Monday, June 3, 2013

விழித்தெழு



விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்

நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க

பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்

இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழீழம் ஆளும்

கிரிகாசன்