Tuesday, April 2, 2013

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் தமிழக மாணவர்களின் போராட்டம் வெடிக்க வேண்டும்

autom

முள்ளிவாய்க்கால் தமிழின அழிவினை விட பல மடங்கு பேரழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு தமிழின பேரழிப்பு இயக்கமான காங்கிரஸ் அரசு திட்டம் தீட்டி வைத்திருக்கிறது. அன்று மத்திய, மாநில அரசின் துணையுடன் தமிழ் மக்களின் எதிர்ப்பை மீறி ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது, கடந்த 23ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையைச் சூழ இருந்த மக்களும் பாதிப்படைந்தார்கள். இதனைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. தறபோது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அன்று திறப்புவிழா நடத்திய இன்றைய முதல்வர் தற்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை மீறியும், ஆலையினால் சுற்றுச்சூழல் மாசடைந்து மக்கள் பாதிக்கப்பட்டு அதனால் பலர் போராட்டம் நடத்திய போது அதற்குச் செவிசாய்காமலும், மக்கள் மீது அக்கறையில்லாமலும் மத்திய, மாநில அரசுகள் இருந்தன. அண்மையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயுக் கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டமையினால் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கிறார்கள். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்காகவும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி குடிமக்களுக்கு ஆபத்துக்கள் வரமுன் அந்த மக்களைக் காக்கும் அரசுகளே உண்மையான மக்கள் நலன் கொண்ட அரசுகள் ஆகும். ஆனால் இந்த விடயங்களில் தமிழக மக்களை கத்தியின் மேல் நடக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது இந்திய மத்திய அரசும், மாநில அரசும்.

கூடங்குளம் அணு உலையானது ஸ்டெர்லைட் ஆலையை விட மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடியது, மற்றும் சுற்றுச்சூழலை மிகமோசமாக மாசு படுத்தக்கூடியது, மேலும் தமிழகத்தை இருண்ட காலத்தை நோக்கி கொண்டு செல்லக்கூடியது. காங்கிரஸ் அரசு தமிழகத்தை சுடுகாடாக ஆக்குவதற்கு நிற்கிறது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழிக்கும் பணியை செய்துமுடித்தது, 500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது, தமிழரின் அழிவிற்கு காரணமாகவும், தமிழரின் நலனில் அக்கறையில்லாமலும் இருக்கின்ற காங்கிரஸ் அரசு கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்று கூறினால் அதனை தமிழர்கள் நம்பிவிடலாமா? இந்திய அரசின் அடிவருடிகள் தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக கூடங்குளம் அணு உலையானது பாதுகாப்பானது என்று கூறுவார்கள் தான். உலகமே அணு உலைக்களுக்கு மூடுவிழா நடத்தும் போது தமிழர்கள் கோமாளிகளைப் போன்று திறப்புவிழா நடத்துவதற்கு அனுமதிப்பதா? நாராயணசாமி போன்ற காங்கிரஸின் நேர்மையற்ற பொய்யர்களின் வாக்குறிதிகளை நம்புவதா? பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விடயத்தில் ஏமாறலாமா?

அரசுகளாலும் அதன் அடிவருடிகளாலும் மக்களுக்கு பாதுகாப்பானது என்று கூறி உத்தரவாதம் கொடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷவாயு கசிந்து அதனால் மக்கள் பாதிக்கப்பட்டபின்பு தற்போது மூடுவிழா நடத்துகிறார்கள். அதனை போன்று கூடங்குளம் அணு உலையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்திய அரசால் என்ன செய்ய முடியும்? தமிழகத் தமிழர்களே ஏமாளிகளாகவும், மூடர்களாகவும் இருந்துவிடாதீர்கள். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை பலியெடுத்த கட்சி தான் காங்கிரஸ், தற்போது கூடங்குளம் அணு உலை ஊடாக தமிழ் மக்களைப் பலியெடுக்க நிற்கிறார்கள். வடவர் ஆட்சியென்பது தமிழகத்தை சுரண்டுவதற்கே தவிர தமிழ் மக்களின் நலனை அவர்கள் ஒருபோதும் சிந்திக்கமாட்டார்கள் அதற்கு சிறந்த உதாரணங்களாக ஈழத்தமிழ் மக்களின் அழிவும், தமிழக மீனவர்களின் படுகொலைகளும் இன்னும் பல இவை போன்று இருக்கின்றன. தமிழகத்தை சுறண்டிக் கொண்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்துப் பார்த்து ஆட்சி செய்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

ஈழமக்களின் இனவழிப்பிற்காக எதிராகப் போராடி வருகிறார்கள் தமிழக மாணவர்கள், உங்களை நோக்கி வரப்போகின்ற பேரழிவில் இருந்து காக்க எப்போது போராடப் போகிறீர்கள், அழிவு ஏற்பட்ட பின்னரா? அதற்கு பிறகா நீதிகேட்டு போராடப் போகிறீர்கள்? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தமிழக மாணவர்களின் போராட்டம் வெடிக்க வேண்டும், முள்ளிவாய்காலில் இனவழிப்பில் மடிந்த ஆத்மாக்களும், இனவழிப்பில் இருந்து மிஞ்சிய உயிர்களும், உலகத்தமிழனமும் உங்களிடம் வேண்டுவது மீண்டும் ஒரு தமிழின அழிப்பு நிகழாமல் இருக்க கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடித் தமிழினத்தைக் காக்க விழித்துக்கொள்ளுங்கள் தூங்கிவிடாதீர்கள் என்று தான். மாணவர் நினைத்தால் கூடங்குளம் அணு உலைக்குக்கு மூடுவிழா நடத்த முடியும். அது அவர்கள் தமிழினத்திற்கு செய்யவேண்டிய கடமையாகும்.

விஸ்வா