Saturday, May 11, 2013

சிங்கள, பெளத்த பேரினவாதம் நல்லது செய்யுமா? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 5


'எந்தவொரு சமுதாயச் சிக்கலை ஆராய்ந்தாலும் அதைத் திட்டவட்ட​மான ஒரு வரலாற்று வரம்புக்குள் வைத்து ஆராய வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாயின், அதே வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கிற அந்த நாட்டைப் பிற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற தனித்தன்மைகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று, லெனின் அறிவுறுத்துகிறார். இதைத்தான், 'குறிப்பான பிரச்னைகளில் குறிப்பாக பொருத்திப் பார்க்க வேண்டும்’ என்று உ.வாசுகியும் சொல்கிறார்.

இந்த அடிப்படையில் இலங்கையைப் பரிசீலித்தால், ஈழத் தமிழர் பிரச்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சிறுபிள்ளைத்தனமான நிலைப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

'இலங்கையின் இன்றையச் சூழலில் அங்குள்ள தமிழர்களுக்குத் தேவைப்படுவது சமவாய்ப்பும் அந்தஸ்தும் உள்ள குடிமக்களாக அவர்கள் நடத்தப்​படுவதே ஆகும். அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதிகாரப் பரவல் உறுதிசெய்யப்பட வேண்டும். மறு குடியமர்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகப் பூர்த்தியாக வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு நம்பகத்​தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்’ என்று சொல்கிறார் வாசுகி.

வேண்டும், வேண்டும், வேண்டும்... என்று அடுக்கிக்கொண்டே போவது அனைத்தும் அவசிய​மானவையே. இதைச் செய் என்று அவர் கோரிக்கை வைப்பது, இத்தனை அட்டூழியங்களையும் யார் செய்​தார்களோ... அவர்களிடம். அதாவது, இறுக்கமாக இருக்கும் பௌத்த, சிங்களப் பேரினவாதம் இவற்றை எல்லாம் செய்து தரும் என்று நம்புவது யதார்த்தம் உணராப் போக்கு.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்​களைச் செய்தது ஒரு சிறு குழு அல்ல. ஏதோ ஒரு சில அரசியல் கட்சிகள் அல்ல. குறிப்பிட்ட ஒரு கால​கட்டத்தில் ஆண்ட ஏதோ சில ஆட்சியாளர்கள் அல்ல. தமிழர் உரிமைக்காக அமைப்புகள் தொடங்கப்பட்டபோது, இந்தத் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்படவில்லை. தனித் தமிழ் ஈழம் கேட்டு ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு இத்தகைய எதிர்தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.  காலம் காலமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் இன வெறுப்புத் தாக்குதல்கள் இவை. கடந்த 70 ஆண்டு காலமாக சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்த மதம், சிங்கள - பௌத்தக் கலாசாரம் ஆகிய நான்கும் அங்குள்ள கட்சிகளில், அங்கு அமைந்த ஆட்சிகளில், மதத்தில், மக்கள் மனத்தில் செலுத்தப்பட்டு மொத்தமும் கேன்சரைப் போல அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்கிற ஓர் அரச பயங்கரவாதத்திடம்... அது வேண்டும், இது வேண்டும்... என்றால் நடக்குமா? சிங்களப் பேரினவாதம் இதையெல்லாம் செய்து கொடுக்கும் என்று நம்புவதே, இலங்கையின் அரசியல், முன் வரலாறு புரியாதவர் பேசுவது.

பிரிட்டிஷ் ஆதிக்கம் பரவத் தொடங்கியபோது ஏற்பட்ட சமூகக் கலாசார மாற்றங்களை எதிர்கொள்ள, சிங்கள பௌத்தத் தேசியம் புத்துயிர் பெற்றது. மொழி, மதம் மூலம் தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டத் துடித்தனர். சிங்கள, பௌத்த பாரம்பர்யத்தின் அடிப்படையில் ஒரு பொதுநல அரசு அமைப்பதற்காகவே, பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களை ஒன்றுசேர்த்தனர்.

