“தமிழனாய் பிறந்து பார்”
வேலியிலும், கிளையிலும்
அங்கும், இங்குமாய் - உன்
சிதறுண்ட அங்கங்கள்
அங்காங்கே தொங்கும்.
ரத்த ஆற்றில் ஊரே குளிக்கும்.
சுடுகாடு பிணம் வீட்டில் கருமாதி நடக்கும்.
உயிரது இங்கே மலிவாய் போகும்.
ஊரே இங்கு சுடுகாடாய் மாறும்.
பாட்டினிச்சாவால்
உன் உடல் நுளம்பாய் கனக்கும்.
தவிடே உனக்கு உணவாகும்
அதுவும் சிலநாளில் முடிவாகும்.
அடிவயிறு எரிபொருளின்றி
கொழுந்து விட்டு எரியும்.
கொத்து குண்டுகளால்
கத்தை, கத்தையாய் - எம்
பிணங்கள் வீழும்.
பல்குழல் எறிகணை - உன்
செவிப்பறையை கிழிக்கும்.
கணத்துக்கு, கணம்
பதற வைத்தபடி இருக்கும்.
மண்டை பிளக்கும்.
கை,கால்
கண்டபடி தெறிக்கும்.
வயிறு கிழிந்து
குடல் தொங்கும்.
தெரு நாய் பிணமாய்
உன் உடலை ஈக்கள் மொய்க்கும்.
கணத்துக்கு கணம்
கலர் ஆடைகளால் கலர் மாறும் நீ
கிழிந்த ஆடையுடன்
கிலோமீற்றர் தூரம் போவாய்.
கிழியல் ஆடையும்
ரத்தவாடையுடன் உன் உடல்
கனத்தபடி இருக்கும்.
ஊனுக்குள் உருகி, உருகி
உருக்குலைந்து போவாய்.
உன்னை ஊரோடு அழிக்க
எமன் கூட்டமாய் வருவான்.
கொத்து குண்டுகளால்
உன்னை குதறி எறிவான்.
வானம் கூட
குண்டுகள் வீசும் - எம்
பச்சை குஞ்சுகள்
பலியடைந்து போகும் - அதை
உலகம் வேடிக்கையாய்
உற்று நோக்கும்.
உறவுகள் கதறி மாய்ந்து போகும்.
நீதிகள் எமக்கு
கிடைக்காமல் போகும்.
அநீதிகள் மட்டுமே குறைவின்றி கூடும்.
பள்ளி சிட்டுக்கள் உடை
சிகப்பு ரத்தம் குளிக்கும்.
பொல் ஊன்றும் பாட்டனாரின்
காலும் ஒடிந்து போகும்.
கன்னிகள் கற்பை
காடையர்
கசாப்பு கடையேற்றும்.
காய்ச்சிய பானை
கவிழ்ந்து போயிருக்கும்.
சோற்றில்
கை வைக்கையில் - உன்
வயிற்றில் குண்டுகள் நிறையும்.
மாதர் மார்க்குடங்கள்
அரிபட்டு பச்சை பாலகன்
மண்ணை அள்ளி உண்ணும்.
டயர் குவியலோடு
உன் உடல் உயிரோடு தீயும்.
கைகளோடு கண்களையும் கட்டி
தெரு நாயாய்
உன்னை சாத்தான்கள் சுடும்.
உன் குடும்பம் தலையில் அடித்து அழும்.
ஓர் குடம் நீருக்கு
ஒரு மைல் தூரம்
வரிசை நிற்பாய்.
பிச்சை பாத்திரமாய்
கைகளில் தட்டுடன்
அகதி முகாம் வாழ்க்கை
முடிவின்றி தொடர் கதையாகும்.
மூச்சு முட்டும்
இருதயம் வேகமாய் துடித்தபடி
வேகமாய் அடங்கும்.
மூளை கொதிக்கும்
என்ன செய்வதென்று அறியாது
பைத்தியம் பிடிக்கும்.
உன் ஒப்பாரி ஓலம்
விண்ணையும் கிழிக்கும்
வெண்வெளி போகும் உலகம்
வேடிக்கை பார்க்கும்.
நொடிக்கு நொடி
சாவுகள் வீழும்
சத்தமே இல்லாமல் உலகம்
மௌனம் காக்கும்.
தமிழனாய் பிறந்து பார்
நீதிகள் கிடைக்காமல்
கூனிக்குறுகி குற்றுயிர் நிலையாவாய்.
அநீதிகள் மட்டுமே உன்னை
அழித்தபடி இருக்கும்.
வாழும் வாழ்க்கையில்
வசந்தங்கள் தொலையும்
இரும்பு கூண்டுகள்
உன்னை சிறைப்பிடிக்கும்.
கோழியின் கூடு
உன் வீடாகும்.
தமிழனாய் பிறந்து பார்.
மனிதாபிமானம்
பேச்சோடு மட்டும்தான்
என்பது புரியும்.
பிறப்பின் அவதாரம் நரகமாய் இருக்கும்.
பிறப்பு உனக்கு வெறுத்து போகும்.
இறப்பு உனக்கு பிடித்து போகும்.