விரிந்த உங்கள்
வெள்ளைச் சிறகுகள்
ஒப்பந்தச் சாத்துகளால்
கறைப்பட்டதில்லை
தொடரும் இரும்பு நாய்களின்
குரைப்பில்
அவர்களின் பெருமூச்சைக்
கேட்க முடிந்ததோ?
சரசரக்கும் சருகுகளில்
சன்னமாய் ஒலித்த
குரல்களில் இருந்த செய்திகள் என்ன?
பதவி நாற்காலிப்
பந்தய ஒட்டத்தில்
மிதிபட்டு நசுங்கிய
ஈழப் பிரச்சனையோ?
அமைதித் திரையின் பின்பு
குருதியில் குளிக்கும்
அசோகச் சிங்கங்களை
அம்பலப்படுத்த
இனியும் தமிழகம்
எழும் என்ற நம்பிக்கையா?
வடக்கில் எந்த
வளர்ந்த மரங்களில்
அடைவீர் என்பதை
அறியேன்……. ஆயினும்
அமரும் போது கூறுக…….
அந்தக்
கானகச் சருகுகளில்
புதைந்து கிடப்பவை
விடுதலைக்கான விதைகள் என்று…
முளைவிடும்……. வானத்தை
முட்டி வளரும் என்று…
கடந்து வந்த கடல்களின்மீதும்…
வழியனுப்பி வைத்த குன்றுகள் மீதும்…
ஆணையிட்டுக்
கொக்குகளே:
கூறுக!
- மக்கள் கவிஞர் இன்குலாப்.
அடிமைத் தனத்தின் வலி, உணர்ச்சி உள்ளவர்க்கு மட்டுமே புரியும். ஆமையைப்போல் அடங்கி ஓடுங்கி வாழ எந்த ஒரு தன்மானம் கொண்ட இனமும் விரும்பாது. உரிமையை இழப்பது உயிரை இழப்பதைவிட கொடுமையானது. உரிமை இழந்து வாழ்வது நம்மை பிணங்களாக அடையாளப்படுத்தும். நமது உரிமையைக் குறித்த சிந்தனை நமது கடந்தகால நிகழ்வுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. நான் யார் என்று என்னை புரிந்து கொள்ளாதவரை எப்படி நானாக இருக்க முடியும். நான் என்பது ஒரு புள்ளி அல்ல. கடந்த காலத்தின் தொடக்கம். ஒரு புள்ளி தொடக்கத்தை விட்டுச் செல்லும் ஆவணம். என்னிலிருந்து தான் என் சந்ததியினர் என்னைக் கற்றுக் கொள்வார்கள். எனக்கான அடையாளங்கள் என்னுள் ஏராளமாய் புதைந்திருக்கிறது. எனக்கான ஒரு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் வடிவமைப்பு எனது பழக்க, வழக்கம், உணவு முறை, உறவு பின்னல்கள், இவைகள் என்னை மற்றவர்கள் தெரிந்துகொள்ள காரணியாக இருக்கிறது. என்னை அவர்கள் தெரிந்து கொள்வதைப் போலவே என் மூதாதையர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்பது என் மூதாதையர்களின் நிகழ்கால இருப்பு. என் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்பதை தெரிந்து கொள்வதன் மூலமே என்னை நான் அடையாளப் படுத்த முடியும். இதைதான் வரலாறு என்கிறோம். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவரை நமக்குள் கோபம் வராது. போராடும் உணர்ச்சி துளிர்விடாது. ஆகவே எந்த ஒரு நிகழ்வையும் அதன் வரலாற்றுப் பதிவுகளோடு அல்லது அந்த வரலாற்றின் பார்வையின் துணை கொன்டு நம்மை நாம் இருத்திக் கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று விட்டு வீரனாய் வேடம்போடும் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக உலகநாடுகள் சபையில் அன்று கொண்டுவரப்பட்ட முதல் தீர்மானம் தோல்வியடைந்தது. பல நேரங்களில் வரலாற்றில் பல பிழைகள் இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கியூபாவும் உடன் சேர்ந்திருப்பதை எண்ணி அதிர்ச்சியும், வியப்பும் அடைந்திருக்கிறது. அடிமைச் சிந்தனையை உடைத்தெரியும் தன்மை வாய்ந்த ஒப்பற்ற நாடாக நாம் பலமுறை கியூபாவை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.
ஆனால் கியூபா எப்படி இந்த அநியாயத்திற்கு துணைபோனது என்பது விளங்கவில்லை. ஆனால் நமது சிந்தனையில் கியூபா மட்டுமல்ல, எதிராய் வாக்களித்த எந்த நாடுகளிலும் தமிழர் விடுதலைக்கான தலைவர்கள் தாம் சரியாக பணியாற்றவில்லை என்பதை இந்தியா, பாகிஸ்தான், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தை சரியாக எடுத்துரைக்க தவறியதால், அல்லது அந்த நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் போராளிகளின் தியாகத்தையும் அவர்களின் போராட்ட தர்மத்தையும் சரியாக விளக்கிச் சொன்ன காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான முதலாவது உலகத் தீர்மானம் வெற்றிப் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. எந்த ஒரு போராட்டத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு அமைந்திருப்பதை, நாம் கூர்ந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடியும். அந்த வரலாற்றில் உள்ள நியாயம் அந்த உரிமையை வென்றெடுக்கவேண்டிய தேவை இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஆகியவைகள் அந்த மக்களின் இதய வலியை வைத்தே அளவீடு செய்ய முடியும்.
