Sunday, May 19, 2013

அபிமன்யுவும் தீபனின் ஆனந்தபுரப் போரும்..



பாரதப் போரில் வரும் வீர அபிமன்யு 13ம் நாள் சந்தித்த போரைப் போலவே முள்ளிவாய்க்கால் முற்றுகையை முறியடிக்கும் போரைச் சந்தித்தான் வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் என்பது இன்றய நாளில் மறக்க முடியாத போர்க்களக் காட்சியாகும்.

அன்று… எப்படி கொடியவரான கௌரவர்கள் நயவஞ்சகமான பொறியை வைத்து, தந்திரமாக அபிமன்யுவைச் சுற்றி வியூகமிட்டனரோ அதுபோல தீபனையும், போராளிகளையும் ஆனந்தபுரத்தில் வைத்து சுற்றி வியூகமிட்டனர் கொடியவர்கள்.

அபிமன்யுவின் போரும் தீபனின் ஆனந்தபுரப் போரும் ஒன்றுதான் வேறு வேறல்ல..

சகல துறையிலும் வீரனான அபிமன்யுவை நேர்மையான போரினால் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து, வரமாகப் பெற்ற ஆயுதத்தை பாவித்து, அபிமன்யு நுழைந்த வியூகத்தை மூடி, மற்றவர்கள் உள்ளே வரமுடியாதபடி செய்தான் துரோகி ஜெயத்திரதன் பாரதப் போரில்.

அதுபோல முள்ளிவாய்க்காலில் முற்றுகையிட்ட சிங்களப் படைகளும், அவர்களுக்குத் துணை போனவர்களும் புலிகளை வெளியே வரமுடியாதபடி நச்சு ஆயுதத்தாலும், வேவு சற்லைற்றாலும் முற்றுகையிட்டார்கள்.

ஒரு நாடா..? இல்லை..! எத்தனையோ நாடுகளின் சற்லைற்றுக்களால் அங்கம் அங்கமாக படம் பிடித்து, ஒவ்வொரு நகர்வையும் சுருதி பிசகாமல் எதிரிக்கு தகவல் சொல்கிக் கொண்டிருந்தார்கள், உலக வல்லரசுகள்.

தீபன் தலைமையில் ஆயிரக்கணக்கான போராளிகளுடன் முற்றுகையை உடைக்க களமிறங்கினர் விடுதலைப் புலிகள்.

“தீபன் புறப்பட்டுவிட்டான், அவன் அபிமன்யு போன்றவன், அவனை உங்களால் வெற்றி கொள்ள முடியாது எடுங்கள் நச்சுப்புகை ஆயுதத்தை..”

மற்ற நாடு வரம்போல கொடுத்த நச்சுப் புகை ஆயுதத்தைப் பாவிக்கத் தயாரானான்… பாவி…!

முற்றுகையை தூள் பொறியாக உடைத்து முன்னேறினான்.. தீபன்.. எதிரியால் நிற்க முடியவில்லை… சதிகாரர் போட்ட வலைகளை அறுத்து வீசினான்..

திகைத்தான் எதிரி…

“புலிகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள்..” என்று ஒரு பொய்ச் செய்தியை பரப்பினான், அந்தோ.. பின் தானே அதைப் பாவித்தான்..

சர்வதேச போர் நியதிக்கு மாறாக ஆனந்தபுர களமுனையில் நச்சுப்புகை பரவியது..

உணவில்லை.. உறக்கமில்லை.. திலீபனைப் போல வாயில் ஒரு சொட்டு நீரும் இல்லை… உயிரை மட்டும் உணவாக்கி போர் புரிந்தவேளை..

“அட நாய்களே.. நச்சு ஆயுதமா..?”

நம்ப முடியாத மானிடப் பேரவலம்…

போர்க்களத்தில் நின்ற புலிகளின் கண்கள் எரிந்தன.. மூச்சு முட்டியது.. கீழே சரிந்தனர்… ஆயிரக்கணக்கானவர்களை நயவஞ்சகமாக அறிவற்ற நிலையில் கொன்றான் எதிரி..



நம்பியவன் எல்லாம் யூலியஸ்சீசரை சூழ்ந்து நின்று குத்தியது போல நம்பிய பலருடைய முகங்களை முகமூடிகளுடன் அந்தப் புகைக் காண்டத்தில் கண்டான் தீபன்…

” நீயுமா புறூட்டஸ்…” விழுந்தது சூடு..!

அன்று அபிமன்யு களத்தில் விழுந்தது போல புதுமாத்தளன் போரில் ஆனந்தபுரத்தில் வீழ்ந்தான் தீபன்.

அன்று அபிமன்யுவை காக்க முடியாது அர்ச்சுணனை வேறிடம் அழைத்து சென்ற கண்ணனின் நயவஞ்சகம் போல, ஐ.நாவின் கண்களைக் கட்டி வேறிடம் அழைத்துச் சென்றான் இன்னொரு பாவி..

எரிந்து கிடந்தான் தீபன்..

அபிமன்யுதான் மறுபடி பிறந்தானா..?

“இவன் மனிதனா..? இல்லை உலகம் போற்றும் தேவகுமாரன் போன்றவன்..!” என்று நச்சுப் பகை சுமந்த வேதனையிலும் ஈழத்து சோளகம் அவன் புகழ் பாடியது..!

நச்சுப் புகையால் அவன் கருகிக் கிடந்த காட்சியைப் பார்த்து வானத்தில் மின்னல் ” இது அதர்மம்..! இது அதர்மம்..! ” என்று வெட்டியது..

களத்தில் தீபனா எரிந்தான்… இல்லை..!!

சிங்களவனுடன் மட்டுமல்ல ..!

இந்தியனுடன் மட்டுமல்ல…!

உலகத்துடன் மட்டுமல்ல..!

நச்சுப் புகையுடனும் உண்ணாமல், உறங்காமல், ஒரு சொட்டு நீர் குடிக்காமல் போரிட்டான் எங்கள் வீரன் தீபன்..!

இவனுக்கு இணையாக இந்த உலகில் ஒரு வீரனுண்டோ அம்மா..?