Saturday, May 25, 2013

மானிடம் சுடரும் விடுதலைக்காய்…



புலம்பெயர் மண்ணிலே புதுயுகமாய- தாய்
நிலம்தனின் உணர்வினைத் தாங்கிநின்று
வலம்வரும் எம்மனம் தனைச் சுற்றியே 
நிலவரம் நீ என்றும் வாழி வாழி  

ஓராண்டு கடந்திட்ட குழந்தைதான் நீ –ஆனால்
பாராண்ட தமிழினின் பெருமை சொல்வாய்
ஊராளும் வீரரின் உரத்தை ஊட்டி
வேராகப் புலம்பெயர் தமிழனுக்கு  

தாயகச் செய்திகள் தாங்கி வந்து – நீ
ஓயாது பாடுபட்டுழைத் திருப்பாய்
சாயாது தமிழினம் நிமிர்ந்து நிற்க
தேயாத நிலவாகி ஒளி கொடுத்தாய்  

மண்ணிலே விதையாகிப் போன – எங்கள்
புண்ணிய மாவீரர் பெருமை கூறி
கண்ணியம் தவறாது தமிழை ஆழ்வாய்
எண்ணியே பார்க்கையில் இன்பம்தானே  

மானிடம் சுடரும் விடுதலைக்காய் - நீ
வானிலே பவனிவரும் ஆதவனாய்
ஊனினிலே விடுதலை உணர்வை ஊட்டி
மானிலம் தன்னிலே உயர்ந்து நின்றாய்  

குழந்தையாய் இருப்பினும் தாயாய் நின்றாய்- தமிழர்
எழவேண்டும் விடுதலை உணர்வைப் பெற்று
அழவேண்டாம் ஆழமாய்ச் சிந்தி என்பாய்
விழாமல் எம் இனம் காத்தாயே 

கவிஞர்:அம்பிகா