சில செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அழுத்தமாய் பதிவு செய்வதற்காகவே நாம் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையை வாசித்து வாசித்துப் பழக்கப்பட்ட இலங்கைத்தீவிற்கு விஜயனின் வருகை ஒரு வீழ்ச்சியைத் தந்தது. அதைவிட மேலாக பௌத்தர்கள் தமது சமயத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்ய தயாராக இருந்த காரணத்தினால் சதியாய் ஒரு கதை எழுதி அதை சரி என நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள். இதிகாசங்களை வைத்து இந்தியாவின் வரலாற்றை எப்படி தீர்மானிக்க முடியாதோ அப்படியே மகாவம்சத்தை வைத்தும் தமிழீழ வரலாற்றை தீர்மானிக்க முடியாது. வயதான தமிழ் மன்னன் எல்லாளனை சதியால் கொன்றொழித்த சிங்கள, பௌத்த இனவெறியர்கள் இன்று தமிழர்களை கருவறுக்கும் கொடுமையை கேவலமாய் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
கோட்டையை தலைநகராகக் கொண்ட கோட்டைச் சிங்கள அரசு போர்த்துக்கேசியரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கி ஒடுங்கியது. கி.பி. 1605 ல் இந்த நிகழ்வு முடிந்து 14 ஆண்டுகள் கழித்து நிலம் பறிக்கும் கூட்டமாய் காலணி ஆதிக்க அடங்கா பிடாரிகளாய் வலம் வந்து கொண்டிருந்த அதே போர்த்துக்கேசியர்களால் கி.பி. 1619 ஆம் ஆண்டு தமிழீழ அரசு ஒடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அதாவது கி.பி.1815 ல் கண்டியைத் தலை நகராகக் கொண்ட கண்டி உடறந்த அரசு ஆங்கிலேயர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. கிரேக்க புவியியல் வல்லுனர்கள் தாலமி முதல் சமீபகாலங்கள் வரை இலங்கைத் தீவிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் வரை தமது குறிப்புகளில் தமிழர் நிலப்பகுதியையும், சிங்களர் நிலப்பகுதியையும் தனித்தனியே தான் குறிப்பிட்டு வந்துள்ளார்கள் என்பது வரலாற்று ஆவணங்களில் இருந்து நமக்கு விளங்குகிறது. சிங்கள பேரினவாதிகள் இப்போது பேசும் ஒன்றுபட்ட இலங்கை என்பது இருந்ததில்லை. அது விஜயனின் வருகைக்கு முன்னர் தொல் தமிழர்களால் மட்டுமே அவ்வாறு அறிவித்துக் கொள்ளமுடியும்.
இந்தியாவை ஆளும் சில அரசியல் வாதிகள் அயல் நாட்டின் இறையாண்மைக்குள் தாம் நுழைய முடியாது என்று கூறுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு குறித்து மூச்சுவாங்க பேசுகிறார்கள். தமிழ்தேசியத்தின் மீது சிங்கள, பௌத்த பேரினவாத தேசியம் அடக்குமுறையை ஏவிய வரலாற்றை இவர்கள் அறியாதவர்களா, அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் நடிக்கிறார்களா என்பது எமக்கு விளங்கவில்லை.
சிங்களர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை இரட்டை என்று அழைத்தார்கள். தமிழர்கள் தமது ஆட்சிப்பிரிவுகளை வன்னிமை என்று அழைத்தார்கள். சிங்களரின் ஆட்சிப்பகுதியாக ராஜரட்டை, மாயரட்டை, உடறட்டை, உரோகனரட்டை என்பவைகளும் தமிழர் தம் ஆட்சிபிரிவுகளாக யாழ்ப்பாணம், வன்னி, கொட்டியாறு, பழுக்கானம், பானம்மை, முத்துச் சலாபம் என்று பகுக்கப்பட்டிருந்தது இவை பெரும்பிரிவுகளாக இருந்தாலும் இவற்றுள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன. இந்த ஆட்சியின் அளவுகளாக பல ஊர்கள் அமைந்திருந்தது.
கி.பி.1796 ல் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள். கி.பி.1815 ல் கண்டி அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கைத் தீவுகள் முழுவதையும் ஒரே கொடையின் கீழ் கொண்டுவந்தார்கள். இரண்டாக, மூன்றாக பிரிந்து இருந்த கட்சி ஒன்றாகி ஒற்றை ஆட்சியாக இருந்தது, ஆங்கிலேய ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கீழ்தான்.
தொடரும்…
கண்மணி
முகவரி அல்ல முகம் - பாகம் 5