Tuesday, May 7, 2013

முகவரி அல்ல முகம் - பாகம் 2


வாழ்க்கையை
விடுதலைப்போரினாலும்
மரணத்தை
அஞ்சாத தியாகத்தாலும்
கடைசி வரைக்கும்
கனப்படுத்தி
பூமி கனக்கப்
புதைந்த புலிகளே!
காலத்தின் செவிகளில்
உமது கர்ச்சனை…
யுகங்களின் நெற்றியில்
உமது திருப் பெயர்…
நாளைய மானுடப்
பிஞ்சு முகங்கள்
முகர்ந்து பார்க்கும்
ஒவ்வொரு பூவிலும்
உங்கள் உயிரின்
வாசம் கமழும்…

நாளைய விடியலை
ஈழத்தில் எழுத
நீளும் கதிர்களில்
நிச்சயம் உமது
உயிரின் சூடும்
ஒன்றித்திருக்கும்.

துரோகத் தூசுப் படலத்தை
உயிரின் சுவாலையால்
பொசுக்கிய புலிகளே!

காலியான சயனைட் குப்பிகளும்
கழன்று கிடக்கும் தோள் துப்பாக்கிகளும்
இன்னும் உலராத இளைய ரத்தமும்
அனைத்திலும் மேலாய்
உம் வாழ்வும் மரணமும்
விடுதலை வரித்த
அடையாளங்களாய்
வரலாற்று வரிகளில்
கனத்துக் கிடக்கும்
ரத்த சாட்சிகளே.

மக்கள் கவிஞர் இன்குலாப்

வீரவணக்கம்!


இந்த 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் இருந்து தமது சொந்த இனம் கொத்துக் கொத்தாய் அழிக்கப்பட்டும் கூட கொஞ்சமும் கவலையின்றி நாம் நமது பணிகளில் மூழ்கிக் கிடக்கிறோம். ரத்த உறவு என்பதற்காக அல்ல, சொந்த இனம் என்பதற்காக அல்ல, மனித உயிர்கள் என்ற அடிப்படையிலாவது நாம் சிலிர்த் தெழுந்தோம் என்றால் இந்திய அரசும், சிங்கள இனவெறி அரசும் சிறுமைப்பட்டு போயிருக்கும். ஆனால் தமிழன் மொழியால் ஒன்றுபட்டு இருந்தாலும் தமது இனத்திற்கான அடையாளத்தை தொலைத்து வெகுநாட்களாகி விட்டதை, நடந்த இனப்படுகொலையின் போது நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. நமக்கென நாம் சாதி, மதம், கட்சி, அடையாளங்களால் நம்மையே நாம் அழித்துக் கொண்டோம்.

நாம் தமிழனாக இருந்தாலும் நமக்கான சிந்தனையை கட்சி தலைமைதான் தீர்மானிக்கிறது, தமிழ்நாட்டிற்குப் பொருந்தாத காங்கிரஸ் கட்சி இன அழிப்பை நியாயப்படுத்தி தேசிய அடையாளத்தை நம்மேல் சுமத்தியது. அடிப்படை தன்மையற்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இன அழித்தொழிப்பை விட தேசிய அங்கீகாரமே அவசியம் என வாதிட்டது. ஒரு அமைப்பு போராட்டம் நடத்தினால், வேறு ஒரு அமைப்பு டெல்லிக்கு மனுக்களை சுமந்து சென்றது. இதுவே சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு திமிர் வளர உரமாகிப் போனது.

வரலாற்று பக்கம் திரும்புவோம். வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு மாந்தகுலம் அந்த மண்ணில் வாழ்ந்ததற்கு அடையாளம் ஏராளமாய் இருந்தன. அவர்கள் வேடர்களாய் மந்தை மேய்ப்பவர்களாய் வாழ்ந்ததற்கான சான்றுகள் கற்காலம், உலோக காலம் என எல்லாக் காலங்களிலும் அழுத்தமான பதிவுகளாய், புள்ளியல் தடயங்களாய் அந்த மண்ணெங்கும் ஏராளமாய் இரைந்து கிடக்கின்றன.

இலங்கையிலே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் தடயங்களும், சமகாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்களின் அடிப்படைக் கட்டமைப்புகளும், ஒன்றுபட்டவை என தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவிக்கிறார்கள். இலங்கையின் அனுராதாபுர பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு சான்றுகள் குறிப்பாக ஈமத்தாழிகளும், தமிழ் நாட்டின் திருநெல்வேலிக்கருகே ஆதித்த நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளும் மிகமிக பொருந்தி வந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் படிப்படியாக வந்த எழுத்து படிமங்களும், கல்வெட்டுச் சான்றுகளும் இலங்கையும் தென்னிந்தியாவின் தமிழ்நாடும் மிக ஒத்தவையாக இருந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் அழுத்தமாய் பதிவு செய்கிறார்கள்.

ஒரு மொழியின் சான்றாய் எழுத்துக்கள் அமைகின்ற காரணத்தினால் எந்த மொழியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும், அதன் எழுத்து வடிவங்களை உள்வாங்குவது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்வெட்டில் ஈழத்தமிழ் வணிகர் வணிகம் செய்து தங்கிச் சென்ற நிகழ்வுகள் தகழி எழுத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகழி எழுத்துக்களே இலங்கையின் தொடக்கக்கால கல்வெட்டுகளில் காணப்படுவதை ஆய்வுகளின் மூலம் நாம் அறிகிறோம். தமிழ்நாட்டில் கரூரில் கண்டெடுக்கப்பட்ட சில நாணயங்கள் சங்ககால பெருவழுதியின் நாணயங்களாகக் கருதப்படுகின்றன. இதே நாணயங்கள் இலங்கையில் பல பகுதிகளில் கண்டெடுத்ததாகசான்றுகள் தெரிவிக்கிறது.

ஆக மொழியால் மட்டுமல்ல நாணய பரிமாற்றத் தாலும் அங்கு வாழ்ந்த தொல்குடியினர் தமிழர்களே என்பதை நம்மால் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். இலங்கைத் தீவின் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொடங்கி தமிழர்கள் மிகச் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய சான்றுகள் பல இன்று வரை நம்மிடையே இருக்கின்றன.

இந்நிலையில் தான் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் புத்தர் வருகிறார். தமது சமய கருத்துக்களை பரப்பிட அவர் தமிழ் மொழியை கற்க தொடங்கினார். பின்னர் தமிழரிடையே தமது சமய கருத்துக்களைப் பரப்பினார்.

ஒரு தைப் பூச நாளில் இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கதிர்காமத்துக்கு அருகே உள்ள தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த நாளில் தான் புத்தர் தம் கருத்துக்களை தமிழ்மக்களிடையே பரப்பினார். தமிழர் சிலர் புத்தத்திற்கு மாறினர். இப்படித்தான் தமிழர் வாழ்வு சிதையத் தொடங்கியது.

தொடரும்…

- கண்மணி


முகவரி அல்ல முகம் - பாகம் 1