Sunday, June 2, 2013

அழியா ஜனனத்தில் ஆதவர்கள்



உள்ளமதை வேலியிட்டு உதிரத்தால் பாத்தி கட்டி
உரிமை விடிவிற்கென ஆதவர் ஆனவர் நாங்கள்
மரணம் எம்மை ஆழ்வதில்லை
விதையாகி எழுவோம்
விடியலையே தருவோம்

பாச உறவுகளே நீங்கள் ஏற்றிய சுடர் தீபம்
பரிமாறி தழுவுகிறது பக்குவமாய் எம் மனசை
நூலகச் சாலையிலே அடுக்கப்பட்ட புத்தகங்களாய்
அக்கினிக் குஞ்சுகளின் கல்லேடுகள் இங்கே
எடுத்துப் படியுங்கள் உறவே
கல்லறைகள் என்று
கண்ணீரால் கரைத்துவிடாதீர்

வீழ்ந்த உடல் விதை குழிகளை
நீரூற்றி நனைக்கிறது
நீண்ட துளி மழை மேகம்
ஜனனத்தில் சூரியர்கள்
நாளை எழுதிடுவார் புது வேதம்

எமக்காக ஒளிரும் தீபங்களே
ஒளிமயமான இந்த ஏடுகளை
இருண்டவர் விழிகளுக்கே
தரவேண்டும் நீங்கள்

எமக்காக ஓசை தரும் மணிகளே
எழுச்சியின் உயர்ச்சியை ஏற்றம் இறைத்து
உலகெலாம் சொல்ல வேண்டும் நீங்கள்

எமக்காக சிந்தும் விழி நீர்ரலைகளே
விழலுக்கிறைத்த நீராய் இன்றி
மாற்றான் படை மூழ்கிட
ஓயாத அலையாய் எழவேண்டும் நீங்கள்

ஒளியும் ஒலியும் நீரலை விழியும்
செங்குருதி தோய்ந்த நிலத்தை
செப்பனிடும் என்றால்
மடை திறந்து பாயட்டும்
பகைமையை அறுக்கட்டும்

நதி எல்லாம் விதியென்று ஓடவில்லை
காடு மேடு எங்கிலும்
கானலை கரைத்தே ஓடுகிறது
விழிகளின் நதியிலும் விடியலுண்டு
துவண்ட மனசுக்குள்ளும் தூறலுண்டு
குளிர்காலக் கூதல் இனி எதற்கு
அஸ்தமனச் சூரியனுக்கும் அழைப் பெதற்கு
உயிரே உறவே, மௌனித்தது போதும்
கலக்கம் கனவையும் காயம் செய்யும்
சூரிய கிரணத்தில் ஆதவன் அழிவதில்லை

விழியின் நீர்ரலைகள் போர் வாழ் அல்ல
அது விடியலைத் தருவதும் அல்ல
விழிகளின் சிகப்பே விடியலை தொடும்
எடு கையில் இன்றே ஆயுதம்
எதிரியின் கையிலும் அதுதான்

இறைவனை போல் எம தண்ணன்
இடர் நீக்கி ஆழ்வதில் மன்னன்
தமிழீழத் தாயின் சபதத்தை முடித்திடுங்கள்
ஊர்க் களங்களை உலையிலிட்டு
போர்க்கள பூமியில் மோதுங்கள்
எதிரியின் பாசறை எரித்து
எல்லையை வகுத்துப் பாருங்கள்
அன்று தணியும் எங்கள் தமிழீழத் தாகம்

மரணம் எம்மை ஆழ்வதில்லை
விதையாகி எழுவோம்
விடியலையே தருவோம்.

கவிஞர்:வல்வை சுஜேன்