'உலக மக்களில் இருந்து சிங்களர்கள் வேறுபட்ட​வர்கள், அவர்களே இலங்கை மண்ணுக்கு உரிய​வர்கள், அவர்களே இம்மண்ணில் வாழத் தகுதியுடையவர்கள்’ என்ற 'மகாவம்ச’ப் பழைமை​வாதத்தை மீட்டெடுத்தனர். சுற்றியுள்ள இனங்கள் இந்த நாட்டைக் கைப்பற்றும் ஆபத்து உண்டு, எனவே நம் இனம் அழிக்கப்பட்டுவிடும் என்று தொடர்ந்து பயந்தனர். நமது பௌத்த தர்மம் முக்கியம், இதனால்தான் நாடு காப்பாற்றப்பட்டு வந்துள்ளது, உலகில் பௌத்த தர்மத்தைப் பேணி வளர்க்கும் பொறுப்பு சிங்கள பௌத்தத்திடம் மட்டுமே தரப்பட்டுள்ளது என்று நம்பினர். சிங்கள மன்னன் துட்டகை முனுவுக்கும் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் நடந்த சண்டையைச் சொல்லி, சிங்கள இனவாதத்தை வளர்த்தெடுத்தனர்.

மூன்றில் இரண்டு பங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தாலும், நிலங்கள் முழுமையாக தங்கள் இனத்திடம் இல்லை என்ற நெருடல் சிங்கள இனவாதிகளிடம் இருந்தது. எங்கெல்லாம் தமிழ்ச் சிறுபான்மையினர் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் பெரும்பான்மை சிங்களவர்களை குடியேற்​றும் திட்டத்தை 1931-ம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டனர். இலங்கையில் அமைந்த முதல் அமைச்சரவையில் நில அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயகா தன்னுடைய நய​வஞ்சகத்தால் சிறுகச்சிறுகக் கபளீகரம் செய்யத் தொடங்கினார். இன்று, ராஜபக்ஷே அதை முழுமையாகச் செய்து முடித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே நில கபளீகரம் செய்தவர்களிடம் அதிகாரமும் தரப்பட்டால், என்ன ஆகும்?

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, அமலான திட்டங்கள் அனைத்தும் நில அபகரிப்பு​களாகவே அமைந்தன. சிங்களக் குடியேற்றம் பட்டவர்த்தனமாக நடந்தது. தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என்று பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் சொன்னாலும் அது அமலாகவில்லை. இப்படி குடியேற்றப்படும் சிங்களருக்கும், அதுவரை அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதுதான் ஈழப் பிரச்னையின் தொடக்கம்.

இந்த இனவாதத் தீயில் எண்ணெய் வார்க்க சிங்கள அரசியல்வாதிகள் துடித்தனர். டி.எஸ். சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயகா பிரிந்து தொடங்கியதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. கடந்த 60 ஆண்டுகளை மாறிமாறி ஆண்டவர்கள் இந்த இரண்டு கட்சியினர்​தான். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர். ஜெய​வர்த்தனா 1983-ல் தொடங்கிய இன அழிப்பை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ஷே 2009-ல் முடித்தார். தமிழின ஒடுக்குமுறையை யார் அதிகம் செய்வது என்பதில்தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்ததே தவிர, ஒன்றுபட்ட இலங்கை மக்கள் அனைவர் மீதும் இந்த அக்கறை இல்லை.

சிங்கள இனவாதத்தை தங்களது கட்சிக் கொள்கையாக மட்டுமல்லாமல், இலங்கை அரசின் கொள்கையாக இந்த இரண்டு கட்சிகளும் மாற்றிவிட்டன. சிங்களத்தின் சின்னமான சிங்கமே, தேசியக் கொடி ஆனது. சிங்களம்தான் இலங்கையின் ஆட்சி மொழி என்று 1956-ல் அறிவித்தனர். பௌத்த மதமே, அரசு மதம் என 1972-ல் பிரகடனம் செய்யப்பட்டது. 1978-ல், செய்யப்பட்ட அரசியல் யாப்பின் படி, 'இது ஜனநாயக சோஷலிசக் குடியரசு. இக்குடியரசு ஒற்றையாட்சி அரசு’ என அறிவிக்கப்பட்டது. இதில் எந்த மாறுதலையும் செய்யவே முடியாது. செய்ய வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், பொதுஜன வாக்கெடுப்பும் நடத்தித்தான் செய்ய முடியும்.

