Friday, May 24, 2013

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…!



“பெண்ணான மாயப் பிசாசு”

சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர்.

“தூமகேதெனப் புவிமிசை தோன்றிய

வாமமேகலை மங்கையரால் வரும்

காமமில்லையேல்……”

சொன்னவன் கம்பன்.

“அரக்குமங்கையர் அழகுடல் தழுவியும்..”

பக்தி இலக்கியப் பாவலர் முத்தமிட்டனர்.

“பட்டங்களாள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்”

சொல்லுக்கு வெடிமருந்துபூசி தீமூட்டினான் பாரதி.

“தாயென்றார்” இராமகிருஷ்ண பரமஹம்சர்.

“சக்தி”யென்றான் பாரதிதாசன்.

“பேய்” என்றார்கள் இன்னும் சிலர்.

பூசித்தும் தூசித்தும்

பெண்களைப் புரட்டியெடுத்தனர்

எங்கள் காப்பியக் கவிஞர்கள்;

“ஐயிரண்டு திசைமுகத்து” ஐயன் மனைவி

மண்டோதரியும் போர்க்களம் போனாள்.

குருதிக் கடலில் குளித்த கணவனுக்கு

உருகி அழவன்றி… போராட அல்ல.



கர்ணன் வீழ்ந்து கண்மூடும் நேரத்தில்

குந்திதேவி `குருஷேத்திரம்` போனாள்.

போராட அல்ல…. மகனென்று பிரகடனப்படுத்த.

புறநானூற்றுப் பாடலிலும்

ஒருதாய் போர்க்களம் ஓடினாள்.

போராட அல்ல…

மகனுக்கு அம்பு மார்பில்பட்டதா?

முதுகில்பட்டதா?

பட்டிமன்ற விவாதத்துக்குப் பதில் சொல்ல.

“கோதாண்டம்” இராமனுக்கு,

“கோடாரி” பரசுராமனுக்கு,

“சக்கரம்” கிருஷ்ணனுக்கு,

“கதாயுதம்” வீமனுக்கு,

“காண்டீபம்” அருச்சுனனுக்கு,

காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு

ஆண்களை ஆயுதங்களுடனேயே அவதரிக்கச் செய்தன.

மீசைமுளைத்த தேகத்தில்தானே வீரம் விளையாடும்,

ஆகவே ஆண்மைதான் அதிகாரம் மிக்கது.

பஞ்சப்புலவன் பாரதியின் காலம்வரை

பழைய சாதமே எங்களுக்குப் பறிமாறப்பட்டது.

நேற்றுவரை பெண்மைப் புயல்கள்

அடுப்புக்குள்ளே புகையூதிக் கிடந்தன.

வேலித்துவாரத்தினூடேதான் வெளியுலகைப் பார்த்தன.

அடிவளவுக்குப் போகவும் அடுத்தவரின் துணைநாடின.

எப்படி எழுந்தார்கள்?

கனவிலும் காணாத நிமிர்வு.

நேசிக்கும் காதலனுடன் பேசிமுடிக்க முன்னர்

நூறுமுறைகள் கூனிக் குறுகியவர்.

உரலை உருட்டக்கூட பலமற்றவர்களென்று

கேலிப்பொருளாகிக் கிடந்தவர்,

கட்டெறும்பு கடித்தால் போதுமே

அட்டதிக்கும் அதிரக் கத்தியவர்.

கண்ணுக்கு மை; காலுக்கு கொலுசு

சின்ன இடையினுக்கு… சிங்காரப் பொன்னாரம்

பட்டுச்சேலை… பவளவாய்ச்சாயம்

மொட்டுவிரியாத முல்லை மலர்மாலை

இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்



“வல்வைப் பிள்ளை” நிமிரச் செய்தான்.

பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி.

இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.

எப்படி எழுந்தார்கள்?

கனவிலும் காணாத நிமிர்வு.

பூத்துக்குலுங்கிய நந்தவனத்துக்குள்ளே

வானரச்சேனையை ஏவி

பூவையும், பிஞ்சையும் பொசுக்கினான் ஒருவன்.

ஆத்தாள் கண்திறந்தாள்.

மறத்தமிழ் மாதொருத்தி

அரக்கனின் நெஞ்சில் நெருப்பாய் வெடித்தாள்.

எப்படி எழுந்தார்கள்?

கனவிலும் காணாத நிமிர்வு.

கருமேகம் கிழிந்து மழைநீர் சரமான நேரத்தில்

மூச்சுவிட்டால் எதிரியின் முதுகில்படும் தூரத்தில்

காலில் இடறும் கண்ணிவெடிகளைத் தாண்டி

பகைவர்பாடிய படைக்குள்ளே

எங்கள் தங்கையர் புகுந்தனர்.

கொற்றவைக் கூத்து முடிந்த போது

விடிந்தது.

வெற்றி இவர்களின் கையில் விழுந்தது.

எப்படி எழுந்தார்கள்?

கனவிலும் காணாத நிமிர்வு

தொட்டுவிட யாருண்டு? என்ற துணிவில்

பகைவனின் ஒரு கட்டளைக்கப்பல்

எங்கேயும் நிற்பேன் என்ற திமிரில்

நங்கூரம் பாய்ச்சிக் கிடந்தது.

பரந்த கடலில் எவர்போனாலும் இது பார்த்துவிடும்

பிறகென்ன?

பக்கத்தில் படுக்கும் படகுகள் உயிர்க்கும்

மணலை மீனுக்கு வலைவிரித்தவன் பிணமாவான்.

மறுநாள் ஊதிப்பெருத்த உடல் கரையொதுங்கும்.

இந்தக் கப்பலுக்கு இலக்குவைத்து

வேள்விக்குத் தயாரானாள் வீரமகளொருத்தி.

நேரம்கரைந்து காற்றுக் குளிர்ந்தது.

எதிரியின் நெஞ்சுக்கூட்டையும்..



அவனின் இரும்புக் கோட்டையையும்,

தங்கை தவிடு பொடியாக்கினாள்.

கட்டளைக் கப்பலையும் காணவில்லை,

அங்கயற்கண்ணியும் திரும்பவில்லை.

எப்படி எழுந்தார்கள்?

கனவிலும் காணாத நிமிர்வு.

“சாகரவர்த்தனா”

பகைவன் உலாவந்த `கடல் மிருகம்`

தமிழனின் குருதி இதற்குத் தனிருசி.

நளாயினியும், மங்கையும் போர்க்கோலம் பூண்டனர்.

வெடியதிர்ந்து கப்பல் கண்மூடியபோது;

மீசைமுளைத்த கப்பலின் கப்டன்

உயிர்ப்பிச்சை கேட்டுக் கைகளை உயர்த்தினான்.

ஆண்மை இங்கு அதிகாரம் மிக்கதா?

யார் சொன்னது?

பெண்மை இங்கு புலியானதால்

புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது.



- கார்த்திகை 1994 -

கவிஞர் - புதுவை இரத்தினதுரை