Friday, May 24, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 5




விழியினும் மேலான
தாயகம் மீட்க
விடுதலைப்புலிகளாய் எழுந்தோம்.
மீனுக்கு நீராய்
வேருக்கு மண்ணாய்
இருந்தீர்கள்; நாங்கள் நிமிர்ந்தோம்
இனியும் எமது போராட்டம் தொடரும்
விடுதலை எமது எல்லை!
துணைவந்த நீங்கள்
தோளை உயர்த்தினால்
விடுதலை வெகு தூரமில்லை.

மக்கள் திரள் என்ற
மாபெரும் சக்திதான்
எமது தாயகம் மீட்கும்.
மக்கள் யுத்தம் என்ற
மாபெரும் யுக்திதான்
நமது பணியை எளிதாக்கும்.
தோழமைப் புறாக்கள்
நம் துணையாகும்.
கொடிய வல்லூறை எதிர்க்கின்ற போது
தொடர்கின்ற போரில்
மக்கள் துணை கொண்டால்
விடுதலை இனியும் தப்பாது!

மக்கள் கவிஞர் இன்குலாப்

ஈழப்போர் முடிந்து விட்டதாக சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை கொன்றொழிக்க திட்டமிட்டு கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் கொத்து குண்டுகளால் செத்திருக்கலாம் என கதறி கொண்டிருக்கிறார்கள். தமிழ் பிஞ்சுகளுக்கு பால் கிடைக்கவில்லை ஆனால் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதன் தடயங்களை அழிக்கும் கொடுஞ்செயலுக்கு சிங்கள இனவெறி அரசு துணிந்து இருக்கிறது. துணைபோன இந்திய அரசு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய இளைஞர்கள் இனவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து தாவி குதிக்கிறது.

தமிழினத்தை காப்பாற்று என்று தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனை? ஆர்ப்பாட்டங்கள் எத்தனை? மறியல்கள் எத்தனை? அத்தனை இன உணர்வுகளையும் மண்ணுக்கு சமமாய் பாவித்தது இந்திய அரசு, ஆனால் இந்திய இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றவுடன் துடிதுடித்துப் போகிறதே எப்படி? இனக்காயத்தின் வலி இப்போது தான் புரிகிறதா? இந்நிலையில் சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் ஈழம் என்ற வார்த்தையே இலங்கை வரலாற்றில் துடைத்தெறியப்பட வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார். நம்மவர் ஆண்ட தமிழ் மண்ணில் நின்று கொண்டு நமக்கான பெயரையே அழித்தொழிக்க முனையும் அக்கிரமத்தை என்னவென்று சொல்வது? இனி ஒரே நாடு, ஒரே இனம் என்பதை அங்கீகரிக்க எத்தனை தவறுகள் செய்ய வேண்டுமோ, அத்தனை தவறுகளையும் அடுக்கடுக்காய் செய்கிறார்கள். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை தம்முடைய ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கும் அதே கொள்கையை சிங்கள இனவெறி கூட்டமும் இலங்கையிலே செய்திட முயல்கிறது. சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலம் தமிழினத்திற்கு நிகழ்ந்துள்ளது. இடையூறுகளும், அடக்குமுறை சட்டங்களும், ஈயத்தோட்டாக்களும் வரலாற்று நாயகர்களை அசைத்து பார்த்ததில்லை என்பதற்கு அடுக்கடுக்காய் சான்றுகளை காலம் நமக்கு விட்டு சென்றுள்ளது. அடக்கமுறையாளர்கள் வெல்வதில்லை என்பது தான் வரலாறு. பிரெஞ்ச் காலனியாதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நிகழ்த்திய நாடுகளானாலும் சரி, பிரிட்டிஷ் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக ஆர்த்தெழுந்த வீரர்களானாலும் சரி அவர்களின் போர் குணங்களையும், அவர்களின் தியாக முகங்களையும் காற்றும், கதிரும் பாதுகாத்து நம்முடைய காலங்களுக்கு அவற்றை காணிக்கையாக்குகிறது.

அவர்கள் விட்டு சென்ற காலடி சுவடுகளில் தான் கனத்த இதயமும், கனன்று கொண்டிருக்கும் உணர்வும் அடக்கமுடியாத ஆற்றலும் கொண்டு மீண்டும் மீண்டுமாய் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வியட்நாம் மக்களின் விடுதலை போராளி ஹோசிமினை அடக்க முடியாத அமெரிக்கா ‘எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கிறது’ என்று மிரட்டி பார்த்தது. அந்த மகத்தான போராளி, நீ சில அணுகுண்டுகளை வைத்திருக்கலாம் வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் பெரும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகளாக களத்திலே நிற்கிறார்கள் என கடுமையாக எச்சரித்தார். அதோடு இல்லாமல் மாபெரும் ராணுவ பலம் பொருந்தியதாக கருதப்பட்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த வரலாறு இனி ஈழத்தில் தொடரலாம். விழுந்த வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த வீரர்கள் வீரியமிக்க அணுகுண்டுகளை வீழ்த்துவார்கள். சீறிப்பாயும் கொத்து குண்டுகள் அந்த மாவீரனின் மார்பிலே சமாதியாகும். தமிழ் இன உணர்வுக்கு எதிராக நிற்பவர்கள் அந்த போராட்டக்களத்திலே கல்லறையாக அடையாளப்படுத்தப்படுவார்கள். வரலாறு ஒரே திசையில் நகர்ந்ததாக இதுவரை நாம் வாசித்தறியவில்லை. விதைகள் மண்ணில் மடிவது முளைத்தெழத்தான். இப்போது மீண்டும் முளைக்கவே ஒரு விதைத்தல் நடந்திருக்கிறது.

