Tuesday, May 14, 2013

பகத்சிங், சந்திரபோஸ், திருப்பூர் குமரன் போன்றவர்களை தமிழீழத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அழமாக நேசித்தார்



நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், திருப்பூர் குமரன் ஆகிய மூவரையும் மிக ஆழமாக நேசித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இந்த மூவரின் தியாக வாழ்வு அவர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மூவரையும் தனது இலட்சிய புருஷர்களாக அவர் ஏற்றுக் கொண்டார்.

மாவீரன் மகத்சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாள் பிறந்தார். 1931ம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ம் நாள் மரணம் அடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 23.

ஜெயவர்தனே-ராஜீவ் காந்தி கூட்டு ஒப்பந்தம் காரணமாக இலங்கை வட கிழக்கை ஆக்கிரமித்த இந்தியப் பெரும்படையில் பெருமளவு சீக்கீய போர் வீரர்களும் அதிகாரிகளும் இடம்பெற்றனர். அவர்கள் செய்த அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. காரணமின்றிப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், இயற்கை வளங்களை அழித்தல் என்பன இதிலடங்கும்.

தமிழீழத்தின் கிராமப்புற வீடுகளுக்குள் புகுந்த சீக்கியப் படையினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கணிசமான எண்ணிக்கை வீடுகளில் அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த பகத்சிங் படங்கள் அங்காங்கே மரியாதைக்குரிய பகுதியில் தொங்கிக் கொண்டிருந்தன.

ஒரு சீக்கிய அதிகாரி பகத்சிங்கைத் தனது சித்தப்பா முறையானவர் என்று உறவுமுறை கோரினார். இந்தியா திரும்பிய சில வருடங்களுக்குப் பிறகு அவருக்குப் பதக்கம் வழங்கப்பட்ட போது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த மக்கள் எமது தலைவர்களை பூசித்தவர்கள். அவர்களைக் கொடுமைப் படுத்தியதற்காக ஏன் இந்தப் பதக்கம் என்றார் அவர்.

பகத்சிங் பஞ்சாப் மாநிலத்தில் 1907 செப்ரம்பர் 27ம் நாள் பிறந்த சீக்கிய இனத்தவராவர். பஞ்சாபி மொழியில் பகத் என்றால் அதிர்ஷடம் என்று பொருள். சிங் அந்த இனத்தின் பொதுப் பெயர். ஆங்கில ஆட்சியாகளால் அவர் 1931 மார்ச்சு 23ம் நாள் தூக்கிலிடப்பட்டார்.

அரசு நியமித்த பக்கச்சார்பான தீர்ப்பாயம் 1930 ஒக்ரோபர் 07ம் நாள் அவரைத் தூக்கிலிடும்படி தீர்ப்பளித்தது. அன்று பகத்சிங்கின் 23ம் பிறந்த நாள் முடிந்து 24 வயது தொடங்கிய நாள.; பல்வேறு சட்டப்பிரச்சனைகள், இழுபறிகள், மேன்முறையீடுகளுக்குப் பிறகு தூக்குத் தண்டனை காலம் பிந்தி நிறைவேற்றப்பட்டது.

முதற்கண் 1931 மார்ச்சு 24ம் நாள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூன்று விடுதலை வீரர்களுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற அதிகாரிகள் தீர்மானித்தனர். ஆனால் சிறை வாயிலில் பெருந் திரளாக மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்று அஞ்சப்பட்டது.

இதன் காரணமாக ஒரு நாள் முந்தி 23ம் நாள் இரவு 7.33 மணிக்கு மூவருக்கும் இரகசியமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்ட பிறகு சிரித்த முகத்துடன் சாவை வரவேற்றனர்.

சிறையின் பின்புறக் கதவு வழியாக மூவர் உடலும் பார ஊர்தியில் ஏற்றிச் செல்லப்பட்டு பஞ்சாபின் சட்லஜ் நதிக்கரையில் எரிக்கப்பட்டன. சாம்பர் நதி நீரில் கரைக்கப்பட்டது. (ஆதாரம் -புரட்சி வீரர் மூவர் நூலாசிரியர் சரஸ்வதி ராம்நாத் பிரசுரம் தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.)

