
சிங்கள அரசின் கிரிக்கெட்டையோ அல்லது விளையாட்டு வீரர்களையோ ஏன் புறக்கணிப்பு செய்ய வேண்டும்? அரசியலை விளையாட்டில் கலக்கக் கூடாது, மகிந்தவிற்காக சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் விளையாடுவதை தடுப்பது தவறாகும், இதனால் எதனை சாதித்துவிட்டீர்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள சில தமிழர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
இன்று உலகமே விளையாட்டையும் அரசியைலையும் பிரித்து பார்க்கவில்லை, அதனால் தான் பல உலகநாடுகள் தென் ஆபிரிக்க நாட்டிற்கு (கிரிகெட்) எதிராக அன்று தடைவிதித்து பல ஆண்டுகளுக்கு அவர்களை ஒதுக்கி வைத்தது. உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தேசியப் பறவைகள், தேசியவிலங்குகள் என்பது போல அந்த நாடுகளில் தேசியவிளையாட்டுக்களும் உள்ளன, மேலும் ஒவ்வொரு நாடுகளின் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் விளையாட்டுத்துறையும் இருக்கிறது.
அன்று சிறிலங்கா உலகக்கிண்ணத்தை (1996) வெற்றிபெற்ற பிறகு அதன் அணியின் தலைவராக இருந்த அர்ஜூன ரணத்துங்க கூறுகையில் "நாங்கள் யுத்ததிலும் வெற்றியை அடைந்தோம் விளையாட்டிலும் வெற்றியடைந்துள்ளோம்" என்று சிங்களப் பேரினவாதத்தை வெளிக்காட்டினார். இப்படி தமிழ் மக்களின் அழிப்பை அன்று தொடக்கம் இன்றுவரை வெற்றியாக கொண்டாடுகிறார்கள் சிறிலங்காவின் கிரிக்கெட் வீரர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடனான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து விட்டோம் என்ற கோபத்தினால் தமிழக மீனவர்களின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த விடயத்தை தமிழகத்தில் உள்ளவர்கள் மறந்துவிட்டார்களா? சிங்கள அரசே விளையாட்டையும் அரசியைலையும் இணைத்து பார்க்கும் பார்வையை சில தமிழகக் கோமாளிகள் உணர மறுக்கிறார்கள்.
இந்திய இராணுவ வீரர்கள் இருவரின் தலை துண்டிக்கப்பட்டது போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில்லை, அவர்களுடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது, கொக்கி விளையாடக்கூடாது என்று கூறுகிறார்கள் மற்றும் கொக்கி IPL விளையாட்டில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்களையும் திருப்பி அனுப்பியது இந்திய அரசு. ஆனால் ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொலை செய்தவர்களுடன் கிரிகெட் விளையாடியும், அவர்களை அன்புடன் வரவேற்றும், சிறிலங்கா எங்களது நட்பு நாடே தவிர எதிரி நாடல்ல என்று கூறுகிறது இந்திய அரசு. இப்படி பாகிஸ்தானை பார்த்து இந்திய அரசால் கூற முடியுமா? அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் யுத்த நிறுத்தத்தை மீறி இராணுவ வீரர்கள் இருவரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தில் முறையிடவேண்டும் என்று ஒரு வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் யுத்த நிறுத்தத்தை மீறி தமிழினம் அழிக்கப்பட்டதற்கும் மற்றும் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஏன் வடவர்கள் குரல் கொடுக்கவில்லை? தமிழகத்தை வடவர்கள் கொளையடிப்பதற்கே குறியாக இருக்கிறார்களே தவிர தங்களுடைய மக்களாக தமிழக மக்களை நினைவில்லை என்பதே இது தெளிவாகக் காட்டுகிறது. இதனை உணராமல் வந்தேமாதரம் என்று ஹிந்தியில் ஊளையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் தமிழகத் தமிழர்கள்.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவும் மற்றும் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதும் மிகச்சரியான முடிவாகும். அரசியலை விளையாட்டில் கலக்கக் கூடாது, மகிந்தவிற்காக சிறிலங்காவின் வீரர்கள் தமிழகத்தில் விளையாடுவதை தடுப்பது தவறாகும், இதனால் எதனைச் சாதித்துவிட்டீர்கள்? என்று கூறுபவர்கள் சிங்கள அரசின் இனவழிப்பில் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான கருத்துக்களை கூறுவார்களா? தமிழகத்தில் உள்ள சில சுயநலக் கயவர்கள், மனச்சாட்சியில்லாமல், யாரோ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நாம் அதனால் பாதிக்கப்படவில்லை என்ற கொடிய எண்ணத்தினால் இவ்வாறான கருத்துக்களை கூறுகிறார்கள். தமிழகத்தில் சிங்கள வீரர்கள் விளையாடினால் மகிந்த தான் சாதித்துவிட்டதாக நினைத்து உலகநாடுகளிடம் பிரச்சாரம் செய்வார். தமிழக மக்கள் தங்களது இன மக்களை இனவழிப்புச் செய்த நாட்டை மன்னித்துவிட்டதாகக் கருதப்படும்.
பாகிஸ்தான் படையினரால் இந்திய ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட போது அதற்கெதிராக இந்திய அரசு நடந்து கொண்டதனையும், சிங்களப் படையினரால் தமிழக மீனவர்களின் தலை துண்டிக்கப்பட்ட போது அந்த விடயத்தில் இந்திய அரசு நடந்துகொண்டதனையும் ஒப்பிட்டு பாருங்கள். பாகிஸ்தான் படையினரால் இந்திய ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டதற்காக கொக்கி IPL விளையாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்களையும் நீக்கியுள்ளது இந்திய அரசு ஆனால் தமிழக மீனவர்களை கொலை செய்துவரும் சிறிலங்காவின் வீரர்களை IPL விளையாட்டில் இணைத்துள்ளது இந்தியா. தமிழகத் தமிழர்கள் IPL கிரிகெட்டை புறக்கணிக்க வேண்டும், இந்திய அரசும் சிறிலங்கா அரசும் தமிழர்களை அழித்தவர்கள் இந்த இரண்டு நண்பர்களுக்கும் தமிழகத் தமிழர்கள் பாடம்புகட்ட வேண்டும். மானமுள்ள தமிழர்களே தமிழரின் உயிர்களைக் குடிக்கும் சிறிலங்கா அரசிற்கும் இந்திய அரசிற்கும் பாடம் புகட்டுங்கள். இளைஞர்களே, யுவதிகளே கிரிகெட் மோகத்தில் விழுந்து கிடக்காமல் தமிழினமே எங்களுக்கு பெரிது என்று தமிழின விரோதச் சக்திகளுக்கு வருமானத்தை ஈட்டுக்கொடுக்காதீர்கள்.
விஸ்வா