Thursday, March 28, 2013

முத்தையா முரளிதரன் என்னும் சிங்கள அடிவருடியின் சிங்களப் பாசம்

Muttiah-Muralitharan-sri-lanka (1)

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது பெரும்பான்மையான தமிழக மக்களின் முடிவாகும், இது தொடர்பாக சிறிலங்கா அணியில் விளையாடிய முத்தையா முரளிதரன் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டு, அதன்பின்னர் விழாக்களையும நடத்தி சிங்களப் பேரினவாதிகள் கொண்டாடிய போது மஹிந்தவை வாழ்த்தியவர் தான் முத்தையா முரளிதரன். தற்போது தான் சிறிலங்காவில் மக்கள் நிம்மதியாக வாழுகிறார்கள் என்று சில ஆண்டுகளாக கூறிவருகிறார் முத்தையா முரளிதரன்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்த தமிழர், முதலில் அவருடைய மனச்சாட்சியைத் தொட்டு சொல்லட்டும் சிறிலங்காவில் மலையகத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிறார்களா என்று? சிங்களப் பேரினவாதிகள் பல உரிமைகளை வழங்காமல் அவர்களை பல ஆண்டுகளாக அடிமைகளாக மலையகத் தமிழர்களை வைத்துக் கொண்டு ஆண்டுவருகிறார்கள். தனது மலையகத் தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவரும் முத்தையா முரளிதரன் சிங்களப் பேரினவாதிகளைப் போற்றுகிறார். முதலில் தன்னுடைய மலையகத்தைச் சேர்ந்த தமிழர்களே நிம்மதியாக வாழமுடியாமல் சிறிலங்காவில் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைக்கிறார் முத்தையா முரளிதரன். நேற்றைய தினம் லக்பல சேனா அமைப்பின் தலைவரான சிங்களப் பேரினவாதி சுதத் மல்லிக்காராச்சி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிரட்டல் விடுகிறார் அதாவது ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு வேண்டுமா? அப்படி வேண்டுமென்றால் 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை (மலையகத்தைச் சேர்ந்த தமிழர்) ஜெயலலிதா அழைத்துச் செல்லட்டும் என்கிறார். அப்படியென்றால் முத்தையா முரளிதரனும் வெளியேற வேண்டிய நிலமை வருமே? இதனைக் கண்டிக்க முதுகெலும்பிருக்கிறதா முத்தையா முரளிதரனுக்கு?

சிறிலங்காவில் சிங்களவர்களும், சிங்களவர்களின் அடிவருடிகளும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்ற கருத்தைத்தான் முத்தையா முரளிதரன் கூறுகிறார், மலையகத்தைச் சேர்ந்த தமிழர்களும், வடகிழக்கில் உள்ள தமிழர்களும் அடக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சுதந்திரமில்லாமல் அவல நிலமையில் வாழுகிறார்கள் என்ற உண்மையை மறைத்தும் தமிழருக்கு நடைபெற்ற கொடுமைகளையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கொடுமைகளையும் மறைத்து சிறிலங்காவில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று கூறி சிங்களப் பேரினவாதத்தைக் காப்பாற்றும் முயற்சியைச் செய்கிறார் சிங்கள அடிவருடியான முத்தையா முரளிதரன். தன்னுடைய மலையகத் தமிழர்களுக்கு நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுமைகளை எண்ணி வருந்தாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கும் முத்தையா முரளிதரன் போன்ற சிங்கள அடிவருடிகள் வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி வருந்தி அதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