இந்திய சுதந்திர போரட்ட வரலாற்றில் இரு பெரும் மையநீரோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்று பகத்சிங் போன்ற வீர இளைஞர்கள் முன்னெடுத்த ஆயுதப் போரட்டம். அவர்கள் உள்நாட்டில் போராடிக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் வெளிநாடுகளில் படை திரட்டி பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிராகப் போர் தொடுத்தார்.

ஏறத்தாழ 21 ஆண்டுகள் (1893-1914) தென்னாபிரிக்காவில் கழித்தவர் மகாத்மா காந்தி. 20ம் நூற்றாண்டு பிறந்த 14ம் வருடம் தான் அவர் இந்தியா வந்தார். இந்தப் 14 வருட காலத்தில் இந்திய இளைஞர்கள் நிகழ்த்திய எழுச்சி வரலாற்றை அவர் நேரடியாகக் காணவில்லை. அவருக்கு இளைஞர்களின் போராட்டத்தின் மீது பரிவு ஏற்படவி;ல்லை.

மகாத்மா காந்தி அகிம்சாவதி, சாத்வீகப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என்பனவற்றை தனது ஆயுதங்களாகக் கொண்டவர். காந்திக்கும் பகத்சிங் போன்ற இளைஞர்களுக்கும் இடையில் நிரப்ப முடியாத இடைவெளி. ஆனால் இந்த வீர இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் சாத்வீகப் போராட்டத்தைச் சாத்தியமாக்கிச் சுதந்திரத்திற்கு வழிகாட்டியது. இது மறுக்க முடியாத உண்மை.

முதலாம் உலகப் போர் 1914ம் ஆண்டு வெடித்த போது ஒத்துழையாமை இயக்கத்தின் தந்தை மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசின் போர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதன் மூலம் ஆட்சியாளரின் நன்மதிப்பைப் பெற்று இந்திய சுதந்திரத்தை அடைந்து விடலாம் என்று அவர் நம்பினார்.

பகத்சிங் போனற இளைஞர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் ஆங்கில அரசிற்கு எதுவித ஒத்துழைப்பும் வழங்கக் கூடாது என்று வாதிட்டாலும் காந்தியின் நிலைப்பாடு வெற்றி பெற்றது. இதன் காரணமாகக் கோடிக்கணக்கான இந்தியப் பணமும் பல இலட்சம் இந்திய இளைஞர்களும் ஆங்லேயர்களின் படைபலம் பெருக்க வழங்கப்பட்டனர்.

காந்தியின் நிலைப்பாட்டால் இளைஞர்களுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது. ஆங்கில அரசுக்கும் காங்கிரசிற்கும் இடையிலான நெருக்கம் பெருகியது. தன்னுடைய தேவைக்காக ஆங்கில அரசு காந்தியையும் காங்கிரசையும் அரவணைத்துச் சென்றது.

போர் முடிந்ததும் ஆங்கில அரசு தனது சுயரூபத்தைக் காட்டியது. காந்தியை அவர்கள் மிகவும் சுலபமாக ஏமாற்றிவிட்டார்கள். அது மாத்திரமல்ல இந்தியர்கள் மீது மிகவும் இறுக்கமான அடக்குமுறைச் சட்டத்தை ஏவிவிட்டார்கள். 1919ம் ஆண்டு மார்ச்சு 21ம் நாள் றவுலற் சட்டத்தை (Rowlat act) அரசு அமுலாக்கத் தொடங்கியது.

இந்தக் கொடுமையான சட்டத்தின் மூலம் காரணமின்றிக் கைதுகள், விசாரணையின்றிச் சிறை வைத்தல், அரசியல் நடத்துவோரைக் கடும் துன்புறத்தல்களுக்கு உட்படுத்தல், மக்கள் குடியிருப்புகள்மீது கட்டுப்பாடுகள் போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தனது நெற்றியில் நாமம் சாற்றியதை உணர்ந்த காந்தி கடுஞ் சினம் கொண்டார். நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் (Hartal) நடத்துமாறு ஏற்கனவே கொதிப்படைந்த இந்திய மக்களை அவர் கேட்டுக் கொண்டார் ஏப்பிறில் 06ம் நாள் (1919)அந்த அறப் போர் நடக்கும் என்றும் அறிவிக்கப்ட்டது.

