Monday, May 13, 2013

ஈழத்து ஆத்மாக்கள்!



நாம் போடும் சத்தம் கேட்கிறதா?
கருணை இழந்த இறைவா!
நாம் படும் பாடு புரியலையா?
உலகில் வாழும் மனிதா?

கண்கள் இருந்தும் தெரியலையா?
காதுகள் இருந்தும் கேட்கலையா?
வாயினுள் நாக்கு வளைந்த போதிலும்
வார்த்தைகள் உனக்கு கிடைக்கலையா?

வேதனை எமக்கு வாடிக்கையா?
நாம் படும் பாடு வேடிக்கையா?
பாவம் அறியாத பாவிகள் நாமென
காலம் கடந்தும் இனும் தோணலயா?

நாம் என்ன பாவம் செய்தோம்?
தமிழனாய் பிறந்த தப்பா?
தமிழனாய் பிறந்த தவறே அன்றி
வேறென்ன தவறு செய்தோம்?

தமிழனாய் பிறந்தது தவறென்றால்
ஓர் ஆயிரம் முறை நாம் மடிந்திடுவோம்!
ஒவ்வொரு தமிழன் மடிவதிலும்
ஒரு கோடி தமிழன் உருவெடுப்போம்!

இறந்தும் இறக்காமல் அலைகின்றோம்!
தேகம் வேகாமல் தவிக்கின்றோம்!
எம்மை ஒரு முறை இறக்க விடு!
மீண்டும் ஒரு முறை பிறக்கவிடு!

மறு பிறவி அது அன்றேனும்
நம் தாகம் தீர்த்து எமை மடியவிடு!
ஆவி ஏவி நாம் அலையாமல்
தமிழ் அன்னை மண்ணில்
எமை புதைத்துவிடு!

ஈழன் இளங்கோ