தெற்கு நோக்கி ஓட்டம் பிடித்த சிங்களர்கள் அங்கே இருந்து கொண்டு இத்தனை காலமும் பாலி மொழியிலும், தமிழினம் எழுதி வந்த தமது எழுத்துக்களுக்கு மாற்றாக சிங்கள மொழிக்கு வரிவடிவம் கொடுக்க தொடங்கினார்கள். பௌத்தர்களாக, சிங்களர்கள் இலங்கையில் தென் பகுதியையும், மலைப்பகுதியையும் தமதாக்கிக் கொண்டு தமது வலிமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்க, சைவ சமயத்தை சார்ந்த தமிழர்கள் கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழரின் நிலங்களாக உருவாக்கி தம்மை தக்க வைத்துக்கொண்டார்கள். ‘மகா வம்சம்’ நூல் தந்த பொய்யுரைகளால் மீண்டும் மீண்டுமாய் சிங்கள அரசுகள் வலிமை பெற்ற போதும் தமிழர் நிலங்களை அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை. கி.பி 1815 -ல் பாண்டிய அரசு இலங்கை தீவு மீது படையெடுத்தது. சிங்களர்கள் பயந்து நடுங்கி மேலும் தெற்கு நோக்கி பின்வாங்கி நகர தொடங்கினார்கள். அவர்கள் கண்டியிலும், கோட்டையிலும் சிங்கள தலைநகரங்களை அமைத்துக் கொண்டார்கள். பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழர்களின் தலைநகர் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புலநறுவையில் இருந்தது. பாண்டிய அரசு படையெடுப்பின் மூலம் இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்திற்கு தமிழர் ஆட்சியின் தலைநகர் மாறியது.

வரலாறு தெரியாத பலர் ஏதோ தமிழர்கள் வந்தேறிகளாக இலங்கைக்கு சென்றது போலவும் அது தவறு எனவும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள். வரலாறு அறிந்த இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழர் பிரச்சனையை அக்காலத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் வந்த லால் பகதூர் சாஸ்திரி தமிழர்களை எதிலிகளாய் தாயகத்திற்கு அழைக்கத் துணை போனார்.

காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையாரை தவிர வேறு எவரும் இலங்கை தமிழர் நலன் குறித்து அக்கறை கொள்ளவுமில்லை. அரவணைக்கவுமில்லை. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது. இலங்கை தீவில் அப்போது மூன்று அரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. தென்மேற்கு கரையோரத்தையும், தெற்கு கரையோரத்தையும் ஆட்சி செய்தவர்களை சிங்கள கோட்டை அரசு என்றும், மத்திய மலைப்பகுதியை ஆட்சி செய்த சிங்கள அரசுக்கு கந்த உடரட்டை சிங்கள அரசு என்றும் பெயர். தமிழர்களோ கிழக்கு, வடக்கு, வடமேற்கு பகுதிகளை தமிழீழ அரசாய் ஆட்சி புரிந்து வந்தனர். சிங்கள இனவெறி மக்களவை உறுப்பினர் கூறுவதை போல, புலிகள் தான் ஏதோ தமிழீழம் என்ற வார்த்தையை கண்டு பிடித்து பரப்பினார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது.

இப்படி மூன்று அரசுகளாக நடந்து கொண்டிருந்த ஆட்சி முறை மேற்கத்தியர்கள் இலங்கைத் தீவின் மண்ணை மிதிக்கும் வரை மாறாமலிருந்தது. கி.பி 1505 அளவில் அவர்கள் இலங்கை மண்ணை மிதித்தவுடன் சூழ்நிலை மாறியது. முதன் முறையாக விஜயனின் வருகையால் வீழ்ந்த தமிழர்கள் இரண்டாவது முறையாக எல்லாளன் தோல்வியால் துவண்ட தமிழர்கள் மேற்கத்தியரின் வருகையால் முற்றிலுமாய் வீழ்ந்து விடுவார்கள் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் புவியெட்டும் சிறக்க வரலாறு முழுவதும் தமிழ் வாகை சூட இந்த கேடு அப்போது நிகழ்ந்தது.

கண்மணி