தமிழர் என்ற வகையில் சிறிலங்கா கிரிக்கெட் அணியில் தனக்கு சிங்களவர்கள் எவ்வித பிரச்சனையும் கொடுக்கவில்லை என்று சுயநலத்துடன் முத்தையா முரளிதரன் கூறுகிறார், தமிழர்கள் என்ற காரணத்தினால் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இறுதியுத்தத்தின் போது சிங்களப் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டார்கள் என்பதை மறந்து உளறுகிறார் முரளிதரன். அழிக்கப்பட்ட மக்கள் சிங்களவர்களாக இருந்திருந்தால் அவர்களை சிங்களப் பேரினவாதிகள் அழித்தொழித்திருப்பார்களா? 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்கள் சந்தித்த கொடுமைகளை மறைக்க முடியுமா? தமிழர்கள் என்ற வகையினால் சிங்களப் பேரினவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டோம் என்று சாட்சி கூறுவதற்கு பல லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழர் என்பதனால் சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு தலைவராக ஆகுவதற்கு முடியாமல் இருந்த நிலமையை முத்தையா முரளிதரன் மறைத்துப் பேசுகிறாரா? அல்லது மறந்துவிட்டுப் பேசுகிறாரா? சிறிலங்கா அணியில் விளையாடிய போது ஒவ்வொரு ஆண்டிலும் அதிகமான விக்கெட்டுக்களை முரளிதரன் சாய்த்து வந்திருந்தார் ஆனால் ஒவ்வொரு ஆண்டிலும் கொடுக்கப்படும் ICC யின் விருதை அவரால் பெறமுடியாமல் இருந்த காரணத்தை முரளிதரனுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதற்குரிய காரணம் தமிழர்களுக்கு நன்கு தெரியும். உண்மையில் அன்று முரளிதரன் சிறந்த பந்துவிச்சாளராகத் தெரிவுசெய்திருக்க வேண்டும் ஆனால் அதற்குரிய சரியான பரிந்துரைகளையும், ஆதரவையும் சிங்களக் கிரிக்கெட் சபை கொடுக்கவில்லை மற்றும் முயற்சியிலும் இறங்கவில்லை. இதனால் ICC யின் விருதை பெறமுடியாமல் பல ஆண்டுகளாக இருந்தவர்தான் முரளிதரன். ஆனால் சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு ICC யின் விருதை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு அதனைப் பெற்றுக்கொடுத்தது சிங்களக் கிரிக்கெட் சபை. இந்த உண்மையை முரளிதரன் உணருவாரா? தனது நாட்டின் வெற்றிக்காக மட்டுமே முரளிதரனை சிங்களம் பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையாகும். இதனை உணராமல் முரளிதரன் புத்திபிசங்கிய நிலையில் உளறுகிறார். முரளிதரனால் தான் பல வெற்றிகளை பெற்றது சிறிலங்கா கிரிக்கெட் ஆனால் முரளிதரனால் தான் நாங்கள் வெற்றியைப் பெற்றோம் என்று ஒருபோதும் சிறிலங்கா கூறியதில்லை.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது எனற தமிழக அரசின் முடிவு தொடர்பாக முரளிதரன் மேலும் கூறுகையில் இது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று கூறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடனான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததற்காக சிங்கள கடற்படை ஆத்திரம் கொண்டு அப்பாவி தமிழக மீனவர்களின் தலையைத் துண்டித்த போது அது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று முரளிதரனால் அன்று கூறமுடியவில்லை. அன்று தென் ஆபிரிக்க அணியை கிரிகெட் இருந்து பல நாடுகள் ஒதுக்கி வைத்த போது அது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள் என்று எவரும் கூறவில்லை. அதனைப் போன்றுதான் சிறிலங்காவின் கிரிகெட்டையும் அதன் வீரர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.

முத்தையா முரளிதரன் உண்மைகளை மறைத்தும், உண்மைக்குப் புறப்பான தகவல்களைக் கூறியும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முத்தையா முரளிதரன் என்ற சிங்கள அடிவருடியின் விசமத்தனமான பிரச்சாரங்களின் ஊடாக சிங்கள அரசை நியாயப்படுத்தி காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மஹிந்தவின் அடிவருடியை தமிழகத்தில் விளையாடுவதற்கு தமிழக தமிழர்கள் அனுமதிக்க கூடாது, மற்றும் சென்னை அணியில் ஒருபோதும் முத்தையா முரளிதரனை இணைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நண்பர் எழுதியது போன்று ஒரு டக்ளஸ் தேவானந்தாவைப் போல்... ஒரு கருணாவைப் போல்... ஒரு கே.பியைப் போல்... முத்தையா முரளிதரனும் அவர்களைப் போன்றவர் தான்.

விஸ்வா