'மாறுதல் ஒன்றே மாறாதது’ என்ற மார்க்சிய தத்துவத்தைக்கொண்ட கட்சி, 40 ஆண்டுகளாக ஈழத் தமிழர் பிரச்னையில் 'மாறவே மாறாத’ கொள்கையை வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் பச்சைப் படுகொலை (1983-85) செய்யப்பட்ட காலகட்டத்திலும் 'தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று ஞான உபதேசம் செய்தார் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். 'இருவரும் இணைந்து வாழ முடியாவிட்டால், இருவரும் வாழவே முடியாது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்றார். 28 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட புதைகுழிகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. இன்று, ஈ.எம்.எஸ். இருந்திருந்தால்... என்ன சொல்வாரோ?
'தமிழ் ஈழம் கோருவது இலங்கைத் தமிழருக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இலங்கை என்பது இரு மொழி பேசும் மக்களைக்கொண்ட நாடு. அந்த மக்கள் ஒன்றாக இல்லாவிட்டால், இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியாது. இரண்டு தரப்பினரும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றுபட்டு நின்றால்தான், அது சாத்தியமாகும். நமது நாட்டில்கூட இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நமக்குத் தெரியும். இப்போது சீக்கியர்களுக்கும் தகராறு. ஆனால் நாம் ஒருமைப்பாட்டைக் காத்துவருகிறோம். இன்னும் பல நாடுகளிலும் பல மொழி பேசும் மக்கள் இணைந்துதான் வாழ்கிறார்கள். எனவே, இலங்கையிலும் இணைந்து வாழ்வது சாத்தியம்தான்’ என்று ஈ.எம்.எஸ். பதில் சொன்னார்.
இலங்கைத் தமிழர் மீதான அக்கறையின் அடிப்படையில் கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் நம்பூதிரிபாட், இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பதில் சொல்கிறார். தமிழர் படும் தொல்லை பற்றி பேச மறுத்து இலங்கை நாட்டு எல்லை பற்றிய கவலையே அவருக்கு அன்று இருந்துள்ளது. அதுவே இன்றும் தொடர்கிறது.
'யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பது இலங்கையிலுள்ள மக்களைத்தான் பிரித்துவைக்கும். ராணுவத்தினாலேயே வெற்றிபெறுவதும் இப்போது சாத்தியமல்ல. மேலும் மற்றொரு நாட்டை நம்பி ஆயுதப் போராட்டம் நடத்துவது எப்படி முடியும்? வங்காள தேசத்தையும் வியட்நாமையும் இத்துடன் இணைத்துப் பேசுவது பொறுப்பானதல்ல’ என்றும் ஈ.எம்.எஸ் அறிவுரை கூறினார்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதுதான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை, இலங்கையில் இருந்து பிரித்துவைக்கிறதாம். யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
யாழ்ப்பாணக் கடற்கரையில் நிம்மதியாக மீன்பிடித்துவிட்டு காற்று வாங்கிப் படுத்திருந்த நிலையிலோ... நல்லூர் கந்தசாமி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருவாசகம் பாடிக்கொண்டிருந்த நிலையிலோ ஆயுதம் தூக்கவில்லை தமிழர்கள். சிங்கள இனவாதத்துக்கு எதிராக 30 ஆண்டுகள் அகிம்சை வழியில் எப்படியெல்லாமோ போராடிப் பார்த்துவிட்டு சிறு துரும்பு பயனும் ஏற்படாத நிலையில், ஆயுதக் குழுக்கள் உருவாகின. அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இந்த வரலாறு எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல், பாதியில் இருந்து ஈழப் பிரச்னையை பார்ப்பது அந்தக் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது. அதனால்தான் வங்கப் பிரச்னையையும் வியட்நாமையும் ஈழப் பிரச்னையும் ஒப்பிட மனமில்லாமல் ஒதுக்க முடிகிறது.