இதைத் தொடர்ந்து டில்லியில் மக்கள் பெருந் திரளாகக் கூடிய போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பொலிஸ் சுட்டதில் பல பொது மக்கள் கொல்லப்பட்டனர். நாடு பூராகவும் அசாதாரண சூழல் ஏற்பட்டது. பகத்சிங் பிறந்த பஞ்சாப் மாநிலத்தில் மிக மோசமான நிலவரம் தோன்றியது.

பஞ்சாப் மாநில ஆளுநர் ஜெனரல் மைக்கேல் ஓ’டயர் (Michael o’Dyer) றவுலற் சட்டத்திற்கு எதிரான கிளிர்ச்சியை அடக்கக் கடும் நடவடிக்கை எடுத்தான். காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் சைபுதீன் கிச்சிலு டாக்டர் சத்தியபால் ஆகியோரைக் கைது செய்து நாடு கடத்தினான்.

மக்கள் ஆவேசம் அடைந்தனா.; ஏப்ரல் 13ம் நாள் (1919) அமிர்தசரசிலுள்ள ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் பஞ்சாப் மக்கள் பாரிய கண்டனக் கூட்டத்தை நடத்தினர். 10,000 மக்கள் ஒன்று கூடினர். மைதானம் மிகப் பெரியது. ஆனால் அதற்குச் செல்லும் நுளைவு வாயில் ஒன்று மாத்திரம் இருந்தது, அதுகும் மிகவும் ஒடுங்கலானது.

கூட்டம் அமைதியாகத் தான் நடைபெற்றது. ஆனால் ஜெனரல் டயர் இராணுவத்தைக் கொண்டு வெளியேறும் வழியை அடைத்து விட்டுச் சுடும்படி உத்தரவிட்டான். அவன் மாத்திரம் 1600 ரவுண்டுகள் சுட்டான். அரசாங்க அறிக்கைப்படி இறந்தோர் எண்ணிக்கை 379, படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 1200.

ஜாலியன்வாலா படுகொலை ஜெனரல் டயரின் தனிப்பட்ட செயல் அல்ல. அது உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட அடுக்குமுறைத் தீர்மானம.; ஜெனரல் டயர் மீது விசாரணை என்று கூறிய அரசு அதற்குமேல் ஒன்றுமே செய்யவில்லை. இங்கிலாந்து திரும்பிய டயருக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

பொது மக்களும் அரசும் இணைந்து அந்தக் காலாத்தில் பெரும் தொகையான 20,000 பவுண்டு பணமுடிப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை அவனைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியது. பகத்சிங்கின் நண்பர்களில் ஒருவரான உத்தம்சிங் டயரைக் கொல்வதற்காக இங்கிலாந்து பயணமானான்.

இந்த இலட்சியத்தை உத்தம்சிங் 21 வருடங்களுக்குப் பிறகு நிறைவேற்றினான். 1940ம் ஆண்டு டயரைச் சுட்டுக் கொன்றபின் தனது உயிரை மாய்த்துக் கொண்டான். ஜாலியன்வாலா படுகொலை நடக்கும் போது பகத்சிங் வயது 12 மாத்திரமே. அதுவே அவருடைய அரசியல் வாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது.

பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு அந்த மைதானத்திற்கு சிறுவன் பகத்சிங் சென்றான். இரத்தம் தோய்ந்த சிறிது மண்ணை எடுத்து நெற்றியில் இட்டான். ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு தனது வீடு சென்றான்.

அந்த ஒரு பிடி மண்ணை தனது வீட்டின் முக்கிய பகுதியில் வைத்து நாளாந்திரம் அதற்குப் பூச்சாத்தி மரியாதை செய்தான். அவனுடைய தங்கை சகுந்தலா தேவியும் அதை வணங்கினாள். இதைப் போன்ற நிகழ்ச்சி தமிழீழத் தலைவர் பிரபாகரன் வாழ்விலும் நடைபெற்றது.

