பேரினவாத முகத்தின் முன்பு இன்று
பிராத்தனைகள் இல்லை
ஆணவம் கிழிபடப் புலியின் அறைகள்…
எவனது முழங்காலுக்குக் கீழும்
தலைசாய்த்துக் கிடக்காது தமிழினம்
இழந்த அடையாளங்கள் மீட்கப்படுகின்றன
தொலைந்த முகவரிகள் தொகுக்கப்படுகின்றன
முடங்கிய கைகள் துப்பாக்கிகளாக
உலகக் கூரையில் தமிழின முழக்கம்
தமிழர்க்கு இந்தத் தகுதி யாரால்?
ஒடுக்கு முறையாளர்கள் உச்சரிக்கத் தயங்கலாம்
அடிவருடிகள் இந்த வரலாற்றை மறுக்கலாம்
விடுதலைக்குப் போராடும் வீரர்கள் எவருக்கும்
உலக மூலையில் எங்கிருந்தாலும்
அடையாளம் தெரியும்….. அவர்கள் புலிகள்!
இளைய தீபங்களின் தியாக ஒளியில்
எழுகின்ற முகங்கள் புலிகளின் முகங்கள்
அர்ப்பணிப்புக்கான மானுட உவமைகள்
பிரபாகரன் என்பதும், தம்பியர் என்பதும்
தனி மனிதர்களின் பெயர்களில்லை
விடுதலை அவாவும் தமிழீழத்துக்கு
இந்தப் பெயர்களே இனிமேல் பொருள் தரும்
இந்த முகங்கள் தனிமுகங்கள் இல்லை
உரிமைக்குப் போரிடும் இனத்தின் முகங்கள்
ஈழத்தின் நெருப்பு விண்ணை எட்டும்
இளைய குருதியால் கடல்கள் சிவக்கும்
நாளைய கதிர்கள் தமிழ் ஈழ மண்ணில்
விடுதலை என்ற விடியலை எழுதும்!
மக்கள் கவிஞர் இன்குலாப்
எந்த ஒரு போராட்டமும் திடீரென தோன்றுவதில்லை. அதற்கென ஒரு வரலாறு, அதற்குள் புதைந்துள்ள ஏமாற்றம், முறியடிப்பு, சதிவலை, இரத்தச்சிதறல், கோபம், ஓலம் என ஒராயிரம் பண்புகள் கோபுரமாய் புதைந்து கிடக்கும். எந்த ஒரு போராட்டத்தையும் அதன் சமகால வாழ்வை வைத்து சீர்தூக்கக் கூடாது. மாறாக போராட்டத்தில் சிக்கிக் கிடக்கும் உணர்வுகள், பறிக்கப்பட்ட உண்மைகள், சிதறடிக்கப்பட்ட உயிர்கள், பழிவாங்கப்பட்ட தன்மான உணர்வுகள் என அடுக்கடுக்காய் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் பொதிந்ததாக போராட்டத்தன்மை இருக்கும், ஆகவே எந்த ஒரு போராட்டத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியோடு கண்டுணர்ந்து ஆய்வு செய்து சீர்தூக்கி கருத்துச் சொல்வதுதான் சிறப்புடையதாக இருக்கும்.
உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாந்தகுல விடுதலைக்கான போர்களும் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதைப்போன்றே அடிமைதனத்தின் நுகத்தடியை உடைத்தெறிய ஒவ்வொரு காலத்திலும் வரலாறு மக்கள் தலைவர்களை தொடர்ந்து படைத் தளித்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பதை வரலாற்றின் வாயில்களை தொட்டவர்கள் அறிந்திருப்பார்கள் அதைவிட மேலாக விடுதலைக்கான போர் என்பது சிலர் 10 ஆண்டுகளில் சிதிலமடைய கூடியதல்ல. அது ஒவ்வொரு அணுவிலும் உயிர்த்து துளியாய் உலா வருவது. ஒவ்வொரு ரத்தத் துளியிலும் உயிர்த்துடிப்பாய் உறைந்து கிடப்பது. எந்தவொரு ஆளுகையாலும் அடக்க முடியாத எந்த ஒரு ஆற்றலாலும் ஒடுக்கமுடியாத ஒரு மாபெரும் உணர்வு மண்டலம், உரிமைக்கான போராட்டம் என்பதை வரலாறு பல தளங்களில் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
யூதர்கள் எகிப்திலே அடிமையாய் இருந்தபோது மோசே, ஆரோன் என இரண்டு படைத்தளபதிகளை வரலாறு அவர்களுக்கு வழங்கியது. மோசேவும், ஆரோனும் மறைந்த பிறகு யூதர்களின் விடுதலைப்பயணம் அவர்களோடு அடங்கிப் போய்விடவில்லை. அது இன்னும், இன்னும் வீச்சாய் பேரெழுச்சிக் கொண்டு வெற்றிகண்டது இன்று சுற்றிலும் இருக்கும் அரபு நாடுகளுக்கு சிம்ம சொப்பணமாய் திகழும் இஸ்ரேல் தமது மூதாதயர்களின் வரலாறே அவர்களை வலிமை கொண்ட மக்களாய் மாற்றி அமைத்தது.
