல், வடக்கே தமிழர் நான் எப்படி கால் நீட்டிப் படுக்கமுடியும்! என்று கேட்டான்.
தொடரும்…
- கண்மணி
முகவரி அல்ல முகம் - பாகம் 2