'இந்தப் பிரச்னை உணர்ச்சிப் பிரச்னையாகியுள்ளதே?’ என்று ஈ.எம்.எஸ்-ஸிடம் கேட்டபோது, 'உணர்ச்சிகள், பிரச்னைகளுக்குத் தீர்வு தராது. இப்படி உணர்ச்சி கிளப்பிவிடப்பட்டதை பாகிஸ்தான் பிரச்னையில் கண்டோம்’ என்று வருத்தப்பட்டார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது தனக்கு உடன்பாடு இல்லாததுபோல இந்தப் பதில் இருக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையை காங்கிரஸ் கட்சிக்கு எடுத்துக் கொடுத்துப் பரிந்துரைத்ததே அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான். (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை.) அன்றைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் குறிப்பாக இதை முன்வைத்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாய் க்வாலியாக்குள மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் (அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்களில் கம்யூனிஸ்ட்களும் கலந்துகொள்வார்கள்) பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒரு திருத்தம் கொண்டுவந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கும் உள்ள பிரிவைப் பயன்படுத்தி குளிர்காய்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சி விரும்புகிறது என்று குற்றம்சாட்டியவர்கள், இந்தப் பிரிவை சரிப்படுத்த ஒரே ஒரு வழி இருக்கிறது என்று பரிந்துரைத்ததாக பி.ராமமூர்த்தி தனது புத்தகத்தில் (விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் - பக் 186) எழுதுகிறார்.
சுதந்திர இந்தியா, அனைத்து இன, மொழி மக்களையும் திருப்திசெய்யும் சமஷ்டி ஆட்சி முறையாக (இப்போது இருக்கும் மத்திய அரசு - மாநில அரசுகள் என்பதைப் போலவே) இருக்கும் என்று அன்று காங்கிரஸ் கட்சி சொன்னதை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்கள், இன்னும் ஒரு படி மேலே போங்கள் என்று அழைத்தனர்.
'இன்னும் சிறிது மேலே போய் வடமேற்கிலும், கிழக்கிலும் மெஜாரிட்டி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் சேர்த்துக்கொண்டால், காங்கிரஸ் - லீக் ஒற்றுமைக்கு அடித்தளம் ஏற்பட்டுவிடும் என்று நாங்கள் திருத்தம் கொடுத்தோம்’ என்கிறார் பி.ஆர். அதாவது, முஸ்லிம் லீக் கேட்கும் பாகிஸ்தானை பிரித்துக் கொடுக்க ஒப்புக்கொள்ளுங்கள் என்று 1942-ம் ஆண்டிலேயே ஆலோசனை சொல்லியுள்ளனர். காங்கிரஸ் கமிட்டி அன்று இதை ஏற்கவில்லை. நாட்டைப் பிரிக்கக் கோருவதால், 'தேச விரோதிகள்’ என்று கம்யூனிஸ்ட்கள் கொச்சைப் படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த ராஜாஜி, அன்று கம்யூனிஸ்ட் மேடைகளில் முக்கியத்துவம் கொடுத்துப் பேச அழைக்கப்பட்டதாக ராமமூர்த்தி சொல்கிறார். மத அடிப்படையிலான பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்த இவர்கள், தென் பகுதியில் அன்று இன அடிப்படையிலான 'திராவிட நாடு’ கோரிக்கையை நிராகரித்தனர். 'திராவிட நாடு’ கேட்டவர்களிடம் கொள்கை ரீதியான பலவீனங்கள் இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், 'தமிழ்நாட்டு முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் கோரிக்கைதான் திராவிட நாடு’ என்று பி.ராமமூர்த்தி கொச்சைப்படுத்தியது கவனிக்கத்தக்கது. 'திராவிட நாடு’ - தமிழ் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்குமானால், பாகிஸ்தான் பிரிவினை, முஸ்லிம் முதலாளிகளின் நலன்களைப் பிரதிபலிக்காதா?
அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழ்நாடு, தமிழர்களுக்கு ஒரு கொள்கை, மற்றவர்களுக்கு மறுகொள்கை என்று கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருக்கிறதா என்ன?
