நஞ்சுமாலை கழுத்திலாட
நற்பண்பு மனதிலாட
வெஞ்சினம் கொண்டு பாயும்
வேங்கைகள் எங்கள் வீரர்
அஞ்சிடா மனவுறுதி
அனைத்திலும் ஈழத்தாகம் - எவரும்
மிஞ்சிடா தீரரிவரின்
மிடுக்கினை உலகம் பேசும்
துஞ்சிய குரோதத்தோடு – மாவீரர்
துகிலினை உரிந்த கீழோர்
பிஞ்சான பெண்னைத் - தேடி
பிளிர்ந்திட்ட நாசகாரர்
கொஞ்சமா செய்த கோரம்
கொதிக்குதே எங்களுள்ளம்
பஞ்சமா பாதகட்கு
பாடைகள் தயார்நிலையில்!
நெஞ்சிலே நெருப்பேந்தி
நீண்டதோர் சேனைகொண்டு
வஞ்சகர் உம்மைத்தேடி
வரும்படை நாடேயதிர!
சஞ்சலம் என்றுணர்ந்து
சரணடை படலம் தொடர
கெஞ்சியே உயிரைக்காக்க
கொடுபடை காலில் வீழும் - அன்று
பஞ்சினை போன்ற எங்கள்
பண்பினை உலகம் போற்றும் - எதிலும்
பஞ்சமே இல்லா ஈழம்
பாரிலே விளைந்து நிற்கும்!
கவிஞர்:தலைத்தீவான்