இந்நிலையில் தான் சமகால வரலாற்றில் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு பெருங்கொடுமை அடுத்தத் தொடருக்கான இடைவெளியை தந்திருக்கிறது. காற்று மண்டலங்களை பிணவாடையால் அடர்த்தியாக்கி அழுகுரல்களை வேட்டுச் சத்தங்களால் ஊமையாக்கிய ஒரு கொடுமை முடிவு பெற்றதாக கொக்கரிக்கிறது. சிலருக்கு வரலாற்று அறிவு இல்லை. பலருக்கு தமிழன் என்ற உணர்வே இல்லை. ஆகையால் சிங்கள மண்ணில் பிழைக்கச் சென்றவர்கள் சொந்த நிலம் கேட்டு போராடுவதில் என்ன நியாயம் என புலம்புகிறார்கள். அவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளை கட்டாயமாக கற்றுத் தரவேண்டிய ஒரு அவசியம் இந்நேரத்தில் நமக்கு எழுந்துள்ளது. இந்த வரலாற்றை நாம் பள்ளிக் கல்லூரிகளில் நடக்கும் வெறும் புள்ளி விவரங்களாக இல்லாமல் அழுத்தமான திட்டமிட்டு தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட சதியை அவர்கள் எதிர்கொண்ட விதத்தை இயக்கத்தில் தொய்வடையாத மாந்தகுல நகர்வு மாறிவந்த விதத்தை நாம் ஒரளவாவது தெரிந்து கொள்ளாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நம்மால் ஆதரிக்க முடியாது. ஒன்று உணர்வாளராய் இருக்கவேண்டும். அல்லது அறிவாளராய் இருக்க வேண்டும். இல்லையெனில் குறைந்த பட்சம் மனிதராகவாவது சிந்திக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களே தமிழீழ விடுதலையை கொச்சைப்படுத்துகிறார்கள். விடுதலை போராளிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். இந்திய விடுதலை போர்களத்திலே தன்னிகரற்ற மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆகியோரை விடுதலை போராளிகளாய் அங்கீகரிக்கிறார்கள்.
தென்னமரிக்கநாடுகளில் வீரச் சமர்புரிந்த சேக்குராவை, ஃபெடல்காஸ்ட்ரோவை, நெஞ்சினில் வைத்து போற்றுகிறார்கள். வியட்நாமிய விடுதலை போராளி ஹோசிமினை மாவீரன் என வாழ்த்துகிறார்கள். ஆனால் பிரபாகரனை, மட்டும் மறுக்கிறார்களே இதற்கு காரணம் என்ன, என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இப்போது தமிழீழ வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
இலங்கை ராமாயணத்தில் நமக்கு சொல்லித்தரப்பட்ட ஒரு தீவு. ராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் இலங்கையை ஆண்டதை ராமாயணம் ஒப்புக்கொள்கிறது. முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரகாந்திக்கு எழுதிய கடிதத்தில் ராமாயணம் என்பது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே நடந்த போர் என்று கூறுகிறார். அந்த போர் இன்னமும் ஓயவில்லை. அயோத்திராமன் ராவணனைக் கொன்றதை ராமாயணம் சொல்கிறது. நல்லவேளை இன்றுபோல் அன்று செயற்கை கோள் அலைவரிசை தொலைகாட்சிகள் இல்லை. ஒரு வேளை இருந்திருக்குமேயானால் இன்று பிரபாகரனை கொன்றதை போட்டி போட்டு ஒளிபரப்பிய வட இந்திய தொலைகாட்சிகள் அன்றே அதை செம்மையாக நிகழ்த்தியிருக்கும். அப்படி ராமாயணத்தில் சொல்லப்பட்ட இலங்கைத் தீவுன் இந்திய துணைக் கண்டத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளது.
இந்தியாவையும் இலங்கைத்தீவையும் வடக்கே வடகடல் என்ற அமைப்பும், தெற்கே தென்கடல் என்ற மன்னார் வளைகுடாவும் பிரித்து வைத்திருக்கிறது. இந்த இலங்கைத் தீவிற்கு தெற்கே இந்திய பெருங்கடல் தென்துருவ நிலப்பகுதி வரை கடல் தவிர வேறு நிலங்கள் கிடையாது. கிழக்கே வங்காள விரிகுடா இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு வரை பரந்து விரிந்துள்ளது. இந்த அழகிய தீவின் மிக அருகே வெறும் 40 கீ.மீட்டர் தொலைவில் தமிழ்நாடு அமைந்திருக்கிறது.
தொடரும்…
- கண்மணி (2009)