Thursday, May 9, 2013

என் உள்ளங்கவர்ந்த போராளி அ.காந்தா


எனக்கும் காந்தாவுக்கும் பத்து வருடத்திற்கு மேற்பட்ட நட்பு தூய்மையான அந்தப் பாசமிகு நட்பை மனதில் இருத்தி இந்தச் சிறு குறிப்பை எழுதுகிறேன். நாலரை அடி உயரமும் குண்டு என்று சொல்லக்கூடிய உடலுமுள்ள காந்தா மிகவும் சுறுசுறுப்பானவர்.

அந்த உடலைத் தூக்கிக் கொண்டு எப்படி அவர் ஓடி ஆடித்திரிகிறார் என்று சகபோராளிகள் வியப்படைவார்கள். அந்த உடலைத் தூக்கிக்கொண்டு காட்டுமரங்களின் உச்ச கொப்பில் ஏறி மறைந்திருந்து எதிரி மீது குறிபார்த்துச் சுடும் ஸ்னைப்பர் பணியை அவர் திறம்படச் செய்தார்.

விடுதலைப்புலி இயக்கத்தின் ஸ்னைப்பர் சூட்டுத் திறமை சாலிகளில் அவரும் ஒருவர் அளவெட்டியில் அவர் ஹெக்லர் கொச் ஸ்னைப்பர் துவக்கு ஒரு தொகுதி ரவையுடன் மாமரத்தில் ஏறி இரு நாட்களாக அமர்ந்திருந்தார். தூக்கமில்லை. ஒரு சிறியப்போத்தில் தண்ணீர் சிறிய சொக்கிலேற் துண்டுகள்.

இத்தனையோடு 48 மணி நேரம் காத்திருந்த காந்தா இறுதியில் எதிர்பார்த்த ஆமிக்காரன் துவக்கில் பூட்டியிருந்த தொலைநோக்கியில் தெரிந்தவுடன் மிகவும் நிதானமாக அவனைச் சுட்டு வீழ்த்தினார். பிறகு ஸ்னைப்பர் சூட்டுக்காரர்களின் விதிப்படி தான் வந்ததற்கான தடையங்களை அழித்துவிட்டு இறங்கிச் சென்றார்.

காந்தா பல்திறமைசாலி சிறந்த சிறுகதை எழுத்தாளரான அவர் பலமுறை புலிகளின் குரல் வானொலி நடத்திய வருடாந்த சிறுகதை கட்டுரைப் போட்டிகளில் முதலாம் இரண்டாம் பரிசுகளை வென்றார். மாலதி படையணின் வரலாற்று நூலான வேரும் விழுதும் என்ற பதிவேட்டின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஒப்பற்ற இலக்கிய கர்த்தா என்று அவரை அடையாளமிடுகிறேன்.

ஆசிரியர் குழுவில் ஒருவர் என்று ஒப்புக்குச் சொல்லப்பட்டாலும் அவர் தகவல் சேகரிப்புத் தொடக்கம் எழுத்துப் பணிவரையிலான அனைத்திலும் பெரும் பகுதியைத் தனியே செய்து முடித்தார். அது மாத்திரமல்ல மாலதி படையணி வெளியீட்டுப் பிரிவிலும் அவர் முக்கிய இடம் வகித்தார்.

காந்தா மன்னார் திருக்கேஸ்வரம் கோயில் அர்ச்சகர்களில் ஒருவரான ஐயரின் மகள் நான்கு சகோதரிகள், ஒரு தம்பி அவருடைய சகோதரன் இளம் வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து களமாடி வீரச்சாவடைந்தார். அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் காந்தாவின் தந்தை இறந்து விட்டார்.

காந்தாவின் போராட்ட வாழ்வு கிட்டத்தட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட வருடங்கள் நீடித்தன அவர் திருமணமானவர். ஒரு ஆண். ஒரு பெண் பிள்ளைகளுக்குத்தாயானர். காந்தாவின் கணவர் எலும்பும் தோலுமான மிகவும் உயரமான உடலைக்கொண்டவர். இந்தச் சோடியைப்பார்த்து நாங்கள் சிரிப்போம்.

வீட்டுப் பொறுப்புக்களைக் காந்தா சுமந்தார். கணவருக்குப் பொறுப்புணர்ச்சி குறைவு சிறந்த உழைப்பாளியானாலும் காந்தாவின் கணவருக்கு குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமில்லை. காந்தாவுக்கு நித்திய கடன் தொல்லை அதனால் அவர் சோர்வதில்லை.

வீட்டுப்பாரத்தைச் சுமந்தபடி நாட்டிற்காகவும் உழைத்தார். இதற்காகத்தான் எனக்கும் காந்தாவை மிகவும் பிடிக்கும். சதா சிரித்த முகம் சிறிய பகிடிக்கும் அட்டகாசமாகச் சிரிக்கும் அவருடைய இயல்பு சகபோராளிகள் வீரச்சாவடையும் போது கண்ணீர்விடுவார். பிறகு பழைய நிலைக்குத் திரும்புவார்.

இறுதி நாட்களில் நான் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு தெருச் சந்தியில் நின்று மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு அவர் ஒலிபெருக்கி உதவியின்றி உரையாற்றினார். தொண்டை அடைப்பு ஏற்பட்டு சில நாட்கள் பேச முடியாமல் தவித்தார். கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி சொன்னால் கேட்கமாட்டார்.

ஏப்ரல் மே 2009 நாட்களில் அவர் மாலதி படையணிக்கு அரும்பணி ஆற்றினார். உயிரைத் துச்சமென மதித்து அவர் களமாடினார். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். அவருக்குக்கடும் நீரிழிவு நோய் ஒவ்வொருநாளும் ஊசி மருந்து ஏற்ற வேண்டும்.

நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். அந்த நாட்களில் உணவு, உறக்கம், மருந்து இல்லாமல் நாங்;கள் அனைவரும் துன்பப்பட்டோம். காந்தாவின் துயரம் பொல்லாதது. ஆனால் அவர் வாய்விட்டு அழவில்லை. ஒருவரையும் குறை சொல்லவில்லை. இதற்காக நான் காந்தாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

மே 18க்கு முந்திய ஒரு வாரத்தில் காந்தாவும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டோம். தனது பிள்ளைகள் இருவரையும் கணவரிடம் ஒப்படைத்துவிட்டார். பெண்போராளிக் குழுவென்றுடன் இணைந்து “ஒரு விசேட நடவடிக்கைக்காகக் காட்டுக்குள் செல்வதாக” அவர் எனக்குச் சொன்னார் நாங்கள் புலிகள் என்ன ஏது என்று கேட்க மாட்டோம் செய்வோம் அல்லது செத்து மடிவோம். இதற்கமைவாக காந்தா வீரச்சாவடைந்தார்.

தமிழ்க் கதிர்