தமிழீழப் போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார்.
அந்த ஒற்றைமனிதனே இந்த விடுதலைப் போராட்டத்தை தூக்கிநிறுத்தி அதனை தாங்கி நின்ற தோள்களுக்கு உரியவர். உன்னதமான இந்தப் போராட்டத்தை வெறும் சாகசமாகவோ, வீரவிளையாட்டாகவோ அவர் ஆரம்பிக்கவில்லை. உரிமை மறுத்தலுக்கு எதிரான எழுச்சியாகவும், சுதந்திரமாக வாழும் மானிட எத்தனமாகவும், ஆயுத மூலமான ஒடுக்குதலுக்கு எதிராக இயல்பாகவே வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது.
இந்தப்போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாகவும், ஒன்றிணைக்கும் ஓரே குறியீடாகவும் அவரே இருக்கிறார். இதற்கான ஆற்றலையும், அறிவையும் அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்.? அனுபங்கள் என்ற அற்புதமான பாடத்திலிருந்தே நிறையப்பெற்றுக் கொண்டார். காலகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான ஒரே தலைவர் என்ற முறையில் அந்தப் போராட்டம் சந்தித்த அனைத்து தேக்கங்களையும், சவால்களையும், வளைவுகளையும் அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் விடுதலைக்கு சாதகமானதாக்கி முன்னெடுத்தார்.
ஒரு ஓப்புவமை இல்லாத தலைவர் என்ற முறையில் அவர் தான் கற்றுக் கொண்ட பாடங்களை அனுபவங்களை நீதியை, ஒழுக்கத்தை, உறுதியை என்று அனைத்தையும் தனது தோழர்களுக்கு தளபதிகளுக்கு கற்பித்தார். தான் கற்றுக்கொண்டதை மற்றவர்க்கு தனது நடைமுறைமூலமும், செயலின் மூலமும் சொல்லிக் கொடுத்தவர் தேசியத்தலைவர். தேசியத்தலைவர் அவர் பார்க்கும், கேட்கும், அறியும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொண்டார். பெற்றுக் கொண்டார்.
தேசியத்தலைவர் கற்றுக் கொண்ட முதலாவது பள்ளிக்கூடமாகவும், பல்கலைக் கழகமாகவும் அவரின் தந்தையாரே இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள ராணுவச் சிறை ஒன்றில் மரணமாகிய அவரின் வாழ்வும், வழமையும், பழக்க வழக்கங்களும், நேர்மையும், ஓர்மமும் தலைவரின் வாழ்வில் ஏற்பத்திய தாக்கங்கள் அற்புதமானவை. ஆழமானவை. அமரர் வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் மிகவும் எளிமையானவராகவும், அதே நேரம் உறுதிமிக்கவராகவும் இருந்தவர். கடல்களை பிளந்து தேச எல்லை கடந்து சென்று தொழில் செய்யும் கப்பல்களை சொந்தமாக கொண்டதும், செல்வச் செழிப்புமிக்கதுமான ஒரு குடும்பத்தின் முத்த வாரிசான வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் தனது குடும்ப சிறப்புகள் எதுவும் தனது நிதி இருப்புகள், நில இருப்புகள் எவற்றின் தாக்கமும் இன்றி மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்ந்தவர். மிகவும் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தின் தலைமகனான வேலுப்பிள்ளை அப்பா அவை அனைத்தையும் உதறியவராக உலாவந்தவர்.
மிகவும் மெதுவாக நடக்கும் பழக்கமுள்ள அவர் மிகவும் உன்னிப்பாக தனது பார்பையை பதித்தபடியே நடைபோடும் அவரின் அந்தப் பழக்கமே தலைவரின் இயல்பான எந்தநேரமும் பார்வையை கூர்மையாக வைத்திருப்பதாக வந்திருக்கலாம். தேசியத்தலைவரின் புத்தகங்கள் மீதான தேடல்கூட அவரின் தந்தையாரிடம் இருந்தே வந்ததுதான். தேசியத்தலைவர் தனது தந்தையை ஆழமாக புரிந்துகொண்டவர். தனது தந்தையின் ஆளுமைகளை அந்தப் புரிந்து கொள்தலுக்கு ஊடாகவே தலைவர் உள்வாங்கினார்.
சின்னஞ்சிறு மழலை தனது தந்தையையைப் பார்த்தே நடக்கப்பயில்வதைப் போன்றே தலைவரும் தனது தகப்பனாரின் இயல்புகளையே தனதாக்கினார். அவருடைய எளிமை அவருடைய நேர்மை அவருடைய உறுதி அவருடைய பார்வை என்றே எல்லாமுமே. தேசிய தலைவருக்கு அவர் வளர்ந்த பின்னர் நிறைய நண்பர்களும் தோழர்களும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலும் தேசியத் தலைவருக்கு கிடைத்த முதலாவது நண்பராக அவரின் தந்தையாரே இருந்திருக்கிறார். இதனை நிறைய இடங்களில் தலைவர் சொல்லியுள்ளார். ஒரு நண்பனுக்கு அறிவுறுத்துவது போலவே வேலுப்பிள்ளை அப்பா எல்லா விடயங்களையும் தோழமையுடன் தனது மகனுக்கு சொல்லிக் கொடுத்தார். தனக்குள்ளே யாகம் வளர்க்கும் அதி உயர் ஞானத்தைக்கூட தந்தையிடம் இருந்தே தனக்குள் பெற்றார் தலைவர்.
