தராக்கி தமிழினத்துக்கு ஆற்றிய சேவைகளை மதிப்போரும், அவரது ஊடகப் பணியை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் ஊடக நண்பர்களும், ஊடக அமைப்புக்களும் அவரது ஏழாவது நினைவு தினத்தை அனுட்டிக்க பல்வேறு முனைப்புக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈழத்துத் தமிழ் ஊடகப் பரப்பில் நிஜமான ஜாம்பவானாகத் திகழ்ந்த சிவராமின் நினைவுகளை மறக்காமல் இருப்பதுடன், ஊடகவியலாளர்கள் சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக தாம் சார்ந்த சமூகத்திற்கு எத்தகைய பணிகளை ஆற்ற வேண்டுமென்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தாரோ, அந்த வழித் தடத்தில் ஓரளவேனும் பயணிப்பவன் என்ற அடிப்படையிலும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
தூரதிர்ஷ்டவசமாக, அண்மைக் காலமாக சிவராமின் வரலாற்றுப் பாத்திரம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் ஒருசிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. சிவராமைப் பற்றி பொதுவில் நாம் அறிந்து வைத்துள்ள விடயங்களுக்கு மாறாக வெளியிடப்படும் கருத்துக்கள் சில வேளைகளில் மனதுக்கு வேதனை அளிப்பவையாக இருந்து வருகின்றன.
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு விடுதலைப் போராளி, போராட்டக் குழுவாக இருந்து பின்னாளில் அரசியல் கட்சியாக மாறிய ஒரு அமைப்பின் செயலாளர், அக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு தலைமை வேட்பாளர், அனைத்துக்கும் மேலாக ஒரு ஊடகப் போராளி என்ற வகையில் சிவராம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஒரு இலக்கியவாதியாக சிவராம் பொது வாழ்விற்குள் அறிமுகமாகியதே ஒரு விமர்சகராகவே என்ற அடிப்படையில் பார்க்கும் போது தன்னைப் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் ஒருவராகவே சிவராம் விளங்கினார். அந்த வகையில், உயிரோடு இருந்திருந்தால் அவர் தன் மீதான விமர்சனங்களை நிச்சயம் வரவேற்றிருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், விமர்சனம் என்ற பெயரில் ஒருசில ஊடக நண்பர்களால் அண்மைக் காலமாக சிவராமைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சகிக்கவோ, ரசிக்கவோ முடியாதவையாக இருந்து வருகின்றன.
ஏனைய அனைவரையும் விட சிவராமை விமர்சிக்கும் தகுதியும், உரிமையும் ஊடக நண்பர்களுக்கே அதிகம் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், சிவராம் தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த ஒருசில கருத்துக்கள் மோசமான விமர்சனங்களாகவும், சேறு பூசும் தன்மையினதாகவும் அமைந்திருந்ததாக பலராலும் உணரப் பட்டமையை மறைப்பதற்கில்லை.
ஒருவர் சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிடுவதில் தவறேதும் இருக்க முடியாது. அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர் தனது தரப்பு நியாயத்தைக் கூறுவதற்கு வாய்ப்புத் தரப்படாத ஒரு களத்தில் ஒருவரைப் பற்றி நாம் கருதுவதாக ஒருசில விடயங்களைக் கூறுகின்ற பொழுதில் அது ஊடக தர்மத்தை மீறுகின்ற ஒன்றாக மாறிவிடக் கூடிய அபாயமுள்ளது. அது மட்டுமன்றி அத்தகைய் செயற்பாடு ஒரு தனிமனிதன் தொடர்பான படிமத்தைக் கொலை செய்வதற்கும் ஒப்பானதாகும்.
சிவராமின் ஆலோசனை வழிகாட்டலில் அவரைப் பின்பற்றிச் செயற்பட்ட, இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற எம் போன்றோரின் பணிகளை இத்தகைய கருத்துக்கள் மேலும் கடினமானவையாக ஆக்குகின்றன.
சிவராம் கனவு கண்டதைப் போன்று தமிழ்ச் சமூகமானது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஒரு அறிவார்ந்த சமூகமாக, உலக ஒழுங்கைப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தமது அரசியற் செயற்பாடுகளைக் கட்டமைத்துக் கொண்டு இலட்சியத்தை வென்றெடுக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் சிவராமைப் பறிறித் தெரிவிக்கப்படும் அண்மைக்காலக் கருத்துக்கள் தடையாக இருந்து வருகின்றன.
