Tuesday, May 28, 2013

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே
இச்சகத்தில் எம்மினத்தின் ஏழ்மைபோய்ச் செழித்திட
அச்சமின்றி உச்சிவான் படையெழுந்த நாளிதே
துச்சமாயுயிர் நினைத்து தூயவர் வெகுண்டெழில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே

இச்சையோடு எங்கள்மைந்தர் ஏறிவான் பறந்திடில்
அச்சமில்லை மிச்சமில்லை நிச்சயமெம் வெற்றியே
உச்சிவான்ம ழைதிரண்டு ஊற்றிநீரைக் கொட்டினும்
அச்சமில்லை வான்பறந்து சுற்றிமைந்தர் வெல்வரே

பச்சைமஞ்சள் என்றுவான்ப ரப்பை ராடர் காட்டினும்
அச்சமில்லை உச்சிஏய்த்து வான்பறந்து மீள்வரே
கச்சைகட்டிக் காழ்ப்புணர்ந்து காதகர்கள் சூழினும்
அச்சமில்லை உச்சிவானில் ஓடிவேங்கை வெல்லுமே

நச்சுவாயு குண்டுபோட்டு நாலுஊர் அழிக்கினும்
அச்சமில்லை மிச்சமுள்ள வீரரும் எழுவரே
குச்சுவீடு கோபுரங்கள் குண்டெறிந்து கொல்லினும்
நிச்சயமாய் எங்கள்புலி நேர்பறந்து வெல்வரே

கொச்சைபேசிக் கூடிநின்று குற்றம்மாந்தர் செய்யினும்
அச்சிறுமை பாதகர்கள் அஞ்சவான் எழுவரே
இச்சரித்தி ரத்தைநாமும் ஏட்டிலே பொறிக்கவே
அச்சமின்றி மீண்டும்எழு அத்தனையும் காணுவோம்

நச்சரித்து நீதிகேடு நானிலத்தைக் கூட்டுவோம்
இச்சமயம் ஆதவன் வழிநடந்து வெல்லுவோம்
எச்சிறப்பு கொண்டிருந்தார் எங்கள்வானின் வீரர்கள்
உச்சிக் கண்ணில் மண்ணும்தூவி ஓடிக்குண் டெறிவரே

துச்சர்வானில் பின்துரத்தி தோல்விகண் டரற்றிட
உச்சவீரம் கொண்டஎங்க ளூர்திஊர் திரும்புமே
பிச்சைகேட்டுப் பெற்றுக்கொள்ள லாகுமோசு தந்திரம்
அச்சமில்லை முப்படைக்கும் ஆனவேந்தன் வெல்லுவான்

மச்சம்ஓடும் ஆழ்கனத்த ஆழிவீழ்ந்த ஆதவன்
மற்றநாளில் வானெழுந்து மீண்டொளிர்தல் உண்மையோ
அச்சதாக ஈதுமாகும் அண்ணன் மீண்டும் தோன்றியே
பச்சதாபம் விட்டேபகை தொட்டழித்து வெல்லுவான்!

கவிஞர்:கிரிஷாசன்