Wednesday, May 8, 2013

திருமலை கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் லெப். கேணல் கடாபி: கேணல் சூசை



திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கடந்த 2008.05.10 அன்று நடைபெற்ற லெப். கேணல் கடாபியின் வீரவணக்கக் கூட்டத்தில் வீரவணக்க உரையாற்றிய கேணல் சூசை மேலும் தெரிவித்துள்ளதாவது:

15 ஆண்டுகளுக்கும் மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழின விடுதலைக்காக பல்வேறு துறைகளில் உழைத்தவர் லெப். கேணல் கடாபி.

1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களமுனைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்.

இவரின் திட்டமிடலாலும், பற்றினாலும் கடற்புலிகளின் முதன்மை இயந்திரப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்த ஒரு போராளி.

தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்பரப்பில் பயிற்சிப் படகுகளை பார்வையிடுவதிலும், தலைவர் அருகிருந்து படகைச் செலுத்தும் இயந்திர வல்லுனராகவும் இருந்தார்.

இன்று அதிகாலை திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து கரும்புலி வீரர்களை வழியனுப்பியவர் கடாபி.

ஒரு காலை இழந்த போதிலும் தொடராக விடுதலைப் பயணத்திற்கு ஓய்வின்றி உழைத்த ஒரு விடுதலை வீரன் என்றார் அவர்.

இந்நிகழ்வு முல்லை மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் வேங்கைத்தமிழன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி கங்கா ஏற்ற, வித்துடலுக்கு ஈகைச்சுடரினையும் மலர்மாலையினையும் தாயார், உடன்பிறப்புக்கள் சூட்டினர்.

மலர்மாலைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் ஆகியோர் சூட்டினர்.

வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் குணசிங்கம் ஆகியோர் ஆற்றினர்.

கடற்புலி லெப். கேணல் கடாபி அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழத் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.