Sunday, June 9, 2013

பொறுத்து போதும் புறப்படு



சங்கு முரசொலி எங்கும் பரவிட
சொந்தமண் ஆண்ட இனம் - இன்று
சிங்கமழைத்திடச் சென்ற முயலென 
கொண்ட உயிர் தரவா
எங்கள் சிறுவரை இன்பமழலையை
இம்சை வதைபுரிந்தே - பகை
செங்குருதி யெழச்செய்பவர்கண்டுமே
சோர்ந்து கிடந்திடவோ

எங்கும் பரந்ததாம் இன்பத் தமிழெனில்
இன்னும் இழிமைசெய்து அவர்
எங்கள் தமிழினம் இல்லையென்றாக்கிட
ஏழையென் றாவதுவோ
சங்கதமிழ் சொல்லும் மங்கையர்வீரமும்
சற்றும் இளைத்தல்ல என்று
செந்தமிழர் இனம்சேரும் உரிமையை
சேர்ந்தொன்றாய் கேட்டிடவா

பொங்கி யெழு இன்னும் என்னதடையிது
பென்னம் பெரிதுயிரோ - கடல்
வங்கமெழும் புயல் என்றுமனம்கொண்டு
வீழ்த்த எழுகுவையோ
மங்கை இளையவர் மட்டுமல்ல முது
மாந்தர் மழலைகளும் இனி
செங்கனல் கண்ணொளி சீறத் துடித்துடன்
சேர்ந்து எழுந்திடுவீர்

தங்கம் கிடைத்திடத் தாயெனும் மண்ணையும்
தாஎன விட்டிடவா -நாமும்
அங்கம் குறைந்த அறிவிலியோ எங்கள்
அன்னையை விற்றிடவோ
எங்களினம் குடிகொண்ட நிலமதில்
ஏவல் பிசாசுகளும் -வயல்
தங்களுடையதென் றோடிவிதைத்திட
தந்து மகிழுவதுவோ

நங்கையர் எந்தமிழ் நாட்டவரை படை
நானிலம் பார்த்திருக்க - அவர்
தங்களின் பேய்மன தாகமும்தீர்த்திட
தந்து கிடப்பதுவோ
செங்குருதி காணச் சேர்த்தவர் கண்டுமே
சோர்ந்த்து படுத்திடவோ - இன்னும்
பங்கம் இழைத்திடப் போகட்டும் என்றுடல்
போர்த்துப் படுத்திடவோ

சொந்தஅரசும் சுதந்திரமும் இவர் சொல்லும்
இறைமையதும் - நம்
முந்தையர் கொண்டு அரசுசெய்த நில
மேன்மைகள் சொல்லிடடா
மந்தைகளாய் மதி கெட்டிடவோ எங்கள்
மண்ணை இழந்த பின்பு - மன
சிந்தனையில் தரம் கெட்டுகிடப்பதோ
சீறி எழுந்திடடா

எந்த சலனமுமின்றி அழிவினை
ஏற்று வணங்கிடவோ - அல்ல
சொந்த உயிர்துடித் தெங்கள் தமிழ் அன்னை
சீருறச் செய்குவையோ
நொந்துகிடந்ததுபோதும் புரண்டெழு
நில்லு புரட்சிஎனும் - ஒரு
மந்திரமன்றி மருந்தில்லை முற்றிய
மாபெரும் நோயிதற்கு

கிரிகாசன்