இதை எல்லாவற்றையும் விட வேலுப்பிள்ளை அப்பாவிடம் இருந்த பொங்கிவரும் சத்திய ஆவேசம்தான் தலைவர் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கற்றுக்கொண்ட அதிஉச்ச பாடமாகும். அந்த சத்திய ஆவேசம் தான் தேசியவிடுதலைப் போராட்டமாக பிறப்பபெடுத்தது. தன்னுடைய ஒரு பிரதியாக ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டத்தலைவனை உருவாக்கிய அந்த தந்தை என்றும் நினைவுகூரத்தக்க ஒரு பரிமாணம். இப்படியாக தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட இயல்புகளையும், தானே கற்றுக்கொண்ட அனுபவங்களையும் தலைவர் தனது தோழர்களுக்கு கற்பித்தார்.
அந்தவகையில் தலைவர் எப்படி தனது தந்தையை அணு அணுவாக தனக்குள் உள்வாங்கினாரோ அப்படியே கிட்டு என்ற உன்னத தளபதியும் தவைரை அணுஅணுவாக தனக்குள் உள்வாங்கி தனது ஆத்மத்தை வளர்த்தவர். போர்க்குணத்தை கூர்தீட்டியவன். ஜனவரி 16ம் திகதியுடன் அவன் வீரமரணமடைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தேசியதலைவரின் ஆளுமைகளை முழுமையாக தரிசிக்கவிரும்பும் எந்த ஒரு மனிதனும் தேசியத்தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையில் எந்தநேரமும் ஓடிக்கொண்டிருந்த கண்ணுக்குத் தெரியாத உணர்வலைகள் பற்றியும் புரிதல்பற்றியும் முதலில் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.
தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையிலான உறவு என்பது தலைவர்-போராளி, தலைவர்-தளபதி என்ற பொறுப்புநிலைகளை எல்லாம் கடந்த ஒரு உன்னதநிலையிலானது. தேசியத் தலைவர் சொல்வது போல ஓரே இலட்சியத்தை ஆழமாக வரித்துக்கொண்ட இருவருக்கு இடையிலான ஆன்ம உறவு அது. ஒரு கோபக்கார இளைஞனாக போராட்த்துக்கு வந்த குமார் என்ற அந்த பொடியனை செதுக்கி செதுக்கி எல்லா ஆளுமைகளும் நிறைந்த கிட்டு என்ற அதிமானுடனாக மாற்றியவர் தலைவர்தான்.
தான் தனது தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைதியான உறுதி, உறுதி நிறைந்த அமைதி என்பனவற்றை கிட்டுவுக்கும் சொல்லிச்சொல்லி அவனை நிதானமான உறுதியான வீரனாக்கினார். முகாம்களிலிருந்து ராணுவம் வெளிவந்துவிட்டது என்ற போதிலும், கடற்கரையால் நேவி படகின் மூலம் கடற்படை இறங்குகிறான் என்ற நிலையிலும், ஏன் சுதுமலையில் தனதுமுகாம் கெலிகப்டரில் வந்திறங்கிய சிங்களப்படையால் சுற்றி வளைக்கப்பட்டபோதிலும் கிட்டு நிதானமாக ஆனால் மிக வீரமுடன் உறுதியாக நின்ற பொழுதுகளும்… இறுதியிலும் இறுதியாக அந்த கடைசி நாளான ஜனவரி 16 அன்று வங்கக்கடலில் இந்தியக்கடற்படை சுற்றி நின்று சரணடைய சொல்லி வற்புறுத்தியபொழுதிலும் அதே நிதானத்துடன் தனது காலை இழுத்து இழுத்து நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து படகுமுழுதும் சக்கை வைத்த உறுதியும் மரணித்த நிமிடம்வரை காட்டிய அமைதியும் தலைவர் சொல்லித் தந்தவைதான்.
கிட்டுவும் தேசியத்தலைவரைப் போன்றே தேடல் மிகுந்த ஒரு மனிதன். புத்தகம் என்றாலும் சரி, சகமனிதனின் அனுபவங்கள் என்றாலும் சரி, திரைப்படம் என்றாலும் சரி, தலைவர் எப்படி அவற்றை உள்வாங்குவாரோ அப்படியே கிட்டுவுக்கும் சாத்தியமானது. வேட்டைத் துப்பாக்கிக்கு மின்னி வைப்பதிலிருந்து தான்பிரின் என்ற அயர்லாந்து போராளியின் வரலாறு வரைக்கும், சக்கை அடையும் முறையிலிருந்து சனங்களுடன் வேலை செய்யும் முறை வரைக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து கிட்டுவுக்கு கற்பித்தவர் அந்த தலைவர்தான்.
தனது படிப்பினைகளை தனது வரலாற்றிலிருந்தே பெற்றுக்கொணட தலைவர் தன்னைப் போன்றே ஓர்மமும் ஒழுக்கமும் வீரமும் வழிகாட்டும் திறனும் தனது தளபதிகளுக்கும் அவர்களினூடாக தனது போராளிகளுக்கும் பரவச்செய்தார். இதுவே ஈழத்தமிழினத்தின் எழுச்சியானது. இந்த எழுச்சியானது ஆளுமைகளினதும் உணர்வுகளினதும் நீட்சிதான். இந்த உணர்வுகளும் ஆளுமைகளும் இருக்கும்வரை எமது விடுதலைப் போராட்டத்தை எவராலும் பிடுங்கி எறிந்துவிட முடியாது. ஏனென்றால் இது தலைமுறை தலைமுறையாக கண்ணுக்குத் தெரியாத அலையாக எமது மக்களுக்குள் பிறப்பெடுத்து வருகிறது நாமும் கற்றுக் கொள்வோம். வாழ்வின் இறுதி நாள்வரைக்கும் தேடுவோம். இன்னும் நிறைய கற்றுக்கொள்வோம் எங்களின் தேசியதலைவரிலிருந்து…
நன்றி: – ச.ச.முத்து