Friday, June 7, 2013

தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்ட தேசியத் தலைவர்



தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வன்னியில் பாசறைகளில் மிக எளிமையான வாழ்க்கை நடத்திய போதிலும் அவரது வீடுகள் என்ற பெயரில் இன்று வரை பத்து வரையான வீடுகளை சிறிலங்கா படைத்தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.

வன்னியில் அழகான நிலக்கீழ் பதுங்கு குழியொன்று கண்டுபிடிக்கப்படுமாயின் உடனடியாகவே பிரபாகரன் சொகுசாக வாழ்ந்த மேலுமொரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம் என்று படைத்தரப்பு தம்பட்டம் அடிக்கின்றது.

இதே போன்றே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கண்டுபிடித்த நிலக்கீழ் வீடொன்றை தற்போது படையினர் மக்களின் பார்வைக்கு விட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தின் கீழ் சுமார் 40 அடிக்கு மேல் பதுங்கு குழி போன்று வெட்டப்பட்டு மூன்று அடுக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டையே பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான சிங்கள மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதிலும் உள்ளே மூன்று அடுக்கு மாளிகையாகவும் உள்ளதுடன் நிலத்திற்கு கீழே வாகன தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வீடு அமைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடுகளைப் பார்க்கின்ற போது படையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஆனாலும் இந்த வீடுகளை மக்கள் பார்வையிட விடுவதன் மூலம் புலிகளின் தலைவர் மிகவும் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்தார் என்பதையும் புலிகள் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தாங்கள் சொகுசாக வாழ்ந்தார்கள் என்பதையும் மக்கள் மனதில் திணிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மையை மக்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனாலும் மக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

வன்னியில் புலிகளின் கட்டுமானங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையிலேயே அமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் இந்த வீடும் சிறப்பான கட்டுமானங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலக்கீழ் பதுங்குகுழி வீடுகள் உண்மையிலேயே தேசியத் தலைவருக்காக அமைக்கப்பட்டவையல்ல. பிரதேச மட்டத் தளபதிகள், உயர் தளபதிகள் போன்றோரின் வாராந்த, மாதாந்த கலந்துரையாடல்கள், களமுனைத் தளபதிகளின் திட்டமிடல்கள், உயர் தளபதிகளின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்காகவே வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் இவ்வாறான நிலக்கீழ் வீடுகளை அமைத்திருந்தனர்.

தமிழீழ தேசியத் தலைவர் தளபதிகளிலும் போராளிகளிலும் மிகவும் அக்கறையாகச் செயற்பட்டவர். அதிலும் களமுனைத் தளபதிகளில் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். தளபதிகளின் ஒன்றுபட்ட சந்திப்புகளின் போது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் அதிக கவனம் செலுத்தியிருந்தார். எங்கேயும் எப்போதும் துரோகிகள் இருப்பார்கள் என்று தலைவர் நம்பியிருந்தார். அதனால் தளபதிகளின் கலந்துரையாடல்களுக்காக நிலக்கீழ் பதுங்குகுழிகளில் வசதியுடன் கூடிய வீடுகளை அமைத்திருந்தார்.

இதற்கு மேலாக எப்போதும் தமது உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருந்த கரும்புலிகள் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தலைவர் இந்த வீடுகளை அமைத்திருந்தார். தேசியத் தலைவர் மாத்திரமன்றி போராளிகளோ தளபதிகளோ கூட இந்த வீடுகளில் வாழவில்லை. அவர்களின் கலந்துரையாடல் இடங்களாகவே இவை திகழந்தன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுக்கத்தக்க நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடுகளை காட்சிப் பொருட்களாக பயன்படுத்துகின்றன. இது கூட ஒரு வகையில் தமிழ் மக்களு வெற்றியாகவே அமைகின்றது. ஏனெனில், தங்களுக்காக போராடிய புலிகள், தங்கள் பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் எத்தகைய கட்டுமான வளர்ச்சியிலும் சிறப்பிடம் பெற்றிருந்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவதற்கும் புலிகளின் வீர தீரங்களை சிங்கள மக்கள் அறிவதற்கும் படையினர் சிறந்த களம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்று நினைத்து நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.

- தாயகத்திலிருந்து சங்கதி24 இற்காக வீரமணி