Monday, May 13, 2013

மே 18



வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம் 
வெடிவெடி தெங்கணும் அதிர 
முட்டுதே புகையும் மூளுதே தீயும் 
மேகமே வீழ்ந்திடத் தோன்றி 
தட்டியே சிதறி தடதட வென்றே 
தாவுதே துண்டுகள் அய்யோ 
சுட்டுமே தீயில் துடித்ததே உடல்கள் 
சூழ்பெருந்தீ எரித்திடவே! 

கொட்டிட வானில் குண்டுகள் நூறாய் 
குடிசைகள் வீடுகள் கூரை 
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே 
படுத்தவர் எழுந்துமே பதறிச் 
சட்டென ஓடித் தப்புவோம் என்று 
சற்றொரு கணமதில் எண்ண 
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி 
விழுத்தியே உடல்கருக் கியதே! 

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா 
வசந்தங்கள் தேடிய பூக்கள் 
கந்தகம் தூவி கருகியே முறுகி 
கால்கை துடித்திடச் செத்தார் 
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும் 
எரிந்திடும் தீவிட்ட தில்லை 
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி 
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார் 

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு 
பதுங்கிய குழிகளே சிதையாய் 
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி 
எரிந்திடக் கொள்ளியும் வைத்து 
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற 
தீயெனும் குண்டுகள் போட்டு 
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து 
மூடிஓர் சுடுகாடு செய்தார் 

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க 
என்றவர் நம்பிய போதும் 
சுந்தர தேசம் சுழல்புவி யாவும் 
செத்துநீ போஎன விட்டார் 
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை 
மரம்செடி கொடிகளை விடவும் 
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு 
இதையும்போய் யாரிடம் கேட்போம் 

கிரிகாசன்