Monday, June 3, 2013

ஒருநாள் வரும்



செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி

உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி

தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழஙுகுமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடி
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி சூடித்தமிழ் தலைநிமிரச் சோழர்வகை
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ

கவிஞர் - கிரிகாசன்