Sunday, April 7, 2013

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு போட்டியாக கேபியின் சிந்தனையில் புதிய சாசனம் உருவாக்கம்

தமிழீழ சுதந்திர சாசனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு போட்டியாகத் தமிழினத் துரோகியான கேபியினால் உருவாக்கப்பட்டது தான் நாடு கடந்த அரசாங்கமாகும். தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு விரோதமாகச் செயல்பட்டுவருகிறார்கள் நாடு கடந்த அரசாங்கத்தினர். தற்போது தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவெடுத்த ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்திற்கு மாற்றீடாக தமிழீழத் தேசிய சாசனம் என்ற ஒன்றை நாடுகடந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் நாடு கடந்த அரசாங்கம் என்ற அமைப்பை ஏன் இவர்களால் அன்று உருவாக்க முடியவில்லை? தேசியத் தலைவரின் சிந்தனைக்கு விரோதமான செயல்பாடுகளை அன்று இவர்களால் செயல்படுத்தியிருக்க முடியுமா? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள்? இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது இவ்வாறாக செயல்படுவதற்கு? தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு விரோதமாக ஈடுபட்டு. விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளையும் நெறிமுறைகளையும் யார் வேண்டுமென்றாலும் அவற்றை மாற்றியமைக்க முடியுமா? கண்டவர்களும் கை வைப்பது சரியானதா? புலிகள் முற்றாக அழிந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு தமிழினத் துரோகிகள் துள்ளிக்குதிப்பது போன்று சிலர் புலிகள் இல்லை என்ற எண்ணத்தினால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தமிழீழத் தேசியத்தலைவரையும் அவரின் சிந்தனைகளையும், விடுதலைப் புலிகளையும், விடுதலை உணர்வையும் தமிழ் மக்கள் மனிதில் இருந்து அகற்றும பாரிய சதிவேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் கேபியினால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தினர். அதன் ஒரு அங்கமாகத் தான் தற்போது இவர்கள் உருவாக்கிய சாசனம் கருதப்படுகிறது.

கேபி ஒரு தமிழ் இனத்துரோகி என்று கூற முடியாதவராக உருத்திரகுமாரனும், அவரின் அமைப்பினரும் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் தமிழீழம் என்ற நாமத்தை கூறுவதற்கே தகுதியற்றவர்கள். இவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரை மிஞ்சியவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையைக் குப்பையில் வீசிவிட்டு புதிய தமிழீழ தேசிய சாசனம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

உண்மையில் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையை மதிப்பவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிப்பவர்களும் நாடுகடந்த அரசாங்கத்தின் சாசனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், நீங்கள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உங்களின் தலைவராகக் கொண்டு அவரின் சிந்தனையின் வழியில் செல்லப்போகிறீர்களா? அல்லது கேபியினால் உருவாக்கப்பட்டு கேபியின் சிந்தனையை பின்பற்றிச் செல்லுகின்ற நாடுகடந்த அரசாங்கத்தின் உருத்திரகுமாரனின் வழியைப் பின்பற்றி செல்லப்போகிறீர்களா?

நாடுகடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சாசனம் தொடர்பாக சங்கதியில் மிகத்தெளிவான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது, அதனை உங்களின் பார்வைக்குத் தருகிறோம்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையைக் குப்பையில் வீசும் ஓர் சாசனம் தமிழீழத்திற்கு தேவைதானா?

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவெடுத்த ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்திற்கு மாற்றீடாக தமிழீழ தேசிய சாசனம் எழுதுதல் எனும் போர்வையில் ஏமாற்று நாடகம் ஒன்றை கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கம் அரங்கேற்ற முற்படுவதையிட்டு தமது கடும் கண்டனத்தை தமிழீழ தேசிய உணர்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

உலகத் தமிழர்களுக்கு முகமும், முகவரியும் கொடுத்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட வீரம்செறிந்த விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

தமிழீழத்திற்கான தேசியக் கொடி, தேசிய வாழ்வுமுறை, தேசிய சின்னங்கள் எனப் பல்வேறு தேசிய அடையாளங்களை 1990களிலும், புத்தாயிரத்தின் முதலாவது தசாப்தத்திலும் தோற்றுவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் 1985ஆம் ஆண்டு ‘சோசலிச தமிழீழம்’ என்ற தலைப்பில் தமது அதிகாரபூர்வ அரசியல் வேலைத்திட்ட ஆவணத்தை வெளியிட்டிருந்தது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு தத்துவார்த்த வடிவம் கொடுத்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட இவ் ஆவணம், அக்காலப்பகுதியில் அரசியல் பிரிவு என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பீடத்தின் வெளியீடாக தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டு, பின்னர் 1990ஆம் ஆண்டு முதுபெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் பணிப்புரைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் மீள்பதிப்பாக இலண்டனில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ் ஆவணம் 1978ஆம் ஆண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலிலிருந்து வேறுபட்டது.

‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலே தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவருடன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதற்கும், அவரை தனது அரசியல் ஆலோசகராகவும், தத்துவாசிரியராகவும் நியமித்ததற்கும் காரணியாக அமைந்தது.

தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனையைப் பிரதிபலிக்கும் நூலாக ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற நூல் அமைந்திருந்தாலும், அது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய தனிப்பட்ட அரசியல்-தத்துவார்த்த நூலாகவே அமைந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வெளியீடாக வெளிவந்த ‘சோசலிச தமிழீழம்’ என்ற நூல் அப்படியானதொன்றன்று.

அது தமிழீழ தேசியத் தலைவரின் நேரடி நெறியாட்சியில், அவரது சிந்தனைக்குத் தத்துவார்த்த வடிவம் கொடுத்து, அவரால் நியமிக்கப்பட்ட, அவரது உரைகளுக்கு விளக்கவுரை கொடுப்பதற்கான அதிகாரம் பொருந்திய அவரது ஒரேயொரு தத்துவாசிரியரால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ கொள்கை விளக்க ஏடாகும்.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் குறிக்கோள்கள், தமிழீழத்தின் அரசியல் ஆட்சி முறைமை, தமிழீழத்தில் முஸ்லிம்களின் நிலை, மலையக மக்களின் உரிமை, மதம், சாதி, சீதனம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு போன்ற விடயங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த வகையில் தமிழீழத்தின் விடுதலை சாசனம் என்ற வரையறுக்கப்படக்கூடிய தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணத்தில் உருவான ஒரேயொரு ஆவணம் என்ற தகமையை ‘சோசலிச தமிழீழம்’ என்ற இந்நூல் மட்டுமே கொண்டுள்ளது.

இதனைக் குப்பையில் வீசியெறிந்துவிட்டு இதற்கு மாற்றீடாக புதிதாக தமிழீழ விடுதலை சாசனம் எனும் பெயரில் நாடகம் ஒன்றை கே.பியால் உருவாக்கப்பட்ட விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கம் முற்படுவது தமிழீழ தேசிய உணர்வாளர்களால் கண்டனத்திற்குரிய செயலாகவே பார்க்கப்படுகின்றது.

இதற்கு விமர்சகர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் துணைபோவது தமிழீழ தேசிய உணர்வாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

விஸ்வா