சென்ற நூற்றாண்டு ஜம்பதுகளில் இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்கள் மீது அரசு ஏவிய குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் உயிரோடு எரியூட்டப்பட்டார்கள். எரிகாயங்களுடன் உயிர்தப்பிய சிலரைப் பிரபாகரன் தனது சிறு வயதில் பார்த்திருக்கிறார். விடுதலை பெற்றால் தான் வாழ்வு என்ற திடசங்கற்பத்தை அவர் மனதில் அது ஏற்படுத்தியது.

இருவருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவர் துவக்கிய விடுதலை அமைப்புகளும் மதச்சார்பு அற்றவை, சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. பெண் விடுதலைக்குச் சார்பானவை. சமதர்ம சோசாலிசச் சமுதாயத்தை உருவாக்கும் இலட்சியத்துடன் இருவரும் செயற்பட்டனர்.

பகத்சிங் முதன்முதலாகத் தொடக்கிய விடுதலை அமைப்பின் பெயர் ‘நவ ஜவான் பாரத சங்கம்” இதன் உறுப்பினர்கள் மதச் சின்னங்களை அணியக் கூடாது என்பது முக்கியமான விதி. இதற்கு அமைவாகப் பகத்சிங் தனது தலைமுடியை வெட்டிக் குறைத்தார். தாடியை அகற்றி முகத்தைச் சவரம் செய்தார். தலைப்பாகை அணியாமல் தலையில் தொப்பி போட்டார்.

சீக்கியராகப் பிறந்த ஒருவருக்கு இவை முக்கியமான தியாகங்கள். அவர் மெல்லிய முறுக்கு மீசையை மாத்திரம் அணிந்தார். சற்றே சாய்த்து அணியப்பட்ட தொப்பியும் முறுக்கு மீசையும் அவருடைய முக்கிய அடையாளங்களாக இடம்பெற்றன.

நவ ஜவான் பாரத் சங்கத்தின் துணை அமைப்பாக ‘ஜாத் பாத் தோடக் மண்டல்’ உருவாக்கப்பட்டது. அது சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றை முன்னெடுத்தது. புரட்சியின் பிரசாரக் குரலாகச் செயற்பட்ட இந்த அமைப்பு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது.

விடுதலைப் போரில் மரணமடைந்த தியாகிகளின் நிழற்படங்களை “சிலைடுகளாக” தயாரித்து “மாஜிக் லன்டான்.” (Magic Lantern) என்ற படக் கருவி மூலம்  அவற்றை மக்களுக்குக் காட்டியது. ஆயுதத் தயாரிப்பிலும் இந்த அமைப்புக்கள் தீவிரமாக ஈடுபட்டன.

புரட்சிக் கனல் ஒரு பக்கமாகவும் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டம் இன்னொரு பக்கமாகவும் நடந்து கொண்டிருக்கையில் ஆங்கில அரசு இந்திய அரசியல் சட்டத்தில் புதிய சீர்திருத்தங்களைப் புகுத்தும் பிரகடனத்தைச் செய்தது. இதற்கு அமைவாக சைமன் கமிஷன் (Simon Commission) என்ற ஆணையம் 1928ம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தது.

ஆங்கிலேயர்களை மாத்திரம் கொண்டிருந்த இத் தகவல் அறியும் ஆணையத்திற்கு நாடு தழுவிய கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஓக்ரோபர் 30ம் நாள் அது லாகூர் (Lahore) வந்த போது பஞ்சாப் தலைவர்கள் பண்டித மதன் மோகன் மாளாவியாவும், பஞ்சாலச் சிங்கம் எனப்படும் லாலா லஜபதி ராயும் கறுப்புக் கொடி காட்டி “சைமனே திரும்பிப் போ” என்று முழங்கினர்.

இவர்களை விரட்டுவதற்கு ஸ்கொட் (Scott) சோன்டேர்ஸ் (Saunders) என்ற பொலிஸ் உயரதிகாரிகள் தடியடிக்கு உத்தரவிட்டனர். பேரணியில் ஈடுபட்ட பொதுமக்களும் மேற்கூறிய இரு தலைவர்களும் தாக்கப்பட்டனர். லாலா லஜபதிராய் மீது வீழ்ந்த அடியால் அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நவம்பர் 17ம் நாள் அவர் மரணமடைந்தார்.