சிங்களத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலமாக தமிழ் விலக்கப்பட்டது. பௌத்தம், அரசு மதமாக அறிவிக்கப்பட்டதால், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. ஒற்றையாட்சி என்று சொன்னதன் மூலமாக பல இனங்கள் சமத்துவமாக வாழும் ஒரு சமஷ்டி ஆட்சிமுறைக்குத் தடை விழுந்தது. அதாவது, இலங்கை என்பது பல்வேறு இனம், மதம், மொழி, பிரதேச அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பு என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் மறைத்தனர். இந்த அடிப்படையில் சலுகைகள் பெறுவதை அரசியல் சட்டத்தின் மூலமாக தடுத்தும்விட்டனர்.

உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற ராஜபக்ஷே, தான் தப்பிப்பதற்காக தமிழர் நல்வாழ்வு நாடகம் ஆட நினைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற நினைத்து, தமிழருக்கு சமவாய்ப்பும், சம அந்தஸ்தும் வழங்க முன் வந்தால்... அதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டமே  இடம் தராது. பெரும்பான்மைச் சிங்களர்கள் அமர்ந்திருக்கும் நாடாளுமன்றத்தில் அதைத் தாக்கல் செய்யவே முடியாது. அப்புறம்தானே நிறைவேற்றுவது. பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று நம்புவதே மாயை. மதச்சார்பின்மை பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பௌத்த மதம் சார்ந்த ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். 'இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்’ என்று சொல்லக்கூடியவர்களுக்கு இலங்கை அரசமைப்புச் சட்டம் அதற்கு இடம் தருகிறதா என்கிற தெளிவு முதலில் வரவேண்டும்.

சிங்கள மொழி, பௌத்த மதம் ஆகிய இரண்டுக்கு மாறாக எதைச் செய்வதற்கும் இலங்கையின் அரசியல், சமூக, மத, நிர்வாகவியல் சூழ்நிலை இடம் தராது,அரசமைப்புச் சட்டம் இடம் கொடுக்காது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்று...

1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் நிறைவேறியது. பெரும்பான்மை தமிழர் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒன்றாக்குவது அதில் முக்கியமான ஷரத்து. இதை இலங்கையின் கட்சிகள், பௌத்த பிட்சுகள், அமைப்புகள் அனைத்துமே கடுமையாக எதிர்த்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது அந்தந்த நாட்டின் உச்ச நீதிமன்றம். இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்த ஷரத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுனா வழக்குப் போட்டது. தமிழர்களுக்கு ஓரளவாவது நன்மை பயக்கும் இந்த ஷரத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

'இலங்கை ஒரு கூட்டாட்சியோ குடியரசோ கிடையாது. இது ஓர் ஒற்றையாட்சி அரசமைப்பு. அரசு மதம், பௌத்தம். அரசு மொழி, சிங்களம். ஒற்றையாட்சி அரசமைப்பில் மொழி வழியாகவோ, இன வழியாகவோ மாகாணங்கள் அமைக்க, இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை’  என்று, தீர்ப்பளித்த பிறகு இலங்கை அரசாங்கத்திடம் வெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொள்வது நாள் கடத்த, கணக்குக் காட்டப் பயன்படுமே தவிர நேரமையானதாக இருக்காது. இது 'குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை’ அல்ல.

சிங்களமே ஆட்சிமொழி என்ற தீர்மானம் வந்தபோது, இலங்கை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் டாக்டர் கெல்வின் ஆர்.டி. சில்வா சொன்னார்...

'இரு மொழி எனில் ஒரு நாடு;

ஒரு மொழி எனில் இரு நாடுகள்!’

தொடரும்..

நன்றி - விகடன்