தன்மனித வாழ்வில் அரசியல் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து நிற்கும் ஒரு அம்சம். அந்த வகையில் பேராட்டக் காலத்தில் ஊடக வாழ்வினுள் பிரவேசித்த சிவராம் (அவருக்கு ஏற்கனவே அரசியல் பின்புலம் இருந்தமை வேறு விடயம்) அரசியல் செய்ய வேண்டி ஏற்பட்டமை தவிர்க்க முடியாதது. அரசியல் சார்பற்றவனாக இருப்பது என்பதே ஒரு அரசியலாக விளங்குகின்ற சூழலில் சிவராம் ஊடக தர்மத்தை மீறிய ஒருவராக சிலரால் விமர்சிக்கப் படுகின்றார். நடுநிலை என்ற ஒன்றே இல்லாத ஒரு யதார்த்த நிலையில் ஊடகவியலாளர் மாத்திரம் அரசியலைத் தவிர்த்து நடத்தல் சாத்தியமா என்பது சிந்தனைக்குரியது. இத்தகையை பார்வையைக் கொண்டு சிவராமை விமர்சிப்பேர் அது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஒரு வகையில் பார்க்கும் போது சிவராமைப் பற்றி வெளிவரும் கருத்துக்கள் சிவராமின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்த உதவியுள்ளன என்ற அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், அதனால் விளையும் நன்மையை விடவும் தீமையே தூக்கலாக உள்ளதை மறுப்பதற்கில்லை.
பகுத்தறிவு என்ற தந்தை பெரியாரின் ஆயுதத்தை ஈழத் தமிழர்களும் தமது கரங்களில் ஏந்த வேண்டும் என்பதில் விடாப்பிடியான கருத்தைக் கொண்டிருந்தவர் சிவராம். எந்தவொரு விடயத்தையும் இலேசாக எடுத்துக் கொள்ளும் ஒரு உல்லாசப் பிரியர் என்ற தோற்றப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் அவரது தேடல் மிகவும் ஆழமானது என்பதை அவரது நண்பர்களும், அவரது கருத்துக்களை ஊன்றிக் கிரகிப்போரும் அறிவர்.
எந்தவொரு காரியமாயினும் சொந்தக்காலில் நின்று சாதிப்பதற்கே அவர் முன்னுரிமை வழங்குவார். அவரை ‘விலைகொடுத்து வாங்கிவிடவும் ‘வளைத்துப் போடவும்| பலரும் பல தடவைகளிலும் பல வழிகள் ஊடாகவும் முயன்ற வேளைகளில் எல்லாம் அவர்களுக்குத் தோல்வியே கிட்டியது.
இலங்கைத் தீவை விட்டு வெளியேறி ஏதோ ஒரு வெளிநாட்டில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பல வாய்ப்புக்கள் இருந்த போதிலும் அவர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. தந்திரோபாய ரீதியில் கூட அவ்வாறு செய்வதற்கு அவரது மனம் ஒப்பவில்லை. தனது உயிருக்குப் பேராபத்து உள்ளது எனத் தெரிந்திருந்தும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் இலக்கை அடைவதே இலட்சியம் என் இறுதிவரை செயற்பட்டவர் அவர்.
இன்று உலக அரங்கில் பல்வேறு பன்னாட்டு ஊடகங்களும் ஈழத் தமிழரைப் பற்றிப் பேசி வருகின்றன என்றால் அதற்குக் கால்கோள் இட்டோரில் சிவராமுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பல்வேறு வெளிநாட்டு ஊடகர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி, அவற்றைப் பேணி வந்த அவர், அவர்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கச் செய்வதிலும் கூடிய அக்கறை செலுத்தினார்.
ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்குத் தமிழ் கூறும் நல்லுலகில் இதுவரை எவரும் உருவாகவில்லையே என்ற ஏக்கம் இன்றுவரை நீடிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத் தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்ற போதிலும் சிவராமின் இடம் இன்னமும் வெற்றிடமாகவே இருந்து வருகின்றமை சிவராமின் பணிகளுக்குப் பெருமை தருவதாக உள்ள போதிலும், தமிழ் இனத்துக்கு அது தீங்கானதாகவே தென்படுகின்றது.
ஆண்டுகள் கடந்தும் அவரின் பணியை இன்றும் ஈழத் தமிழினம் அறுவடை செய்து கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையில்லை.
சண் தவராஜா