வங்க மாநிலத்தின் மறைந்த தலைவர் சி.ஆர்.தாஸ் அவர்களின் துணைவி வசந்திதேவி வெளியிட்ட இரங்கலில் “பஞ்ச நதிகள் பாயும் வீரர் கோட்டத்து வாலிபர்களே! உங்கள் மான உணர்வு இன்னமும் உறங்குவதா?” என்று கேட்டார்.

இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் எண்ணம் கொழுந்து விட்டு எரிந்தது. பகத்சிங், ராஜகுரு, இந்துஸ்தான் சோசியாலிஸ்ற் குடியரசுப் படைத் (Hindustan Socialist Republican army) தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆகிய மூவருக்கும் லாலா லஜபதிராயைத் தாக்கிய பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

டிசெம்பர் மாதம் 17ம் நாள் காவல் நிலையத்தில் இருந்து ஒரு வெள்ளையன் காவலர் உடையில் மோட்டார் சைக்கிலில் புறப்பட்டான். அவனை சந்திரசேகர ஆசாத் ராஜகுரு ஆகிய  இருவரும் முதலில் சுட்டனர். கீழே வீழ்ந்தவன் கைத்துப்பாக்கியால் திருப்பித் தாக்க முயன்றான். அதற்குள் பகத்சிங் அவனைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்டவனின் பெயர் சோன்டர்ஸ்.

இதுபற்றிய வர்ணனையை ஜவகர்லால் நேருவின் சுயசரிதையில் காணலாம் “பகத்சிங் மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு அவருடைய பயங்கரமான செயல்கள் காரணமல்ல. அவருடைய செய்கை லாலா லஜபதிராயினுடைய மானத்தைக் காக்கின்ற வகையிலும், அதன் வாயிலாக, இந்திய நாட்டு மானத்தைக் காக்கின்ற வகையிலும் அமைந்ததே காரணம். அவர் விடுதலை வேட்கையின் அடையாளச் சின்னமாகி விட்டார்.”

வட இந்தியாவில் மாத்திரமல்ல, தமிழகத்திலும், தமிழீழத்திலும் அவருடைய புகழ் பரவி மக்களைக் கவர்ந்தது. “காந்தியடிகளுக்கு நிகரான புகழ் அவருக்கு இருந்தது” என்கிறார் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா. (History of the Congress by Pattabi Seetharamaiah).

லாகூர் காவல் நிலையத்திற்கு முன்னால் வைத்துச் செய்யப்பட்ட படுகொலை ஆங்கில அரசை மிக ஆழமாக உலுக்கியது. பஞ்சாப்பிலும் பிற வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டனர்.

ஜெய் கோபால் என்ற இளைஞன் சித்திரவதையைத் தாங்க முடியாமல் சோன்டர்சைக் கொலை செய்தவர்கள் பகத்சிங், ராஜகுரு, சந்திர சேகர ஆசாத் என்று உறுதியாகக் கூறினான். அவர்களைத் தேடும் படலம் தொடங்கியது. காட்டிக் கொடுப்பவர்களுக்குச் சன்மானமும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மேற்கூறிய மூவரில் ஒருவரும் பிடிபடவில்லை. சோன்டர்ஸ் படுகொலை டிசம்பர் 17,1928ம் நாள் நடைபெற்றது. அதில் பிடிபடாத பகத்சிங் 1929 ஏப்ரல் 8ம் நாள் டில்லி சட்டசபைக்குள் நுளைந்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினார். இதில் அவர் தப்பிச் செல்லாமல் தானாகவே காவல்தறையிடம் சரண் அடைந்தார். காட்டுச் சிங்கம் தனது எண்ணப்படி கூட்டுக்குள் புகுந்தது.

இன்று பாராளுமன்றமாகிவிட்ட டில்லி சட்டசபையின் பார்வையாளர் பகுதியில் பகத்சிங்கும் பி.கே.தத் என்பவரும் துப்பாக்கி, வெடி குண்டுகள் சகிதம் அமர்ந்திருந்தனர். சட்டசபை நடவடிக்கைகள் தொடங்கியதும் இருவரும் வெள்ளையர்களை நோக்கிக் குண்டுகளை வீசினர்.