இதே பி.ராமமூர்த்திதான், 1983-ல் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது, தமிழர்கள், சிங்களர்கள், புத்த மதத் தலைவர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கவலைப்பட்டார். 'சிங்களர்களுக்கு எதிராக இனப் பகையுணர்வையும் ஆத்திரத்தையும் தூண்டுவதன் மூலம் அப்படிப்பட்ட சக்திகளும் கட்சிகளும் தங்களை அறியாமலேயே இலங்கையின் இனப்படுகொலையை ஊக்குவிக்கும் சக்திகள் மற்றும் கொலை வெறியர்களின் செயல்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். அவை அந்நாட்டில் வாழும் தமிழர் மற்றும் இந்தியர் நலனுக்குத் துணை செய்யாது. மாறாக அவர்களுடைய உயிருக்கும் உடமைக்கும் மேலும் ஆபத்தையே விளைவிக்கும்’ என்று உபதேசம் செய்தார்.
'சிங்களர்கள் அகிம்சாமூர்த்திகள், கடல் கடந்து வாழும் தமிழர்கள் ஆத்திரப்பட்டுப் பேசுவதால் மட்டுமே அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொலை செய்வார்கள், மற்றபடி புத்தனின் புத்திரர்கள்’ என்று நினைத்தாரா பி.ஆர்?
1991-ம் ஆண்டு மே மாதம் நடந்த ராஜீவ் படுகொலை தொடங்கி 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சிங்களரை, பேரினவாத ஆட்சியாளர்களை, புத்த பிட்சுக்களை ஆத்திரமூட்டும் பெரிய அளவிலான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது இல்லை. இதைப் பார்த்து அமைதியாகிவிட்டதா ராணுவம்? எத்தனை பெண்கள் விதவைகள் ஆனார்கள்? படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 67 குழந்தைகளை, ஒரே வெடியில் புதைகுழிக்கு அனுப்பிய வெறியைப் பார்க்கவில்லையா நாம்?
இப்படிச் சொல்வதன் மூலம் என்ன அறிவுரை சொல்ல விரும்பினர்? 'அந்தப் பிரச்னையைப் பற்றி பேசாதே, அதற்காகப் போராடாதே, அதைப்பற்றி சிந்திக்காதே’ என்றா?
பி.ஆர்.சுற்றி வளைத்துச் சொல்வதை ஈ.எம்.எஸ். வெளிப்படையாகவே சொன்னார்... 'இது சிக்கலான பிரச்னையாக இருப்பதால் பகிரங்கமாகப் பேசுவது முறையல்ல. அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி நமக்கு ஏராளமான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அரசாங்கங்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே, ராஜீவ்காந்தியிடம் தனியாக எங்கள் கருத்தைக் கூறினோம். நாளை, கருணாநிதி பிரதமரானால் அவரிடமும் தனியாகத்தான் சொல்வேன்’ (9.5.1985 - தீக்கதிர்) என்றார்.
உள்ளூர் பிரச்னையை உலகப் பிரச்னையாய் ஆக்குவதும், உலகப் பிரச்னையை உரக்கப் பேசாதே என்பதும் தமிழர் பிரச்னைக்கு மட்டுமே நடக்கிறது. அது மட்டுமே கசக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமான இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் நா.சண்முகதாசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ணோட்டப்படி எழுதப்பட்ட (இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு - என்.மருத்துவமணி, மா.இராமசாமி) புத்தகத்தில்கூட மிகப் பெருமைப்படுத்தப்படுகிறார் நா.சண்முகதாசன்.
'தேசிய இனப் பிரச்னை பற்றிப் பேசுவது, ஏகாதிபத்தியங்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று (1965-களில்) முதலில் நினைத்தவர். 1980-களில்தான் மாற்றிக்கொண்டார்.
'இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் அறுபடாத ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்துக்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே, இன நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்னைக்குத் தீர்வு எதுவுமே இருக்க முடியாது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய, உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைக்கொண்ட சமஷ்டியாகவோ அல்லது பூரணப் பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படியும் கேட்டுக்கொள்வதற்கான அருகதையைக்கொண்டிருக்க முடியும். சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சாதி, மத, மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்’ - என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அளவுகோல்படி தோழர் நா.சண்முகதாசனும் பிரிவினைவாதியா? அவரைப் பிரிவினைவாதி என்பவர்களை என்ன சொல்லலாம்?
தொடரும்