பெரும் புகைமண்டலம் அமளிதுமளி ஏற்பட்டது. ஒரு சிலர் சிறு காயம் அடைந்தனர். அதன் பின் இருவரும் ஒருவரையும் குறிவைக்காமல் சட்டசபையின் மேற்பகுதியை நோக்கிச் சுட்டபடி துண்டுப் பிரசுரங்களை சபையில் வீசினர். அவர்கள் தப்பிச் செல்ல நிறைய வாய்ப்பு இருந்தது.

அவர்கள் அப்படிச் செய்யாமல் குண்டுவீச்சை நடத்திவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுக் கைகளை நீட்டிக் கொண்டு தம்மைக் கைது செய்யும்படி கோரினர். பகத்சிங் இவ்வாறு கைது செய்யப்பட்ட போது காவல்துறையிடம் கிடைத்த கைத் துப்பாக்கி தான் சோன்டர்ஸ் அதிகாரியைக் சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப் பட்டது என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

சோன்டர்ஸ் கொலை வழக்கில் கைதிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கும் அதன் பிறகு தூக்கில் இடப்படுவதற்கும் டில்லி சட்ட சபை குண்டு வீச்சும் சுய சரண் புகுதலும் காரணமாகின்றன. தன்னைக் கைதியாகக் கொடுப்பதற்கு பகத்சிங் எடுத்த முடிவு பிரசார நோக்கம் உடையது. விடுதலை வரலாறு அடுத்த நகர்வை அடைய அது வழிவிட்டது. அத்தோடு மரணத்தில் வாழும் அமரத்துவம் அவருக்குக் கிடைத்தது.

குண்டு வீச்சு நடத்திய இரு மாதங்களுக்குள் பகத்சிங், பி.கே.தத் ஆகியோர் தேசத்தின் வீரர்கள் (National Heroes) என்ற நிலைக்கு உயர்ந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங்கை மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் சென்று பார்த்தனர். காந்தி மாத்திரம் செல்லவில்லை.

1929 யூலை 10ம் நாள் பகத்சிங் அவர் தம் தோழர்களுக்கு எதிரான சதி வழக்கு விசாரணை லாகூரில் தொடங்கியது. அது பெரும்பாலும் சட்ட வரன் முறைகளை மீறி நடைபெற்றது. 1930 மே 3ம் நாள் இந்த முதற்கட்ட விசாரணை முடிவுற்றது. ஆனால் இரு நாட்களுக்கு முன்பு மே 01ம் நாளன்று தேசாதிபதி (Viceroy) இர்வின் பிரபு அவசரச் சட்டம் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒரு தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தார்.

இதற் கிடையில் பகத்சிங் 1929 யூன் 15ம் நாள் தொடக்கம் செப்ரம்பர் 15ம் நாள் வரை 63 நாட்கள் வரை கடும் உண்ணாவிரதம் இருந்தார். அவர் சொல்லொணாத சித்திரவதைக்கு உள்ளானார். அவருக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவு உட்செலுத்தப்பட்டது. பலவீனமான நிலையிலும் அவர் அரசு தரப்பைப் பார்த்து “உங்கள் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.

மேற்கூறிய தீர்பாயம் 1930 அக்ரோபர் 07ம் நாள் தீர்ப்பு வழங்கியது. அது பின்வருமாறு –1. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை. 2. கிஷோரிலால், மகாவீர்சிங், சின்கா, சிவவர்மா, கயாபிரசாத், ஜெயதேவ், கமல்நாத் திவாரி ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும் நாடுகடத்தலும் 3. குந்தன்லால், பிரேம்தத் ஆகியோருக்கு முறையே 7 மற்றும் 5 வருடச் சிறை 4. மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தனது தந்தைக்கு எழுதிய இறுதிக் கடிதத்தில் பகத்சிங் பின்வருமாறு குறிப்பிட்டார். “என்னுடைய உயிர் மிகவும் உயர்ந்தது என்று நான் கருதவில்லை. கொள்கைகளை விற்றுவிட்டு அதைக் காப்பாற்றுவதில் அர்த்தமில்லை”

செண்பகத்தார்